'கடவுளே பேசிய இடம்' என்று பைபிள், குர்ஆன் குறிப்பிடும் மலையில் இப்போது என்ன நடக்கிறது? புதிய சர்ச்சை

    • எழுதியவர், யோலாண்டே நேல்
    • பதவி, பிபிசி செய்திகள்

பல ஆண்டுகளாக, சுற்றுலாப் பயணிகள் பெடோயின் வழிகாட்டிகளுடன் சினாய் மலையில் ஏறி, பாறைகள் சூழ்ந்த அழகிய இடத்தில் சூரிய உதயத்தை ரசித்து வந்துள்ளனர். சிலர் மற்ற மலையேற்ற பயணங்களிலும் கலந்து கொள்கிறார்கள்.

இப்போது, யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகிய அனைவரும் புனிதமாகக் கருதும் இந்த சினாய் மலையில் ஒரு பெரிய சுற்றுலா திட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் மொழியில் 'ஜபல் மூசா' என அழைக்கப்படும் இந்த மலையில், மோசேக்கு பத்து கட்டளைகள் வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. பைபிள் மற்றும் குர்ஆன் கூற்றுப்படி, எரியும் புதரில் இருந்து மோசேவிடம் கடவுள் பேசிய இடம் இதுதான் என்றும் பலர் கருதுகின்றனர்.

இந்த மலையில் 6ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட செயின்ட் கேத்தரின் மடாலயம் உள்ளது. இது கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் கீழ் இயங்குகிறது. அதை மூட எகிப்து அரசு திட்டமிட்டதாக கூறப்பட்டாலும், கிரேக்கத்தின் அழுத்தத்தால் அந்த திட்டம் நிராகரிக்கப்பட்டது.

எனவே, அங்குள்ள துறவிகள் தொடர்ந்து அங்கு இருப்பார்கள்.

ஆனால், மடாலயம், நகரம், மலை ஆகியவை சேர்ந்து யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தலமாகக் கருதப்படும் பாலைவனப் பகுதியான இந்த இடத்தில் வரவுள்ள புதிய திட்டம் குறித்து பலரும் கவலைப்படுகிறார்கள்.

அங்கு சொகுசு ஹோட்டல்கள், குடியிருப்புகள், வணிக வளாகங்கள் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்த இடத்தில் பாரம்பரிய பெடோயின் சமூகமான ஜெபெலியா பழங்குடியினரும் வாழ்கிறார்கள்.

செயின்ட் கேத்தரின் பாதுகாவலர்கள் என அழைக்கப்படும் இவர்களின் வீடுகள் மற்றும் சுற்றுலா முகாம்கள் ஏற்கனவே இடிக்கப்பட்டுவிட்டன. இழப்பீடு கிடைத்ததா என்றால், சிலருக்கு மிகவும் குறைவாகவே கிடைத்திருக்கிறது, சிலருக்கு அதுவும் கிடைக்கவில்லை.

புதிய கார் நிறுத்துமிடத்திற்காக, உள்ளூர் கல்லறையில் புதைக்கப்பட்டிருந்த உடல்களை கூட அங்கிருந்து எடுத்து செல்ல அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த திட்டம், சுற்றுலாவை வளர்க்கும் நிலையான முயற்சியாகக் கூறப்படுகிறது. ஆனால், இது பெடோயின் மக்களின் விருப்பத்திற்கு மாறாக, அவர்களிடம் ஆலோசிக்காமல் திணிக்கப்பட்டதாக சினாய் பழங்குடியினருடன் நீண்டகாலமாகப் பணியாற்றிய பிரிட்டிஷ் எழுத்தாளர் பென் ஹாஃப்லர் கூறுகிறார்.

"ஜெபெலியா மக்கள் விரும்பிய வளர்ச்சி இது அல்ல. மேலிருந்து திணிக்கப்பட்ட திட்டம் இது. உள்ளூர் மக்களின் நலன்களை விட வெளியாட்களின் நலன்களுக்காகவே இது அமைந்துள்ளது," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

"நாடோடி வாழ்க்கை கொண்ட ஒரு பழங்குடியினரின் நடுவே, அவர்கள் ஒருபோதும் இணைந்திராத ஒரு புதிய நகர உலகம் கட்டப்படுகிறது. அந்த உலகத்தை உருவாக்க அவர்கள் சம்மதிக்கவில்லை. இது அவர்களின் தாயகத்தில் அவர்களின் இடத்தை நிரந்தரமாக மாற்றிவிடும்," என்றும் அவர் கூறினார்.

