தோனிக்காக ஆடும் ரஹானேவுக்கு இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைத்தது எப்படி?

ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விஸ்வரூபம் எடுத்துள்ள ரஹானேவுக்கு இந்திய கிரிக்கெட் அணிக்கான கதவுகள் திறந்துள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவர், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். 

அதுவும் நேரடியாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கான 15 வீரர்கள் கொண்ட பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார். 

2021 ஜூன் முதல் 2023 ஜூன் வரையிலான சர்வதேச டெஸ்ட் தொடர்களை அடிப்படையாக கொண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடந்து வருகிறது. 

இந்த முறை புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடம் பிடித்துள்ளது, இந்தியா இரண்டாமிடம் பிடித்துள்ளது. 

இவ்விரு அணிகளும் லண்டன் ஓவல் மைதானத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யாருக்கு என மல்லுக்கட்டவுள்ளன. 

இந்த போட்டி வரும் ஜூன் மாதம் ஏழாம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த போட்டிக்கான அணியை அறிவித்துள்ளது.

ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் தற்போது அஜிங்கிய ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார். 

15 பேர் கொண்ட அணியில் ஷுப்மன் கில், சதீஸ்வர் புஜாரா, விராட் கோலி, கே எல் ராகுல், கே எஸ் பரத், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், மொஹம்மத் ஷமி, மொஹம்மத் சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

காயம் காரணமாக பும்ரா இடம்பெறவில்லை, தவிர புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட வீரர்களும் இடம்பெறவில்லை. 

சி.எஸ். அணிக்காக மிரட்டல் ஆட்டம்

இந்த ஐபிஎல் சீசனில் புதிய ஆட்டபாணியில் அசத்தி வருகிறார். நீண்டகாலமாக ராஜஸ்தான் அணிக்கு விளையாடி வந்தவர், கேப்டனாக செயல்பட்டவர் என்றபோதிலும் கடந்த ஐபிஎல் ஏலத்தில் ரஹானேவை அணியில் சேர்த்துக்கொள்ள பெரும்பாலான அணிகள் தயங்கின. 

அந்த வேளையில் சுமார் 50 லட்ச ரூபாய்க்கு சிஎஸ்கே அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டவர், பென் ஸ்டோக்சுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக சிஎஸ்கே பிளெயிங் லெவனிலும் சேர்க்கப்பட்டார். 

மும்பை அணிக்கு எதிராக சிஎஸ்கே சார்பில் தான் விளையாடிய முதல் போட்டியிலேயே மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். 

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருபவர் கடந்த ஐந்து போட்களில் இரண்டு அரைசதத்தோடு 209 ரன்கள் குவித்துள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 29 பந்துகளில் 71 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். 

இந்த தொடரில் இதுவரை 18 பௌண்டரிகள், 11 சிக்ஸர்கள் விளாசியுள்ள ரஹானே 199 எனும் ஸ்ட்ரைக் ரேட்டோடு வலம் வருகிறார்.

இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை குறைந்தபட்சம் 100 ரன்களுக்கு மேல் அடித்த வீரர்கள் பட்டியலில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் வீரர் ரஹானே தான். ஐபிஎல் தொடங்கிய சீசனில் இருந்து விளையாடி வரும் இதற்கு முன்னதாக 2019-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் 137 எனும் ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினார். அதுவே அவரது அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட்டாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் போட்டிகளிலும் அசத்தல்

இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி விளையாடினார் ரஹானே. 

குறிப்பாக ரஞ்சி கோப்பையில் மும்பை அணிக்காக விளையாடியவர் முதல் சில ஆட்டங்களில் தடுமாறினார். ஆனால் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக விளையாடி இரட்டைக் சதம் விளாசினார். 

அஸ்ஸாமுக்கு எதிரான ஆட்டத்தில் 191 ரன்கள் எடுத்தார். அந்த போட்டியில் பிரித்வி ஷா ரஹானே ஜோடி இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 401 ரன்கள் குவித்தது. 

ஒட்டுமொத்தமாக ஏழு போட்டிகளில் விளையாடி 57 எனும் சராசரியோடு 634 ரன்கள் குவித்தார். 

கடந்த ஆண்டு சென்னை மண்ணில் நடந்த துலீப் டிராபி காலிறுதி போட்டியிலும் வட கிழக்கு மண்டலத்துக்கு எதிரான போட்டியொன்றில் 207 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்த டெஸ்டில் 78 எனும் ஸ்ட்ரைக் ரேட்டோடு விளையாடினார். 

இதையெல்லாம் வைத்துதான் ரஹானேவின் ஸ்ட்ரைக் ரேட் குறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்ட இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், இந்த சீசனில் அஜிங்க்ய ரஹானேவின் ஸ்ட்ரைக் ரேட் மலைப்பூட்டுகிறது. தொடர்ச்சியாக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடியது அவருக்கு உதவியிருக்கிறது என எழுதினார்.

சிஎஸ்கே ஆட்டங்களில் மூலம் ரஹானேவுக்கு தேசிய அளவில் கவனம் கிடைத்த சூழலில் தற்போது டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது. 

ரஹானே கடைசியாக ஆடிய டெஸ்ட் போட்டி எது?

முன்னதாக, கடந்த 2022 ஜனவரியில் தென் ஆப்ரிக்க மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் விளையாடியதே அவரது கடைசி டெஸ்ட் தொடராகும். கேப்டவுனில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 10 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். 

2020-ம் ஆண்டு இறுதியில் மெல்பர்ன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர் சதமடித்ததே, தற்போது வரை அவரது கடைசி டெஸ்ட் சதமாகும். அதன் பின்னர் அவர் விளையாடிய 15 டெஸ்ட் போட்டிகளில் அவர் சதம் ஏதும் எடுக்கவில்லை. தவிர மூன்று அரை சதம் மட்டுமே விளாசியிருந்தார். 

முன்னதாக, கடந்த 2021-ம் ஆண்டு நடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதின. அந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ரஹானே 49 ரன்கள் எடுத்தார். அவரைத் தவிர வேறு எந்த இந்திய வீரரும் அதிக ரன்கள் எடுக்கவில்லை. அந்த போட்டியில் நியூசிலாந்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. 

தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அது அஜிங்க்ய ரஹானேவுக்கு மட்டுமல்ல, இந்திய அணிக்கும் தான்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: