You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரமிடு கட்ட பிரமாண்ட கற்களை எகிப்தியர்கள் எடுத்துச் சென்றது எப்படி? விஞ்ஞானிகள் தகவல்
எகிப்தில் உலகப் புகழ்பெற்ற `கிசா’ உட்பட 31 பிரமிடுகள் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு கட்டப்பட்டன என்ற மர்மத்துக்கு தற்போது விடை கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
வட கரோலினா வில்மிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு, நீண்ட காலத்துக்கு முன் அழிந்து போன நைல் நதியின் ஒரு கிளை நதியை ஒட்டி பிரமிடுகள் கட்டப்பட்டிருக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளனர். தொன்மையான அந்த நதி தற்போது பாலைவனம் மற்றும் விவசாய நிலங்களுக்கு அடியில் புதைந்து இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
பண்டைய எகிப்தியர்கள் பிரமிடுகளை கட்டுவதற்கான கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்ல அருகில் இருந்த நீர்வழிப்பாதையை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
ஆனால், ``பிரமிடுகளுக்கு அருகில் இருந்ததாக கருதப்படும் மிகப்பெரிய நீர்வழியின் இருப்பிடம், வடிவம், நீளம் போன்ற எந்த தகவலும் தற்போது வரை துல்லியமாக கண்டறியப்பட வில்லை" என்று ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பேராசிரியர் எமன் கோனிம் கூறுகிறார்.
பிரமிடுகள் தொடர்பான மர்மங்களை கண்டறியும் இந்த கண்டம் தாண்டிய முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் குழு, ரேடார் செயற்கைகோள் படங்கள், வரலாற்று வரைபடங்கள், புவி இயற்பியல் ஆய்வுகள் மற்றும் செடிமெண்ட் கோரிங், அதாவது மாதிரிகளில் இருந்து ஆதாரங்களை மீட்டெடுக்கும் நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தி கிளை நதியின் தடத்தை வரைபடமாக்கினர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான வறட்சி மற்றும் மணற்புயல் ஏற்பட்டு இந்த கிளை நதி பூமியில் புதைந்து போயிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
``ரேடார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மணல் பரப்பில் ஊடுருவி, புதையுண்டிருக்கும் சுவடுகளின் படங்களை இந்தக் குழு உருவாக்கியது” என்று `நேச்சர்’ ஆய்வு இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டைய எகிப்து பிரமிடுகள் பரவலாக அமைந்துள்ள இடத்தில் புதைந்து போன ஆறுகள் மற்றும் பழங்கால கட்டமைப்புகள் ஆகியவற்றின் தடயங்கள் இந்த ஆய்வில் கிடைத்ததாக பேராசிரியர் கோனிம் கூறினார்.
ஆய்வு குழுவின் கூற்றுபடி, அழிந்து போனதாக நம்பப்படும் நைல் நதியின் அந்தக் கிளைக்கு அஹ்ரமத் கிளை (Ahramat) என்று பெயர். `அஹ்ரமத்’ என்றால், அரபு மொழியில் பிரமிடுகள் என்று பொருள். இந்த கிளை நதி தோராயமாக 64 கி மீ நீளமும் 200-700 மீ அகலமும் கொண்டது என்பதை ஆய்வுக்குழு கண்டறிந்துள்ளது.
4,700 - 3,700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 31 பிரமிடுகள் இதையொட்டி அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த கண்டுபிடிப்பு, கிசா மற்றும் லிஷ்ட் இடையே அதிக பிரமிடுகள் இருந்ததை விளக்க உதவுகிறது. தற்போது சஹாரா பாலைவனத்தில் மக்கள் வசிக்க முடியாத பிராந்தியத்தில் இந்த பகுதி உள்ளது.
பிரமிடுகள் அருகே கிளை நதி இருந்ததற்கான தடயம் இருப்பதால், கட்டுமான பணிகளின் போது இந்த நதி ஓடிக் கொண்டிருந்திருக்கும் என்று ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
``பண்டைய எகிப்தியர்கள் பிரமிடுகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கனமான கற்களை நதி வழியாக கொண்டு வந்திருக்கலாம் " என்று ஆன்ஸ்டைன் விளக்குகிறார்.
பண்டைய எகிப்து மட்டுமின்றி இன்றளவும் எகிப்தின் உயிர்நாடியாக நைல் நதி உள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)