சிட்னி துப்பாக்கிச் சூடு பற்றி இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகள் கூறியது என்ன?

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போன்டை கடற்கரையில் நடந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளில் இருந்து பலத்த எதிர்வினைகள் கிளம்பியிருக்கின்றன.

யூத பண்டிகை நிகழ்வின் போது நடந்த இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.

யூதர்களை குறிவைத்து நடத்தப்பட்ட 'பயங்கரவாத தாக்குதல்' என்று இதனை ஆஸ்திரேலிய காவல்துறை தெரிவித்துள்ளது.

துப்பாக்கி ஏந்திய இருவரும், தந்தை (50 வயது) மற்றும் மகன் (24 வயது) என நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை ஆணையர் மால் லேன்யோன் தெரிவித்தார்.

அவர்களின் பெயர் சஜித் அக்ரம் மற்றும் நவீத் அக்ரம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய செய்தித்தாள் ஹாரெட்ஸின்படி, இந்த தாக்குதல் குறித்துப் பேசிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஆஸ்திரேலியாவின் கொள்கைகள் 'யூத எதிர்ப்பு எனும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறது' என்று கூறினார்.

"யூத எதிர்ப்பு என்பது தலைவர்கள் அமைதியாக இருக்கும் போது பரவும் புற்றுநோய்" என்று நெதன்யாகு கூறினார்.

"சில மாதங்களுக்கு முன்பு நான் ஆஸ்திரேலிய பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அவருடைய கொள்கை யூத எதிர்ப்பு நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறது. அது உங்கள் தெருக்களில் யூதர்கள் மீதான வெறுப்பை வளர்க்கிறது என்று நான் அவரிடம் சொன்னேன்.

யூத எதிர்ப்பாளர்களுக்கு எதிரான தற்போதைய பலவீனமான நிலைப்பாட்டிற்குப் பதிலாக, அவர்கள் கடுமையாக கையாளப்பட வேண்டும். இன்று ஆஸ்திரேலியாவில் அது நடக்கவில்லை" என்றும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

அதேசமயம், இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் இந்த தாக்குதல் கொடூரமானது என்று கூறியுள்ளார்.

"ஆஸ்திரேலிய சமுதாயத்தை வாட்டி வதைக்கும் யூத எதிர்ப்பு அலையை எதிர்த்து நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் ஆஸ்திரேலிய அரசிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளோம்" என்று அவர் கூறினார்.

போண்டை கடற்கரை தாக்குதலை பற்றி பரவலாக செய்தி வெளியிட்டிருக்கும் இஸ்ரேலிய ஊடகங்கள் ஆஸ்திரேலிய அரசை விமர்சித்துள்ளன.

இஸ்ரேலிய ஊடகங்கள் என்ன சொன்னது?

இஸ்ரேலிய செய்தித்தாள்களான 'தி ஜெருசலேம் போஸ்ட்' மற்றும் 'ஹாரெட்ஸ்' ஆஸ்திரேலியாவை விமர்சித்துள்ளன.

தி ஜெருசலேம் போஸ்ட், "போன்டை தாக்குதல், அதிகரித்து வரும் யூத விரோதத்தை ஆஸ்திரேலியா சமாளிக்கத் தவறிவிட்டதை அம்பலப்படுத்துகிறது" என்ற தலைப்பில் திங்கள்கிழமை ஒரு தலையங்கத்தை வெளியிட்டது

"போன்டை கடற்கரையில் ஹானக்கா பண்டிகையின் போது நடந்த மோசமான பயங்கரவாதத் தாக்குதல், ஜனநாயக உலகம் முழுவதும் பரவி வரும் வன்முறை உணர்வுகளிலிருந்து அப்பாற்பட்ட ஒரு நாடு ஆஸ்திரேலியா என்ற மாயையை விலக்க வேண்டும்" என்று அந்த செய்தித்தாள் எழுதியது.

"இது ஒரு தற்செயல் நிகழ்வோ, யூதர் பிரச்னையோ அல்ல. இது பொது பாதுகாப்பு மற்றும் சமூக ஒற்றுமை மீதான தாக்குல். யூதர்கள் தங்கள் மதப் பண்டிகைகளை பொது இடங்களில் கொண்டாடுகையில் இலக்காகும் போது, அங்கு பிரச்னை வெளிநாட்டு கொள்கைகள் கிடையாது. ​​பிரச்னை என்னவென்றால், குடிமக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற அடிப்படை பொறுப்பிலிருந்தே அந்நாடு தவறவிட்டது.

சில மாதங்களாகவே, ஆஸ்திரேலியாவின் யூத சமூகம் 'யூத விரோத சம்பவங்கள்' கடுமையாக அதிகரித்து வருவதாக எச்சரித்து வருகிறது. ஒரு அறிக்கையின்படி, கடந்த ஆண்டில் ஆஸ்திரேலியாவில் 1,600-க்கும் மேற்பட்ட யூத எதிர்ப்பு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் டஜன்கணக்கான தாக்குதல்கள், வன்முறைச் சம்பவங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பிற தவறான அல்லது அச்சுறுத்தலான சம்பவங்கள் நடந்துள்ளன" என்றும் அந்தப் பத்திரிகை எழுதியுள்ளது.

போன்டை கடற்கரை தாக்குதல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து 'தி ஜெருசலேம் போஸ்ட்' மற்றொரு செய்தியையும் வெளியிட்டுள்ளது.

ஹாரெட்ஸ், 'முன்னெப்போதும் இல்லாத வகையில் இரண்டு ஆண்டுகளாக வெளிப்பட்டுவந்த யூத விரோதத்தைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் யூதர்களுக்கு எதிரான முதல் கொடிய தாக்குதல்' என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

"இஸ்ரேலில் அக்டோபர் 7 தாக்குதல்களைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் யூத விரோத சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக ஒரு பெரிய செய்தியை ஆவணப்படுத்திய ஒரு வாரத்திற்குப் பிறகு போன்டை கடற்கரைத் தாக்குதல் வந்துள்ளது" என்று அந்த செய்தித்தாள் எழுதியது.

அரபு முஸ்லிம் நாடுகளில் எந்த வகையான விவாதம் நடைபெற்று வருகிறது?

சிட்னி கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு சௌதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது. சௌதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அந்த அறிக்கையில், 'வன்முறை, பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு' சௌதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) வெளியுறவு அமைச்சகம், போன்டை கடற்கரை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தது. எல்லா வகையான வன்முறை மற்றும் பயங்கரவாதத்தையும் நிராகரிப்பதாக அந்நாடு கூறியது.

சிட்னியில் நடந்த இந்த தாக்குதலை உலக முஸ்லிம் லீக்கும் (Muslim World League) கண்டித்துள்ளது.

"முஸ்லிம்கள் பயங்கரவாதத்தையும், அனைத்து விதமான வன்முறைகளையும் நிராகரிக்கிறார்கள்" என்று பொதுச்செயலாளர் முகமது பின் அப்துல்கரீம் அல்-ஈஷாவை மேற்கோள் காட்டி உலக முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.

போன்டை கடற்கரைத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஜோர்டான், ஆஸ்திரேலியாவை 'நட்பு நாடு' என்று கூறியுள்ளது.

ஜோர்டான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஃபுவாத் அல்-மஜாலி, அனைத்து வன்முறை மற்றும் பயங்கரவாத செயல்களையும் கண்டிப்பதாக தெரிவித்தார்

இந்த தாக்குதலை கத்தார் வெளியுறவு அமைச்சகம் கண்டித்ததுடன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கலும் தெரிவித்துள்ளது.

"வன்முறை, பயங்கரவாதம் மற்றும் குற்றச் செயல்களை கத்தார் கண்டிக்கிறது" என்று அந்த அமைச்சகம் கூறியது.

அதேசமயம், இரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய், "பயங்கரவாத வன்முறை மற்றும் வெகுஜன கொலைகள் எங்கு நடந்தாலும் கண்டிக்கப்படும். ஏனெனில் இவை சட்டவிரோதமான மற்றும் குற்றச் செயல்கள்" என்று கூறி போன்டை கடற்கரை தாக்குதலைக் கண்டித்தார்.

அரபு ஊடகங்கள் கூறியது என்ன?

அரபு மற்றும் முஸ்லீம் நாடுகளின் ஊடக நிறுவனங்களில் இதுதொடர்பாக பல்வேறு செய்திகள் காணப்பட்டன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கலீஜ் டைம்ஸ், கல்ஃப் நியூஸ் மற்றும் சௌதி அரேபியாவின் சௌதி கஸட் போன்ற செய்தித்தாள்கள் போன்டை கடற்கரை சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டுள்ளன.

சௌதி அரேபியாவின் 'அரபு நியூஸ்' நிறுவனமும் போன்டை கடற்கரையில் நடந்த தாக்குதல் குறித்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

"அதிகாரப்பூர்வ கணக்குகளின்படி, 2.8 கோடி மக்கள் வசிக்கும் ஆஸ்திரேலியாவில் 1,17,000 யூதர்கள் உள்ளனர். யூத விரோதத்தை எதிர்கொள்வதற்கான அரசின் சிறப்பு தூதர் ஜில்லியன் சேகல், 2023 அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதிலிருந்து, ஆஸ்திரேலியாவில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல், சொத்து சேதப்படுத்துதல் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக ஜூலை மாதத்தில் தெரிவித்தார்" என்று அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தது.

"கடந்த ஆண்டு, சிட்னியிலும் மெல்போர்னிலும் நடந்த யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் நாட்டை உலுக்கின. இந்த நகரங்களில் ஆஸ்திரேலியாவின் 85 சதவீத யூத மக்கள் வசிக்கின்றனர். பிரார்த்தனை ஆலயங்கள் மற்றும் கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. யூதர்கள் தாக்கப்பட்டனர்," என்றும் அந்தத் செய்தித்தாள் எழுதியது.

"ஆகஸ்ட் மாதம், இரண்டு தாக்குதல்களுக்கு இரான் மீது பழி சுமத்தி, அதனுடனான ராஜதந்திர உறவுகளை ஆஸ்திரேலியப் பிரதமர் துண்டித்துக்கொண்டார்" என்று அரபு நியூஸ் எழுதியது.

கத்தாரின் 'அல் ஜசீரா' நாளிதழும் போன்டை கடற்கரைத் தாக்குதல் சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

மற்றொரு செய்தியில், இந்த தாக்குதல் குறித்த பல நாடுகளின் எதிர்வினைகளுக்கும் அந்த செய்தித்தாள் இடம் கொடுத்துள்ளது.

இதுவரை நடந்தது என்ன?

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போன்டை கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) உள்ளூர் நேரப்படி மாலை 6:47 மணிக்கு யூத சமூகத்தின் ஹனுக்கா (Hanukkah) கொண்டாட்டத்தை குறி வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் குறைந்தது 20 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம்சாட்டப்படும் இருவர், தந்தை- மகன் என்றும், சஜித் அக்ரம் (50) மற்றும் அவரது மகன் நவீத் அக்ரம் (24) என்றும் உள்ளூர் ஊடகங்கள் அடையாளம் கண்டுள்ளன. சஜித் காவல்துறையின் பதில் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், காயமடைந்த நவீத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது ஒரு 'யூத எதிர்ப்பு பயங்கரவாதச் சம்பவம்' என்று ஆஸ்திரேலியப் பிரதமர் விவரித்துள்ளார். அத்துடன், துப்பாக்கி வைத்திருப்பது தொடர்பான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

சம்பவ இடத்தில் இருந்த 43 வயதான அகமது அல் அகமது என்பவர், துப்பாக்கிச்சூடு நடத்திய இரு நபர்களில், ஒருவரை மடக்கிப் பிடித்து அவரிடமிருந்த ஆயுதத்தைப் பறித்தார். அவரது செயலுக்காகப் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், அவருக்காக 10 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்களுக்கும் அதிகமான நிதி திரட்டப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் இருவரும் பிலிப்பின்ஸ் நாட்டிற்குச் சென்றது குறித்து ஆஸ்திரேலிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சஜித் அக்ரம் இந்திய பாஸ்போர்ட்டையும், அவரது மகன் நவீத் ஆஸ்திரேலிய பாஸ்போர்ட்டையும் பயன்படுத்தி பிலிப்பின்ஸ் நாட்டிற்குப் பயணம் செய்ததாக மணிலாவில் உள்ள குடிவரவு அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்படும் சஜித் அக்ரம் (50) இந்தியாவின் ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர் என்று தெலங்கானா மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் "இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) அமைப்பின் சித்தாந்தத்தால் தூண்டப்பட்டதாகத் தெரிகிறது" என ஆஸ்திரேலியப் பிரதமர் கூறியுள்ளார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு