சௌதி அரேபியாவுடனான ஒப்பந்தத்தால் பாகிஸ்தானுக்கு என்ன லாபம்? இந்தியாவுக்கு என்ன சவால்?

காணொளிக் குறிப்பு, பாகிஸ்தான் - சௌதி ஒப்பந்தத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன?
சௌதி அரேபியாவுடனான ஒப்பந்தத்தால் பாகிஸ்தானுக்கு என்ன லாபம்? இந்தியாவுக்கு என்ன சவால்?

பாகிஸ்தானும் சௌதி அரேபியாவும் இந்த வாரம் ஒரு முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு பல பெரிய நன்மைகளை தரும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். அதோடு, மத்திய கிழக்கில் பாகிஸ்தானின் செல்வாக்கை அதிகரிக்கும் என்றும் கருதப்படுகிறது. சௌதி, பாகிஸ்தான் இடையேயான உறவு எத்தகையது? இந்த ஒப்பந்தத்தை வல்லுநர்கள் எப்படி பார்க்கின்றனர்?

பாகிஸ்தான் ஒரு ராணுவ சக்தியாக இருந்தாலும், பொருளாதார ரீதியாக தடுமாறி வருகிறது, அதே நேரத்தில் சௌதி அரேபியா பொருளாதார ரீதியாக சக்திவாய்ந்தது ஆனால் ராணுவ ரீதியாக பலவீனமானது.

இரு நாடுகளும் வலுவான வரலாற்று உறவுகளைக் கொண்டுள்ளன. பொருளாதார நெருக்கடியின் போது சௌதி பல முறை பாகிஸ்தானுக்கு உதவியுள்ளது, அதற்கு ஈடாக பாகிஸ்தான் சௌதி அரேபியாவிற்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்கியது. தற்போது கையெழுத்தாகி இருக்கும் ஒப்பந்தம் சௌதி மற்றும் பாகிஸ்தான் இடையே இருந்து வரும் ஒத்துழைப்பை முறைப்படுத்துகிறது.

இது தவிர, இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இரு நாடுகளில் ஏதேனும் ஒன்று தாக்கப்பட்டால், மற்ற நாடும் அந்த தாக்குதலை தன் மீதான தாக்குதலாகக் கருதும்.

அதாவது, பாகிஸ்தான் அல்லது சௌதி அரேபியா மீது ஏதேனும் தாக்குதல் நடந்தால், அது இரு நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும்.

பாகிஸ்தான் அணுசக்தி நாடு, எனவே வளைகுடாவில் சௌதி அரேபியாவிற்கு பாதுகாப்பு உத்தரவாதமாகவும் இது கருதப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், "எங்கள் சகோதர உறவுகள் வரலாற்று திருப்புமுனையில் உள்ளன, எதிரிகளுக்கு எதிராக நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்" என்றார்.

இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் தூதர் ஹுசைன் ஹக்கானி, "பாகிஸ்தான் இப்போது தனக்குத் தேவையான அமெரிக்க ஆயுதங்களை சௌதி பணத்தில் வாங்க முடியும்" என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தம் குறித்த விரிவான விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் ஆய்வாளர்கள் இது சௌதி மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான உறவுகளில் குறிப்பிடத்தக்க மைல்கல் என நம்புகிறார்கள்.

இந்த ஒப்பந்தம் சௌதி அரேபியாவிடமிருந்து எரிசக்தி மற்றும் நிதி பாதுகாப்பைப் பெறும் பாகிஸ்தானின் திறனை வலுப்படுத்தும் என்கிறார் ஸ்டிம்சன் மையத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான இயக்குனர் எலிசபெத் த்ரெக்ஹெல்ட்.

அதே நேரம், இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கும் சௌதி அரேபியாவிற்கும் இடையிலான பல தசாப்த கால ஒத்துழைப்பை முறைப்படுத்தினாலும், அது ஒரு பெரிய புதிய உறுதிமொழி அல்ல என நம்புகிறார் ஹார்வர்ட் கென்னடி ஸ்கூலின் பெல்ஃபர் மையத்தின் ஆராய்ச்சியாளரும், லாகூர் பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகாரப் பேராசிரியருமான ரபியா அக்தர்.

சர்வதேச விவகார நிபுணரும் அமெரிக்காவின் டெலவேர் பல்கலைக்கழக பேராசிரியருமான முக்தேதார் கான், "இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு லாட்டரி போன்றது" என்கிறார்.

"பாகிஸ்தான் சௌதி அரேபியாவிலிருந்து அதிக நிதி உதவியைப் பெறும். இது பாகிஸ்தான் தனது பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்த உதவும். சௌதி அரேபியா பாகிஸ்தானின் பாதுகாப்புத் திறன்களில் அதிக முதலீடு செய்யும்" என்கிறார் அவர்.

பஹல்காமில் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே சமீபத்தில் ராணுவ மோதல் வெடித்தது.

பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்ட ராணுவ நடவடிக்கையை இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயரிட்டது. சண்டை நிறுத்தத்திற்குப் பிறகு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 'ஆபரேஷன் சிந்தூர்' இன்னும் முடியவில்லை எனக் கூறியிருந்தார்.

"பாகிஸ்தானைத் தாக்கினால் சௌதி அரேபியா பாகிஸ்தானை நேரடியாக ஆதரிக்குமா என்பதை இந்தியா தற்போது பரிசீலிக்க வேண்டியிருக்கும். மில்லியன் கணக்கான இந்தியர்கள் சௌதி அரேபியாவில் வேலை செய்கிறார்கள். இந்த இந்தியர்களின் நலன்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை இந்தியா உறுதி செய்ய வேண்யிருக்கும்" என்கிறார் பேராசிரியர் முக்தேதார் கான்.

சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா மத்திய கிழக்கில் அதன் உறவுகளையும் செல்வாக்கையும் வலுப்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் அந்தப் பிராந்தியத்தில் மிகவும் தீவிரமான சக்தியாக மாறலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

ஏனெனில் இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட பின்னர் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் மற்ற அரபு நாடுகளுக்கான கதவுகள் மூடப்படவில்லை என்று கூறியிருந்தார்.

அதோடு, ஜியோ டிவி உடனான உரையாடலில், இந்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தானின் அணுசக்தி திறன்களும் அடங்கும் என்றும் அவர் கூறினார்.

அவரது இந்தப் பேச்சை பாகிஸ்தானுடன் இதேபோன்ற ஒப்பந்தங்களை செய்ய மற்ற அரபு நாடுகளுக்கு விடுக்கும் அழைப்பாகவும் கருதப்படலாம்.

"இஸ்ரேலின் தாக்குதலுக்கு கத்தார் பதிலளிக்க முடியவில்லை. அரபு நாடுகள் ஆயுதங்களுக்காக அதிக செலவு செய்துள்ளன. ஆனால் அவர்களிடம் போர் அனுபவம் இல்லை. பாகிஸ்தான் ராணுவத்திற்கு பல போர்களில் ஈடுபட்ட அனுபவம் உள்ளது. இந்தச் சூழலில், மத்திய கிழக்கில் பாகிஸ்தான் சக்தி வாய்ந்த நாடாக பார்க்கப்படலாம்" என்கிறார் பேராசிரியர் முக்தேதார் கான்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு