You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த முக்கிய தீர்ப்புகளும் எழுந்த சர்ச்சைகளும்
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
"திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவால் சமூக நல்லிணக்கம் மற்றும் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது" என்று டிசம்பர் 4 அன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின்போது தமிழ்நாடு அரசு தெரிவித்தது.
முன்னதாக, "தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற உத்தரவை மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) வீரர்களுடன் மனுதாரர் உள்பட 10 பேர் சென்று நிறைவேற்றலாம்" என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.
"தீபத்தை ஏற்றுவதற்கு மாநில அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை" எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ராம ரவிக்குமார் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மாநில அரசின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
"திருப்பரங்குன்றத்தில் மோதல் ஏற்பட்ட விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் முன்வைத்துள்ளன.
யார் இந்த ஜி.ஆர்.சுவாமிநாதன்? அவர் வழங்கிய முக்கிய தீர்ப்புகள் மற்றும் பேச்சுகளில் எழுந்த சர்ச்சைகள் என்ன?
திருப்பரங்குன்றம் வழக்கில் என்ன சர்ச்சை?
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.
ஆனால், "பிள்ளையார் கோவிலில் தீபத்தை ஏற்றாமல் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்" எனக் கூறி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்து தமிழர் கட்சியின் நிறுவனரான ராம ரவிக்குமார் வழக்கு தொடர்ந்தார்.
"திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும்" என்பது இந்து அமைப்புகளின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. இதை வலியுறுத்தி 1994ஆம் ஆண்டில் இந்து பக்த ஞான சபையைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கின் தீர்ப்பில், "மலையில் நெல்லித்தோப்பு பகுதிக்கு 15 மீட்டருக்கு அப்பால் தர்கா இருப்பதைக் கணக்கில் கொண்டு இடத்தைத் தேர்வு செய்து தீபம் ஏற்ற வேண்டும்" என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
"இதற்கான இடத்தை கோவில் நிர்வாகமே தேர்வு செய்யலாம்" எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, "பிள்ளையார் கோவிலில் விளக்கு ஏற்றுவது" என கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.
ஆனால், "கார்த்திகை தீபம் ஏற்றும் இடம் மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் உள்ளதால் இது ஆகம விதிகளுக்கு முரணானது" எனக் கூறி 2014ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கின் தீர்ப்பில், "ஆகமத்திற்கு எதிரானது என்பதற்கான ஆதாரங்களைத் தாக்கல் செய்யவில்லை" எனக் கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதே வழக்கில் 2017ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் கல்யாணசுந்தரம், பவானி சுப்பராயன் அமர்வு, "கோவில் நிர்வாகமும் தர்கா நிர்வாகமும் கலந்து பேசி ஏற்கெனவே முடிவு செய்த இடத்தில் தீபம் ஏற்றி வருவதால் அதை ஏன் இடையூறு செய்ய வேண்டும்?" எனக் கேள்வி எழுப்பியது.
மேலும், "தீபத்தை அதே இடத்தில் ஏற்றலாம்" எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
"இந்த வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு கூறிய பிறகும் மீண்டும் தனி நீதிபதி (ஜி.ஆர்.சுவாமிநாதன்) வழக்கை விசாரிப்பதை ஏற்க முடியாது" எனக் கூறுகிறார் மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன்.
"கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக வழக்கு தொடரப்பட்ட காலத்திலேயே தலைமை நீதிபதிக்கு இதுகுறித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரியப்படுத்தியிருக்க வேண்டும்" எனவும் அவர் பிபிசி தமிழிடம் கூறினார்.
'எச்சில் இலை' நேர்த்திக்கடன் வழக்கு
கரூர் மாவட்டத்தில் உள்ள கோவிலில் எச்சில் இலைகளில் உருண்டு நேர்த்திக் கடன் செலுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நீக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
கரூர் மாவட்டம் நன்மங்கலம் தாலுகாவில் உள்ள நெரூர் கிராமத்தில் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் ஜீவசமாதி உள்ளது. இங்கு மே 18ஆம் தேதியை அவர் ஜீவசமாதி அடைந்த நாளாகக் குறிப்பிட்டு மடத்திற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
அன்னதானம் முடிந்த பிறகு எச்சில் இலைகளில் உருண்டு நேர்த்திக் கடன் செய்வது அங்கு வரும் பக்தர்களின் வழக்கமாக உள்ளது. கர்நாடக மாநிலத்தில் இதேபோன்ற நடைமுறை பின்பற்றப்படுவதற்கு 2014-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
இதன் அடிப்படையில் கரூரில் எச்சில் இலைகள் மீது உருண்டு நேர்த்திக் கடன் செலுத்துவதற்கு 2015-ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற அமர்வு தடை விதித்தது. இதற்கு எதிராக கரூரைச் சேர்ந்த நவீன்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
கடந்த ஆண்டு மே 17 அன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த வழக்கத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டார்.
"எச்சில் இலை மீது உருள்வது ஆன்மிக பலத்தைக் கொடுப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்" என்று தீர்ப்பில் கூறிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், "பாலினம், பாலியல் தேர்வு ஆகியவற்றுடன் ஆன்மிக தேர்வும் ஒருவரது தனி உரிமையில் உள்ளடங்கியுள்ளது" எனக் குறிப்பிட்டார்.
மேலும் அவர் தனது தீர்ப்பில், "ஒருவர் ஆன்மிகத்தை எந்த வகையில் வெளிப்படுத்துகிறார் என்பது அவரவர் விருப்பம். அது மற்றவர்களின் உரிமை மற்றும் சுதந்திரத்தை பாதிக்கக் கூடாது." எனத் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு மாறாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தலைமை நீதிபதிக்கு திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி புகார் கடிதம் ஒன்றை அனுப்பினார்.
"ஜி.ஆர்.சுவாமிநாதனின் நிலைப்பாடு, இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்புக்கு எதிரானது. அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும்" என்று கடிதத்தில் கொளத்தூர் மணி தெரிவித்திருந்தார்.
"இந்த வழக்கில் எதிர்த்தரப்பினர் பதில் மனு தாக்கல் செய்வதற்கு வாய்ப்பு வழங்காமல் அவர் வழங்கிய தீர்ப்பு குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" எனவும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மாணவி தற்கொலையும் மதமாற்ற சர்ச்சையும்
கடந்த 2022-ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்டதன் பின்னணியில் மதமாற்றம் உள்ளதாக தமிழ்நாடு பா.ஜ.க நிர்வாகிகள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இந்த வழக்கின் விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்புக்கு மாற்றி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இதுதொடர்பான தீர்ப்பில், பள்ளியில் மதமாற்றம் நிகழ்வதற்கு வாய்ப்புள்ளதாக அவர் கூறியிருந்தார்.
"ஊரின் பெயர் மைக்கேல்பட்டி என்று அழைக்கப்படுவதற்கு முன்பு வேறு எந்தப் பெயரில் அழைக்கப்பட்டிருக்கும்?" எனவும் தீர்ப்பில் கேள்வி எழுப்பினார்.
"ஊரின் பெயரே மதமாற்றத்திற்கான முயற்சி நடைபெறலாம் என ஊகிக்க வித்திடுவதாக" கூறிய நீதிபதி, "இந்த ஊகம் சரியாகவோ தவறாகவோ இருக்கலாம்" எனவும் தெரிவித்துள்ளார்.
"மாணவி தற்கொலை வழக்கில் புலனாய்வு தொடங்கப்பட்டு மிக ஆரம்ப நிலையில் உள்ளது. அதாவது 16.1.2022 அன்றுதான் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. ஆனால் புலனாய்வு தொடங்கிய பத்தே நாட்களில் விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றியது சரியல்ல" என்று கட்டுரை ஒன்றில் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் விமர்சித்திருந்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையை ரத்து செய்யக் கோரி பள்ளியின் நிர்வாகி சகாயமேரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
அப்போது சி.பி.ஐ தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், "வழக்கு தொடர்பாக 141 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 265 ஆவணங்களும் ஏழு பொருட்களும் கைப்பற்றப்பட்டன. பள்ளியில் மாணவியை மதமாற்றம் செய்வதற்கு எந்த முயற்சியும் நடைபெறவில்லை" எனக் கூறினார்.
அதே நேரம், நன்றாகப் படித்த மாணவியை பிற வேலைகளைச் செய்யுமாறு கூறி கட்டாயப்படுத்தியதால் அவர் கல்வியில் பின்தங்கும் நிலை ஏற்பட்டதாகவும் சி.பி.ஐ தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
'தலைமை நீதிபதிக்கு புகார்' - வழக்கறிஞரை சாடிய ஜி.ஆர். சுவாமிநாதன்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடந்த ஜூன் மாதம் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தை வேறொரு வழக்கறிஞர் வெளியிட்டார்.
அதில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது பபல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். மாணவி மதமாற்ற சர்ச்சை தொடர்பான வழக்கில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் செயல்பாடுகள் குறித்தும் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
கடந்த ஜூலை மாதம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் நியமனம் தொடர்பான மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் எதிர்மனுதாரரின் வழக்கறிஞரான வாஞ்சிநாதனை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாக விசாரிக்கவே அவரை நீதிபதிகள் அழைத்திருந்தனர்.
ஜூலை 25 அன்று பிற்பகலில் நடந்த விசாரணையின்போது, "எங்களில் ஒருவர் (ஜி.ஆர்.சுவாமிநாதன்) தனது நீதித்துறை கடமைகளைச் செய்யும்போது சாதிரீதியாக நடந்து கொள்கிறார் எனத் தொடர்ந்து கூறுகிறீர்களா என்ற கேள்விகளை எழுப்பினோம். அதற்கு, எழுத்துபூர்வமாக உத்தரவிடுமாறு வாஞ்சிநாதன் கேட்டுக் கொண்டதால் ஜூலை 28 பிற்பகலில் அவர் பதில் அளிக்க வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதை அறிந்து வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மதுரையில் கூடி ஆலோசனையை நடத்தினர். அப்போது பேசிய ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன், "ஜி.ஆர். சுவாமிநாதனை பற்றிய புகார் மனுவில் அவரே அமர்வு நீதிபதியாக விசாரிப்பதை எவ்வாறு அனுமதிப்பது?" எனக் கேள்வி எழுப்பினார்.
"அவ்வாறு விசாரித்தால் தலைமை நீதிபதி தலையிட்டு இதைத் தடுக்க வேண்டும்" எனக் கூறிய அரிபரந்தாமன், "இப்படியொரு அநீதிக்கு துணை போகக்கூடாது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனே கைவிட வேண்டும்" எனப் பேசினார்.
ஜூலை 28 அன்று நீதிமன்றத்தில் இதை மேற்கோள் காட்டிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "வழக்கு நிலுவையில் இருக்கும்போது ஓய்வுபெற்ற நீதிபதிகள் கருத்துகளைக் கூறுவது துரதிஷ்டவசமானது" எனக் கூறினார்.
அப்போது வழக்கறிஞர் வாஞ்சிநாதனிடம் பேசிய ஜி.ஆர். சுவாமிநாதன், "உங்களை எல்லாம் புரட்சியாளர்கள் என்று யார் அழைத்தது எனத் தெரியவில்லை" என விமர்சித்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளாகத் தன்னை அவதூறாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேசி வருவதாகக் கூறிய ஜி.ஆர். சுவாமிநாதன், "உங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கை தலைமை நீதிபதி அல்லது பொருத்தமான அமர்வில் வைப்போம். நீதித் துறையின் சுதந்திரமே அனைத்திலும் மேலானது." எனவும் தெரிவித்தார்.
தலைமை நீதிபதியிடம் தான் கொடுத்த கடிதம் ரகசியமானது என்பதால் அது வெளியானது குறித்து காவல்துறையில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
'சிறைத் தண்டனையில் இருந்து மீண்ட சாஸ்திரி'
தான் வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்தில் கார் விபத்து வழக்கு ஒன்றைக் கையாண்ட விதம் குறித்து நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கூறிய விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சென்னையை சேர்ந்த ஓம் சாரிட்டபிள் அறக்கட்டளை சார்பில் தேசிய அளவிலான வேத திறமையாளர்கள் மாநாடு (National Vedic talent meet) நடந்தது. அப்போது நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பேசிய காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.
தான் வழக்கறிஞராக இருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறிய ஜி.ஆர். சுவாமிநாதன், வேதங்களை நன்கு கற்ற சாஸ்திரி ஒருவருக்கு விபத்து வழக்கு ஒன்றில் 18 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது குறித்து அவர் பேசினார்.
"அவர் ஏழு ஆண்டுகள் வேதங்களைக் கற்று வேத தர்மங்களைப் பின்பற்றி வாழ்ந்து வருபவர். அவர் என்னைப் பார்க்க வந்திருந்தார். அவரால் பேச முடியவில்லை. அவரது கண்கள் கலங்கியிருந்தன. தனக்கு 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறினார்" என ஜி.ஆர். சுவாமிநாதன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "அமெரிக்காவில் இருந்து சாஸ்திரியின் சகோதரி வந்துள்ளார். இருவரும் கோவில்களுக்குச் சென்றுவிட்டு வரும்போது கார் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. தேநீர் கடையின் ஓரம் நின்றிருந்த நபரின் மீது கார் மோதியதில் அவர் உயிரிழந்துவிட்டார்" என்றார்.
காரை சகோதரி ஓட்டியிருந்தாலும் அவர் அமெரிக்க செல்ல வேண்டும் என்பதால் குற்றத்தை சாஸ்திரி ஒப்புக் கொண்டதால் அவர் மீது முதல் தகவல் அறிக்கையும் குற்றப் பத்திரிகையும் பதிவு செய்யப்பட்டதாக ஜி.ஆர். சுவாமிநாதன் கூறினார்.
"இதுபோன்ற வழக்குகளில் அதிகபட்சம் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்" எனக் கூறிய ஜி.ஆர். சுவாமிநாதன், "ஆனால், 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கை நான் மேல்முறையீட்டுக்குக் கொண்டு சென்றேன்" எனப் பேசினார். வழக்கின் நீதிபதி தனது வகுப்பு நண்பர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
"வழக்கின் சாட்சிகள் அனைவரும், 'டீக்கடையில் நின்றவர் மீது கார் மோதியதால் அவர் இறந்தார்' எனக் கூறினர். ஆனால், காரை ஓட்டியது யார் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அப்படியிருக்க எப்படி அவர் குற்றவாளி ஆக்கப்பட்டார் என்ற கேள்வி பிரதானமாக வைக்கப்பட்டது. சாஸ்திரி விடுதலை ஆனார்" எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசும்போது, "யோசித்துப் பாருங்கள். குறைந்தபட்சம் ஒரு சாட்சியாவது சாஸ்திரி வாகனத்தை ஓட்டியதாகக் கூறியிருக்கலாம். ஒருவர்கூட அவ்வாறு கூறவில்லை." என்றார்.
"அப்போது ஒன்றைப் புரிந்து கொண்டேன். வேதத்தை நீங்கள் காப்பாற்றினால் வேதம் உங்களைக் காப்பாற்றும். அந்தத் தருணமே என்னை மாற்றியது," எனவும் தனது பேச்சில் அவர் குறிப்பிட்டார்.
இதைக் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, "வேதம் படித்தவர் தாராளமாக பொய் கூறலாமா?" எனக் கேள்வி எழுப்பினார்.
"வேதம் படித்தவர் உண்மையான குற்றவாளியான தனது தங்கையைச் சரணடையச் செய்திருந்தால் பாராட்டியிருக்கலாம். விபத்து ஏற்படுத்திய ஒருவரைக் காப்பாற்றுவதற்காக தன்னைக் குற்றவாளியாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்" எனவும் அறிக்கையில் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
"அவரே தந்த வாக்குமூலத்தின் மூலம் நியாயத்தை வளைக்கலாம், நியாயத்தைச் சாய வைக்கலாம். குற்றவாளிகளுக்குத் துணை போகலாம் என்ற புதிய தத்துவத்தை நீதிபதி சொல்லிக் கொடுக்கிறார்" எனவும் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.
ஜி.ஆர்.சுவாமிநாதனின் பின்னணி
கடந்த 1968ஆம் ஆண்டு பிறந்த ஜி.ஆர். சுவாமிநாதன், திருவாரூரில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். 1990ஆம் ஆண்டு சட்டப் படிப்பை நிறைவு செய்தார். அவர் தனது குடும்பத்தில் முதல் தலைமுறை வழக்கறிஞராக உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 13 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணிபுரிந்த ஜி.ஆர். சுவாமிநாதன், மதுரையில் உயர் நீதிமன்ற கிளை தொடங்கப்பட்ட பிறகு அங்கு மாறினார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். 2017-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். பிறகு நிரந்தர நீதிபதி ஆனார்.
சிறைக் கைதிகள் உரிமை, பேச்சுரிமை, விலங்குகள் நல உரிமை, மாற்றுத் திறனாளிகள் உரிமை தொடர்பாகப் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், நீதிபதியாகப் பதவியேற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைக் குறிப்பிட்டு வழக்கறிஞர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், "ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, ஆறு ஆண்டுகள் எட்டு மாதங்கள் பணியாற்றி 95,607 வழக்குகளுக்குத் தீர்வு கண்டுள்ளார். நான் தீர்வு கண்ட இதர வழக்குகளைச் சேர்த்தால் 1,03,685 வழக்குகளுக்குத் தீர்வு கண்டுள்ளேன்" எனக் கூறியுள்ளார்.
"பாவம் புண்ணியம் என்ற கருத்தை நான் நம்புகிறேன். உங்களால் நான் தவறாக வழிநடத்தப்பட்டால் தவறான தீர்ப்பை வழங்கினால் என் பாவ எண்ணிக்கை உயரும்," எனவும் வழக்கறிஞர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஜி.ஆர். சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு