ஆயிரக்கணக்கானோருக்கு ஒரே லாட்டரியில் 'பல கோடி ரூபாய் பரிசு' - நார்வேயில் என்ன நடந்தது?

    • எழுதியவர், தனாய் நெஸ்தா குபேம்பா
    • பதவி, பிபிசி செய்திகள்

நார்வேயில் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் தாங்கள் கோடீஸ்வரர்களாக மாறியதாக எண்ணி மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். லாட்டரியில் பல கோடி ரூபாய் பரிசு வென்றிருப்பதாக அந்நாட்டு அரசால் நடத்தப்படும் சூதாட்ட நிறுவனம் அனுப்பிய தகவலே அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணம். ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஏனென்றால் அந்த தகவல் தவறுதலாக மக்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டது பின்னர் தெரியவந்தது.

யூரோஜாக்பாட்டில் "ஆயிரக்கணக்கான மக்கள்" பல கோடி ரூபாய் வென்றிருப்பதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் அவர்கள் வென்ற தொகைக்கு மாறாக, அதிகபட்ச தொகையை வென்றிருப்பதாக வெள்ளிக்கிழமை தவறான தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது," என்று நார்ஸ்க் டிப்பிங் என்ற அந்த நிறுவனம் தெரிவித்தது.

தவறான தகவல் அனுப்பப்பட்டதால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலை அந்த நிறுவனம் பிபிசிக்கு அளிக்க மறுத்துவிட்டது.

நார்ஸ்க் டிப்பிங் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக இருந்த சக்ஸ்டுயென் மன்னிப்பு கேட்டதோடு, ஒரு நாள் கழித்து தன்னுடைய பதவியையும் ராஜினாமா செய்தார்.

ஐரோப்பிய நாணயமான யூரோவை நார்வீஜியன் க்ரோனெர் பணமாக மாற்றுகையில் தவறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மக்களுக்கு அனுப்பப்பட்ட தகவலில், அவர்கள் வென்ற பணத்தைக் காட்டிலும் கூடுதலாக பணத்தை வென்றதாக குறிப்பிட்டிருக்கிறது. அவர்கள் வென்ற பணத்தை நூறால் வகுப்பதற்கு பதிலாக, நூறால் பெருக்கி வரும் தொகையை வென்றுவிட்டதாக மக்களுக்கு செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் இருந்து யூரோ பணமாக வாங்கி, அதனை நார்வீஜியன் க்ரோனெராக மாற்றி பரிசு வென்றவர்களுக்கு அளிப்பது நார்ஸ்க் டிப்பிங் நிறுவனத்தின் வழக்கம்.

பரிசுத்தொகையை குறிப்பிடுவதில் ஏற்பட்ட தவறு சனிக்கிழமை மாலை திருத்தப்பட்டுள்ளது. தவறாக யாருக்கும் பணம் வழங்கப்படவில்லை என்றும் அந்த நிறுவனம் உறுதி செய்தது.

"இந்த அறிவிப்பால் பலர் ஏமாற்றம் அடைந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். பலரும் எங்கள் மீது கோபத்தில் இருக்கின்றனர் என்பதும் எனக்கு புரிகிறது," என்று கூறி சக்ஸ்டுயென் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஏமாற்றமடைந்த மக்கள் முன்வைத்த விமர்சனம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மக்கள் சிலர் இந்த தகவல் கிடைத்தவுடன் சுற்றுலா செல்ல இருப்பதாகவும், தங்களின் வீடுகளை புனரமைக்கப் போவதாகவும், சொந்தமாக வீடு வாங்கப் போவதாகவும் அவரிடம் கூறியதாக குறிப்பிட்டார்.

"அவர்களிடம் மன்னித்துவிடுங்கள் என்பதைத் தவிர வேறெதுவும் கூற என்னிடம் வார்த்தைகள் இல்லை. ஆனால் இது சிறிய ஆறுதல் என்று எனக்கு தெரியும்," என்றும் அவர் கூறினார்.

பெண் ஒருவர், நார்வீஜியன் ப்ராட்காஸ்டிங் கார்பரேஷனுக்கு (NRK) அளித்த பேட்டியில், அவருக்கு 1.2 மில்லியன் க்ரோனெர் (இந்திய மதிப்பில் 10,180,685.60 ரூபாய்) பணத்தை வென்றுவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. உண்மையில் சிறு தொகையை மட்டுமே அவர் பரிசாக வென்றிருப்பதாக அவர் கூறினார்.

நோர்ஸ்க் டிப்பிங் நிர்வாகக் குழுவினர் அதனை நிர்வகிக்கும் கலாசாரத் துறை அதிகாரிகளை சனிக்கிழமை சந்தித்தனர். அந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, சக்ஸ்டுயென் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். 2014-ஆம் ஆண்டு முதல் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

"சில இடங்களில் கோட்டை விட்டு விட்டோம். இது என் பொறுப்பு," என்று அவர் அறிவித்துள்ளார்.

நிறுவனத்தில் இருந்து வெளியேறுவது வருத்தம்தான் என்றாலும் நிலைமை மேம்படும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக அவர் கூறினார்.

கலாசாரம் மற்றும் சமத்துவத் துறை அமைச்சர் லுப்னா ஜாஃப்ரே நார்வீஜியன் ப்ராட்காஸ்டிங் கார்பரேஷனிடம் பேசும் போது, "இது போன்ற தவறுகள் நடக்கக் கூடாது. அதுவும், நோர்ஸ்க் டிப்பிங் நிறுவனத்தில் கூடவே கூடாது. ஏனென்றால் இந்த நாட்டில் அந்த நிறுவனம் பிரத்யேகமாக இந்த சேவையை வழங்கி வருகிறது," என்று குறிப்பிட்டார்.

"கட்டுப்பாட்டு நடைமுறைகளை மேம்படுத்த நிர்வாகக் குழு தீவிரமாக செயல்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்றும் அவர் கூறினார். இந்த நிறுவனம் விமர்சனத்திற்கு உள்ளாவது இது ஒன்றும் முதல்முறையல்ல.

"கடந்த சில மாதங்களில் சில தீவிரமான பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது," என்று கூறும் அந்த நிறுவனம், கடந்த ஆண்டும் பல தொழில்நுட்பப் பிரச்னைகளை எதிர்கொண்டதாக குறிப்பிடுகிறது.

ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் நுகர்வோரால் தீவிரமாக விமர்சிக்கப்பட்டிருப்பதை உணர்ந்திருப்பதாகவும் இந்த நிறுவனம் கூறியுள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு