You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'போர் தொடங்கிவிட்டது' என்று கூறும் இரான் - அமெரிக்கா என்ன செய்கிறது?
இரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான பதற்றம் 6வது நாளை எட்டியுள்ளது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 'இஸ்ரேலின் இருப்புக்கே' இரான் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதற்குப் பின் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் தாக்கி வருகின்றன.
புதனன்று நடத்தப்பட்ட தாக்குதலில், இரானில் உள்ள யுரேனியம் சென்ட்ரிஃப்யூஜ் உற்பத்தி நிலையங்கள் மற்றும் ஆயுத தொழிற்சாலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளது.
இரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதே இந்த மோதலின் முடிவாக இருக்கும் என இஸ்ரேல் கூறிவருகிறது.
இந்நிலையில், இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி இருக்கும் இடம் தெரியும் என்றும், அவரைக் கொல்லப் போவதில்லை எனவும் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். மேலும், இரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா ஈடுபடுவது குறித்தும் டிரம்ப் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்பின் போர் தொடங்கிவிட்டது என இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கூறியுள்ளார். இதனால், மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இதுவரை இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? சுருக்கமாகப் பார்க்கலாம்.
இரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி, இஸ்ரேல் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. எனினும், இரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதற்கான ஆதாரங்கள் எதையும் இஸ்ரேல் வழங்கவில்லை.
வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த மோதலில் சுமார் ஒரு கோடி மக்கள் வாழும் இரானின் டெஹ்ரான் மீது 100-க்கும் மேற்பட்ட தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது. இதில் இரானிய அணு விஞ்ஞானிகள் மற்றும் இரானிய புரட்சிகர காவல் படைத் தலைவரும் கொல்லப்பட்டனர். இது மட்டுமின்றி, குறைந்தது 450 பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை வரை இரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் என, HRANA எனப்படும் இரானில் செயல்படும் மனித உரிமை ஆர்வலர்கள் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், இரானும் இஸ்ரேலில் மக்கள் அடர்த்தியாக வாழும் நகரங்களான டெல் அவிவ் மற்றும் ஹைஃபா ஆகிய நகரங்களைத் தாக்கியுள்ளது. இரானின் தாக்குதலால் இஸ்ரேலில் 24 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு