You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டிலும் ஹெச்.எம்.பி.வி வைரஸ் தொற்று - தடுப்பது எப்படி? அரசின் அறிவுறுத்தல் என்ன?
இந்தியாவின் முக்கிய நாளிதழ்களில் வெளியான செய்திகள் சிலவற்றைத் தொகுத்து இங்கே வழங்கியுள்ளோம்.
ஹெச்.எம்.பி.வி தொடர்பாக தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தல் என்ன?
ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் தொற்று பாதிப்பு தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
எச்.எம்.பி.வி. வைரஸ் புதிது அல்ல. இது ஏற்கனவே புழக்கத்தில் உள்ள வைரஸ் ஆகும். 2001-ம் ஆண்டு இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் நோய்த்தொற்றுகள் சுயக்கட்டுப்பாடு, உடல் சோர்வு ஏற்படாமல் பார்த்து கொள்வது, ஓய்வு எடுப்பது உள்ளிட்ட கவனிப்புடன் சரிசெய்யப்படுகின்றன என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தும்மல், இருமல் வரும்போது வாய், மூக்கை மூடுதல், கைகளை அடிக்கடி கழுவுதல், நெரிசல் மிகுந்த இடங்களில் முககவசம் அணிதல், தேவை ஏற்பட்டால் சுகாதார நிலையத்துக்கு தகவல் தெரிவிப்பது போன்ற பிற சுவாச நோய்த் தொற்றுகளுக்கான தடுப்பு நடவடிக்கைகளே எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்றுக்கும் பொருந்தும்.
இந்த வைரஸ் தொற்று கட்டுப்படுத்தக்கூடியது என்பதால் பீதி அடையத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது என்கிறது அந்த செய்தி.
மாநகர பேருந்துகளில் ஸ்மார்ட் அட்டை திட்டம்
சென்னை மாநகர பேருந்துகளில் சிங்கார சென்னை ஸ்மார்ட் அட்டையை பயன்படுத்தி பயணிக்கும் திட்டத்தை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார் என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்மார்ட் அட்டையை பயன்படுத்தி இதுவரை மெட்ரோ ரயில்களில் மட்டுமே பயணித்தவர்கள், தற்போது மாநகர பேருந்துகளில் மட்டுமின்றி அனைத்து பொது போக்குவரத்திலும் பயணிக்கலாம். முதல் கட்டமாக 50 ஆயிரம் ஸ்மார்ட் அட்டைகள் விநியோகிக்கப்பட உள்ளது. சென்னையின் முக்கிய பேருந்து நிலையங்களில் கட்டணமின்றி இந்த ஸ்மார்ட் அட்டைகளை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்கிறது அந்த செய்தி.
பாலாற்றின் குறுக்கே அணை
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது குப்பம் தொகுதிக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். அங்குள்ள குப்பம் திராவிட பல்கலைக்கழத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், பாலாற்றில் மீண்டும் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளதாக தி இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அவர், ''மாநிலத்தின் மக்கள் தொகை கவலை அளிப்பதாக உள்ளது. அதிகமான குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள். ஆந்திர மக்கள் தொகை ஆண்டுக்கு 1.5 சதவீதம் மட்டுமே வளர்ச்சி பெறுகிறது. இதுகுறித்து மக்கள் ஆலோசிக்க வேண்டும்" 'என பேசியுள்ளார் என்கிறது தி இந்து தமிழ் செய்தி.
கடல் அலைப்படுகை ஆராய்ச்சி மையம்
ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆழமற்ற கடல் அலைப்படுகை ஆராய்ச்சி மையத்தை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளதாக தி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை ஐஐடி வளாகத்தில் இருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் தையூரில் அமைந்துள்ள டிஸ்கவரி செயற்கைகோள் வளாகத்தில் இந்த அலைப்படுகை ஆராய்ச்சி மையத்தை ஐஐடி அமைத்துள்ளது. இது ஆசியாலேயே மிகப்பெரிய ஆராய்ச்சி மையமாகும். துறைமுகங்கள், நீர்வழிப்பாதைகள், கடல்சார் பொறியியல் போன்றவற்றில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணுவதற்கான சிறப்பு வசதிகள் உள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)