You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சந்திரயான்-3: நிலாவில் இருப்பதைப் போன்ற மண் நாமக்கல்லில் கிடைப்பது எப்படி?
சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிவிட்டது. தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து ரோவர் எனப்படும் ஊர்திக்கலன் வெளியேறி பணிகளைத் தொடங்கி உள்ளது.
சந்திரயான்-3 திட்டத்தின் ஒரு பகுதியாக விக்ரம் லேண்டரும், பிரக்ஞான் ரோவரும் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதை பரிசோதிக்க இஸ்ரோவுக்கு, அதேபோன்ற மண் மாதிரி தேவைப்பட்டது.
அந்த மண் மாதிரி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில், அதுவும் நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமே உள்ளது. இது குறித்து தெரிந்துகொள்ள கொஞ்சம் பின்னோக்கி செல்ல வேண்டும்.
1950 ஆண்டுவாக்கில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே சித்தம்பூண்டி மற்றும் குன்னமலை பகுதியில் அனார்தசைட் வகையான பாறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ஆய்வுக்கும், சந்திராயன் ஆய்வுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அனார்தசைட் பாறைகள் நிலவு உருவானபோதே உருவான பாறைகள். இங்கு கனிமங்கள் இருக்கும் என்ற கோணத்தில் அப்போது ஆராய்ச்சிகள் நடந்துள்ளன.
இந்த நிலையில் கடந்த 1970 களில் அப்போலோ செலுத்தப்பட்ட பிறகே நிலவில் அனார்தசைட் மற்றும் பேசால்ட் மண் வகை பாறைகள் உள்ளது என தெரியவந்தது. இஸ்ரோ சந்திராயன் - 2 வை அனுப்ப திட்டமிட்ட போது அமெரிக்காவில் இருந்து அனார்த்சைட் மண் மாதிரியை அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்ய வேண்டி இருந்தது. இந்த நிலையில் தான் இதன் திட்ட இயக்குனராக இருந்த மயில்சாமி அண்ணாதுரை புவியியல் ஆராய்ச்சியாளர்கள் மூலம் இந்தியாவிற்குள்ளேயே நிலவின் மாதிரி மண்ணை தேடலாம் என தெரிவித்தார்.
இதற்காக மும்பை ஐஐடியில் பணியாற்றி வந்த புவி தகவல் கோளியல் மைய ஆராய்ச்சியாளர் அன்பழகன் என்பவரை இஸ்ரோ நாடியது. அப்போது இவரின் தலைமையிலான குழு மற்றும் இஸ்ரோ மண் சார்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் கடந்த 2004 ஆம் ஆண்டு சித்தம்பூண்டி கிராமத்தில் உள்ள மண்ணுடன், நிலவு மண் 99 சதவீதம் ஒத்துப்போகிறது என கண்டறிந்தனர். இதை தொடர்ந்து கடந்த 2012 - 13 ஆம் ஆண்டில் சித்தம்பூண்டியில் இருந்து எடுக்கப்பட்ட அனார்தசைட் பாறைகளை சேலத்தில் உள்ள ஒரு குவாரியில் மண்ணாக மாற்றி 50 டன் அளவிற்கு இஸ்ரோவிற்கு அனுப்பி வைத்தனர். அந்த நிலவு மாதிரி மண்ணில் தான் சந்திராயன் - 2 விண்கலத்தை இறக்கி சோதனை பார்த்து பிறகு நிலவை நோக்கி அனுப்பினர்.
தற்போது சந்திராயன் - 3 விண்கலத்தை அந்த மாதிரி மண்ணில் பலமுறை சோதனை செய்த பிறகே அனுப்பி வைத்துள்ளனர். இதுபற்றிய காணொளி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்