காஸாவுக்கு கிரெட்டா துன்பர்க் உணவுப் பொருள் ஏற்றி சென்ற படகை சிறைபிடித்ததா இஸ்ரேல்?

    • எழுதியவர், ஜரோஸ்லாவ் லுகிவ்
    • பதவி, பிபிசி நியூஸ்

காஸாவிற்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற படகில் இஸ்ரேல் படைகள் ஏறியுள்ளதாக தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

காஸா பகுதிக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்ற மேட்லீன் படகில் இஸ்ரேலியப் படைகள் ஏறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேட்லீன் படகின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக ஃப்ரீடம் ஃப்லோடில்லா கோயலிஷன் (எஃப்.எஃப்.சி) குழு தனது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

உயிர்க் கவசம் அணிந்தபடியுள்ள தன்னார்வலர்கள் கைகளை உயர்த்திய நிலையில் இருக்கும் புகைப்படத்தை அவர்கள் வெளியிட்டுள்ளனர். ஆனால் அது சுயாதீனமாக உறுதி செய்யப்படவில்லை.

எகிப்து கரையில் இருந்து கிளம்பிய அந்தப் படகில் காலநிலை செயற்பாட்டாளர் கிரேட்டா துன்பர்க் உள்ளார்.

"தடை செய்யப்பட்ட பகுதியை நோக்கி வந்ததால்" படகை வழிமாறிச் செல்லுமாறு அறிவுறுத்தியதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் முன்னர் தெரிவித்திருந்தது. காஸாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கு ஆயுதங்கள் செல்லாமல் தடுக்க இந்த முற்றுகை அவசியம் என இஸ்ரேல் தெரிவிக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை சிசிலியில் இருந்து புறப்பட்ட படகு நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்வதாகக் கூறியுள்ள எஃப்.எஃப்.சி, "இஸ்ரேல் தாக்குதலுக்கான சாத்தியத்திற்கும் தயாராக இருக்கிறோம்" எனத் தெரிவித்திருந்தது

படகு திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் இஸ்ரேலின் முற்றுகையை மீறும் எந்த முயற்சிக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் எச்சரித்திருந்தார்.

"மேடலெய்ன் படகு காஸா கரையைச் சேராமல் தடுக்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க ஐடிஎஃப்-ற்கு (இஸ்ரேலியப் பாதுகாப்பு படை) உத்தரவிட்டுள்ளேன்" என ஞாயிறு அன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

2007-ல் இருந்து அமலில் உள்ள இஸ்ரேலின் முற்றுகையின் நோக்கம் ஹமாஸிற்கு ஆயுதங்கள் செல்லாமல் தடுப்பதே என கட்ஸ் கூறியுள்ளார். இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு இது அவசியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடல் முற்றுகை என்பது சட்டவிரோதமானது என எஃப்.எஃப்.சி வாதிடுகிறது. கட்ஸின் கருத்து, பொதுமக்களுக்கு எதிராக சட்டவிரோதமாக படைகளைப் பயன்படுத்துவதற்கான இஸ்ரேலின் அச்சுறுத்தல் மற்றும் அதனை நியாயப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு எடுத்துக்காட்டு ஆகும் என எஃப்.எஃப்.சி கூறுகிறது.

"எங்களை மிரட்ட முடியாது. உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது" என எஃப்.எஃப்.சியின் ஊடக அலுவலர் ஹே ஷா வியா தெரிவித்துள்ளார்.

"மேட்லீன் பொதுமக்கள் பயணிக்கும் படகு, ஆயுதம் ஏந்தாமல் உலகம் முழுவதிலும் இருந்து நிவாரணப் பொருட்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களைச் சுமந்து கொண்டு சர்வதேச கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருக்கிறது. காஸாவை சென்றடையும் எங்களின் முயற்சியைத் தடுக்க இஸ்ரேலுக்கு எந்த அதிகாரமும் இல்லை" என அவர் தெரிவித்துள்ளார்.

மேட்லீன் படகு அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்வதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது.

இதில் பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெய்ன், சுவீடன் மற்றும் துருக்கியின் குடிமக்கள் உள்ளனர்.

2010-ல், காஸாவிற்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற துருக்கி கப்பலான மாவி மர்மராவில் பயணித்த 10 பேரையும் இஸ்ரேல் வீரர்கள் கொன்றனர்.

மூன்று மாத தரை வழி முற்றுகைக்குப் பிறகு இஸ்ரேல் குறிப்பிட்ட அளவிலான நிவாரணங்களை மட்டும் தற்போது காஸாவிற்குள் அனுமதித்து வருகிறது. அதனையும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆதரவு பெற்ற காஸா ஹியுமானிடேரியன் ஃபவுண்டேஷன் மூலமாக மட்டுமே விநியோகிக்க அனுமதிக்கிறது. இதற்கு நிவாரணக் குழுக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாலத்தீனர்களுக்கு வாழ்வா, சாவா என்கிற வாய்ப்பு மட்டுமே வழங்கப்படுவதாக ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் வோல்கர் துர்க் தெரிவித்துள்ளார். "ஒன்று பட்டினியால் சாகுங்கள் அல்லது கிடைக்கின்ற சொற்ப உணவைப் பெற முயற்சித்து கொல்லப்படுங்கள் என்கிற இரு கடுமையான வாய்ப்புகள் தான் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது" என்றார் வோல்கர் துர்க்.

2023 அக்டோபர் 7-ல் ஹமாஸ் இஸ்ரேலில் நடத்திய எல்லை கடந்த தாக்குதலில் 1,200 கொல்லப்பட்டும் 251 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். அதன் பிறகு காஸாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை தொடங்கி தற்போது 20 மாதங்கள் ஆகிவிட்டது.

தற்போது வரை காஸாவில் 54,880 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

"கிரேட்டா மற்றும் மற்றவர்கள் விளம்பரம் வேண்டும் என்பதற்காகவே இதனை நடத்துகின்றனர். அவர்கள் ஒரு லாரிக்கும் குறைவான நிவாரணப் பொருட்களையே எடுத்து வந்தனர், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இஸ்ரேலில் இருந்து காஸாவிற்கு 1,200 லாரிகள் நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்றுள்ளன. இதனுடன் கூடுதலாக காஸா ஹியுமானிடேரியன் ஃபவுண்டேஷன் மூலமாக காஸாவில் உள்ள பொதுமக்களுக்கு 11 மில்லியன் சாப்பாடு நேரடியாக வழங்கப்பட்டுள்ளது" என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் திங்கள் காலை வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.

மேலும், "காஸா பகுதிக்கு நிவாரணங்களை வழங்க பல வழிகள் உள்ளன. அதில் இன்ஸ்டாகிராம் செல்ஃபிக்கள் அடங்காது" என்றும் அது தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு