'தமிழில் பிறந்ததே கன்னடம்' என்ற கமல் கூற்று சரியா? மொழி ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

'தமிழில் பிறந்ததே கன்னடம்' என்ற கமல் கூற்று சரியா? மொழி ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

தமிழிலிருந்து கன்னடம் பிறந்தது என்று நடிகர் கமல்ஹாசன் தனது தக் லைஃப் திரைப்பட ஆடியோ வெளியீட்டு நிகழ்வில் பேசியது சர்ச்சையாகியுள்ளது. கமல் பேசியது, கன்னடத்தை சிறுமைப்படுத்துவதாக கன்னட அமைப்பினர் பலரும் கருதுகின்றனர்.

திராவிட மொழிகளில் பல மொழிகள் அல்லது அனைத்து மொழிகளும் தமிழில் இருந்து தோன்றியவை என்ற கருத்து புதிதானதல்ல. நீண்ட காலமாகவே தமிழ்த் தேசிய கருத்தாளர்கள் இந்தக் கருத்தை முன்வைத்து வருகின்றனர். ஆனால், திராவிட மொழிக் குடும்பத்தின் பிற மொழிகளைச் சேர்ந்தவர்கள் இதை ஏற்பதில்லை.

திராவிட மொழிகள் குறித்த ஒரு விரிவான ஒப்பீட்டு ஆய்வை முதன்முதலில் செய்தவராக 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமயப் பரப்பாளரும் மொழியியலாளருமான ராபர்ட் கால்ட்வெல்லை குறிப்பிடலாம்.

இவருடைய 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' (A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages) நூல் திராவிட மொழிக் குடும்பத்தில் உள்ள மொழிகளை முறையாக ஒப்பிட்டு, சில கருத்துகளை முன்வைத்தது.

"தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகள், இந்தோ - ஆரிய மொழிகளில் இருந்து தோன்றியவை அல்ல. அவை தனித்த, திராவிடம் எனும் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை" என்ற கருத்தை கால்ட்வெல் முன்வைத்தார்.

மேலும், தொல் திராவிட மொழி என்ற மொழியில் இருந்தே திராவிட மொழிகள் தோன்றின என்றும் இந்த தொல் திராவிட மொழியோடு, தமிழே கூடுதல் நெருக்கம் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார் ராபர்ட் கால்ட்வெல்.

ஆனால், 20ஆம் நூற்றாண்டின் மத்திய காலகட்டத்தில் தமிழ் திராவிட மொழிகளுக்கு மட்டுமல்லாமல் உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்ற கருத்தை தேவநேயப் பாவாணர் போன்றவர்கள் முன்வைத்தனர். இதற்குப் பிறகு தொடர்ந்து இந்தக் கருத்து ஒரு சில தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருகிறது.

திராவிட மொழிகளில் தமிழ் மூத்த மொழி என்பதையும் தனித்துவமான இலக்கியங்களைக் கொண்டது என்பதையும் ஏற்கும் இவர்கள், ஒன்றிலிருந்து ஒன்று தோன்றியது என்பதை ஏற்பதில்லை.

செக் நாட்டைச் சேர்ந்த இந்திய மொழியியல் அறிஞரான கமில் ஸ்வலபில், திராவிட மொழிகளின் தோற்றத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, "கி.மு. 8ஆம் நூற்றாண்டில் இருந்து ஆறாம் நூற்றாண்டுக்குள் தொல் தென் திராவிட மொழிகள் சிதற ஆரம்பித்தன.

கி.மு. நான்காம் நூற்றாண்டில் இருந்து மூன்றாம் நூற்றாண்டுக்குள் தமிழ் ஓர் இலக்கிய மொழியாக நிலை பெற ஆரம்பித்தது என்ற கருத்தை திராவிட மொழிகளின் வரலாற்றாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். தமிழும் கன்னடமும் பிரியும் இறுதிக் கட்டத்தில், பழங்கால தமிழ் இலக்கியத்தின் ஆரம்பக் கட்டத்தில், செய்யுள் என்ற வடிவத்தை உருவாக்குவதில் இலக்கணவாதிகள் கவனம் செலுத்தினார்கள்," எனத் தன்னுடைய The Smile of Murugan நூலில் குறிப்பிடுகிறார்.

இவரது இந்தப் புத்தகத்தில், "தமிழும் கன்னடமும் பிரியும் இறுதிக் கட்டத்தில்" என்ற சொற்தொடர் மட்டுமே, தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது என்ற பொருளைத் தருகிறது. ஆனால் தமிழைத் தவிர, பிற முக்கியமான திராவிட மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றின் துவக்க கால இலக்கியங்கள் வேறு ஏதோ மொழியில் இருக்கும் இலக்கியங்களைப் பிரதி செய்தவை அல்லது முன்மாதிரியாக எடுத்துக் கொண்டவை என்கிறார் அவர்.

ஆர். நரசிம்மாச்சார்யா எழுதிய கன்னட மொழியின் வரலாறு (History of Kannada Language) என்ற நூல், அந்த மொழியின் தோற்றம் குறித்து எதையும் குறிப்பிடவில்லை. ஆனால், கன்னட மொழி தமிழுடன் கூடுதல் நெருக்கம் கொண்டது என்று குறிப்பிடுகிறது.

"கன்னடம் தமிழோடு நெருங்கிய தொடர்புடையது. இலக்கண ரீதியாக இந்த இரு மொழிகளுக்கும் இடையில் பல ஒற்றுமைகள் உள்ளன. தமிழில் இருந்து கன்னடம் வேறுபடுவதைவிட, தெலுங்கு மொழியிடம் இருந்து கூடுதலாக வேறுபடுகிறது" என்கிறார் ஆர். நரசிம்மாச்சார்யா.

எழுத்தாளரும் பேராசிரியருமான பெருமாள் முருகன் தமிழிலில் இருந்து பிற திராவிட மொழிகள் தோன்றின என்று கூறுவது சரியான கருத்தல்ல என்கிறார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையில், "மூல திராவிட மொழி என்ற ஒன்றிலிருந்து பிற மொழிகள் அனைத்தும் பிரிந்திருக்க வேண்டும் என்னும் மொழியியலாளர் கருத்தையே நானும் ஏற்கிறேன். அப்படியானால் அந்த மூலதிராவிட மொழி எங்கே என்று கேட்கின்றனர். ஒரு கல்லை உடைத்தால் அது பல துண்டுகளாகச் சிதறிவிடும். மூலக்கல் எங்கே என்று கேட்க முடியாது.

மொழியிலும் அப்படித்தான். தமிழில் இல்லாத மூல திராவிட மொழியின் சிற்சில கூறுகளைப் பிற திராவிட மொழிகள் தக்க வைத்திருக்கின்றன. ஆகவே இவற்றைச் சகோதர மொழிகள் என்று சொல்வது சரியானது. மேலும் இன்றைய அரசியல் சூழலில் இந்தத் 'தாய்-சேய் உறவு' என்பதை வலியுறுத்துவது நன்மை பயக்காது. எங்கள் மொழியில் இருந்தே உங்கள் மொழி பிறந்தது என்று பிறரை நோக்கிச் சொல்வது ஒரு வகையில் ஆதிக்க உணர்வை வெளிப்படுத்துகிறது" என்கிறார் அவர்.

தமிழ், கன்னடம் ஆகியவற்றின் தோற்றம் குறித்து மொழியியலாளர்களுக்கும் வெவ்வேறு கருத்துகள் உள்ளன. இதுவரை இந்த மொழிகளின் தோற்றம் குறித்து ஆய்வுகள், மொழி நிபுணர்கள் என்ன கூறுகின்றனர் என்று விளக்குகிறது இந்த காணொளி.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு