You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பராசக்தி விமர்சனம்: படம் எப்படி இருக்கிறது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து சுதா கொங்கரா இயக்கியுள்ள பராசக்தி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. பராசக்தி திரைப்படத்திற்கு நேற்றுதான் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் யு/ஏ சான்று வழங்கப்பட்டது.
அதனுடன் படத்தில் 25 மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதும் முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரையின் வசனம் நீக்கப்பட்டிருப்பதும் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளானது.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமின்றி ரவி மோகன், அதர்வா, ஶ்ரீலீலா உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் கதை என்ன?
புறநானூறு என்கிற மாணவர் சங்கத்தின் தலைவரான செழியன் (சிவகார்த்திகேயன்) தீவிரமாக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது காவல்துறை அதிகாரியாக இருக்கும் திரு (ஜெயம் ரவி) போராடும் மாணவர் குழுவை எதிர்கொள்கிறார்.
அப்போது பெரிய இழப்பைச் சந்திக்கும் சிவகார்த்திகேயன் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் இருந்து விலகுகிறார். சில ஆண்டுகள் உருண்டோடுகின்றன. தற்போது சிவகார்த்திகேயன் மத்திய அரசு பணியில் உள்ளார். அவரது சகோதரர் சின்னா (அதர்வா) தற்போது இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதனால் சகோதரர்களுக்கு இடையே முரண்பாடு ஏற்படுகிறது. கதாநாயகியான ஶ்ரீலீலா, ரத்னமாலா என்கிற வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பராசக்தி திரைப்படம் அரசியல் வரலாறு, நாடகத்தன்மை ஆகிய இரண்டும் கலந்த கலவையாக அமைந்துள்ளதாக தி இந்து விமர்சனம் தெரிவிக்கிறது.
"பராசக்தி திரைப்படம், பிழைகள் இல்லாமல் இல்லை. ஆனால் வரலாற்றில் முக்கியமான ஓர் அத்தியாயத்தை காட்சிப்படுத்துவதற்கான சக்திவாய்ந்த முயற்சி. படத்தின் அரசியல் வெளிப்படையாகவும் உணர்வுபூர்வமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது" என டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் கதை, நடிகர்களின் நடிப்பு என்பதையும் தாண்டி இசை மற்றும் இதர தொழில்நுட்ப அம்சங்களும் வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளன.
"பராசக்தி திரைப்படம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது இன்றைய சினிமா ரசிகர்களுக்கு பொழுதுபோக்காக அமைவதற்குத் தேவைப்படும் சரியான அம்சங்களையும் கொண்டுள்ளது," என தி இந்து விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'கவனிக்க வைக்கும் சிவகார்த்திகேயன்'
சிவகார்த்திகேயனின் நடிப்பை வெகுவாகப் பாராட்டியுள்ள தினத்தந்தி விமர்சனம், "புரட்சி ஒரு பக்கம், எதார்த்தம் மறுபக்கம் என இருவேறு பரிமாணங்களில் சிவகார்த்திகேயன் கலக்கியுள்ளார். இதுவரை காதல், காமெடியில் கலக்கி வந்த சிவகார்த்திகேயன் முதல் முறையாக புரட்சி, போராட்டம் என்ற பாதையில் பயணித்திருக்கிறார். சாட்டையடி வசனங்களைப் பேசி கவனிக்க வைக்கிறார்" எனத் தெரிவிக்கிறது.
"நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நல்ல திரைப்படம். முதல்முறையாக அரசியல் பின்னணி கொண்ட திரைப்படத்தில், மொழிப்பற்றுமிக்க கதாபாத்திரத்தில் ஏமாற்றமில்லாத நடிப்பைக் கொடுத்திருக்கிறார். நடிகர் ரவி மோகன் முழுமையான வில்லனாகவே தெரிகிறார்" என்று தினமணி தனது விமர்சனத்தில் குறிப்பட்டுள்ளது.
'சுதா கொங்கரா வீணடிக்கவில்லை'
தனது பிற படங்களுடன் ஒப்பிடும்போது கருத்தியல் ரீதியாக அழுத்தமான விஷயத்தை சுதா கொங்கரா பராசக்தியில் தொட்டிருப்பதாகக் கூறும் தினமணி விமர்சனம், "இந்த வரலாற்றுச் சம்பவத்தைக் கையிலெடுத்தவர் அதை வீணடிக்கவில்லை. 1965இல் பொள்ளாச்சியில் மொழித் திணிப்புக்கு எதிராகப் போராடியவர்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தை ஆவணமாக்கியது முக்கியமானது" எனத் தெரிவிக்கிறது.
சுதா கொங்கராவின் இயக்கத்தை டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனமும் வெகுவாகப் பாராட்டியிருக்கிறது.
"பல்லாண்டுக்கால போராட்டங்களை மூன்று மணிநேரத்திற்கு உள்ளாகச் சொல்வதோடு வலுவான கதாபாத்திரங்களைக் கொண்ட சுவாரஸ்யமான படம் ஒன்றைத் தயாரிப்பது எளிதல்ல. ஆனால் சுதா கொங்கரா அதை வெற்றிகரமாகச் செய்துள்ளார்.
பாராட்டப்படும் ரவி மோகனின் நடிப்பு
இந்தப் போராட்டங்கள் மற்றும் அதற்கான காரணங்களைப் பற்றி அறியாதவர்களுக்கும் புரியும்படியாக கதையைச் சொல்வதோடு அதன் தீவிரத்தன்மையை உறுதி செய்வதிலும் சுதா கொங்கரா வெற்றி பெற்றிருக்கிறார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரவி மோகனின் நடிப்பு பாராட்டப்படும் அதே சூழலில் அவரது கதாபாத்திர அமைப்பு மீது சில விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.
"காவல்துறை அதிகாரியான திருவின் வழிமுறைகள் பற்றி அதிகம் கூறப்பட்டு இருந்தாலும் அவர் ஏன் அவ்வாறு செய்கிறார் என்பது பற்றிய தெளிவில்லை" என தி இந்து விமர்சித்துள்ளது.
"தமிழுக்கு ஆதரவான மாணவர்கள் மீது அவருக்கு அவ்வளவு வெறுப்பு ஏன் வந்தது, ஒரு பின்கதை அல்லது ஃப்ளாஷ்பேக் இருந்தால் உதவியாக இருந்திருக்கும். ஆனால் இந்தக் குறையும் சுதா மற்றும் அர்ஜுன் நடேசனின் வலுவான எழுத்தால் சரி செய்யப்படுகிறது. திரு கதாபாத்திரம் பேசும் வசனங்களும் தரமாக இருக்கின்றன" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவுக்கு மிரட்டலான வில்லன் தயார் என ரவி மோகனின் நடிப்பைக் குறிப்பிட்டு தினத்தந்தியும் பாராட்டியுள்ளது.
"ஹீரோவாக பார்த்து பழக்கப்பட்ட ரவி மோகன், முதல் முறையாக வில்லனாக வெளுத்துக் கட்டியுள்ளார். பார்வையிலேயே கொலை வெறியைக் காட்டுகிறார். தமிழ் சினிமாவுக்கு மிரட்டலான வில்லன் தயார். புரட்சிப் புயலாக அதர்வா கலக்குகிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் சிறப்பு சேர்க்கிறார்."
காதல் காட்சிகள் கதையைச் சிதைக்கின்றனவா?
செழியன், ரத்னமாலா இடையிலான காதல் காட்சிகள் சூரரைப் போற்று படத்தில் வரும் சூர்யா-அபர்ணா பாலமுரளியை நினைவூட்டுவதாகக் கூறும் தி இந்து விமர்சனம், "ஆனால் அதைக் கடந்தும் ஶ்ரீலீலாவுக்கு தன்னை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒரு கதாநாயகி மற்றும் மூன்று கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் இருப்பது இயக்குநருக்கு மிகப்பெரிய வெற்றி" எனத் தெரிவிக்கிறது.
மறுபுறம், முதல் பாகத்தில் இடம்பெற்ற சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா காதல் காட்சிகள் கதையைச் சிதைப்பது போல் இருப்பதாக தினமணி விமர்சித்துள்ளது.
அதுகுறித்துத் தனது விமர்சனத்தில், "அங்கு சில நிமிடங்களை நீக்கியிருக்கலாம். மேலும், தமிழ் மொழிக்கான கதையில் கூடுதலாக தெலுங்கும் இணைந்துகொண்டது கொஞ்சம் நெருடல். மதுரை போன்ற காந்தியவாதிகள் சூழ்ந்த ஊரில், அகிம்சை வழிப் போராட்டத்தையும் காட்சிப்படுத்தி இருக்கலாம். இந்தி பிரசார சபா காட்டப்பட்ட அளவுக்கு ஏன் மதுரை தமிழ்ச் சங்கம் காட்டப்படவில்லை? திரைக்கதையில் சில மாற்றங்களைச் செய்திருந்தால் கூடுதல் பரபரப்பைக் கொடுத்திருக்கலாம்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, படத்தின் நீளம் சற்று குறைவாக இருந்திருந்தால் அது மேலும் பலன் அளித்திருக்கும் என டைம்ஸ் ஆப் இந்தியா விமர்சனம் கூறுகிறது.
"கடினமான ஒரு கதைக் களத்தில், சகோதரர்கள் இடையே பந்தம், கதாநாயகன் - கதாநாயகி இடையிலான உறவு போன்ற மனிதர்கள் இடையிலான பிணைப்பு படத்தை உணர்வுபூர்வமானதாக ஆக்குகிறது. ஆனால் சில இடங்களில் அவை மையக்கருவில் இருந்து விலகியும் செல்கின்றன," என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.
படத்தின் இசை மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் பற்றிக் குறிப்பிடும் தினத்தந்தி விமர்சனம், "ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு 1960 காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. ஜிவி பிரகாஷின் இசை படத்திற்குப் பலம் சேர்த்துள்ளது. பரபரப்பான காட்சிகள் படத்திற்கு பலம். லாஜிக் மீறல்கள் ஆங்காங்கே இருந்தாலும், வலுவான திரைக்கதை அதை மறக்கடிக்கச் செய்கிறது" என்கிறது.
துணை கதாபாத்திரங்கள் அழுத்தமாக இல்லை என தினமணி விமர்சித்துள்ளது. "முதல்வராக நடித்தவருக்குப் பதில் வேறு நல்ல நடிகரைப் பயன்படுத்தி இருக்கலாம். பிரபல நடிகர்களான ராணா டகுபதி, ஃபாசில் ஜோசஃப் கதாபாத்திரங்களும் அழுத்தமாக இல்லை. கேமியோ அளவில் நின்றுவிட்டன."
நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து எழுதியுள்ள தினமணி விமர்சனத்தில், "பல இடங்களில் தணிக்கை வாரியம் மியூட் செய்யச் சொன்னதற்கு இணங்க தயாரிப்பு நிறுவனம் தடையும் செய்திருக்கிறது. ஆனாலும், என்ன சொல்ல வந்தார்கள் என்பது புரியும் வகையிலேயே இருப்பதால் அவை பெரிதாக பாதிப்பைத் தரவில்லை. நீக்கச் சொன்ன காட்சிகள் இடம்பெற்றிருந்தால் இந்தப் படம் இன்னும் அழுத்தமானதாக இருந்திருக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு