You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: எகிப்திய மம்மிக்களின் வயதை அறிவது எப்படி?
எகிப்திய மம்மிகளின் வயதை நாம் எப்படி அறிவோம், மாய நாகரிகம் எப்போது வீழ்ச்சியடைந்தது அல்லது ஸ்டோன்ஹெஞ்ச் எப்போது கட்டப்பட்டது?
இதற்கான பதில் கார்பன்-14 டேட்டிங்கில் உள்ளது. இது 1940களின் மத்தியில் இயற்பியல் வேதியியலாளர் வில்லார்ட் லிபி உருவாக்கிய முறை.
கார்பனின் நிலையற்ற வடிவமான கார்பன்-14-ஐ சில ஆண்டுகளுக்கு முன்பு மார்ட்டின் கேமன் மற்றும் சாம் ரூபன் ஆகியோர் கண்டுபிடித்திருந்தனர். பின்னர், இது வளிமண்டலத்தில் இயற்கையாகவே இருப்பதை லிபி நிரூபித்தார்
கார்பன், ஆக்ஸிஜனுடன் இணையும்போது, அது கார்பன் டை ஆக்சைடை உருவாக்குகிறது, இதை தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் உறிஞ்சுகின்றன. விலங்குகளும் மனிதர்களும் அதை உணவாக உட்கொள்வது மூலம் கார்பன்-14-ஐ எடுத்துக்கொள்கின்றன.
அனைத்து உயிரினங்களும் தங்கள் உடலில் கார்பன்-14 இருப்பை தொடர்ந்து புதுப்பிக்கின்றன. ஆனால் இறக்கும் போது, கார்பன்-14 குறைய தொடங்குகிறது. ஒரு கவுண்டவுன் கடிகாரத்தை போல நிலையான வேகத்தில் இது நடக்கும்.
உடல் எச்சங்களில் எஞ்சியிருக்கும் கார்பன்-14 ஐ அளவிடுவதன் மூலம் இறப்பு நேரத்தை தீர்மானிக்க முடியும், சுமார் 50,000 ஆண்டுகள் பழமையான எச்சம் வரை இது சாத்தியம் என லிப்பி உணர்ந்தார்.
மனித கழிவுகளில் அது ஏராளமாக இருக்கும் என நினைத்த அவர், கழிவுநீர் மாதிரிகளில் இருந்து வரும் வாயுவைக் கொண்டு ஒரு சோதனையை நடத்தினார். அது கைகொடுத்தது.
பின்னர் விஞ்ஞானிகள் அதை பண்டைய கலைப்பொருட்களில் முயற்சித்தனர். அது அவற்றின் மதிப்பிடப்பட்ட வயதுகளுடன் பொருந்திப்போனது. இது தொல்லியல் துறையில் புரட்சியை ஏற்படுத்தியது.
லிபி 1960-ல் வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஆனால் அது அத்துடன் முடியவில்லை.
கார்பன்-14 டேட்டிங் பண்டைய சுற்றுச்சூழல் அமைப்பு பற்றிய விவரங்களை வெளிப்படுத்தியது. மனித செயல்பாடு கிரகத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றிய புரிதலையும் மேம்படுத்தியுள்ளது.
இது, ஐபிசிசி மற்றும் முன்னாள் அமெரிக்க துணை அதிபர் அல் கோர் போன்ற தலைவர்கள் காலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த உதவியது.
இதற்காக அவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு 2007-ல் வழங்கப்பட்டது.
லிபியின் முறை கடந்த கால மர்மங்களைத் திறந்தது மட்டுமல்லாமல், நாம் வாழும் உலகத்தை புரிந்துகொள்வதற்கான திறவுகோலையும் நமக்கு வழங்கியது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு