You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கம்பம் ஊருக்குள் இறங்கிய அரிக்கொம்பன்: பிடிக்க வரும் கும்கி யானைகள் - என்ன நடக்கிறது?
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானை அரிக்கொம்பனை பிடிக்க கும்கி யானைகள் ஆணைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வரவழைக்கப்பட உள்ளன.
யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் வரை கம்பம் நகராட்சிப் பகுதிகளில் 144 தடை உத்தரவை போலீஸார் பிறப்பித்துள்ளனர். வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளாவில் தொந்தரவு
கேரளாவில் 35 வயதான அரிக்கொம்பன் எனும் ஆண் யானை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்தது.
இதையடுத்து, இந்த யானையை இடமாற்றம் செய்ய கேரள வனத்துறையினர் முடிவு செய்தனர்.
இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் வனப்பகுதியில் இருந்து அரிக்கொம்பன் யானையை பெரியார் புலிகள் காப்பகத்தில் உள்ள முள்ளக்காடு பகுதியில் கடந்த மாதம் 29ஆம் தேதி வனத்துறையினர் விரட்டினர்.
யானையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வனத்துறையினர் யானையின் கழுத்தில் ஜிபிஆர்ஸ் பொருத்தப்பட்ட பட்டையைக் கட்டி அனுப்பினர்.
தேனி மாவட்டத்தில் அடைக்கலம்
கடந்த மாதம் 30ஆம் தேதி தேனி மாவட்டம் மேல் கூடலூரில் உள்ள வண்ணாத்திப்பாறை அடர் வனப்பகுதி வழியாக அரிக்கொம்பன் யானை நுழைந்தது.
அங்கிருந்து வனப்பகுதி வழியாகச் சென்ற அரிக்கொம்பன் யானை, மேகமலை, ஹைவேஸ் பகுதியில் கடந்த 16ஆம் தேதிவரை சுற்றித் திரிந்தது பின்னர் மீண்டும் பெரியார் புலிகள் காப்பகத்துக்குள் நுழைந்தது.
கம்பம் நகரில் புகுந்த அரிக்கொம்பன் யானை
இந்நிலையில் அரிக்கொம்பன் நேற்று(26ம்தேதி) குமுளி நகருக்குள் நுழைந்து பிறகு, சுரங்கனாறு வனப்பகுதிக்குள் வந்தது.
இன்று(27ம்தேதி) அதிகாலை 4 மணி வரை தேனி மாவட்டத்தில் உள்ள தம்மணம்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் ஹார்வெஸ்ட் பிரஷ் ஃபார்ம் விடுதி அருகே அரிக்கொம்பன் யானை முகாமிட்டிருந்தது.
144 தடை உத்தரவு
இன்று காலை அப்பகுதியில் இருந்து அரிக்கொம்பன் நகரத் தொடங்கியது. ஆனால், யானையைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் அதை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டதால், அரிக்கொம்பன் கம்பம் நகர் பகுதிக்குள் இன்று காலை புகுந்து தெருக்களில் சுற்றித் திரிந்தது.
வாகனங்கள் சத்தமாக ஒலி எழுப்பியதாலும், மக்கள் விரட்ட முயன்றதால் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாகவும், மிரண்டுபோன யானை நகராட்சி தண்ணீர் தொட்டி, கடைவீதி உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் ஓடியது.
இதனால், மக்கள் யாரும் வீட்டை விட்டு யாரும் வரவேண்டாம் என்று போலீஸார் ஒலிப்பெருக்கியில் எச்சரித்திருந்தனர், 144 தடை உத்தரவும் பிறப்பித்தனர்.
இதையடுத்து, அங்கிருந்து நகர்ந்த அரிக்கொம்பன் யானை, கம்பம் கெஞ்சி-கவுண்டன்குளத்தில் உள்ள துணை மின்நிலையம் பகுதி புளியத் தோப்புக்குள் முகாமிட்டது.
யானை எங்கே இருக்கிறது
யானை முகாமிட்டிருந்த பகுதியை ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்தபோது, அங்கிருந்து யானை நகர்ந்து வாழை தோட்டத்துக்குள் புகுந்தது.
தற்போது கம்பம் காந்தி நகர் பகுதிக்குப் பின்புறம், அதாவது கம்பம்-குமுளி புறவழிச்சாலைக்கு அருகே முகாமிட்டுள்ளது.
அரிக்கொம்பன் யானையை அங்கிருந்து விரட்ட வனத்துறையினர் சார்பில் எடுத்துள்ள நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துத் தெரிந்துகொள்ள தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை தலைமை இயக்குநரை பிபிசி தமிழ் தொடர்புகொண்டது.
அவர், "தேனி மாவட்டம், மேகமலை மற்றும் மாவட்ட வன அதிகாரி, இணை இயக்குநர் தலைமையில் ஒரு குழுவினர் யானையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்," என்று தெரிவித்தார்.
மேலும், அவர் வெளியிட்ட அறிக்கையில், "யானை முகாமிட்டுள்ள பகுதியில் தேவைப்பட்டால் அரிக்கொம்பனை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க மருந்து, மருந்து செலுத்தும் துப்பாக்கி ஆகியவை தயாராக வைக்கப்பட்டுள்ளன.
கால்நடை துணை அறுவை சிகிச்சை மருத்துவர் கலைவாணன், வனவிலங்கு கால்நடை அறுவை சிகிச்சை மருத்துவர்கள் பிரகாஷ், விஜயராகவன், ராஜேஷ் ஆகியோர் யானை முகாமிட்டுள்ள பகுதிக்கு வந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, "ஆணைமலை புலிகள் காப்பகத்தில் இருந்தும், முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்தும் இரண்டு யானை கண்காணிப்புக் குழுக்கள் தேனிக்கு விரைவில் வர உள்ளனர்," என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
"ஆணைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து இரண்டு கும்கி யானைகள் கோவை மற்றும் ஓசூரிலிருந்து தேனிக்கு அழைத்து வரப்படுகின்றன. விரைவில் கும்கி யானைகள தேனிக்கு வந்து சேரும்
வனத்துறை சார்பில் 150 ஊழியர்களும் வனத்துறை அதிகாரிகள் 10 பேரும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்," என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஊறப்பட்டுள்ளது.
அதோடு அறிக்கையின்படி, "கோவை வனப்பகுதி மண்டலத்தில் இருந்து யானை கண்காணிப்புக் கருவி மற்றும் அப்பகுதியின் சூழலை ஆய்வு செய்யும் கருவிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கம்பம் நகராட்சி பகுதி, உத்தமபாளையும் தாலுகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்களைப் பாதுகாக்கவும், சொத்துகளுக்குச் சேதம் ஏற்ப்டுவதைத் தவிர்க்கவும் அனைத்து விதமான போக்குவரத்தும் முறைப்படுத்தப்பட்டுள்ளது.
கம்பம் நகராட்சி மின்துறை, தீத்தடுப்பு மற்றும் மீட்புப்பிரிவு துறை தேவையான உதவிகளை அளித்து வருகிறார்கள்."
"தேனி மாவட்ட ஆட்சியர் அனைத்து விதமான ஒத்துழைப்பும் நல்கி, சூழலை முறையாகக் கையாளத் தேவையான உதவிகளை வழங்க உறுதி செய்துள்ளார்.
வனத்துறை அதிகாரிகள் தலைமையிலான குழுவினர், கால்நடைப் பிரிவு மருத்துவக் குழுவினர் அரிக் கொம்பனை கண்காணித்து வருகிறார்கள்.
அரிக்கொம்பன் யானையைப் பிடித்து, அதை மீண்டும் அடர் வனப்பகுதிக்குள் விடுவது குறித்து வனத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.
சிக்கலான சூழல் இருந்தபோதிலும் யானையின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில் மக்களின் பாதுகாப்பு, அவர்களின் உடைமைகளையும் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன," என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்