எடப்பாடி பழனிசாமி - உதயநிதி இருவரும் பரப்புரையில் காட்டும் புகைப்படங்களில் என்ன உள்ளது?
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சியினர் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், திமுக இளைஞரணிச் செயலரும் தமிழ்நாடு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே வார்த்தை போர் நடந்து வருகிறது. இருவரும் மாறி மாறி புகைப்படங்களை மக்களிடம் காட்டி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் குறித்து பேச, தேர்தல் பரப்புரைகளில் உதயநிதி ஸ்டாலின் செங்கல் ஒன்றை காட்டி வருகிறார். இதனை விமர்சிக்கும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "விளம்பரத்திற்காக உதயநிதி செங்கலை காட்டிக்கொண்டிருக்கிறார். ரோட்டில் காட்டுவதை நாடாளுமன்றத்தில் காட்டியிருந்தால் மருத்துவமனையை கட்டியிருக்கலாம்" என ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் நடைபெற்ற அதிமுக தேர்தல் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார்.
திங்கட்கிழமை, காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து வாக்கு சேகரித்த உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு எதிர்வினையாற்றினார்.
"நானாவது எய்ம்ஸ் கல்லைதான் காட்டுகிறேன். நீங்கள் பிரதமரிடம் பல்லை காட்டுயிருக்கிறீர்கள்" என நரேந்திர மோதியுடன் எடப்பாடி பழனிசாமி இருக்கும் புகைப்படத்தை காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
"நரேந்திர மோதியுடன் சிரித்துப் பேசியதை உதயநிதி ஸ்டாலின் கொச்சைப்படுத்தி பேசுகிறார். ஒரு அமைச்சராக இருக்கிறார். என்ன பேச வேண்டும் என்பதை தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்" என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக தேர்தல் பரப்புரை கூட்டங்களில் எதிர்வினையாற்றினார்.

திமுகவும் பாஜகவும் தான் கள்ளக்கூட்டணியில் இருக்கிறது என்றும் அவர் விமர்சித்துப் பேசினார். நரேந்திர மோதி - மு.க. ஸ்டாலின் இருவரும் இருக்கும் புகைப்படத்தையும் எடப்பாடி பழனிசாமி மக்களிடம் காண்பித்தார்.
வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி காண்பித்த நரேந்திர மோதியுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இருக்கும் புகைப்படம், செஸ் ஒலிம்பியாட்-ஐ தமிழ்நாடு அரசு வெற்றிகரமாக நடத்திய போது பிரதமரே நேரில் வந்து பாராட்டினார், அது அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி, "நான் ஒரே ஸ்கிரிப்டை பேசுவதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஒரே கொள்கைதான் எங்களிடம் இருக்கிறது. சுய மரியாதையைத்தான் நாங்கள் பேசுவோம். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஒரு பச்சோந்தி. அவர் ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு விதமாக பேசுவார். சில நேரங்களில் பேசக்கூட மாட்டார்" என எடப்பாடி பழனிசாமி சசிகலா காலில் விழுந்த பழைய புகைப்படத்தை மக்களிடம் காண்பித்தார்.
முழு விவரங்களை காணொளியில் பார்க்கலாம்,
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



