You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சௌதியின் புதிய நகரம் அமைக்க 'மக்களை கொல்லவும் அனுமதி' - என்ன நடக்கிறது?
- எழுதியவர், மெர்லின் தாமஸ் மற்றும் லார எல் கிபாலி
- பதவி, பிபிசி வெரிஃபை மற்றும் பிபிசி ஐ புலனாய்வுகள்
பல மேற்கத்திய நிறுவனங்களால் கட்டப்படும் ஒரு பாலைவன நகரத்திற்காக நிலத்தை கையகப்படுத்த மக்களை கொல்லவும் செய்யலாம் என சௌதி அரேபியாவின் அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனர், என்று முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.
நியோம் சுற்றுச்சூழல் திட்டத்தின் (Neom eco-project) ஒரு பகுதியான 'தி லைன்' (The Line) எனும் திட்டத்துக்கு வழிவகை செய்வதற்காக சவூதியில் உள்ள ஒரு பழங்குடியின மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாக கர்னல் ரபீஹ் அலெனேசி கூறுகிறார்.
அவர்களில் ஒருவர் வெளியேற்றத்திற்கு எதிராக போராடியதற்காக சுட்டுக் கொல்லப்பட்டார்.
சௌதி அரசும் நியோம் நிர்வாகமும் இதுபற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.
நியோம், சௌதி அரேபியா சுமார் 42 லட்சம் கோடி இந்திய ரூபாய் மதிப்பில் (500 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் பிராந்தியம். இது சௌதி அரேபியாவின் 'விஷன் 2030' திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது அந்த ராஜ்யத்தின் பொருளாதாரத்தை எண்ணெயிலிருந்து விலக்கி பன்முகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதன் முதன்மைத் திட்டமான 'தி லைன்', வெறும் 200மீ (656 அடி) அகலமும் 170கி.மீ. நீளமும் கொண்ட கார்கள் செல்லாத நகரமாகத் திகழ்கிறது. இருப்பினும் இந்தத் திட்டத்தின் 2.4கி.மீ. மட்டுமே 2030-க்குள் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அழிக்கப்படும் கிராமங்கள்
நியோமின் கட்டுமானத்தில் பல உலகளாவிய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவற்றில் பல பிரிட்டிஷ் நிறுவனங்களும் அடங்கும்.
நியோம் கட்டப்பட்டு வரும் பகுதியை, சௌதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் 'ஒரு வெற்று நிலம்' என்று விவரிக்கிறார். ஆனால் அவரது அரசாங்கத்தின் படி 6,000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த திட்டத்திற்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்தை இயங்கு தளமாகக்கொண்ட மனித உரிமைகள் குழுவான ALQST இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.
இடிக்கப்பட்ட கிராமங்களில் அல்-குரைபா, சர்மா மற்றும் கயால் ஆகிய மூன்று கிராமங்களின் செயற்கைக்கோள் படங்களை பிபிசி ஆய்வு செய்துள்ளது. வீடுகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் வரைபடத்தில் இருந்து அழிக்கப்பட்டுவிட்டன.
கடந்த ஆண்டு சவூதியிலிருந்து வெளியேறி இங்கிலாந்தில் குடிபுகுந்த கர்னல் அல்-எனேசி, 'தி லைனுக்கு' தெற்கே 4.5கி.மீ. தொலைவில் உள்ள அல்-குரைபா எனும் இடத்தில் நிலத்தைக் கையகப்படுத்த தநக்கு உத்தரவிடப்பட்டதாகக் கூறுகிறார். இந்த கிராமங்களில் பெரும்பாலும் ஹுவைதாட் பழங்குடியினர் வசிக்கின்றனர், அவர்கள் நாட்டின் வடமேற்கில் உள்ள தபூக் பகுதியில் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர்.
கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொடுக்கப்பட்ட உத்தரவில் ஹுவைதாட் இனம் 'பல கிளர்ச்சியாளர்களால்' உருவாக்கப்பட்டுள்ளது என்றும், 'வெளியேற்றப்படுவதை எதிர்க்கும் எவரும் கொல்லப்பட வேண்டும், எனவே அது அவர்களின் வீட்டில் தங்கியிருந்தவர்களுக்கு எதிராக கொடிய வன்முறையைப் பயன்படுத்த உரிமம் வழங்கியது,' என்றும் அவர் கூறினார்.
தனது உடல்நிலை சரியில்லை என்று பொய்சொல்லி அவர் இந்தப் பணியிலிருந்து விலகினார், என்று அவர் பிபிசியிடம் கூறினார், ஆனால் அந்தப் பணி செய்துமுடிக்கப்பட்டது.
எதிர்த்ததற்காகக் கொல்லப்பட்டவர்
அப்துல் ரஹீம் அல்-ஹுவைதி எனும் நபர் தனது சொத்துக்களை மதிப்பிடுவதற்கு நிலப்பதிவுக் குழுவை அனுமதிக்க மறுத்துவிட்டார். அதற்கு அடுத்த நாள், அனுமதிப் பணியின் போது சௌதி அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு முன்பு, வெளியேற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஊடகங்களில் பல வீடியோக்களை வெளியிட்டிருந்தார்.
அந்த நேரத்தில் சௌதி அரசின் பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், அல்-ஹுவைதி பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அவர்கள் பதிலடி கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால், மனித உரிமை அமைப்புகளும் ஐ.நா-வும் அவர் வெளியேற்றத்தை எதிர்த்ததற்காக கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளனர்.
கொடிய வன்முறை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது பற்றிய கர்னல் அலெனேசியின் கருத்துகளை பிபிசியால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை.
ஆனால் சௌதி உளவுத்துறை இயக்குநரகத்தின் செயல்பாடுகளை நன்கு அறிந்த ஒருவர், கர்னலின் சாட்சியம் பொதுவாக இதுபோன்ற பணிகள் பற்றி அவர்கள் அறிந்தவற்றுடன் ஒத்துப்போகிறது என்றார். பணியை வழிநடத்த கர்னலின் பணிமூப்பு நிலை பொருத்தமானதாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
ஐ.நா மற்றும் ALQST-இன் படி, குறைந்தபட்சம் 47 கிராமவாசிகள் வெளியேற்றத்தை எதிர்த்த பின்னர் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களில் பலர்மீது பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது. அவர்களில் 40 பேர் தடுப்புக்காவலில் உள்ளனர். அவர்களில் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று ALQST கூறுகிறது.
அல்-ஹுவைதியின் மரணத்திற்கு சமூக ஊடகங்களில் பகிரங்கமாக இரங்கல் தெரிவித்ததற்காக பலர் கைது செய்யப்பட்டதாக ALQST குழு தெரிவித்துள்ளது.
'தி லைன்' திட்டத்திற்காக சொந்த இடத்தைவிட்டுச் செல்ல வேண்டியவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக சௌதி அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் ALQST-இன் படி, கொடுக்கப்பட்ட இழப்பீடு வாக்குறுதியளிக்கப்பட்ட தொகையை விட மிகக் குறைவாக உள்ளது.
கர்னல் அல்-எனேசியின் கூற்றுப்படி, "[நியோம்] முகமது பின் சல்மானின் மிக முக்கியமான யோசனையாகும். அதனால்தான் அவர் ஹுவைதாட் விவகாரத்தில் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டார்."
'ஒடுக்கப்படும் மக்கள்'
நியோமின் பனிச்சறுக்கு திட்டத்தின் முன்னாள் மூத்த நிர்வாகியான ஆண்டி விர்த், அப்பணியில் சேர்வதற்கு 2020-இல் தனது சொந்த நாடான அமெரிக்காவை விட்டு வெளியேறுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு அப்துல் ரஹீம் அல்-ஹுவைதி கொல்லப்பட்டதைப் பற்றிக் கேள்விப்பட்டதாக பிபிசியிடம் கூறினார். வெளியேற்றங்கள் குறித்து தனது முதலாளிகளிடம் பலமுறை கேட்டதாக ஆண்டி விர்த் கூறுகிறார், ஆனால் கிடைத்த பதில்களில் அவர் திருப்தி அடையவில்லை.
"இந்த மக்கள் மீது பயங்கரமான ஏதோவொன்று சுமத்தப்பட்டுள்ளது என்று தோன்ரறியது. நீங்கள் முன்னேறுவதற்காக அவர்களின் தொண்டையை உங்கள் பூட் கால்களால் மிதிக்காதீர்கள்," என்று அவர் கூறினார்.
அவர் இந்தத் திட்டத்தில் சேர்ந்த ஒரு வருடத்திற்குள், அதன் நிர்வாகத்தின் மீது வெறுப்படைந்தார்.
கடந்த 2022-ஆம் ஆண்டில் 'தி லைனுக்கான' ரூ.834 கோடி செலவில் (100 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) கட்டமைக்கப்படும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தில் இருந்து விலகிய ஒரு பிரிட்டிஷ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான மால்கம் ஆவ்-உம் மிகவும் முக்கியமானவர்.
"அந்தப் பகுதியில் வசிக்கும் சில மேல்தட்டு பணக்கார நபர்களுக்கு இது நன்றாக இருக்கலாம், ஆனால் மற்றவர்களுக்கு?" என்று கேட்கிறார் சோலார் வாட்டர் பிஎல்சி-யின் தலைமை நிர்வாக அதிகாரி மால்கம் ஆவ்.
உள்ளூர் மக்கள் அந்தப் பகுதியை நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள், அதனால் அவர்கள் மதிப்புமிக்கச் சொத்துக்களாகப் பார்க்கப்பட வேண்டும், என்று அவர் மேலும் கூறினார்.
"அவர்களை அகற்றாமல், மேம்படுத்த, உருவாக்க, மீட்டுருவாக்கம் செய்ய, நீங்கள் ஆலோசனை செய்ய வேண்டும்," என்றார்.
'இது இரு போர்'
இடமாற்றம் செய்யப்பட்ட கிராம மக்கள், வெளிநாட்டு ஊடகங்களுடன் பேசினால் அது தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்கள் உறவினர்களுக்கு மேலும் ஆபத்தை விளைவிக்கும் என்று அஞ்சி கருத்து தெரிவிக்க மிகவும் தயங்கினார்கள்.
ஆனால் 'சௌதி விஷன் 2030'-இன் வேறொரு திட்டத்திற்காக வேறு இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களிடம் பேசினோம். மேற்கு சௌதி அரேபிய நகரமான ஜெத்தா மத்திய திட்டத்திற்காக 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இது ஒரு நாடக அரங்கம், விளையாட்டு மாவட்டம் மற்றும் உயர்தர வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்பு பிரிவுகளை உள்ளடக்கியது.
நாதிர் ஹிஜாஸி [அவரது உண்மையான பெயர் அல்ல] ஆஸிஸியா-வில் வளர்ந்தவர். இந்தத் திட்டத்திற்காக இடிக்கப்பட்ட சுமார் 63 சுற்றுப்புறங்களில் இதுவும் ஒன்று. அவரது தந்தையின் வீடு 2021-இல் இடிக்கப்பட்டது. அந்த முடிவு அவருக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான காலம் முன்பே தெரிவிக்கப்பட்டது.
ஹிஜாஸி கூறுகையில், தனது முன்னாள் வசிப்பிடத்தின் புகைப்படங்கள் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது என்றார். அவை போர் மண்டலத்தை நினைவூட்டியதாகக் கூறினார்.
"அவர்கள் மக்கள் மீது ஒரு போரை நடத்துகிறார்கள், எங்கள் அடையாளங்களின் மீது ஒரு போரை நடத்துகிறார்கள்," என்றார்.
அச்சத்தில் இருக்கும் மக்கள்
கடந்த ஆண்டு ஜெத்தா இடிப்புகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களைப் பற்றி சௌதியைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். ஒருவர் வெளியேற்றத்தை எதிர்த்ததற்காகவும், மற்றவர் தனது சமூக ஊடகங்களில் எதிர்ப்பு ஓவியங்களை வெளியிட்டதற்காகவும் கைது செயப்பட்டனர்.
மேலும் ஜெத்தாவின் தஹ்பான் மத்திய சிறைச்சாலையில் உள்ள ஒரு கைதியின் உறவினர் ஒருவர், மேலும் 15 பேர் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் கதைகளைக் கேட்டதாகக் கூறினார். அது, இடிப்பதாக முடிவுசெய்யப்பட்ட ஒரு சுற்றுப்புறத்தில் பிரியாவிடை கூட்டத்தை நடத்தியதற்காக எனக் கூறப்பட்டது. சௌதி சிறைகளுக்குள் இருப்பவர்களைத் தொடர்புகொள்வது மிகச் சிரமம். அதனால், இதை பிபிசியால் சரிபார்க்க முடியவில்லை.
ALQST அமைப்பு, ஜெத்தா சுற்றுப்புறங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட 35 பேரிடம் பேசியது. அவர்களில் யாரும், உள்ளூர் சட்டத்தின்படி இழப்பீடு அல்லது போதுமான எச்சரிக்கையைப் பெற்றதாக கூறவில்லை. மேலும் அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கைது அச்சுறுத்தலின் கீழ் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டதாகக் கூறினர்.
கர்னல் அல்-எனேசி இப்போது இங்கிலாந்தில் இருக்கிறார். ஆனால் அவரது பாதுகாப்பிற்காக இன்னும் பயப்படுகிறார். சௌதியின் உள்துறை அமைச்சருடன் லண்டனின் சௌதி தூதரகத்தில் நடந்த சந்திப்பில் கலந்து கொண்டால், தனக்கு சுமார் ரூ.42 கோடி (5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) வழங்கப்படும் என்று ஒரு உளவுத்துறை அதிகாரி தன்னிடம் கூறியதாக அவர் கூறுகிறார். ஆனால் அல்-எனேசி மறுத்துவிட்டார்.
பிபிசி இதுபற்றி சௌதி அரசாங்கத்திடம் கேட்டது ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை.
இதற்கு முன்னரும் வெளிநாட்டில் வாழும் சௌதி அரசாங்கத்தின் விமர்சகர்கள் மீதான தாக்குதல்கள் நடந்திருக்கின்றன.
கடந்த 2018-ஆம் ஆண்டு, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருக்கும் சௌதி தூதரகத்திற்குள் வைத்து, சௌதி முகவர்களால் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலை வழக்கு இதில் முக்கியமானது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட அவரது கொலைக்கு முஹம்மது பின் சல்மான் ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை ஒன்று தெரிவித்தது. ஆனால் பட்டத்து இளவரசர் இதனை மறுத்துள்ளார்.
ஆனால் சௌதியின் எதிர்கால நியோம் நகரம் தொடர்பான உத்தரவுகளை மீறும் தனது முடிவைப் பற்றி கர்னல் அல்-எனேசிக்கு வருத்தம் இல்லை.
"முகமது பின் சல்மான் நியோம் நகரம் கட்டபடுவதை யாரும் எதுவும் தடுப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார். எனது சொந்த மக்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் அவர்கள் எனக்கு உத்தரவிடுவார்களோ என்று நான் அதிகம் கவலைப்பட்டேன்," என்கிறார் அவர்.
கூடுதல் செய்தி சேகரிப்பு - எர்வான் ரிவால்ட்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)