சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு - சிபிஐ முடிவறிக்கை குறித்து ரியா சக்ரவர்த்தியின் வழக்கறிஞர் கூறுவது என்ன?

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கில் சிபிஐ இரண்டு முடிவறிக்கைகளை பதிவு செய்துள்ளது என பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. இந்த அறிக்கைகளின்படி நடிகரின் மரணத்தில் எந்த சதித்ததிட்டமும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்மை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதன் பின்னர் அவரது தோழி ரியா சக்ரவர்த்திக்கு எதிராக வெறுப்பு கருத்துக்கள் சிலரால் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டன

சிபிஐ முடிவறிக்கையை பாராட்டியுள்ள ரியாவின் வழக்கறிஞர் சதீஷ் மான்ஷிண்டே,"இவ்வழக்கை சிபிஐ அனைத்து கோணத்திலும் விசாரித்துள்ளது" என்றார்.

சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது தந்தை தொடர்ந்த வழக்கில் பாட்னா நீதிமன்றத்திலும் மற்றும் சுஷாந்த்தின் சகோதரிகள் மீது ரியா சக்ரவர்த்தி தொடர்ந்த வழக்கில் மும்பை நீதிமன்றத்திலும், வழக்கின் விசாரணையை முடித்து அறிக்கைகளை சிபிஐ வழங்கியுள்ளது என சிபிஐ அதிகாரிகள் கூறியாக பிடிஐ தெரிவித்துள்ளது

இந்த அறிக்கைகளை ஏற்றுக் கொள்வதா அல்லது மீண்டும் விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிடுவதா என்பதை தொடர்புடைய நீதிமன்றங்கள்தான் முடிவு செய்யும் என்கிறது பிடிஐ.

பிபிசி மராத்தியிடம் பேசிய ரியா சக்ரவர்த்தியின் வழக்கறிஞர் சதீஷ் மாண்ஷிண்டே,"சுஷாந்தின் குடும்பத்தினர் இந்த அறிக்கைகளை ஏற்கவில்லை எனில், அவர்கள் இதற்கு எதிராக நீதிமன்றத்தை அணுகலாம்" என்றார்.

பிடிஐ செய்தி முகமையின் தகவலின்படி, சுஷாந்த்சிங் ராஜ்புத்தின் உடற்கூராய்வானது கூப்பர் மருத்துவமனையில் நடத்தப்பட்டது. அவர் மூச்சுத் திணறலால் மரணமடைந்ததாக உடற்கூராய்வு உறுதி செய்தது.

சுஷாந்த்சிங் மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல்துறைத் தலைவர் மருத்துவர் சுதிர் குப்தா தலைமையில் மருத்துவக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தங்களின் அறிக்கையை கடந்த செப்டம்பரில் சிபிஐயிடம் வழங்கினர்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசிய சுதிர் குப்தா,"சுஷாந்த் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தற்கொலை மட்டுமே. அவரது உடலில் எந்த காயமும் இல்லை" என்று கூறினார்.

சிபிஐ இரண்டு வழக்குகளை விசாரித்தது. முதல் வழக்காக சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங் பாட்னா காவல்துறையிடம் அளித்த புகாரில், நடிகை ரியா சக்ரவர்த்தி சுஷாந்த்தை தற்கொலைக்கு தூண்டியதாகவும், அவரது வங்கிக் கணக்கிலிருந்து 15 கோடி ரூபாய் எடுத்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

சிபிஐக்கு முன்னதாக இந்த வழக்கு பிகார் காவல்துறையால் விசாரிக்கப்பட்டது. சுஷாந்த்தின் தந்தையின் புகாரின் பேரில் விசாரணை தொடங்கப்பட்டது. பின்னதாக இவ்வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.

இரண்டாவது வழக்கு ரியா சக்ரவர்த்தி சுஷாந்த்தின் சகோதரிகள் மீது பாந்த்ரா காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் சுஷாந்த்துக்கு போலியான மருந்துச்சீட்டின்படி மருந்துகளை வழங்கியதாக அவரது சகோதரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இவ்வழக்கும் பின்நாட்களில் சிபிஐ வசம் சென்றது.

வழக்கில் சிபிஐ கண்டுபிடித்தது என்ன?

பிடிஐ செய்தி முகமையின்படி, நிபுணர்களின் கருத்துக்கள், குற்றம் நடந்த இடத்தில் ஆய்வு, சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் தடயவியல் அறிக்கைகளின் அடிப்படையில், "சுஷாந்த் சிங்கை யாரும் தற்கொலைக்கு தூண்டவில்லை" என்ற முடிவுக்கு சிபிஐ வந்துள்ளதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மருத்துவ நிபுணர்களின் அறிக்கையில் சுஷாந்த் சிங்கின் கழுத்து நெரிக்கப்பட்டதாகவோ அல்லது விஷம் கொடுக்கப்பட்டதாகவோ கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் மறுக்கப்பட்டுள்ளன என அந்த சிபிஐ அதிகாரி கூறியிருக்கிறார். நடிகை ரியா சக்ரவர்த்தி உள்ளிட்டோரின் வாக்குமூலங்களையும் சிபிஐ பதிவு செய்திருந்தது.

ரியா சக்ரவர்த்தி வழக்கறிஞர் கூறியது என்ன?

இவ்வழக்கில் சிபிஐயின் நடவடிக்கையை ரியா சக்ரவர்த்தியின் வழக்கறிஞர் சதீஷ் மானேஷிண்டே பாராட்டியுள்ளார்

"சுஷாந்த்சிங் ராஜ்புத் வழக்கில் கடந்த நான்கரை ஆண்டுகளாக விசாரணை நடத்திய பின்னர் சிபிஐ முடிவு அறிக்கையை வழங்கியிருக்கிறது. இவ்வழக்கில் அனைத்து கோணங்களிலும் முழுமையான விசாரணையை சிபிஐ நடத்தியுள்ளதற்கு நன்றி" என அவர் கூறியிருக்கிறார்.

"சமூக ஊடகங்களில் தவறான செய்தி பரப்பப்பட்டது. ஊடகங்களின் முன்பு அப்பாவிகள் துன்புறுத்தப்பட்டனர்" என கூறிய சதீஷ், "வேறு எந்த வழக்குகளிலும் இது நிகழாது என நான் நம்புகிறேன். ரியா எண்ணற்ற துன்பங்களுக்கு உள்ளானதோடு, 27 நாட்கள் சிறையில் இருக்க நேரிட்டது. எந்த தவறும் செய்யாத அவரை மும்பை உயர்நீதிமன்றம் ஜாமினில் விடுவித்தது" என்றார்.

மேலும் தனக்கும் தனது வழக்கறிஞர்கள் அணிக்கும் கூட மிரட்டல்கள் இருந்ததாக குறிப்பிட்ட சதீஷ், இவ்வழக்கில் பொறுமையை கடைபிடித்தற்காக ரியா மற்றும் அவரது குடும்பத்தினரை தான் வணங்குவதாகக் கூறியிருக்கிறார். ஒரு ராணுவ பின்னணி கொண்ட குடும்பத்திற்காக இந்த வழக்கை இலவசமாக நடத்தியதற்காக பெருமையாக உணர்வதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

"இந்த நாடு இன்றும் பாதுகாப்பாக இருக்கிறது , நீதிக்காக காத்திருப்பவர்கள் துடிப்பான நீதித்துறையின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்" என்றும் அவர் கூறியிருக்கிறார்.

விசாரணை நடத்திய 5 அமைப்புகள்

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் உள்ள மர்மங்களை தீர்ப்பதற்காக இதுவரை 5 அமைப்புகள் விசாரணை நடத்தியிருக்கின்றன.

முதலில் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. பின்னர் ஒவ்வொரு நாளும் வழக்கு சிக்கலானதாக மாறிக்கொண்டே இருந்தது.

மும்பை காவல்துறை, பிகார் காவல்துறை, சிபிஐ, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு(NCB) மற்றும் அமலாக்கத்துறை சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் இதுவரை விசாரணை நடத்தியுள்ளன.

மும்பை காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில், சுஷாந்த் தற்கொலையால் மரணமடைந்ததாக கூறப்பட்டது. ஆனாலும் சுஷாந்த்தின் குடும்பத்தினர் மும்பை போலீசாரின் விசாரணையை கேள்விக்குள்ளாக்கியதோடு, இது தொடர்பாக பிகார் காவல்துறையில் புகார் அளித்தனர். இவ்வழக்குகளை பின்நாட்களில் சிபிஐ விசாரித்தது.

பாலிவுட்டில் போதை பொருட்கள் புழங்குவதாக கூறப்படுவது தொடர்பாக போதை பொருள் தடுப்புப் பிரிவு (NCB) விசாரித்தது. இவ்வழக்கில் தொடர்புடைய பணம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு