You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கதைகளை வாசிக்கும் போது நம் மூளையில் என்ன நடக்கிறது?
- எழுதியவர், அனலியா லோரென்டே
- பதவி, பிபிசி நியூஸ் முண்டோ
" நம் அனுபவத்தின் எல்லைகளை விரிவாக்குவதற்கு வாசிப்பது ஒரு சிறந்த வழியாகும்,"
மூளையின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்துள்ள கனடாவின் யார்க் பல்கலைக்கழகத்தின் உளவியல் முனைவர் ரேமண்ட் மார் இதை விளக்கியுள்ளார்.
மூளையின் செயல்பாட்டைக் குறித்த ஆய்வுகளின்படி, ஒரு நாவலில் உள்ள கதாபாத்திரத்தின் கதையை வாசிப்பது, அதை நிஜத்தில் வாழ்வதற்குச் சமமானதாக இருக்கிறது.
ஆனால், மனிதர்களின் மிக சிக்கலான உறுப்பான மூளையின் புதிரான செயல்பாட்டிற்கும் வாசிப்பிற்கும் இடையிலான உறவு குறித்த விஞ்ஞானிகளின் பல கண்டுபிடிப்புகளில் இது ஒன்றுதான்.
வாசிக்கும்போது நம் மூளையில் என்ன நடக்கிறது என்று ஆய்வு செய்த மூன்று ஆராய்ச்சியாளர்களை பிபிசி பேட்டி கண்டது.
மூளையும் மனமும்
ஆராய்ச்சியாளர்கள் முதலில் இருந்து வலியுறுத்தி வருவது ஏதாவது இருக்குமானால் அது மூளைக்கும் மனதிற்கும் உள்ள வித்தியாசமே ஆகும்.
"மூளை என்ன செய்கிறது என்பதைப் புரிந்துகொள்ள, மனம் என்ன செய்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மூளையைப் பற்றி தனியாகப் பேச முடியாது," என்று கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் அறிவாற்றல் உளவியல் (Cognitive Psychology) பேராசிரியரான கீத் ஓட்லி சுட்டிக்காட்டினார்.
"நாம் வாசிக்கும்போது, ஒரு குறிப்பிட்ட மூளைப் பகுதி செயல்படுகிறதா என்பதை அறிவது மட்டும் போதாது. அந்தச் செயல்பாட்டில் மனம் எவ்வாறு இயங்குகிறது என்பதைத் தெரிந்துகொள்வதும் அவசியம்," என்று மார் ஏற்றுக்கொள்கிறார்.
மனதில் தோன்றும் படங்கள்
வாசிக்கும்போது தூண்டப்படும் முதல் எதிர்வினைகளில் ஒன்று, மனதில் படங்களை உருவாக்குவதுதான்.
"நாம் வாசிக்கும்போது, விளக்கப்பட்டதைப் போன்ற உருவங்களை மனம் உருவாக்குகிறது அல்லது நினைவுபடுத்துகிறது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன," என்று மார் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார்.
"அடிப்படையில், நீங்கள் ஒரு காட்சியைப் பற்றிய விரிவான விளக்கத்தைப் வாசித்தால், உங்களால் மூளையின் காட்சிப் புறணியில் (visual cortex) செயல்பாட்டைக் காண முடியும். அறிதலுக்கும் (perceiving) அறிதல் பற்றி வாசிப்பதற்கும் இடையே ஒற்றுமைகள் உள்ளன," என்று அவர் கூறினார்.
நாம் வாசிப்பதையே நிஜத்திலும் வாழ்கிறோமா?
புனைகதைக் கதாபாத்திரத்தின் அனுபவத்தைப் பற்றி வாசிப்பதற்கும், அந்தச் செயல்பாட்டை நிஜ வாழ்க்கையில் அனுபவிப்பதற்கும் இடையில் மூளை பெரிய வேறுபாட்டைக் காண்பதில்லை என தோன்றுவதாக ஓட்லியும் மாரும் முடிவுக்கு வந்துள்ளனர்.
"ஏதோவொன்றைப் பற்றி வாசிப்பதற்கும் அதை அனுபவிப்பதற்கும் மூளை ஒரே மாதிரியாகவே வினைபுரிவதாக தெரிகிறது," என்று மார் விளக்கினார்.
அந்த நிபுணரின் கூற்றுப்படி, ஒரு நாவலில் ஒரு கதாபாத்திரம் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதைப் பற்றி ஒருவர் வாசிக்கும்போது, அந்த நபர் நிஜத்தில் அந்தச் செயலைச் செய்யப் பயன்படுத்தும் அதே மூளைப் பகுதிகளே செயல்படுகின்றன.
"உதாரணமாக, ஒரு கதையின் கதாநாயகன் ஆபத்தான அல்லது பயப்படக்கூடிய சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, நாம் பயத்தை உணர்கிறோம் என்பது நமக்குத் தெரியும்," என்று மார் உதாரணம் அளித்தார்.
இது ஒன்றில் அல்லது ஒருவரிடத்தில் தன்னைப் பொருத்திப்பார்க்கும் தெளிவான பச்சாதாப உணர்வு.
"நிஜ வாழ்க்கையில் மக்கள் பச்சாதாபம் உள்ளவர்களாக இருக்கிறார்களா என்பதை அறிய மூளையின் சில பகுதிகளை கண்காணிக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டது. கதைகளில் உள்ள கதாபாத்திரங்களைப் பற்றிப் வாசிக்கும்போது அதே மூளைப் பகுதிகள்தான் தூண்டப்படுகின்றன. ஏனெனில், உளவியல் செயல்முறை ஒத்திருக்கிறது," என்று ஓட்லி பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார்.
இயக்கம்
செயலைக் குறிக்கும் ஒரு வினைச்சொல்லை நாம் வாசித்தால், நாம் அதைச் செய்வதாக மூளை புரிந்துகொள்கிறதா?
"நாம் ஒரு செயல்பாட்டு வினைச்சொல்லை மௌனமாகப் வாசிக்கும்போது செயல்படும் மூளையில் உள்ள இயக்கப் பகுதிகளும், நாம் இயக்கத்தைச் செய்யும்போது செயல்படும் பகுதிகளும் மிக அருகில் உள்ளன," என்று பிரான்சின் லியோனில் உள்ள மொழியியல் இயக்கவியல் ஆய்வகத்தின் (Language Dynamics Laboratory) அறிவாற்றல் நரம்பியல் ஆராய்ச்சியாளர் வெரோனிக் பூலெங்கர் சுட்டிக்காட்டினார்.
காலால் உதைப்பது, நடப்பது அல்லது ஓடுவது போன்ற செயல்களை ஒருவர் வாசித்தால், மூளை இயக்கப் பகுதியைத் தூண்டும் என்று அந்த ஆராய்ச்சியாளர் கூறினார்.
"ஒரு வகையில், மூளை நாம் வாசிக்கும் செயலை உருவகப்படுத்துகிறது," என்று பூலெங்கர் பிபிசி முண்டோவிடம் கூறினார்.
போட்டி
ஆனால், ஒரு செயல்பாட்டு வினைச்சொல்லை வாசித்து, அதே நேரத்தில் ஒரு அசைவைச் செய்ய முயற்சித்தால் என்ன நடக்கும்?
"ஒரு ஆய்வில், பங்கேற்பாளர்களை ஒரு திரையில் செயல்பாட்டு வினைச்சொற்களை வாசிக்கும் அதே நேரத்தில் ஒரு பொருளை எடுக்கச் சொன்னோம். அப்போது, வாசிக்காதபோது இருப்பதைவிட, அசைவுகளின் வேகம் குறைவாக இருந்தது," என்று பூலெங்கர் விளக்கினார்.
மூளையின் அதே வளங்களைப் பயன்படுத்துவதில் "குறுக்கீடு அல்லது போட்டி" இருப்பதால் இது நடக்கிறது என்று அந்த ஆராய்ச்சியாளர் கூறினார்.
நேரடி அல்லது மரபுத்தொடர்
மூளையின் செயல்பாட்டைக் கண்டறியும் செயல்பாட்டு காந்த அதிர்வு இமேஜிங் (functional magnetic resonance imaging - fMRI) என்ற மற்றொரு ஆய்வில், கை அல்லது கால் தொடர்பான செயல்பாட்டு வினைச்சொற்களை உள்ளடக்கிய நேரடி வாக்கியங்கள் அல்லது மரபுத் தொடர்களை வாசிக்கும்போது மூளையின் செயல்பாட்டை பூலெங்கர் பகுப்பாய்வு செய்தார்.
"இரண்டு வகையான வாக்கியங்களுக்கும், மூளையின் மொழி பகுதிகளின் செயல்பாடுகளுடன், இயக்க மற்றும் முன்-இயக்க மூளைப் பகுதிகளின் (motor and premotor brain regions) செயல்பாடுகளும் காணப்பட்டன," என்று அவர் விளக்கினார்.
அந்த நிபுணரின் கூற்றுப்படி, கை தொடர்பான வாக்கியங்கள் மூளையில் கையைச் சித்தரிக்கும் இயக்கப் பகுதியையும், அதே சமயம் கால் தொடர்பான வாக்கியங்கள் மூளையின் வேறுபட்ட இயக்கப் பகுதியையும் தூண்டுகின்றன.
இது, மூளையின் இயக்கப் புறணியின் (motor cortex) உடலமைப்பு பிரதிபலிப்புக்கு (somatotopy) பதிலளிக்கிறது. அதாவது, உடலின் வெவ்வேறு பாகங்கள் இயக்கப் புறணியின் வெவ்வேறு துணைப் பகுதிகளில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அமைப்பு இது.
நிஜ வாழ்க்கையில் எப்படி உதவும்?
கதைகளைப் புரிந்துகொள்வதில் ஈடுபட்டுள்ள மூளைப் பகுதிகளுக்கும், மற்றவர்களைப் புரிந்துகொள்வதில் நாம் பயன்படுத்தும் பகுதிகளுக்கும் இடையே பொதுவான பகுதிகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
அப்படியானால், புனைகதைக் கதாபாத்திரங்களைப் வாசிப்பதன் மூலம் பச்சாதாபம் கொள்வது, நிஜ வாழ்க்கையில் மக்களை நன்கு புரிந்துகொள்ள உதவுமா?
மார் அப்படித்தான் நம்புகிறார்.
"நாம் அடிக்கடி வாசிப்பதிலும், அதில் உள்ள கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் ஈடுபாடு காட்டுவதாக இருந்தால், அது மற்றவர்களைப் புரிந்துகொள்ளும் நம் திறனை மேம்படுத்தலாம் அல்லது கற்றுக்கொள்ளலாம் என்று இது பொருள்படலாம்," என்று அவர் பகுப்பாய்வு செய்தார்.
"உதாரணமாக, ஒரு மாற்றுத்திறனாளி போல வாழ்வது எப்படி என்று நமக்கு ஒருபோதும் தெரியாமல் இருக்கலாம்," என்று அவர் கூறினார், "ஆனால், அதை அனுபவிக்கும் நபரின் இடத்தில் நம்மை வைக்கும் மிகச் சிறப்பாக எழுதப்பட்ட ஒரு கதையை வாசித்தால், நாம் அந்த அனுபவத்தைப் புரிந்துகொள்ளும் நிலையை அடையலாம்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு