ரஸியா சுல்தான்: பர்தா இல்லாமல் குதிரையில் வலம் வந்த முஸ்லிம் ராணி : பெண் என்பதாலேயே வீழ்த்தப்பட்ட வரலாறு

    • எழுதியவர், ரெஹான் ஃபசல்
    • பதவி, பிபிசி ஹிந்தி

செங்கிஸ் கானின் படைகள் 1206ஆம் ஆண்டில் மத்திய ஆசியாவின் புல்வெளிகளில் தங்கள் குதிரைகள் கொண்டு மிதித்து முன்னேறிக் கொண்டிருந்தபோது, டெல்லி சுல்தானகத்தின் ஆட்சியாளரான ஷம்சுதீன் இல்துமிஷுக்கு ஒரு மகள் பிறந்தாள், பின்னர் அவர் ரஸியா பின்த் இல்துமிஷ் என்று அறியப்பட்டார்.

டெல்லியில் குதுப் மினாரின் கட்டுமானம் குதுபுதீன் ஐபக்கால் தொடங்கப்பட்டது, ஆனால் அது ரஸியாவின் தந்தை சுல்தான் இல்துமிஷால் முடிக்கப்பட்டது.

மின்ஹாஜஸ் சிராஜ் ஜுஸ்ஜானி தனது 'தபகத்-இ-நசிரி' புத்தகத்தில், "டெல்லியை ஆண்ட ஆட்சியாளர்களில், இல்துமிஷை விட தாராள மனப்பான்மை கொண்ட, அறிஞர்கள் மற்றும் பெரியவர்களை மதித்த நபர் யாரும் இல்லை என்று நம்பப்படுகிறது" என்று எழுதியுள்ளார்.

பதினான்காம் நூற்றாண்டில் மொராக்கோவிலிருந்து இந்தியாவிற்கு வந்த பயணி இபன் பட்டுடா, தனது 'ரெஹ்லா' புத்தகத்தில், "ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதிலும், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை போக்குவதிலும் இல்துமிஷுக்கு நிகர் யாரும் இல்லை" என்று எழுதியுள்ளார்.

"அவர் தனது அரண்மனைக்கு வெளியே ஒரு பெரிய மணியை நிறுவியிருந்தார். பாதிக்கப்பட்ட மக்கள் சுல்தானின் கவனத்தை ஈர்க்க அதை அடிக்க முடியும். மணியின் சத்தத்தைக் கேட்டவுடன், சுல்தான் அவர்களது புகாரைத் தீர்க்க முயற்சிப்பார்."

இல்துமிஷின் வாரிசாக ரஸியா

இல்துத்மிஷுக்கு வயதாகத் தொடங்கியபோது, அவரது மரணத்திற்குப் பிறகு அவரது வாரிசுகளுக்குள் சண்டை ஏற்படாமல் இருக்க அடுத்த வாரிசு யார் என்பதை முன்னரே அறிவிக்குமாறு அரசவையினர் கேட்டுக்கொண்டனர். பின்னர் இல்துத்மிஷ் தனது மூத்த மகள் ரஸியாவை வாரிசாக அறிவித்தார்.

அக்கால வரலாற்றாசிரியரான சிராஜ் ஜுஜ்ஜானி பின்வருமாறு விவரிக்கிறார், "சுல்தான் ரஸியா ஒரு பெண்ணாக இருந்தபோதிலும் அவரை தனது வாரிசாக அறிவித்தார், அதுவும் எழுத்துப்பூர்வமாக.

அவரது அரசவை உறுப்பினர்களால் இந்த முடிவை ஜீரணிக்க முடியாதபோது, இல்துமிஷ் அவர்களிடம், 'என் மகன்கள் அனைவரும் தங்கள் இளமையை அனுபவிப்பதில் மும்முரமாக உள்ளனர். அவர்களில் ஒருவர் கூட ராஜாவாகும் திறன் கொண்டவர் அல்ல. என் மரணத்திற்குப் பிறகு, நாட்டை வழிநடத்த என் மகளை விட திறமையானவர் யாரும் இருக்க முடியாது என்பதை நீங்கள் உணர்வீர்கள்' என்று கூறினார்."

ரஸியா தான் வாரிசு என்பது சுல்தானால் உணர்ச்சிப்பூர்மாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. ரஸியாவுக்கு ஆட்சி செய்யும் திறன் இருந்தது. இல்துமிஷ், தனது ராணுவப் படையெடுப்புகளின்போது ரஸியாவிடம் தான் நிர்வாகப் பொறுப்புகளை ஒப்படைத்திருந்தார். அப்போதெல்லாம், ரஸியா அவற்றைச் சிறப்பாகச் செய்தார். ஆனால் இல்துமிஷின் முடிவு பாரம்பரிய முறைகளுக்கு இணங்கவில்லை என்பதில் சந்தேகமில்லை.

அரபு வரலாற்றில் பெண்கள் அரசியலில் பங்கேற்றதற்கான சில உதாரணங்கள் உள்ளன. அவர்கள் சில ராணுவப் படையெடுப்புகளில் கூட பங்கேற்றனர். ஆனால் அந்தக் கால சமூகத்தில், பெண்கள் பொதுவாக திரைக்குப் பின்னால் இருந்து தான் அரசியலில் பங்காற்றினர். ஆனால் அவர்கள் அரியணையில் அமர்ந்தது ஆச்சரியமான விஷயமாகக் கருதப்பட்டது.

டெல்லியின் சுல்தானாக நியமிக்கப்பட்ட ஃபிரோஸ்

இல்துமிஷின் மரணத்திற்குப் பிறகு, அவரது எழுத்துப்பூர்வ உத்தரவுகள் இருந்தபோதிலும், அவரது அரசவை உறுப்பினர்கள் ஒரு பெண்ணின் கீழ் பணியாற்றத் தயாராக இல்லாததால் அவரது கடைசி விருப்பத்திற்குக் கீழ்ப்படிய மறுத்துவிட்டனர்.

அரசவையினர் இல்துமிஷின் மூத்த மகன் ருக்னுதீன் ஃபிரோஸை டெல்லியின் அரியணையில் அமர்த்தினர். பிரபல வரலாற்றாசிரியர் ஆபிரகாம் இராலி தனது 'தி ஏஜ் ஆஃப் வராத்' புத்தகத்தில், "ஃபிரோஸை அரியணையில் அமர்த்திய பிறகும், இல்துமிஷின் அரசவை உறுப்பினர்கள் ஒரு பெண்ணின் ஆட்சியை தான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது, அதுவும் ஒரு தந்திரமான மற்றும் பழிவாங்கும் எண்ணம் கொண்ட பெண்ணின் ஆட்சியை. ஃபிரோஸுக்கு அரசாங்கத்தை நடத்துவதில் எந்த ஆர்வமும் இல்லை என்பதால், எனவே அவர் அனைத்துப் பொறுப்பையும் தனது தாய் ஷா துர்கானிடம் ஒப்படைத்தார்" என்று எழுதியுள்ளார்.

தான் ஒரு முடிவெடுக்க தெரியாத ஆட்சியாளர் என ஃபிரோஸ் நிரூபித்தார்.

"ஃபிரோஸ் நிச்சயமாக தாராள மனப்பான்மை கொண்டவர், கனிவானவர், ஆனால் அவர் சிற்றின்பங்கள், மது மற்றும் கேளிக்கைகளுக்கு மிகவும் அடிமையாக இருந்தார், அவருக்கு நாட்டின் விவகாரங்களில் ஆர்வம் இல்லை. அவர் குடிபோதையில் யானை சவாரி செய்து தெருக்கள் மற்றும் சந்தைகள் வழியாகச் சென்று, கைநிறைய தங்க நாணயங்களை பறிகொடுப்பார். அவை அவரைச் சுற்றி நடக்கும் மக்களால் கொள்ளையடிக்கப்பட்டன." என்று தன் புத்தகத்தில் கூறுகிறார் சிராஜ்.

ஃபிரோஸின் கொலை

ஃபிரோஸின் ஆட்சிக் காலத்தில், அரண்மனையில் அவரது தாயார் ஷா துர்கன் தனது எதிரிகளுடனான பழைய பகைகளை தீர்த்துக் கொண்டார்.

முதலில் ஃபிரோஸின் ஒன்றுவிட்ட சகோதரர்களில் ஒருவரைக் குருடாக்கி, பின்னர் அவரைக் கொன்றார். ஃபிரோஸின் ஒன்றுவிட்ட சகோதரி ரஸியாவையும் கொல்ல முயன்றார்.

இந்த சம்பவத்திற்கு நூறு ஆண்டுகளுக்குப் பிறகு சிராஜ் பின்வருமாறு பதிவு செய்தார், "இந்த மோசமான நிர்வாக சூழலில், பல ஆளுநர்கள் ஃபிரோஸுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். ஃபிரோஸ் டெல்லியை விட்டு வெளியேறி அவர்களின் கிளர்ச்சியை அடக்கியபோது, ரஸியா அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு டெல்லியின் பொதுமக்களின் உணர்வை தனக்குச் சாதகமாக மாற்றினார்."

"மக்கள் அரண்மனையைத் தாக்கி ஃபிரோஸின் தாயார் ஷா துர்கானைக் கைது செய்தனர். ஃபிரோஸ் டெல்லிக்குத் திரும்பியபோது, அவர் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார். ஃபிரோஸ் டெல்லியை ஏழு மாதங்கள் மட்டுமே ஆட்சி செய்தார்."

டெல்லியின் சுல்தானாக ரஸியா

பதினான்காம் நூற்றாண்டின் வரலாற்றாசிரியரான அப்துல் மாலிக் இசாமியின் கூற்றுப்படி, ஃபிரோஸ் தூக்கியெறியப்பட்டு, யாரை சுல்தானாக ஆக்குவது என்று அரசவை உறுப்பினர்கள் ஆலோசிக்கத் தொடங்கியபோது, ரஸியா ஜன்னலிலிருந்து தனது துப்பட்டாவை அசைத்து, "நான் மாட்சிமை தங்கியவரின் மகள். அவர் என்னை தனது வாரிசாகத் தேர்ந்தெடுத்திருந்தார். நீங்கள் சுல்தானின் கட்டளைகளை மீறி, கிரீடத்தை வேறொருவரின் தலையில் வைத்தீர்கள், அதனால்தான் நீங்கள் இந்த நிலையில் இருக்கிறீர்கள்" என்று அறிவித்தார்.

"சில வருடங்களுக்கு எனக்கு கிரீடத்தைக் கொடுத்து, என் திறமைகளை சோதித்துப் பாருங்கள். நான் ஒரு நல்ல ஆட்சியாளர் என்பதை நிரூபித்தால், நான் அரியணையில் இருக்க அனுமதியுங்கள். உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நான் ஆட்சி செய்யத் தவறினால், அரியணையை வேறு ஒருவருக்குக் கொடுங்கள்." என்றார்.

இவ்வாறு, நவம்பர் 1236இல் ரஸியா டெல்லி அரியணை ஏறினார்.

ரஸியாவை தவறாகப் புரிந்து கொண்ட அரசவை உறுப்பினர்கள்

ரஸியாவின் தோற்றம் பற்றி மிகக் குறைவாகவே அறியப்படுகிறது. அவர் தனது அரண்மனையான குஸ்க்-இ-ஃபிரோசியின் படிக்கட்டுகளில் பெரிய குர்தா மற்றும் தளர்வான சல்வார் அணிந்து காட்சியளித்தார் என்பதை நம்ப முடிகிறது.

வரலாற்றாசிரியர் இரா முக்கோட்டி தனது 'ஹீரோயின்ஸ், பவர்ஃபுல் இந்தியன் வுமன் ஆஃப் மித் அண்ட் ஹிஸ்டரி' என்ற புத்தகத்தில் பின்வருமாறு எழுதியுள்ளார், "அக்கால வரலாற்றாசிரியர்கள் ஆண்களைப் பற்றி விரிவாக எழுதவில்லை. பெண்கள் பற்றிய வரலாற்றைப் பொறுத்தவரை, வரலாற்றாசிரியர்கள் பெரும்பாலும் மௌனம் காத்தார்கள் அல்லது பல விஷயங்களை மறைத்தார்கள். இருந்தபோதிலும் ரஸியா துருக்கிய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதையும், புல்வெளி நிலங்களில் வாழும் மக்களைப் போலவே, அவரது கன்னத்து எலும்புகள் உயர்ந்தும், அவரது கண்கள் பாதாம் வடிவதிலும் இருந்தன என்பதை அறியலாம்."

"இல்துமிஷின் அரசவையினர் ரஸியாவை சுல்தானாக ஆக்கியபோது, அவர் தங்களுக்குக் கீழ்ப்படிவார் என்றும் இல்துமிஷின் ஆட்சிக் காலத்தில் அவர் எப்படி இருந்தாரோ அப்படியே இப்போதும் இருப்பார் என்றும் அவர்கள் எதிர்பார்த்தனர். அடுத்தடுத்த நாட்களில் ரஸியாவின் நடத்தை, ரஸியாவைப் புரிந்துகொள்வதில் அரசவையினர் தவறு செய்துவிட்டார்கள் என்பதை நிரூபித்தது."

ரஸியாவுக்கு எதிரான கிளர்ச்சி

ரஸியா டெல்லி அரியணை ஏறியது பல மாகாண ஆளுநர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் தங்கள் படைகளுடன் டெல்லிக்கு அணிவகுத்துச் சென்றனர், ஆனால் ஆளுநர்களிடையே இருந்த பிரிவை ரஸியா முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார். ரஸியாவுக்கு அவர்கள் எந்தத் தீங்கும் செய்வதற்கு முன்பே, அவர்களின் கிளர்ச்சி நசுக்கப்பட்டது.

"இந்தக் கிளர்ச்சியை ரஸியா கையாண்ட விதத்தால், அவரது தலைமைத்துவத் திறனைப் பற்றி சந்தேகம் கொண்ட அரசவை உறுப்பினர்கள் அவரது ரசிகர்களாக மாறி, ரஸியாவை ஆதரிக்க முடிவு செய்தனர். இதன் பிறகு, அரண்மனையில் வசிக்கும் பெண்கள் மீது விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் உடைக்க ரஸியா முடிவு செய்தார்" என்று ஆபிரகாம் இராலி எழுதுகிறார்.

"அவர் தனது பாரம்பரிய உடைகள் மற்றும் முக்காடு அணிவதைக் கைவிட்டு, சட்டை மற்றும் தொப்பியுடன் பொது இடங்களில் தோன்றத் தொடங்கினார். அவர் அரண்மனையிலிருந்து யானை மீது ஏறி வெளியே வந்தபோது, அனைத்து பொதுமக்களும் அவருடைய தோற்றத்தைக் கண்டார்கள். சில சமயங்களில் அவர் வீரர்களால் சூழப்பட்டு, ஒரு ஆணைப் போல வில் மற்றும் அம்புகளை ஏந்தி, குதிரையில் வெளியே வருவார். அவரது முகத்தில் முக்காடு இருக்காது" என்று இபன் பட்டுடா எழுதியுள்ளார்.

நாணயங்களில் ரஸியா சுல்தானின் பெயர்

ரஸியா ஒரு நல்ல நிர்வாகியாக மட்டுமல்லாமல், அவரது ராணுவ வியூகங்களுக்காகவும் பாராட்டப்பட்டார். அவர் தனது ராணுவத்தை முன்னணியில் இருந்து வழிநடத்தினார்.

சிராஜ் ஜுஜ்ஜானி, இல்துமிஷ் வம்சத்தின் வரலாற்றை எழுதியபோது, ரஸியாவுக்கு 'லங்கரக்ஷ்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி மிகுந்த மரியாதை அளித்தார். இந்த வார்த்தையின் அர்த்தம் - போரில் படையை வழிநடத்துபவர்.

'தனது குடிமக்களால் நேசிக்கப்பட்ட ஒரு சுல்தான்' என தன்னை நிரூபித்தார் ரஸியா. ஆரம்பத்தில் ஒரு பேரரசரின் மகள் என்ற அடையாளத்தையும், தனது தந்தையின் மரபையும் நம்பியிருந்த ரஸியா, பின்னர் அதிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டார். இடைக்கால இந்தியாவில் ஒரு முஸ்லிம் பெண் சுல்தானாக இருந்தது மிகவும் தனித்துவமானது.

இல்துமிஷின் காலத்தில், வெள்ளி நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன, அவற்றில் அவரது பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. ரஸியா முதலில் இந்த நாணயங்களில் தனது தந்தையின் பெயருடன் தனது பெயரையும் சேர்த்து வெளியிடத் தொடங்கினார். அவற்றில், இல்துமிஷ் 'சுல்தான்-இ-ஆசம்' என்றும், ரஸியா 'சுல்தான்-இ-முஅஸ்ஸாம்' என்றும் அழைக்கப்பட்டனர்.

காலப்போக்கில், ரஸியா மிகவும் தன்னம்பிக்கை கொண்டவராக மாறி, தன் பெயரில் மட்டுமே நாணயங்களை வெளியிடத் தொடங்கினார்.

"நாணயங்களில், ரஸியாவின் பெயருக்கு முன்னால் 'சுல்தான்' என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. அவர் ஒருபோதும் 'சுல்தானா' என்ற பட்டத்தை பயன்படுத்தியதில்லை. ஐரோப்பாவில் இருந்த பெண்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவது பற்றி யோசிக்கக்கூட முடியாத அந்த காலத்தில், ரஸியா சுல்தான் ஆனார்" என்று கலாச்சார வரலாற்றாசிரியர் எலிசா கபே தனது 'மிடிவல் அண்ட் ஏர்லி மாடர்ன் இஸ்லாம்' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

ரஸியாவை பதவி நீக்கம் செய்வதற்கான சதி

ரஸியாவின் வெளிப்படையான ஆளுமை டெல்லி சுல்தானகத்தின் மரபுவழி இஸ்லாமிய அரசவையினரால் மிகவும் வெறுக்கப்பட்டது, மேலும் அவர்கள் அவரை பதவி நீக்கம் செய்ய சதி செய்யத் தொடங்கினர்.

சுல்தானாக ரஸியாவின் ஆளுமையின் பெரும்பகுதி வெளி உலகிற்கு தன்னை ஆண்களுக்கு நிகரானவர் என காட்டிக் கொள்வதாகும்.

"அவர் தான் ஆண்களை விடக் குறைந்தவர் அல்ல என்பதை மற்றவர்களுக்கு நிரூபித்தார், ஆனால் உண்மையில் அவர் அப்படி மனதில் நினைக்கவில்லை. ஆண் தோழமைக்கான அவருடைய ஆசை அவருடைய வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. மேலும், வெளியாட்களை தனக்கு நெருக்கமாகக் கொண்டுவரத் தொடங்கிய விதம், அவருடைய அரசவை உறுப்பினர்களுக்குப் பிடிக்கவில்லை." என்று ஆபிரகாம் இராலி எழுதியுள்ளார்.

"அத்தகைய வெளியாட்களில் ஒருவர் அபிசீனிய வம்சாவளியைச் சேர்ந்த ஜலாலுதீன் யாகுத். ரஸியா யாகுத்துக்கு அமீர்-இ-அக்பர் பதவியை வழங்கியது அவருடைய துருக்கிய அரசவையினருக்குப் பிடிக்கவில்லை. அவருக்கு யாகுத்துடன் காதல் இருப்பதாக அவர்கள் சந்தேகித்தனர். ரஸியாவை அரியணையில் இருந்து அகற்ற சதி செய்யத் தொடங்கினர்."

பஞ்சாபில் கிளர்ச்சி

ரஸியாவுக்கு எதிராக முதலில் கிளர்ச்சி செய்தவர் கபீர் கான். அவரை தனது பக்கம் இழுக்க, ரஸியா ஏற்கனவே அவரை லாகூரின் ஆளுநராக நியமித்திருந்தார், ஆனால் ரஸியாவின் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியதும், அவர் டெல்லியிலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாகூரில் கிளர்ச்சி செய்தார்.

1239 ஆம் ஆண்டு, இந்தக் கிளர்ச்சியை நசுக்க ரஸியா ஒரு பெரிய படையுடன் புறப்பட்டார். செனாப் நதிக்கரையில் கபீர் கானின் படையை ரஸியா எதிர்கொண்டார். ரஸியாவின் படையை எதிர்கொள்ள முடியாமல் கபீர் கானால் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.

ஆனால் தெற்கு பஞ்சாபில் கபீர் கானின் கிளர்ச்சியை அடக்க அவர் சென்றபோது, டெல்லியில் இருந்த அவருடைய அரசவையினர் சதி நடவடிக்கையில் இறங்கினர். அவர்கள் ரஸியாவின் நெருங்கிய உதவியாளர் யாகுத்தை டெல்லியில் கொலை செய்தனர். பஞ்சாபிற்குச் சென்றிருந்த அவரது நெருங்கிய கூட்டாளிகளுடன் ரஸியா பட்டிண்டாவில் கைது செய்யப்பட்டார்.

அதன் பிறகு ரஸியாவின் வளர்ப்பு சகோதரர் மொய்சுதீன் பஹ்ராம் ஷா டெல்லியின் சுல்தானாக நியமிக்கப்பட்டார், ஆனால் ரஸியாவின் அத்தியாயமும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை.

தன்னைக் கைது செய்த பட்டிண்டாவின் ஆளுநரான அல்துனியாவிற்கு ஒரு உயர் பதவி கிடைக்கும் என ஆசை காண்பித்து அவரைத் தன் பக்கம் சேர்த்துக் கொண்டார் ரஸியா. இது மட்டுமல்லாமல், அவர் அல்துனியாவை மணந்தார்.

இருவரும் ஒரு படையுடன் டெல்லி நோக்கி அணிவகுத்துச் சென்றனர், ஆனால் அதிர்ஷ்டம் அவர்களுக்கு சாதகமாக இல்லை. டெல்லி சுல்தானகத்தின் படை அவர்களைத் தோற்கடித்தது.

இசாமி பின்வருமாறு எழுதியுள்ளார், "ஒரு குதிரைவீரன் கூட ரஸியாவுடன் இருக்கவில்லை. அவரும் அல்துனியாவும் போர்க்களத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர், பின்னர் உள்ளூர் மக்களால் பிடிக்கப்பட்டனர்."

ரஸியாவின் முடிவு

அதன் பிறகு ரஸியாவுக்கு என்ன நடந்தது என்பது குறித்து வரலாற்றாசிரியர்கள் இடையே ஒருமித்த கருத்து இல்லை.

சிராஜின் கூற்றுப்படி, ரஸியாவும் அல்துனியாவும் கைது செய்யப்பட்ட உடனேயே கொலை செய்யப்பட்டனர். மற்றொரு வரலாற்றாசிரியரான யஹ்யா சிர்ஹிந்தியின் கூற்றுப்படி, அவர்கள் இருவரும் சங்கிலிகளால் கட்டப்பட்டு சுல்தான் முன் ஆஜர்படுத்தப்பட்டனர், அவர் அவர்களுக்கு மரண தண்டனை விதித்தார்.

ஆனால் இபன் பட்டுடா கூற்றுப்படி, கைத்தல் பகுதியில் ஒரு விவசாயி, ரஸியாவை கொலை செய்து அவரது நகைகளைத் திருடினார்.

ரஸியா டெல்லி சுல்தானகத்தை மூன்று ஆண்டுகள் ஆறு நாட்கள் ஆட்சி செய்தார். அவர் யமுனை நதிக்கரையில் அடக்கம் செய்யப்பட்டார். அங்கு அவரது நினைவாக ஒரு சிறிய கல்லறை கட்டப்பட்டது, அது டெல்லியில் உள்ள துர்க்மேன் கேட் அருகே இன்றும் உள்ளது.

"ரஸியா சுல்தான் ஒரு சிறந்த பேரரசர். அவர் ஒரு ஞானி, நீதிமான் மற்றும் தாராள மனப்பான்மை கொண்ட ஆட்சியாளர், அவர் தனது மக்களின் நலனுக்காக நிறைய செய்தார். ஒரு நல்ல ஆட்சியாளருக்கு இருக்க வேண்டிய அனைத்து குணங்களும் அவரிடம் இருந்தன. அவருடைய ஒரே தவறு அவர் ஒரு ஆணாக இல்லாததுதான், எனவே அவருடைய இந்த குணங்களுக்கு ஆண்களின் பார்வையில் எந்த மதிப்பும் இல்லை" என்று எழுதியுள்ளார் சிராஜ் ஜுஜ்ஜானி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு