காணொளி: அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் ராணுவ கூட்டணி சாத்தியமா?

காணொளி: அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் ராணுவ கூட்டணி சாத்தியமா?

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அரபு நாடுகளிடையே நேட்டோ போன்ற ஒரு ராணுவ கூட்டணியை உருவாக்கும் முயற்சி வேகமெடுத்து வருவதாகத் தெரிகிறது.

தோஹாவில் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் அவசர உச்சி மாநாடு இன்று நடக்கிறது.

இரான் அதிபர் மசூத் பெஷஷ்கியன், இராக் பிரதமர் முகமது ஷியா-அல் சூடானி (Muhammad Shia-al Sudani ) மற்றும் பாலத்தீன அதிகாரசபை தலைவர் மஹ்மூத் அப்பாஸ் உட்பட பல உயர்மட்ட தலைவர்களும் இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

இதற்கிடையே, நேட்டோ போன்ற ஒரு ராணுவ கூட்டணியை உருவாக்க எகிப்து ஒரு திட்டத்தை முன்மொழிந்திருக்கிறது.

எகிப்தின் திட்டம் என்ன?

எகிப்தின் முன்மொழிவில் ராணுவம், விமானப்படை மற்றும் கமாண்டோ பிரிவுகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதுடன் பயிற்சி, தளவாடங்கள் மற்றும் ராணுவ அமைப்புகளை ஒருங்கிணைப்பதும் அடங்கும்.

ராணுவ படையை பயன்படுத்துவதற்கான அனுமதி உறுப்பு நாடுகள் மற்றும் ராணுவத் தலைமையுடன் கலந்தாலோசித்து வழங்கப்படும்.

லெபனான் ஊடகமான அல் அக்பரின் கூற்றுப்படி, அத்தகைய ராணுவக் கூட்டணிக்கு 20,000 வீரர்களை வழங்குவதாக எகிப்து தெரிவித்துள்ளது.

எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி இது குறித்து பல நாடுகளுடன் பேசியுள்ளார். தோஹா உச்சிமாநாட்டில் இந்த திட்டம் குறித்தும் விவாதம் நடத்த வாய்ப்பு உள்ளது.

அதே நேரம் இது போன்ற ராணுவ கூட்டணி இந்த பிராந்தியத்தில் முன்பும் இருந்திருக்கிறது.

அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே பாக்தாத் ஒப்பந்தம் என அறியப்பட்ட Central Treaty Organisation என்ற ராணுவ கூட்டணி 1955 முதல் 1979 வரை நீடித்தது.

கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அரபு நாடுகளிடமிருந்து கடுமையான எதிர்வினை வந்துள்ளன, இந்த பிராந்தியத்தில் இஸ்ரேலுடன் ராஜிய உறவை கொண்டுள்ள ஒரே நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இந்த தாக்குதலை கண்டித்துள்ளது

இராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானியும் இஸ்லாமிய ராணுவ கூட்டணியை உருவாக்க அழைப்பு விடுத்துள்ளார்.

காஸா மற்றும் கத்தாரில் இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதல்களுக்கு கூட்டு பதிலடி அவசியம் என அவர் கூறியதாக துருக்கி அரசு ஊடகமான TRT World தெரிவித்துள்ளது.

நேட்டோ பாணி ராணுவ கூட்டணி சாத்தியமா?

அரபு நாடுகளிடையே நேட்டோ போன்ற ராணுவக் கூட்டணியை உருவாக்கும் யோசனை நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில், அது செயல்பாட்டுக்கு வரும் என்பது குறித்து நிபுணர்களுக்கு அதிக நம்பிக்கை இல்லை.

''அரபு நேட்டோ தொடர்பான யோசனை முன்பே விவாதிக்கப்பட்டது. செளதி அரேபியா அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. பாகிஸ்தானின் முன்னாள் ராணுவத் தலைவர் ரஹீல் ஷெரீப் கூட அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் அது அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை'' என்கிறார் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் Nelson Mandela Centre for Peace and Conflict Resolution மையத்தை சேர்ந்த பிரேமானந்த் மிஸ்ரா.

தொடர்ந்து இது பற்றி விளக்கிய அவர், ''அனைத்து நாடுகளின் பாதுகாப்பு நலன்கள் மிகவும் வேறுபட்டவை, அவற்றுக்கிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவது கடினமான வேலை. உதாரணமாக, சௌதி அரேபியாவும் இரானும் தங்கள் வேறுபாடுகளை களைந்து ஒன்றிணைய முடியுமா? ஏனெனில் ராணுவக் கூட்டணி உருவாக வேண்டுமானால், உளவுத்துறை பகிர்வும் நடைபெறும்'' என்றார்.

எனினும் சௌதி அரேபியா மற்றும் இரான் இடையிலான உறவை இயல்பாக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

"இந்தத் திட்டம் எகிப்திலிருந்து வந்துள்ளது, அது செயல்படுத்தும் நிலையில் உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். மேலும் இதுபோன்ற எந்தவொரு குழுவையும் மேற்கத்திய நாடுகள், குறிப்பாக அமெரிக்கா மற்றும் நேட்டோ செயல்படுத்த அனுமதிக்குமா?" என்கிறார் பிரேமானந்த் மிஸ்ரா.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மேற்கு ஆசிய ஆய்வு மையத்தின் உதவிப் பேராசிரியரான முதாசிர் கமர், அரபு நாடுகள் அரபு லீக், OIC, GCC என பல அமைப்புகளைக் கொண்டுள்ளன என்கிறார்.

இது தவிர, செளதி அரேபியா தலைமையில் பயங்கரவாத எதிர்ப்பு ராணுவ கூட்டமைப்பும் உள்ளது. ஆனால் இங்கு சிக்கல் என்பது அரபு நாடுகளுக்கு இடையே உள்ள பரஸ்பர வேறுபாடுகளை கையாள்வதே.

முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.