சுமார் 4,000 பேர் வாழும் இந்த இடத்தில், உள்ளூர்வாசிகள் இந்த மாற்றங்களைப் பற்றி நேரடியாக பேச தயங்குகிறார்கள்.

எகிப்து அரசு செயின்ட் கேத்தரின் மடாலயத்தை சுற்றி திட்டமிட்டுள்ள மாற்றங்களுக்கு, இதுவரை வெளிநாடுகளில் அதிகமாக எதிர்ப்பு தெரிவித்திருப்பது கிரீஸ் தான். காரணம், அந்த மடாலயத்துடன் கிரீஸ் நாட்டுக்கு ஆன்மீக மற்றும் கலாசாரத் தொடர்பு உள்ளது.

2025 மே மாதத்தில், எகிப்திய நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பு வழங்கியது.

அதில், செயின்ட் கேத்தரின் மடாலயம் அரசு நிலத்தில் அமைந்துள்ளது என்றும், மடாலயத்திற்கு அந்த நிலத்தை "பயன்படுத்த மட்டும்" உரிமை உண்டு என்றும் கூறப்பட்டது.

இந்த தீர்ப்பு, கிரீஸுக்கும் எகிப்துக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த தீர்ப்புக்கு எதிராக, கிரீஸ் திருச்சபையின் தலைவர் பேராயர் ஐரோனிமோஸ் II கடுமையாக கண்டனம் தெரிவித்தார்.

"மடாலயத்தின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இது ஆர்த்தடாக்ஸ் மற்றும் கிரேக்க மரபுக்கு பெரிய அச்சுறுத்தல்," என்று அவர் கூறினார்.

மடாலயத்தின் நீண்டகால பேராயர் டாமியானோஸ், ஒரு கிரேக்க பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "இது எங்களுக்கு ஒரு பெரிய அடி… மேலும் ஒரு அவமானம்" என்று கூறினார்.

இந்த விவகாரத்தை அவர் கையாண்ட விதம், துறவிகளுக்குள் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தியது. இதன் பின்னர், அவர் பதவி விலக முடிவு செய்தார்.

இந்த புனித இடத்திற்கு, முகமது நபியே பாதுகாப்பு கடிதம் வழங்கியதாக ஜெருசலேமின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பேட்ரியார்க்கேட் நினைவூட்டியது.

இந்த பைசண்டைன் கால மடாலயத்தில், பாத்திமிட் காலத்தில் கட்டப்பட்ட ஒரு சிறிய மசூதியும் உள்ளது.

இது "கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கிடையிலான அமைதியின் அடையாளம். மோதல்களில் சிக்கியுள்ள உலகிற்கு நம்பிக்கையின் புகலிடம்" என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த சர்ச்சைக்குரிய நீதிமன்றத் தீர்ப்பு இன்னும் அமலில் இருந்தாலும், கிரீஸ் மற்றும் எகிப்துக்கு இடையே நடந்த பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் ஒரு முக்கிய முடிவுக்கு வந்தன.

இரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட பிரகடனத்தில், செயின்ட் கேத்தரின் மடாலயத்தின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் அடையாளமும் கலாசார பாரம்பரியமும் பாதுகாக்கப்படும் என்று உறுதி செய்யப்பட்டது.

'சிறப்புப் பரிசா' அல்லது குறுக்கீடா?

2021-ஆம் ஆண்டு, எகிப்து அரசு சுற்றுலா பயணிகளுக்காக 'கிரேட் டிரான்ஸ்ஃபிகரேஷன் திட்டம்' (Great Transfiguration Project) என்ற திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தில்

  • புதிய ஹோட்டல்கள், தங்குமிடங்கள் (eco-lodges), பெரிய பார்வையாளர் மையம் அமைத்தல்
  • அருகிலுள்ள சிறிய விமான நிலையத்தை விரிவுபடுத்தல்
  • மோசே மலைக்கு (Mount Moses) கேபிள் கார் அமைத்தல் ஆகியவை அடங்கும்.

அரசாங்கம் இதை "முழு உலகிற்கும், அனைத்து மதங்களுக்குமான எகிப்தின் பரிசு" என்று விளம்பரப்படுத்தியது.

"இந்தத் திட்டம் சுற்றுலாப் பயணிகளுக்கு அனைத்து சேவைகளையும் வழங்கும். செயின்ட் கேத்தரின் நகரமும், அதன் சுற்றுப்புறங்களும் வளர்ச்சி பெறும். அதேசமயம் இயற்கை, பாரம்பரியம் பாதுகாக்கப்படும். அங்குள்ள திட்டங்களில் பணிபுரிபவர்களுக்கு தங்குமிட வசதியும் உண்டு"என்று வீட்டுவசதி அமைச்சர் ஷெரிப் எல்-ஷெர்பினி கடந்த ஆண்டு கூறினார்.

இப்போது, நிதிப் பிரச்னைகளின் காரணமாக இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கலாம்.

ஆனால் செயின்ட் கேத்தரின் மடாலயத்தை எதிர்நோக்கும் எல்-ரஹா சமவெளி ஏற்கனவே மாற்றமடைந்துள்ளது. புதிய சாலைகள் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த இடத்தில் தான், மோசே மலையில் இருந்தபோது, அவருடைய சீடர்களான இஸ்ரவேலர்கள் காத்திருந்ததாக நம்பப்படுகிறது. விமர்சகர்கள், அந்தப் பகுதியின் தனித்துவமான இயற்கை அழகு அழிக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர்.

யுனெஸ்கோ இதை உலகளாவிய மதிப்புள்ள தளமாக விவரிக்கிறது.

  • "சுற்றியுள்ள கரடுமுரடான மலைப்பாங்கான நிலப்பரப்பு, மடாலயத்திற்கு சரியான பின்னணியை தருகிறது."
  • "இயற்கையின் அழகும் தனிமையும், மனித ஆன்மீக அர்ப்பணிப்பும் ஒன்றிணையும் இடமாக இது உள்ளது"என யுனெஸ்கோ கூறுகிறது .

புதிய கட்டுமானங்களை நிறுத்தவும், அவற்றின் தாக்கத்தை ஆய்வு செய்யவும், பாதுகாப்புத் திட்டம் ஒன்றை தயாரிக்கவும் 2023-இல் யுனெஸ்கோ, எகிப்தை கேட்டுக்கொண்டது.

ஆனால் இதுவரை அது நடைபெறவில்லை.

2025 ஜூலை மாதம், World Heritage Watch (உலக பாரம்பரியக் கண்காணிப்பு அமைப்பு) எனும் அமைப்பு, செயின்ட் கேத்தரின் பகுதியை "ஆபத்தில் உள்ள உலக பாரம்பரிய தளங்கள்" பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று யுனெஸ்கோவுக்கு கடிதம் அனுப்பியது.

அந்த நேரத்தில் மன்னர் சார்லஸையும் பிரசாரகர்கள் அணுகினர். அவர் செயின்ட் கேத்தரின் அறக்கட்டளையின் புரவலர். இந்த அறக்கட்டளை, மடாலயத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்கவும், அதில் உள்ள அரிய கிறிஸ்தவ கையெழுத்துப் பிரதிகளை ஆய்வு செய்யவும் நிதி திரட்டுகிறது.

மன்னர் சார்லஸ் இந்த இடத்தை "எதிர்கால சந்ததியினருக்காகப் பராமரிக்கப்பட வேண்டிய ஒரு மிகப் பெரிய ஆன்மீகப் புதையல்" என்று வர்ணித்துள்ளார்.

எகிப்து அரசு இவ்வாறான தனது பிரமாண்டத் திட்டங்களை நலிவடைந்த பொருளாதாரத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் முக்கியத் திறவுகோல் என்று கருதுகிறது.

ஒருகாலத்தில் செழித்திருந்த எகிப்தின் சுற்றுலாத் துறை, கோவிட்-19 தாக்கத்திலிருந்து மெதுவாக மீண்டு வந்தது. ஆனால் அதன் மீட்பை காசாவில் நடந்த போராட்டமும் புதிய பிராந்திய குழப்பங்களும் மீண்டும் பாதித்துவிட்டன. 2028-க்குள் 3 கோடி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இலக்கு, எகிப்து அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த எகிப்திய அரசாங்கங்களின் கீழ், சினாய் தீபகற்பத்தில் வளர்ச்சிப் பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆனால் பூர்வீக பெடோயின் சமூகங்களிடம் அதுகுறித்து ஒருபோதும் ஆலோசிக்கப்படவில்லை.

1967-ஆம் ஆண்டு மத்திய கிழக்குப் போரில் சினாய் தீபகற்பத்தை இஸ்ரேல் கைப்பற்றியது.

பின்னர் 1979-இல் சமாதான ஒப்பந்தத்தின் பிறகு அது எகிப்துக்குத் திரும்பியது. அதற்கு பிறகும், பெடோயின்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறோம் என தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

1980களில் தெற்கு சினாயில் ஷார்ம் எல்-ஷேக் உள்ளிட்ட செங்கடல் சுற்றுலா மையங்கள் கட்டப்பட்டது. அப்போது நடந்ததைப் போலத்தான் இப்போது செயின்ட் கேத்தரின் மடாலயத்திலும் நடக்கிறது என்று பலர் குற்றம்சாட்டுகிறார்கள்.

"பெடோயின்கள் அந்தப் பகுதியின் உண்மையான மக்கள். அவர்கள் வழிகாட்டிகளாகவும், தொழிலாளர்களாகவும் இருந்தனர், ஆனால் தொழில்துறை சுற்றுலா வந்த பிறகு, அவர்கள் முற்றிலும் வெளியேற்றப்பட்டார்கள். வணிகத்திலிருந்து மட்டுமல்ல, கடலோர வாழ்விலிருந்தும் தள்ளப்பட்டு, பின்தள்ளப்பட்டவர்களாக மறைந்துவிட்டார்கள்"என எகிப்திய பத்திரிகையாளர் மோகனத் சப்ரி கூறுகிறார்.

செங்கடல் சுற்றுலா பகுதிகளில் நடந்ததைப் போலவே, புதிய செயின்ட் கேத்தரின் திட்டத்திலும் வேலை செய்ய எகிப்தின் பிற பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் கொண்டு வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், பெடோயின் குடியிருப்புப் பகுதிகளை "மேம்படுத்துகிறோம்" என்று அரசு கூறுகிறது.

செயின்ட் கேத்தரின் மடாலயம் கடந்த 1,500 ஆண்டுகளாக பல சவால்களை எதிர்கொண்டு நிலைத்திருக்கிறது. ஆரம்பத்தில் அங்கு குடிபெயர்ந்த மூத்த துறவிகளுக்கு, இது ஒரு அமைதியான ஆன்மிக ஓய்வு மையமாக இருந்தது.

ஆனால், செங்கடல் ரிசார்ட்டுகளின் வளர்ச்சியால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முக்கிய காலங்களில் தினசரி சுற்றுப்பயணமாக இங்கு வரத் தொடங்கினர்.

சமீபத்திய ஆண்டுகளில், எரியும் புதரின் எச்சங்கள் என்று நம்பப்படும் இடத்தைப் பார்வையிட, அல்லது Codex Sinaiticus எனப்படும், உலகின் மிகப் பழமையான, கிட்டத்தட்ட முழுமையான புதிய ஏற்பாட்டின் கையெழுத்துப் பிரதிகளை காண்பிக்கும் அருங்காட்சியகத்தை பார்வையிட பெரும் கூட்டம் வந்து சென்றது.

இப்போது, மடாலயத்தின் மத முக்கியத்துவம் தொடர்ந்தாலும், அதன் சுற்றுப்புறங்கள் மற்றும் பெடோயின் சமூகத்தின் பல நூற்றாண்டுகளாக நிலைத்திருந்த வாழ்க்கை முறை மீள முடியாத வகையில் மாறி வருவதைப் போல தெரிகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு