You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டி20 உலகக் கோப்பை: வங்கதேசம் தனது போட்டிகளை இந்தியாவில் ஆட மறுப்பது ஏன்?
2026 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக, வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்குப் பயணம் செய்யாது என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) முடிவு செய்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மதியம் நடந்த வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் 17 இயக்குநர்கள் அடங்கிய வாரியக் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
ஐசிசிக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் இது தொடர்பாக மின்னஞ்சல் அனுப்ப உள்ளது.
மேலும், வங்கதேச அணி பங்கேற்கும் போட்டிகள் இலங்கையில் நடைபெறும் வகையில், போட்டி நடைபெறும் இடத்தை மாற்றுமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் முறையிட உள்ளது. பாகிஸ்தான் ஏற்கனவே தனது அனைத்துப் போட்டிகளையும் இலங்கையில் விளையாட உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் பின்னர் விரிவான அறிக்கை வெளியிடும் என வங்கதேச கிரிக்கெட் வாரிய இயக்குநர் நஜ்முல் அபதீன் ஃபஹீம் கூறினார்.
2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்துகின்றன. இந்தத் தொடர் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்க உள்ளது.
வங்கதேசத்தின் முதல் போட்டி கொல்கத்தாவில் வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிராக நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
முஸ்தஃபிசுர் ரஹ்மான் விவகாரத்தில் தொடங்கிய சர்ச்சை
முன்னதாக, ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியிலிருந்து முஸ்தஃபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டதற்கு, வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கம் கடும் எதிர்வினையாற்றியுள்ளது.
"வங்கதேச கிரிக்கெட் வீரர்களுக்கும் நாட்டிற்கும் ஏற்படும் அவமானத்தை எந்தச் சூழ்நிலையிலும் பொறுத்துக்கொள்ள முடியாது" என்று இளைஞர் மற்றும் விளையாட்டு விவகார ஆலோசகர் ஆசிஃப் நஸ்ருல் கூறியிருந்தார்.
2026 ஐபிஎல் தொடரிலிருந்து வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசுர்ரஹ்மான் நீக்கப்பட்டதை வன்மையாகக் கண்டித்த அவர், "வங்கதேச கிரிக்கெட், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வங்கதேசத்திற்கு ஏற்படும் எந்த அவமானத்தையும் எந்தச் சூழ்நிலையிலும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். அடிமைத்தனத்தின் நாட்கள் முடிந்துவிட்டன," என்றார்.
ஆசிஃப் நஸ்ருல் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "வகுப்புவாதக் குழுக்களின் அழுத்தத்தின் கீழ் பிசிசிஐ, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை முஸ்தஃபிசுர் ரஹ்மானை அணியிலிருந்து நீக்குமாறு உத்தரவிட்டது," என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த முழு விவகாரத்தையும் ஐசிசி-க்கு விளக்கி கடிதம் எழுதுமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியத்தை அவர் கேட்டுக்கொண்டார்.
ஆசிஃப் நஸ்ருல் அவரது பதிவில், "ஒரு வங்கதேச கிரிக்கெட் வீரர் ஒப்பந்தம் இருந்தபோதிலும் இந்தியாவில் விளையாட முடியாதபோது, முழு வங்கதேச கிரிக்கெட் அணியும் உலகக் கோப்பையில் விளையாட இந்தியா செல்வது பாதுகாப்பானது என்று உணர முடியாது என்பதை வாரியம் தெளிவுபடுத்த வேண்டும்," என்று எழுதினார்.
இத்துடன், வங்கதேசத்தில் ஐபிஎல் ஒளிபரப்பை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு தகவல் மற்றும் ஒளிபரப்பு ஆலோசகரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முஸ்தஃபிசுர் ரஹ்மானின் கருத்து என்ன?
டிசம்பர் 16 ஆம் தேதி அபுதாபியில் நடைபெற்ற ஏலத்தில் கேகேஆர் அணி வங்கதேச வேகப்பந்து வீச்சாளரான முஸ்தஃபிசுர் ரஹ்மானை ரூ.9.2 கோடிக்கு வாங்கியிருந்தது. இருப்பினும், பிசிசிஐ உத்தரவின் காரணமாக கேகேஆர் அணி முஸ்தஃபிசுர் ரஹ்மானை விடுவிக்க வேண்டியிருந்தது.
இந்த விவகாரம் குறித்து முஸ்தஃபிசுர் ரஹ்மான், "அவர்கள் என்னை விடுவித்தால் நான் என்ன செய்ய முடியும்?" என்று கூறியிருந்தார்.
வங்கதேச கிரிக்கெட் வாரியத்தைத் தவிர, வங்கதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் தபிஷ் அவலும் ஐபிஎல்-லிருந்து முஸ்தஃபிசுர் நீக்கப்பட்டதற்கு ஆழ்ந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முஸ்தஃபிசுர் ரஹ்மானை அவரது கிரிக்கெட் திறமையின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுத்தது, ஆனால் "அரசியல் தலையீடு காரணமாக அவர் போட்டியிலிருந்து நீக்கப்பட்டார், இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என்று அவர் கூறினார்.
'மக்களை ஒன்றிணைக்கவும், பிளவுகளைக் குறைக்கவும் விளையாட்டுக்கு ஒரு அசாதாரண சக்தி உள்ளது' என்று அவர் கூறினார். 'பிளவுகளை உருவாக்க அல்லாமல், பரஸ்பர புரிதலையும் மரியாதையையும் வளர்க்க விளையாட்டு பயன்படுத்தப்பட வேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு