பூத சுத்தி திருமணம் எவ்வாறு நடக்கும்? தாலிக்கு பதில் சமந்தா அணிந்தது என்ன?

நடிகை சமந்தாவுக்கும் இயக்குநர் ராஜ் நிதிமோருக்கும் திங்கள்கிழமை காலை திருமணம் நடந்ததாக ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண படங்களை சமந்தா பகிர்ந்திருந்தார்.

இந்தப் படங்களில், லிங்க பைரவி தேவியின் முன்னிலையில் நடந்த பூஜையில், ராஜ் நிதிமோரு சமந்தாவுடைய விரலில் மோதிரத்தை அணிவிப்பது போல் தெரிகிறது.

அதேபோல் சமந்தா தாலிக்குப் பதிலாக கடவுள் உருவம் பொதிந்த பெண்டன்ட் (pendant) அணிந்திருந்ததும் தெரிந்தது.

சமந்தா தனது கையில் பிரத்யேக மோதிரமும், கழுத்தில் கருப்பு மணிகளால் ஆன பெண்டன்ட்டும் அணிந்திருந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இந்தத் திருமணம் கோவையின் ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங்க பைரவி தேவி கோவிலில் நடந்தது.

சிவப்பு நிற சேலை அணிந்திருந்த சமந்தா, தங்க நகைகளை அணிந்திருந்தார். சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது ஃபாலோயர்ஸ் பலரும் திருமண வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

லிங்க பைரவி தேவியின் முன்னிலையில், நண்பர்கள் சூழ திருமணம் நடந்ததாக ஈஷா யோகா மையம் தெரிவித்திருக்கிறது.

"இவர்கள் இருவருக்கும் இறைவனின் ஆசி கிடைக்கட்டும். அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்" என்று ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது.

பூத சுத்தி திருமணம் என்பது என்ன?

இது, பக்தியுடன் சேர்ந்து சில விசேஷ ஆன்மீக நடைமுறைகளில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் தேர்வு செய்யும் ஒரு திருமண முறையாகக் கருதலாம்.

இந்த முறை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பிரபலம் என்று கூறுகிறார் ஹைதராபாத்தில் உள்ள கொத்தப்பேட்டையைச் சேர்ந்த புரோகித் ஷர்மா.

ஈஷா சத்குரு அறக்கட்டளை இணையதளத்தின்படி, பூத சுத்தி திருமணம் என்பது திருமணத்தின் ஒரு பண்டைய யோக செயல்முறையாகும். லிங்க பைரவி, பார்வதி தேவியின் ஒரு வடிவம் என்று புரோகித் சர்மா கூறினார்.

இந்து மத நம்பிக்கைகள் மற்றும் ஆன்மீக இலக்கியங்களின்படி, பூதசுத்தி என்பது நிலம், காற்று, நீர், நெருப்பு மற்றும் ஆகாயம் எனப்படும் ஐந்து கூறுகளை அமைதிப்படுத்தும் செயல்முறை என்று ஈஷா யோக மைய வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபற்றி ஒரு வீடியோவில் பேசிய சத்குரு ஜக்கி வாசுதேவ், "இந்த திருமணம் பூத சுத்தியை அடிப்படையாகக் கொண்டது. சிந்தனைகள், உடனிருப்பு, உணர்வுகள், உடல், பொருளியல் உலகம் ஆகியவற்றைக் கடந்த ஒரு வலுவான பிணைப்பை தம்பதியருக்குள் உருவாக்குவதுதான் இந்தத் திருமணத்தின் நோக்கம். அந்த ஐந்து தத்துவங்களையும் எவ்வளவு சமநிலைப்படுத்துகிறோமோ அதைப் பொறுத்தே நம்முடைய வாழ்க்கையின் தரம், இயல்பு ஆகியவை தீர்மானிக்கப்படுகிறது. அந்த நோக்கத்திற்காக செய்யப்பட்ட முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்" என்று விளக்கினார்.

அதேசமயம், சிருங்கேரி பீடத்தின் தெலுங்கானா பொறுப்பாளர் பங்காரையா சர்மா, "பூத சுத்தி என்றால் ஐந்து பூதங்களிலிருந்து எடுப்பது" என்று கூறினார்.

திருமணமானவர்களும் பூத சுத்தி திருமணம் செய்யலாமா?

இணையதளத்தில் உள்ள விவரங்களின்படி, திருமணமாகாத மற்றும் ஏற்கனவே திருமணமான தம்பதிகள் இருவருமே பூதசுத்தி திருமணம் செய்து கொள்ளலாம். இந்த திருமணம் யோக அமைப்பில் வேர் கொண்டது என்று கூறப்படுகிறது.

அதேசமயம், பெண் கர்ப்பமாக இருந்தால் இந்த சடங்கு செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.

இந்த திருமணத்தை யார் நடத்துவார்கள்?

ஈஷா இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின்படி, பூதசுத்தி திருமணத்தில் சிறப்புப் பயிற்சி பெற்ற 'சுமங்கலா' என்ற தன்னார்வத் தொண்டர்கள் திருமணத்தை நடத்தி வைப்பார்கள். அவர்கள் மஞ்சள் நிற ஆடை அணிந்திருப்பார்கள்.

சமந்தா பகிர்ந்துள்ள புகைப்படங்களில், மஞ்சள் நிற சேலை அணிந்த பெண் ஒருவர் சடங்கு செய்வது போல் தெரிகிறது.

இந்த திருமணத்தில் தாலி கட்டாயம் இல்லையா?

பூத சுத்தி திருமணத்தின் போது தேவி (கடவுள்) பெண்டன்ட் அணிவது கட்டாயம் என்று ஈஷா இணையதளம் கூறுகிறது.

அதுபோக, தம்பதியரின் விருப்பப்படி, பாரம்பரிய தாலியையும் மணமகளின் கழுத்தில் கட்டலாம்.

ஈஷா யோகா மையத்தில் லிங்க பைரவி தேவியை சத்குரு நிறுவியிருந்தார்.

இதற்கிடையில், 'எக்ஸ்' தளத்தில் பேய் சுத்திகரிப்பு செயல்முறை மூலம் சமந்தா திருமணம் செய்து கொண்டதுபற்றி பலரும் விவாதித்தனர்.

தாங்களும் கடந்த காலங்களில் இதேபோன்ற செயல்பாட்டில் பங்கேற்றதாக ஒருசிலர் கூறினர். மேலும் சிலர், ​​ பண்டைய யோகாவில் பேய் சுத்திகரிப்பு செயல்முறை இருந்தாலும், திருமணத்திற்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளனர்.

யார் இந்த ராஜ் நிதிமோரு?

  • இவர் ஒரு பிரபல திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர். இவரது படைப்புகள் பெரும்பாலும் இந்தி மொழியில் உள்ளன.
  • இவர், தனது நீண்டகால நண்பரான கிருஷ்ணா டி.கே. உடன் இணைந்து ராஜ்&டிகே (Raj & DK) என்ற பெயரில் திரைத்துறையில் பணியாற்றுவது வழக்கம்.
  • தி ஃபேமிலி மேன், ஃபார்ஸி, கன்ஸ்&குலாப்ஸ் போன்ற இணைய தொடர்களையும் அவர் இணைந்து இயக்கியுள்ளார்.
  • எ ஜென்டில்மேன், ஸ்த்ரீ போன்ற படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார்.
  • தி ஃபேமிலி மேன் இரண்டாம் சீசனிலும் சிட்டாடெல் ஹனி பன்னி தொடரிலும் சமந்தா நடித்திருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு