You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முதலமைச்சர் கான்வாயில் தொங்கியபடி பயணித்தது ஏன்? - சென்னை மேயர் பிரியா பதில்
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாகனத் தொடரணியில் (கான்வாய்) சென்னை மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் காரில் தொங்கிக்கொண்டு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அவ்வாறு தொங்கிக்கொண்டு சென்றது ஏன் என்று பிபிசி தமிழிடம் பிரத்யேகமாகப் பேசிய சென்னை மேயர் பிரியா ராஜன் பதிலளித்துள்ளார்.
உயரிய பொறுப்பான மேயர் பதவியில் உள்ளவரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் காரில் தொங்கியபடி சென்றது ‘தவறான முன்னுதாரணம்’ என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (டிச. 10) மேன்டோஸ் புயல் பாதிப்புகள் குறித்து சென்னை பாலவாக்கத்தில் ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அவர் வழங்கினார். பின்னர், அங்கிருந்து காசிமேட்டுக்கு சென்ற முதலமைச்சர், மீனவர்களிடம் மழை, புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். புயலால் பாதிக்கப்பட்ட படகுகளையும் அவர் பார்வையிட்டார். அப்போது அமைச்சர்கள் பி. சேகர் பாபு, கே.என்.நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முதலமைச்சர் காசிமேட்டுக்கு ஆய்வுக்காக சென்றபோது கான்வாயில் இருந்த எஸ்யூவி கார் ஒன்றில் சென்னை மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ எபினேசர் உட்பட 4 பேர் தொங்கியபடி சென்றனர். இந்த காணொளி உடனடியாக சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த காணொளிக்கு பல்வேறு தரப்பினரும் பலவித கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
விமர்சனமும் ஆதரவும்
உயர் பொறுப்புகளில் உள்ள மேயர், மாநகராட்சி ஆணையர் இருவரும் காரில் தொங்கியபடி சென்றது தவறான முன்னுதாரணமாகிவிடும் என நெட்டிசன்கள் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இச்சம்பவத்தை மாணவர்கள் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு வருவதோடு ஒப்பிட்டும் சிலர் பதிவிட்டுள்ளனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக திமுகவையும் பலர் விமர்சித்து வருகின்றனர். திமுகவை சேர்ந்த சில பெண் தலைவர்களை குறிப்பிட்டு, அவர்கள் இவ்வாறு காரில் தொங்கிக்கொண்டு செல்வார்களா? ஏன் சென்னை மேயர் இவ்வாறு செல்ல வேண்டும் என்ற கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.
நெட்டிசன்கள் மட்டுமல்லாது பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் இதுதொடர்பாக திமுகவை விமர்சித்துள்ளனர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தன் ட்விட்டர் பக்கத்தில், “சுயமரியாதை இயக்கம். சமூக நீதி இயக்கம். சாமானியர்களின் கட்சி.
திமுகவின் இந்த போலிக் கதைகள் அனைத்தும் இறந்து புதைந்து வெகுநாட்களாகிவிட்டன. திமுகவால் அது மீண்டும் வெளிப்பட்டுவிட்டது” என அப்புகைப்படத்தை வெளியிட்டு விமர்சித்துள்ளார்.
விமர்சனங்களுக்கு மத்தியில் சென்னை மேயர் பிரியா, தன் பணிக்காகவே அவ்வாறு காரில் தொங்கியபடி சென்றதாக திமுகவினர் பலரும் அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
'' நாங்கள் மக்களின் தேவைக்காகவே ஓடினோம்; ஓட்டுக்காக அல்ல,'' என்று இது குறித்து திமுக எம்.எல்.ஏ ஜே.ஜே.எபினேசர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
“வீட்டில் முடங்காமல், புயல் சேதத்தை பார்வையிட, மக்கள் நிவாரணப் பணிக்காக, ஆண்களுக்கு இணையாக துணிச்சலாக அவர் காரில் நின்றபடியே சென்றது எனக்கு மட்டுமல்ல சென்னை நகரத்திற்கே பெருமை!” என, திமுக தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளர் இசை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
"ஏன் அப்படி சென்றேன்?"
இந்நிலையில், முதலமைச்சரின் கான்வாயில் அவ்வாறு தொங்கியபடி சென்றது ஏன் என்பது குறித்து சென்னை மேயர் பிரியா பிபிசி தமிழிடம் பேசினார்.
முதலில் இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த அவர் பின்னர் பேசினார்.
“காசிமேட்டில் இரு இடங்களில் முதலமைச்சர் ஆய்வு செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஓரிடத்தில் ஆய்வு முடித்த பின்னர் மற்றோர் இடத்திற்கு முதலமைச்சருக்கு முன்பாகவே விரைந்து சென்று ஏற்பாடுகளை கவனிக்க வேண்டும். இரு இடங்களுக்கும் தொலைவு அதிகமானதாக இருந்தாலும் நான் நடந்து சென்றுகொண்டிருந்தேன். அப்போது, கான்வாய் வந்துகொண்டிருந்ததால் அதிலேயே சென்றுவிடலாம் என்று எண்ணித்தான் அவ்வாறு சென்றோம்” என்றார்.
இது இவ்வளவு சர்ச்சையாகும் என தான் நினைக்கவில்லை எனக்கூறிய மேயர் பிரியா, பாதிக்கப்பட்ட இடத்திற்கு முன்கூட்டியே செல்ல வேண்டும் என்ற நோக்கில்தான் அவ்வாறு சென்றதாகத் தெரிவித்தார். கான்வாயில் அவ்வாறு செல்லுமாறு யாரும் தன்னை கட்டாயப்படுத்தவில்லை எனவும் சூழ்நிலை அவ்வாறு அமைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
"மரியாதை தருகின்றனர்"
சென்னை மேயராக பிரியா ராஜன் பதவியேற்றதிலிருந்து இதுபோன்ற சர்ச்சைகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மேயர் பிரியாவை ஒருமையில் அதட்டியதாக சர்ச்சை எழுந்தது.
அப்போது, “அமைச்சர் கே.என். நேரு என்னை ஒருமையில் பேசியதாக அல்ல, உரிமையில் பேசியதாகவே நினைக்கிறேன். அவரது மகள் போலத்தான் என்னை பார்ப்பார்" என பிரியா விளக்கமளித்திருந்தார்.
மேலும், அக்டோபர் மாதம், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு மேயர் பிரியா குடை பிடிக்கும் புகைப்படமும் வைரலாகி சர்ச்சையை கிளப்பியது.
இதனால், சென்னை மாநகரின் மேயராக பிரியா ராஜன் சுதந்திரமாக செயலாற்ற முடியாத நிலை உள்ளதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த பிரியா ராஜன், “என்னை யாரும் வயதில் குறைந்தவர் என ஒதுக்கவில்லை. மேயர் என்கிற மரியாதையை அனைவரும் தருகின்றனர். முதலமைச்சரும் எனக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார். எந்த பிரச்னையும் இல்லை” எனத் தெரிவித்தார்.
"கடமையே முக்கியம்"
கான்வாயில் தொங்கி சென்றது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, “காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லை. எங்களுடைய வாகனம் மிகவும் பின்னால் இருந்தது. அதனால் கான்வாயில் செல்லலாம் என முடிவெடுத்தோம். கடமைதான் மிகவும் முக்கியம். நாங்கள் சென்ற கார் முதலமைச்சருடையது அல்ல. அவருடைய கார் பின்னால் வந்துகொண்டிருந்தது.
கார் மிகவும் மெதுவாகத்தான் சென்றது. மாநகராட்சி ஆணையராக வெள்ளத்தில் இறங்கிக்கூட பணி செய்ய வேண்டியிருக்கும். இதுவும் அதுபோன்றதுதான். இதில் யாரும் ‘ஈகோ’ பார்க்கக்கூடாது.
முந்தைய நாள் இரவு பணி காரணமாக நான் உறங்கவில்லை. அதனால் அந்த இடத்திற்கு ஓடிச்சென்று சேர முடியாத நிலை இருந்தது. எனவே, கான்வாயில் சென்றோம். எனினும், ஊடகங்கள் வீடியோ எடுக்கத் தொடங்கியபோது நான் அதிலிருந்து இறங்கிவிட்டேன். ஏனெனில், எனக்கு ‘பப்ளிசிட்டி’ தேவையில்லை” எனத் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: • ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக் • டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர் • இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம் • யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்