You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
179 பேர் பலி: விபத்துக்கு முன் விமானத்திற்கு என்ன நடந்தது? பயணியின் கடைசி குறுஞ்செய்தியில் முக்கிய தகவல்
தென்கொரியாவில் 181 பேர் பயணித்த ஒரு விமானம் முவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதில் 179 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
நாட்டின் தென்மேற்கில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில், ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற இந்த விமானம் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக யோன்ஹாப் செய்தி முகமை கூறுகிறது.
ஜேஜூ ஏர் நிறுவனத்தின் இந்த விமானத்தில் 175 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் உட்பட 181 பேர் பயணித்துள்ளனர். இந்த விமானம் போயிங் 737-800 ரக விமானம் என்று ஜேஜூ ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விபத்தில் சிக்குவதற்கு முன்பாக விமானத்திற்கு என்ன நடந்தது? உள்ளே இருந்த பயணி ஒருவர் தனது உறவினருக்கு அனுப்பிய கடைசி குறுஞ்செய்தியில் பகிர்ந்த முக்கிய தகவல் என்ன?
இந்த விபத்தில், இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் எனவும், மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் ஒரு தீயணைப்பு துறை அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
இந்த விபத்தில் உயிர் பிழைத்த இருவரும் விமானக் குழுவை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
விமானத்தின் பின்புறத்தில் இருந்த பயணிகளின் உடல்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருவதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பறவை மோதல் அல்லது மோசமான வானிலை, இந்த விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என்று தீயணைப்புத் துறை ஊகிக்கிறது
தென்கொரிய போக்குவரத்து அதிகாரி ஒருவர் இது குறித்து பேசுகையில், "விமானம் தரையிறங்க முயன்ற போது, வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் பறவை தாக்கியதற்கான எச்சரிக்கை சமிக்ஞையை வழங்கியது. அதனைத் தொடர்ந்து விமானம் தரையிறங்குவதை தடுக்கும் முயற்சி நடைபெற்றது. இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு விமானி ஆபத்துக்கான சமிக்ஞையான 'மேடே' என்று தெரிவித்துள்ளார். அதன் பிறகு கடுப்பாட்டு மையம் எதிர் திசையில் இருந்து தரையிறங்க உத்தரவுகளை பிறப்பித்தது" என்றார்.
இந்த விபத்துக்கான சரியான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது என்று முவான் தீயணைப்புத் துறையின் தலைவர் லீ ஜியோங்-ஹியூன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
"விமானத்தின் பின் பகுதி அப்படியே இருக்கிறது. ஆனால் விமானத்தின் மற்ற பகுதிகளின் வடிவத்தை யாராலும் அடையாளம் காண முடியவில்லை", என்று கூறினார்.
சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள உறுதிப்படுத்தப்படாத காணொளியில், விமானம் சறுக்கிக்கொண்டே ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று சுவரில் மோதுவது தெரிகிறது. பின்னர் விமானத்தில் தீப்பிடித்தது.
மற்றோரு வீடியோவில், விமானம் தரையிறங்குகையில் சக்கரங்கள் ஏதும் வெளிவராத சூழலில் சறுக்கிக் கொண்டே ஓடுபாதையில் இருந்து விலகிச் செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தற்போது முவான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக யோன்ஹாப் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
விமானத்தில் இருந்த பயணியின் கடைசி குறுஞ்செய்தி
விமானம் விபத்தில் சிக்குவதற்கு சற்று முன்பாக, அதில் இருந்த பயணி ஒருவர் தனது குடும்ப உறுப்பினருக்கு செல்போனில் அனுப்பிய குறுஞ்செய்தி கிடைத்திருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த குறுஞ்செய்தியில், விமானத்தில் இறக்கையில் ஒரு பறவை மோதியதாக அந்த பயணி குறிப்பிட்டிருந்தார் என்கிறது அந்த செய்தி. அத்துடன், "எனது கடைசி வார்த்தைகளை அனுப்ப வேண்டுமா?" என்றும் குறுந்தகவலில் அந்த பயணி கூறியிருந்ததாக உள்ளூர் ஊடகம் கூறுகிறது.
அதன் பிறகு, விமானத்தில் இருந்த அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று குறுஞ்செய்தி கிடைக்கப் பெற்ற உறவினர் தெரிவித்துள்ளார்.
சிறப்பு பேரிடர் மண்டலமாக அறிவிப்பு
தென்கொரியாவின் இடைக்கால அதிபர் சோய் சாங்-மோக் விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். அவர் முவானில் இந்த பகுதியை "ஒரு சிறப்பு பேரிடர் மண்டலமாக" அறிவித்துள்ளார்.
"இந்த விமான விபத்தில் ஏற்பட்ட இழப்புகள் காரணமாக, கடுமையான சூழல் நிலவி வருகிறது. உயிரிழந்தவர்வர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்", என்று அவர் கூறினார்.
உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆதரவளிக்க அரசு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்று அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் ஜேஜூ ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
செய்தியாளர் சந்திப்பில், இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிம் இ-பே மற்றும் பிற அதிகாரிகள் தங்கள் தலையை தாழ்த்தி மன்னிப்பு கேட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருப்பதே தற்போது தங்களின் முன்னுரிமை என்று கிம் இ-பே கூறினார்.
மேலும் இந்த விமான நிறுவனம், அதன் இணையதளத்தை கருப்பு நிறத்திற்கு மாற்றி ஆன்லைனில் மன்னிப்பு கோரியது.
முவான் தென் கொரிய தலைநகர் சோலில் இருந்து 288 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
விமான பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தரும் துறையாகத் தென் கொரியாவின் விமானப் போக்குவரத்துத் துறை கருதப்படுகிறது.
ஜேஜூ விமான நிறுவன வரலாற்றில் இதுவே முதல் உயிரிழப்புகளைக் கொண்ட மோசமான விபத்தாகும். தென் கொரியாவின் மிகப்பெரிய குறைந்த கட்டண விமான நிறுவனமான இது 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இறந்தவர்கள் யார்?
175 பயணிகளும், 6 விமான பணியாளர்களும் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்துள்ளனர். அவர்களில் 2 பேர் மட்டுமே தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள். இதர அனைவரும் தென்கொரியர்கள் என்று நம்பப்படுகிறது. அனைவரும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக தாய்லாந்து சென்று திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
179 பேர் உயிரிழந்த சூழலில், தென்கொரிய வரலாற்றில் நிகழ்ந்த மோசமான விமான விபத்தாக இது அறியப்படுகிறது.
அனைத்து பயணிகளும், நான்கு விமான பணியாளர்களும் இறந்துள்ளனர்.
இறந்தவர்களில் 88 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)