You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'வீட்டை ஒட்டி தெருவை மறித்து கம்பி வேலி' - திருப்பூர் அருகே சாதிய கொடுமையா?
தாராபுரம் நகரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள முளையாம்பூண்டி கிராமத்தில் ஒரு வீதியின் முடிவில் அய்யனாரின் வீடு அமைந்துள்ளது. ஹாலோப்ளாக் கற்களை வைத்து, ஆஸ்பெஸ்டாஸ் சீட் வேயப்பட்டுள்ள அந்த மிகச்சிறிய வீட்டிற்குள் அய்யனாரும், அவரின் மனைவி சரோஜா மற்றும் 2 மகன்களும் வசிக்கின்றனர்.
இவர்களுடைய வீட்டிலிருந்து, வீதி வழியாக பிரதான சாலைக்குச் செல்வதற்கு 20 அடி கான்கிரீட் சாலை உள்ளது. அந்த சாலைதான் தற்போது அடைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கடந்த பல மாதங்களாக 2, 3 வீதிகளைச் சுற்றி செல்ல வேண்டியுள்ளது என அய்யனாரின் குடும்பத்தினர் கூறுகிறார்கள். இவர்களின் வீட்டுக்கு அருகிலுள்ள சரஸ்வதி, அவரின் கணவர் மாரிமுத்து ஆகிய இருவரும் தான், இந்த கம்பிவேலியை அமைத்துள்ளதாக பிபிசி தமிழிடம் அய்யனாரும், அவருடைய மனைவி சரோஜாவும் தெரிவித்தனர்.
வீதியிலிருந்து அய்யனார் வீட்டிற்குள் போக முடியாத வகையில், கான்கிரீட் சாலையின் நடுவில் ஹாலோபிளாக் கற்களை அடுக்கியும், அதற்கு மேல் கம்பிவேலி போட்டும் முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளதையும் அவர்கள் காட்டினார்கள். அதன் மீது பச்சை வண்ணத் திரையும் கட்டப்பட்டுள்ளது.
''இது நாங்கள் 32 ஆண்டுகளாக பயன்படுத்திய வீதி. சென்ற ஆண்டு, பக்கத்து வீட்டைச் சேர்ந்த சரஸ்வதியும், அவருடைய கணவர் மாரிமுத்துவும்தான் இந்த ரோட்டுக்கு நடுவே வேலி போட்டு மறித்தனர். அப்போதிருந்த ஊராட்சித் தலைவரிடம் சொல்லி, அதை எடுத்துவிட்டோம். ஆனால் நான்கைந்து மாதங்களுக்கு முன்பாக, கற்கள், கம்பியை வைத்து மீண்டும் வேலியை அமைத்துவிட்டனர். இதை எடுக்கச் சொல்லி, தாசில்தார், ஆர்டிஓவிடம் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.'' என்றார் அய்யனார்.
மாரிமுத்து தரப்பு பதில்
சரோஜா–அய்யனாரின் குற்றச்சாட்டு குறித்து, ஈரோட்டில் வசிக்கும் சரஸ்வதி–மாரிமுத்து ஆகியோரிடம் பிபிசி தமிழ் கேட்டதற்கு, ''அது அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடம். எங்களுடைய வீட்டுக்கு பட்டா இருக்கிறது. அய்யனார் வீடு உள்ளிட்ட பின்னால் இருக்கும் வீடுகளுக்கு பட்டா இல்லை.
அதனால் அறநிலையத்துறை சார்பில் அந்த ரோட்டில் வேலி போடப்பட்டிருந்தது. அதை அய்யனார் எடுத்துவிட்டார். அதன்பின் அப்போதிருந்த பஞ்சாயத்துத் தலைவர், துணைத்தலைவர், மூலனுார் போலீஸ் எல்லோரிடமும் சொல்லி நாங்கள் தான் எங்கள் பாதுகாப்புக்காக அந்த வேலியை அமைத்தோம்.'' என்றனர்.
செல்வி தரப்பு பதில்
அய்யனார் தரப்பு குற்றச்சாட்டுகள் குறித்து, கருப்பன்வலசு கிராம ஊராட்சியின் முன்னாள் துணைத்தலைவர் செல்வியிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ''அத்தனையும் அப்பட்டமான பொய்யான குற்றச்சாட்டுகள். நான் அவரை வேலைக்கு அழைக்கவும் இல்லை. நாங்கள் வேலி அமைக்கவும் இல்லை. அது அய்யனார் வீட்டுக்கான பாதையே இல்லை. அது அய்யனாருக்கும், அவருடைய உறவினர் சரஸ்வதிக்குமான தனிப்பட்ட மோதல்,'' என்றார்.
வெளியிலிருந்து ஆட்களைக் அழைத்து வந்து, சரஸ்வதி வேலி அமைத்ததாகக் கூறிய செல்வி, கிராம நிர்வாக அலுவலரிடமும் சொல்லிவிட்டுத்தான் அதை அவர் அமைத்ததாக கூறினார்.
இந்த விவகாரத்தில் வருவாய் வட்டாட்சியர், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் கூறுவது என்ன? முழு விவரம் இந்த வீடியோவில்!
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு