You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவை நோக்கி வரும் எத்தியோப்பிய எரிமலையின் சாம்பல் மேகங்கள் - என்ன ஆபத்து?
எத்தியோப்பியாவின் அஃபார் பகுதியிலுள்ள ஹைலி குப்பி எரிமலை ஞாயிற்றுக்கிழமை காலை வெடித்தது.
இதில் இருந்து வந்த சாம்பல் சுற்றியுள்ள கிராமங்களில் பரவியது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் உலகளாவிய எரிமலைத் திட்டத்தின் தரவுகளின்படி, கடந்த 12,000 ஆண்டுகளில் ஹைலி குப்பி எரிமலையின் முதல் வெடிப்பு இதுவாகும்.
செங்கடலின் மேலே சாம்பல் மேகங்கள் இருப்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
உயிர் சேதம் எதுவும் இல்லை என்றும் ஆனால் அந்த சாம்பல் உள்ளூர் கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றும் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வடகிழக்கு எத்தியோப்பியாவில் உள்ள இந்த எரிமலை 12,000 ஆண்டுகளில் முதன்முறையாக வெடித்துள்ளது. சுமார் 14 கிலோமீட்டர் வரை வானத்தில் அடர்ந்த புகையையும் அது எழுப்பியது.
டூலூஸ் எரிமலை சாம்பல் ஆலோசனை மையத்தின்படி, எரிமலையிலிருந்து எழுந்த சாம்பல் ஏமன், ஓமன், வடக்கு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவை அடைந்தது.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையோ, இடம்பெயர்ந்தவர்கள் குறித்த தகவல்களோ எதுவும் கிடைக்கவில்லை.
இந்தியாவில் ஏற்படுத்தும் தாக்கம்
திங்கள்கிழமை மாலை X தளத்தில் இந்தியா மெட் ஸ்கை வெதர் என்ற கணக்கில், "சாம்பல் மேகம் வட இந்தியாவை நோக்கி நகரக்கூடும். ஹைலி குப்பி எரிமலைப் பகுதியிலிருந்து குஜராத் வரை ஒரு பெரிய சாம்பல் மேகம் தெரிகிறது. எரிமலை வெடிப்பு நின்றுவிட்டது, ஆனால் இந்த சாம்பல் மேகம் வளிமண்டலத்தில் உயர்ந்துள்ளது. இது வட இந்தியாவை நோக்கி மணிக்கு 100-120 கிமீ வேகத்தில் நகர்கிறது" என்று பதிவிடப்பட்டிருந்தது.
"இந்த மேகம் வானில் 15,000-25,000 அடி முதல் 45,000 அடி வரை நீண்டுள்ளது. இது பிரதானமாக எரிமலை சாம்பல், சல்ஃபர் டை ஆக்சைடு மற்றும் சில சிறிய கண்ணாடி/பாறைத் துகள்களைக் கொண்டுள்ளது. இதனால் வானம் வழக்கத்தை விட கருமையாகத் தோன்றி விமானப் போக்குவரத்தைப் பாதிக்கலாம். இது விமான தாமதங்கள் மற்றும் நீண்ட பயணங்களுக்கு வழிவகுக்கும்" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், "இந்த சாம்பல் மேகம் குஜராத்தில் (மேற்குப் பகுதி) இரவு 10 மணிக்கு நுழைந்து ராஜஸ்தான், வடமேற்கு மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியாணா மற்றும் பஞ்சாப் நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர், இது இமயமலை மற்றும் பிற பகுதிகளையும் பாதிக்கலாம். வானம் வழக்கத்தை விட மங்கலாகத் தோன்றும்" என்றும் அந்தக் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது.
விமானங்கள் ரத்து
எரிமலை வெடிப்பின் சாம்பல்களால் ஏர் இந்தியா நிறுவனம் நேற்று மற்றும் இன்று 11 சர்வதேச மற்றும் உள்ளூர் விமானங்களை ரத்து செய்துள்ளது.
"ஹைலி குப்பி எரிமலை வெடிப்புக்குப் பிறகு குறிப்பிட்ட சில பகுதிகளின் மேல் பறக்கும் சில விமானங்களை நாங்கள் ரத்து செய்திருக்கிறோம். எங்கள் தரைக் குழுக்கள் பயணிகளின் விமானங்களின் நிலையைப் புதுப்பித்து, தங்குமிடம் உள்பட உடனடி உதவிகளை வழங்குகின்றன. முடிந்தவரை விரைவாக மறு பயணத்தை ஏற்பாடு செய்ய நாங்கள் பணியாற்றி வருகிறோம்" என்று ஏர் இந்தியாவின் X பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது.
இன்று ரத்து செய்யப்பட்டுள்ள விமானங்கள்
ஏஐ 2822 – சென்னை – மும்பை
ஏஐ 2466 – ஹைதராபாத்–டெல்லி
ஏஐ 2444 / 2445 மும்பை – ஹைதராபாத் - மும்பை
ஏஐ 2471 / 2472 – மும்பை –கொல்கத்தா– மும்பை
பிடிஐ செய்தி நிறுவனத்தின்படி, எத்தியோப்பியாவில் எரிமலை வெடிப்பினால் ஏற்படக்கூடிய பிரச்னைகளை சமாளிக்க, விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் திங்களன்று விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு