You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'அமெரிக்காவில் டிரம்ப் வெற்றியால் இந்தியாவுக்கு பதற்றம் இல்லை' - அமைச்சர் ஜெய்ஷங்கர் கூறியது என்ன?
- எழுதியவர், மெரில் செபாஸ்டியன்
- பதவி, பிபிசி செய்திகள்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவருடன் மீண்டும் பணியாற்றுவதில் எந்த பதற்றமும் இல்லை என்று இந்தியா கூறியுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் ஞாயிற்றுக்கிழமை அன்று, பல நாடுகள் டிரம்ப் தலைமையில் உள்ள அமெரிக்கா குறித்து பதற்றத்தில் இருக்கின்றன, ஆனால் 'இந்தியா அவற்றில் ஒன்று அல்ல' என்று தெரிவித்துள்ளார்.
2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான டொனால்ட் டிரம்புடன் முதல் பதவிக் காலத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி அவருடன் நல்லுறவைப் பகிர்ந்து கொண்டார்.
ஆனால், டிரம்பின் நிர்வாகம் அமல்படுத்திய கடுமையான வரி விதிப்பு கொள்கைக்கு இந்தியா இலக்காகியது. இது இரண்டு தரப்பினரின் வணிகங்களை பாதித்தன.
பல ஆண்டுகளாக குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியின் அதிபர்களுடன் சிறப்பாகப் பணியாற்றி வரும் இந்தியா, அமெரிக்காவில் இரு கட்சியின் ஆதரவையும் பெற்றுள்ளது.
அமெரிக்காவின் பல்வேறு தலைவர்கள் நீண்ட காலமாக சீனாவை எதிர்க்க இந்தியாவிற்கு ஆதரவாக இருக்கின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது ஜெய்ஷங்கர், டிரம்ப் ஆட்சியின் கீழ் இந்தியா -அமெரிக்கா உறவுகள் சிறப்பாக வளரும் என்பதில் இந்தியாவுக்கு எந்த அச்சமும் இருக்காது என்றார்.
"அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் அவரை அழைத்து வாழ்த்திய முதல் மூவரில் பிரதமர் மோதி ஒருவர்", என்றும் அவர் கூறினார்.
ஆனால் பொருளாதார சிக்கல்கள் இருநாட்டு உறவுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோதியை "சிறந்த தலைவர்" என்று பாராட்டியுள்ளார். ஆனால் அவர் இந்தியா அதிகமாக வரி விதிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
தலைவர்களுக்கிடையிலான நட்பு இரு நாடுகளிடையே இருக்கும் வணிக சிக்கல்களை சமாளிக்க உதவுமா என்பதை பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த காலங்களில் டிரம்பும் மோதியும் அடிக்கடி ஒருவரையொருவர் பாராட்டி வந்துள்ளனர்.
2019-ஆம் ஆண்டில், டெக்சாஸில் இந்திய பிரதமரை பாராட்டுவதற்காக நடத்தப்பட்ட "ஹௌடி, மோதி!" என்ற அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கான நிகழ்ச்சியில், இரு தலைவரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொண்டனர்.
இதில் சுமார் 50,000 பேர் கலந்துகொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சி அமெரிக்காவில் வெளிநாட்டுத் தலைவர் ஒருவருக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய வரவேற்புகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டது.
இதற்கு அடுத்த ஆண்டு, டிரம்பின் அதிகாரப்பூர்வ முதல் இந்தியப் பயணத்தின் போது, அவரை மோதி தான் பிறந்த மாநிலமான குஜராத்தில் வரவேற்றார். அங்கு உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் 1,25,000 பேரை கொண்ட ஒரு பேரணியை ஏற்பாடு செய்தார்.
ஆனால் இது போன்ற பெரிய நிகழ்வுகள் இரு நாடுகளில் நடந்தாலும், இந்தியா - அமெரிக்கா உறவுகள் பாதிப்புகளை சந்தித்தது.
அவரது முதல் பதவிக்காலத்தில், இரு நாடுகளுக்கிடையிலான கடுமையான வரி விதிப்பின் போது டிரம்ப் இந்தியாவுக்கு வழங்கியிருந்த முதன்மை வணிக உரிமையை ரத்து செய்தார்.
H-1B விசாக்களுக்கான மறுப்பு விகிதம் 2016-ஆம் ஆண்டில் 6 சதவீதமாக இருந்த நிலையில், அது 2019 -ஆம் ஆண்டு 21 சதவீதமாக உயர்ந்தது என்பதை அமெரிக்கத் தொழிலாளர் துறையின் தரவு தெரிவிக்கின்றது. இந்த விசாக்களில் பெரும்பாலானவை இந்தியத் தொழில்நுட்பத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டன.
இதனிடையே, கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கிடையேயான அதிகாரச் சமநிலை மாறிக் கொண்டிருப்பதாக ஜெய்ஷங்கர் கூறியுள்ளார். ஆனால் அமெரிக்கா போன்ற பழைய தொழில்மயமான பொருளாதாரங்களும் மிகவும் முக்கியமானவை என்றும் குறிப்பிட்டார்.
"அவை பெரிய சந்தைகள், வலிமையான தொழில்நுட்பம் மற்றும் புதுமைக்கான மையங்களாக இருக்கின்றன. ஆகவே, இந்த மாற்றத்தை உணர்ந்து கொள்ளுங்கள். ஆனால் அதில் அதிகமாக ஆர்வம் செலுத்தாமல் இருந்து, மற்ற உலக நாடுகள் குறித்தான புரிதலை மாறாமல் வைத்திருக்கவும் வேண்டும்," என்று அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)