You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இ-பாஸ்போர்ட் எங்கெல்லாம் எடுக்கலாம்? பழைய காகித பாஸ்போர்ட் இனி செல்லுபடியாகுமா?
- எழுதியவர், அம்ரிதா துர்வே
- பதவி, பிபிசி செய்தியாளர்
ஒருவர் தனது நாட்டில் இருந்து வேறு நாடுகளுக்கு, அதாவது வெளிநாட்டிற்கு பயணம் செய்ய விரும்பினால், பாஸ்போர்ட் தேவை.
பாஸ்போர்ட் நாட்டின் குடிமகனாக ஒருவரை அடையாளம் காட்டும் சர்வதேச ஆவணம் ஆகும்.
இந்தியா, தற்போது பாஸ்போர்ட் சேவா திட்டம் 2.0 இன் கீழ், இ-பாஸ்போர்ட்கள் வழங்கத் தொடங்கியுள்ளது.
இ-பாஸ்போர்ட் என்றால் என்ன? இது வழக்கமான பாஸ்போர்ட்டிலிருந்து வேறுபட்டதா? இ-பாஸ்போர்ட் வந்த பிறகு தற்போது பயன்படுத்தப்படும் காகித வடிவிலான பாஸ்போர்ட் பயனற்றதாகிவிடுமா? என பல கேள்விகள் எழுகின்றன.
இ-பாஸ்போர்ட் என்றால் என்ன?
பாஸ்போர்ட் சேவா வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின்படி, இ-பாஸ்போர்ட் பார்ப்பதற்கு சாதாரண பாஸ்போர்ட் போலவே இருந்தாலும், இதில் ரேடியோ அதிர்வெண் அடையாள (RFID) சிப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த சிப்பில் பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் பெயர், பிறந்த தேதி, பாஸ்போர்ட் எண், பயோமெட்ரிக் தகவல்கள் அதாவது முக அங்கீகாரத்திற்கான தரவு மற்றும் கைரேகைகள் என தனிப்பட்ட விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.
இ - பாஸ்போர்ட் அம்சங்கள் என்ன?
வழக்கமான பாஸ்போர்ட் மற்றும் இ-பாஸ்போர்ட் இரண்டுமே பார்ப்பதற்கு ஒன்றுபோலவே இருந்தாலும், இ-பாஸ்போர்ட்டின் முன் அட்டையின் அடிப்பகுதியில் தங்க நிற சின்னம் இருக்கும், எனவே தோற்றத்தில் இரண்டிலும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது.
இந்தியாவின் இந்தப் புதிய இ-பாஸ்போர்ட்டுகள் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ஐசிஏஓ) வகுத்துள்ள விதிகளின்படி இருக்கும்.
Basic Access Control (BAC) வசதியைக் கொண்டிருக்கும் இந்த பாஸ்போட்டில் உள்ள பாஸ்போர்ட் சிப்பை சில சாதனங்களைப் பயன்படுத்தி மட்டுமே ஸ்கேன் செய்ய முடியும். வேறு எந்த கேஜெட்டும் இந்த சிப்பை ஸ்கேன் செய்ய முடியாது.
இந்த சிப்பில் சேமிக்கப்பட்ட தகவல்களை சேதப்படுத்தவோ மாற்றவோ முடியாது.
இந்த சிப்பில் முக அங்கீகாரம் மற்றும் கைரேகைகள் போன்ற தகவல்கள் உள்ளதால் பாஸ்போர்ட்டுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும்.
இ-பாஸ்போர்ட்டின் நன்மைகள்
சிப் பொருத்தப்பட்டுள்ளதால் பாஸ்போர்ட்டின் பாதுகாப்பு மேலும் பலப்படும். இந்த சிப்பில் பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் அனைத்து தகவல்களும் இடம் பெற்றுவிடும் என்பதுடன், போலி பாஸ்போர்ட்டுக்கான வாய்ப்புகளும் கணிசமாகக் குறைந்துவிடும்.
கைரேகைகள் மற்றும் முக அங்கீகாரம் பொருந்தாமல் பாஸ்போர்ட்டைப் பயன்படுத்த முடியாது. கூடுதலாக, இந்த பாஸ்போர்ட் சர்வதேச தரத்தின்படி தயாரிக்கப்படுவதால், உலகெங்கிலும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இதை பயன்படுத்தலாம்.
பொதுவாக அதிகாரிகள், பயணம் செய்வதற்கு முன் விமான நிலையத்தில் பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை சரிபார்க்கிறார்கள்.
இ-பாஸ்போர்ட் மூலம், இந்த சரிபார்ப்பு வேகமாக இருக்கும். நீண்ட வரிசைகளையும், காத்திருப்பு நேரத்தையும் குறைக்கும்.
வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், பல நாடுகள் சரிபார்ப்புக்காக பயோமெட்ரிக் முறைகளை ஏற்றுக்கொள்கின்றன. எனவே, இ-பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்திய பயணிகளுக்கும் இதன் மூலம் பயன் கிடைக்கும்.
இந்தியாவின் எந்தெந்த நகரங்களில் இ-பாஸ்போர்ட் கிடைக்கும்?
இந்தியாவில் இ-பாஸ்போர்ட்டின் முன்னோடித் திட்டம் ஏப்ரல் 2024 இல் தொடங்கியது. நவம்பர் 28, 2024 நிலவரப்படி, புவனேஸ்வர் மற்றும் நாக்பூர் ஆகிய இரண்டு நகரங்களில் சுமார் 80 ஆயிரம் இ-பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டன.
தற்போது, சென்னை, ஹைதராபாத், நாக்பூர், புவனேஸ்வர், ஜம்மு, கோவா, சிம்லா, ராய்பூர், அமிர்தசரஸ், ஜெய்பூர், சூரத் மற்றும் ராஞ்சி ஆகிய இடங்களில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களும் இ-பாஸ்போர்ட்களை வழங்குகின்றன. இந்த சேவை படிப்படியாக நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
பழைய பாஸ்போர்ட் இனி உபயோகமாகாதா?
தற்போது புழக்கத்தில் உள்ள காகித வடிவிலான பாஸ்போர்ட் இன்னும் செல்லுபடியாகும். உடனடியாக அதை மாற்ற வேண்டிய அவசியமில்லை. பாஸ்போர்ட்டின் காலாவதி தேதியே அதன் செல்லுபடியாகும் தேதியாகும்.
பாஸ்போர்டை புதுப்பிக்கும்போது, உங்கள் பாஸ்போர்ட் மையம் இ-பாஸ்போர்ட் சேவைகளை வழங்கத் தொடங்கியிருந்தால், புதிய வகை பாஸ்போர்ட் கிடைக்கும்.
எனவே நீங்கள் எந்த தனி செயல்முறையையும் மேற்கொள்ள வேண்டியதில்லை. இதற்கு நீங்கள் பாஸ்போர்ட் சேவா வலைத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வேறு எந்த நாடுகளில் இ-பாஸ்போர்ட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன?
அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஏற்கனவே இ-பாஸ்போர்ட்களைப் பயன்படுத்துகின்றன. 100க்கும் மேற்பட்ட நாடுகள் தற்போது இ-பாஸ்போர்ட்டுகளை வழங்குவதாக சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ஐசிஏஓ) கூறுகிறது.
தற்போது, மொத்தம் 140 நாடுகள் இ-பாஸ்போர்ட்களை செயல்படுத்தியுள்ளன, மேலும் உலகளவில் 1 பில்லியன் மக்கள் இ-பாஸ்போர்ட்களை வைத்திருப்பதாக ஐசிஏஓ கூறுகிறது.
பாஸ்போர்ட்டின் நம்பகத்தன்மையை அதிகரிக்க உலகின் பல நாடுகள் இ-பாஸ்போர்ட்டைப் பயன்படுத்துகின்றன என்றாலும், ஐசிஏஓ பாஸ்போர்ட்டில் உள்ள சிப்பை அதாவது இ-பாஸ்போர்ட்டை கட்டாயமாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு