தேடுபொறிகளில் தனிக்காட்டு ராஜாவாக கூகுள் வளர்ந்தது எப்படி? - வெற்றியின் ரகசியம்

இன்றைய இணைய உலகில் எல்லா இடங்களிலும் இருக்கும் கூகுள், நாள்தோறும் பில்லியன் கணக்கான கேள்விகளின் தேடுதலை கையாள்கிறது. உலகில் மிக பெரிய நிறுவனங்களில் ஒன்றாகியுள்ள கூகுள் வலுவான நெறிமுறைக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட சிறப்பு புத்தாக்க ஸ்டார்ட்அப் நிறுவனமாகத் தொடங்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் அது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், வாஷிங்டனில் உள்ள நீதிமன்றம் ஒன்று, தேடுதல் பொறிநுட்ப சந்தையில் அதன் ஆதிக்கத்தை கூகுள் துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும், அதன் போட்டி நிறுவனங்கள் செயல்படுவதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்குவதாகவும் தீர்ப்பளித்தது. இப்போது, கூகுள் நிறுவனம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் பெரியதாகவும் சக்திவாய்ந்ததாகவும் மாறிவிட்டதாக பலரும் உணர்கின்றனர். எனவே, அதனுடைய சக்தியை மிகவும் பொறுப்போடு செயல்படுத்த கூகுளையே நம்பியிருக்க வேண்டியுள்ளது.

கூகுள் மீதான நீதிமன்ற வழக்கும் தீர்ப்பும் என்ன கூறுகிறது? வல்லுநர்கள் கூகுள் முன் வைக்கும் கேள்விகளும் குற்றச்சாட்டுகளும் என்ன என்பதை நான்கு பாகங்களாக இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்

கூகுளின் வெற்றி ரகசியம்

கூகுள் நம்முடைய வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் மிக ஆழமாக ஒன்றித்துள்ளது, கூகுள் வருவதற்கு முன்பு இணைய தேடல் எப்படி இருந்தது என்பதை கற்பனை செய்து பார்ப்பது கூட இப்போது கடினமாகிவிட்டது.

கூகுள் நிறுவனத்தை, அதன் தொடக்க காலத்தில் இருந்தே கண்காணித்து வரும் நிபுணர் மற்றும் எழுத்தாளர் டேவிட் வைன்ஸ் (David Vines) கூகுளின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு 'கூகுள் ஸ்டோரி' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் இரண்டு முனைவர் பட்ட மாணவர்களான செர்கெ பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோர் அப்போது இருந்த இணையத் தேடல் பொறிமுறை தரத்தில் திருப்தியடையவில்லை, எனவே அவர்கள்தான் கூகுள் தேடுபொறியை உருவாக்கியதாக அவர் கூறுகிறார்.

"கூகுள் வருவதற்கு முன்பு, தொண்ணூறுகளின் பிற்பகுதியில், யாகூ சர்ச் மற்றும் அல்டாவிஸ்டா சர்ச் ஆகிய இரண்டும் பரந்த அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த தேடுபொறிகளில் தேடும் விவரங்களுக்கான முடிவுகள் வருவதற்கு நீண்ட நேரம் பிடித்தது. அத்துடன், பயனர்களுக்குக் கிடைத்த தேடல் முடிவுகளில் விளம்பரங்களும் கலந்திருந்தன. விளம்பரங்களுக்கும் உண்மையான தேடப்பட்ட கேள்விகளின் முடிவுகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை கண்டறிவது கடினமாக இருந்தது. எனவே, லாரி பாக் மற்றும் செர்ஜி பிரின் இருவரும் இணைந்து கூகுள் சர்ச் எஞ்சினை உருவாக்கி இணைய தேடலை வேகமாகவும் நம்பகமானதாகவும் மாற்றினார்கள். ஏனெனில் அவர்கள் இணைய பக்க முடிவுகளை அவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் தரவரிசைப் படுத்துவதற்கான ஓர் அமைப்பை இதில் கொண்டு வந்தனர். இதற்கு முன்பு யாரும் அதைச் செய்திருக்கவில்லை." என்கிறார் டேவிட் வைஸ்.

இந்த மாணவர்கள் இருவரும் தங்களுடைய தேடுபொறியை ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு விற்றுவிட்டு, தங்களது முனைவர் பட்டப் படிப்பை முடிக்க விரும்பினார்கள் என்று தெரிவிக்கிறார் டேவிட் வைஸ்.

மேலும் அவர், "ஆனால் யாரும் கூகுள் தேடுபொறியை வாங்க விரும்பவில்லை. search (தேடல்) முக்கியமானதல்ல என்று அனைவரும் சொல்லிவிட்டார்கள். யாகூ மற்றும் Digital Equipment ஆகியவை கூகுள் தேடுபொறியை நிராகரித்துவிட்டன. ஐந்து லட்சம் அமெரிக்க டாலர்களுக்குக் கூட கூகுள் தேடுபொறியை வாங்கவோ, மேலும் அதை மேம்படுத்துவதற்கு முதலீடு செய்யவோ யாரும் தயாராக இல்லை." என்றார்.

யாரும் கூகுளை வாங்க முன்வராத நிலையில், சன் மைக்ரோசிஸ்டம்ஸின் நிறுவனர்களில் ஒருவரான ஆன்டி பெக்டெல்ஷைன் (Andy Bechtelshine) கூகுள் சர்ச் எஞ்சினை முயற்சித்துப் பார்த்தார். அதனை அவருக்கு மிகவும் பிடித்திருந்ததால், லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரேன்னுக்கு ஒரு லட்சம் டாலர் தொகைக்கான காசோலையை வழங்கினார்.

ஆனால் சரியான வணிகமாக அதனை வளர்தெடுக்க, அவர்களுக்கு அதிக பணம் தேவைப்பட்டது. அதற்காக, அவர்கள் இதுவரை சிலிக்கான் வேலி வென்ச்சர் கேபிட்டலின் மையமாக இருந்து வரும் சாண்ட்ஹில் சாலைக்குச் சென்றனர். கிளைன்டர் பெர்கின்ஸ் (Kleiner Perkins) மற்றும் சீக்வோயா கேபிட்டல் (Sequoia Capital) ஆகிய இரண்டு நிறுவனங்களும் தலா ஒரு கோடி அமெரிக்கா டாலர்களை கூகுள் சேர்ச்சில் முதலீடு செய்ய முன்வந்து, அந்த தொகைக்கு இணையான பங்குகளை பெற்றுகொண்டன.

இந்த இரு இளைஞர்களுக்கும் அவர்கள் விரும்பியதை செய்யும் வாய்ப்புகள் கிடைத்தன. முதலீடு கிடைத்துவிட்டது, ஆனால் அதனை வணிகமாக தொடர்ந்து நடத்துவதற்கு பணம் தேவைப்பட்டது, விளம்பரத்திலிருந்து வருவாய் கிடைக்கும் என்றாலும், லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரேன் ஆரம்பத்திலிருந்தே விளம்பரங்களைப் பயன்படுத்த விரும்பவில்லை. விளம்பரங்களைப் பயன்படுத்தவதை அவர்கள் அதை எதிர்த்து வந்தனர்.

லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரேன் மாணவர்களாக இருந்தபோதே, தேடல் முடிவுகளில் விளம்பரங்களும் வருவதை வெறுத்தனர் எனக் கூறும் அவர், "கூகுள் தேடுபொறியில் விளம்பரம் செய்ய விரும்பவில்லை. ஆனால் விளம்பரங்கள் இல்லாமல் வணிகத்தை வளர்ப்பதற்கான வேறு எந்தவிதத் திட்டமும் அவர்களிடம் இல்லை. பின்னர் இஸ்ரேலிய தொழிலதிபர் யோசி வார்டி அவர்களிடம் கூகுள் பக்கத்தில் ஒரு நீலக் கோட்டை வரைய பரிந்துரைத்தார், அதன் ஒரு பக்கத்தில் கேள்விகளுக்கான சரியான தேடல் முடிவுகளையும் மறுபுறத்தில் விளம்பரங்களையும் தோன்றும்படி உருவாக்க சொன்னார். கூகுளைப் பயன்படுத்துபவர்கள், தேடல் முடிவுகளையும் விளம்பரங்களையும் எளிதாக வேறுபடுத்திப் பார்க்க இந்த நீலக்கோடு உதவும் என்று அவர் தெரிவித்தார். அந்த ஆலோசனயை இருவரும் பயன்படுத்தினார்கள், இதன் மூலம் கூகுள் ஒரு தேடுபொறி என்பதையும் தாண்டி மிகப் பெரியத் தொழிலாக வளரத் தொடங்கியது." எனத் தெரிவித்தார்.

இப்போது கூகுளின் பக்கத்தின் வலப்புறத்தில் தோன்றும் விளம்பரங்கள் மூலம் நிறுவனம் பில்லியன் கணக்கான டாலர்களை சம்பாதிக்கிறது. ஏனென்றால், விளம்பர நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை யார் பார்க்கிறார்கள், எத்தனை பேர் தங்கள் தயாரிப்புகளை வாங்குகிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாம். விளம்பரங்கள் மூலம் கூகுள் ஆண்டுதோறும் 200 பில்லியன் டாலர்களுக்கு மேல் சம்பாதிக்கிறது.

நம்பிக்கை மற்றும் நிர்வாகம்

ஸ்டான்ஃபோர்ட் சட்டப் பள்ளியில் பேராசிரியராக உள்ள டக்ளஸ் மெலமெட் (Douglas Melamed) அமெரிக்க நீதித்துறையின் ஆன்டி ட்ரஸ்ட் பிரிவின் முன்னாள் தலைவராகவும் பணிபுரிந்துள்ளார்.

ஒரு நிறுவனம் சிறந்த தரமான தயாரிப்புகளை தயாரிப்பதன் மூலம் சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தினால், அதில் தவறேதும் இல்லை என்று அவர் கூறுகிறார்.

ஆனால் வாடிக்கையாளர்களுக்கு எந்த ஈடுசெய்யும் நன்மையையும் வழங்காமல், போட்டியாளர்களை முடக்கும் நடத்தை மூலம் அந்த வகையான அதிகாரத்தைப் பெறுவது போட்டிச் சட்டத்திற்கு விரோதமானது என்றும் அவர் கூறுகிறார்.

இந்த விவகாரம் தொடர்பாகவே கூகுளுக்கு எதிராக வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

"கூகுள் தனது தேடுபொறியை இணையதளத்தில் பொதுவாக தேடுவதற்கு முன்னிலை தயாரிப்பாக மாற்றியுள்ளது. இருப்பினும் கூகுள் எடுத்துள்ள பல நடவடிக்கைகளால், அதன் போட்டி நிறுவனங்களின் தேடுபொறிகள் கூகுள் சர்ச் எஞ்சினுடன் போட்டியிடுவதை கடினமாக்கியுள்ளது." என்கிறார் டக்ளஸ் மெலமெட்

சந்தையில் விற்கப்படும் பல மொபைல் போன்கள் மற்றும் லேப்டாப்களில், முன்னரே இயல்பாக கூகுள் தேடுபொறி நிறுவப்பட்டுள்ளது. எனவே புதிய சாதனங்களை வாங்கியதும், அவற்றில் இணையத்தில் ஏதாவது ஒன்றைத் தேடும்போது, அது தானாகவே கூகுளுக்கு சென்றுவிடுகிறது.

போட்டி தேடு பொறிகளான dot.go அல்லது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Bing சர்ச்சிக்கு செல்வதில்லை என்பது இந்த வழக்கில் கவனம் செலுத்தப்பட்டது. புதிய போன் அல்லது லெப்டாப்களை வாங்கியவர், இணைய உலாவி அமைப்புகளுக்குச் சென்று ஏற்கெனவே இயல்பாக தோன்றும் தேடுபொறியை மாற்றிக் கொள்னும் வசதி இருக்கிறது, ஆனால் இதை அனைவரும் செய்வார்களா என்கிற கேள்வியும் உள்ளது

போன்கள் மற்றும் லேப்டாப்களில் இயல்பாகவே இணைய தேடுபொறியாக கூகுள் சர்ச் எஞ்சினை நிறுவ, அவற்றை உற்பத்தி செய்பவர்களுக்கு கூகுள் பில்லியன் கணக்கான டாலர்களை செலுத்தியுள்ளதாகக் கூறும் டக்ளஸ் மெலமேட், "தங்களின் புதிய பொருட்களில் இயல்பாக தோன்றும் தேடுபொறியை மக்கள் மாற்றாத பட்சத்தில், அது கூகுளுக்கு நன்மை பயக்கும், ஆனால் அதன் போட்டி நிறுவனங்களின் தேடுபொறிகளை பயன்படுத்துதற்கு அதுவே ஒரு தடையாக இருக்கும். இத்தகைய. இந்த நடவடிக்கை கூகுளின் போட்டியாளர்களான பிற தேடுபொறிகள் சந்தையில் கால் பதிக்க தடையாக இருப்பதை நீதிமன்றம் கண்டறிந்தது." என்றும் தெரிவித்தார்.

ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் சாதனங்களில் இயல்பாகவெ பொருத்தப்படும் தேடுபொறியாக கூகுளை மாற்றுவதற்காக பில்லியன் கணக்கான டாலர்களை கூகுள் நிறுவனம் செலுத்தியுள்ளது. அது கூகுளுக்கு லாபகரமான முதலீடாக இருந்ததாக டக்ளஸ் மெலமெட் கூறுகிறார்.

வாடிக்கையாளர்களிடமிருந்து கூகுள் நேரடியாகப் பணம் பெறுவதில்லை என்றாலும், விளம்பரங்கள் மூலம் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது மற்றும் அவர்களின் தரவைச் சேகரித்து விளம்பரங்களுக்குப் பயன்படுத்துகிறது என்று அவர் கூறுகிறார்.

கூகுள் தேடுபொறி ஒரு சிறந்த தயாரிப்பு என்று ஆப்பிள் கூறுகிறது, மேலும் மக்கள் விரும்பினால், ஐபோனின் இணைய உலாவிக்குச் சென்று வேறு எதாவது தேடுபொறியை தங்களின் கேள்விகளின் தேடுதலுக்கு மாற்றிகொள்ள முடியும் என்றும் கூகுள் கூறுகிறது.

இந்த வழக்கு தொடர்பாக கூகுள் மேல்முறையீடு செய்துள்ளது. மேலும், கூகுளின் எதிர்கொள்ளும் வழக்குகள் பலவற்றில் இது ஒரு வழக்கு மட்டுமே.

மேலும், விளம்பர சந்தையில் கூகுள் நியாயமற்ற முறையில் ஆதிக்கம் செலுத்துவதாக அமெரிக்க நீதித்துறை கூகுள் நிறுவனத்தின் மீது தொடுத்துள்ள புதிய வழக்கின் விசாரணை கடந்த ஆண்டு வெர்ஜீனியாவில் தொடங்கியது.

கூகுள் மீதான இந்த வழக்கு, அவர்களின் வருவாயுடன் தொடர்புடையது என்பதால், மிகப்பெரிய விஷயமாக இருக்கும் என்கிறார் டக்ளஸ்.

இதனை மேலும் விவரித்த அவர், "விளம்பர சந்தையை தனது தேடுபொறியுடன் ஒருங்கிணைப்பதன் மூலம், கூகுள் நிறுவனம் பிற விளம்பரத் தளங்களுக்கு தடைகளை உருவாக்கியுள்ளது. இந்த வழக்கில் வரும் தீர்ப்பானது விளம்பர சந்தையில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரக்கூடும், மேலும் புதிய விளம்பர தளங்களுக்கு விளம்பரம் மூலம் அதிக வருவாய் கிடைக்க வழி செய்யக்கூடும்." என்றும் தெரிவித்தார்

தகவல்கள் வழங்குவதில் ஏகபோக உரிமை

கூகுளின் பிரபலத்திற்கு ஒரு காரணம், நாம் அதனை பயன்படுத்தும் விதத்திலிருந்து நம்மை பற்றி கற்றுக்கொள்வதாகும் என்கிறார் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் Human Compatible AI-க்கான மையத்தில் பணிபுரியும் மூத்த விஞ்ஞானியான ஜோனதன் ஸ்ட்ரே (Jonathan Stray)

பெரும்பாலும் பயனரின் தனிப்பட்ட தேவைக்கு ஏற்றபடி, தேடல்களின் முடிவுகளை கூகுள் வழங்குகிறது. நீங்கள் யார்? எங்கு வசிக்கிறீர்கள்? போன்றவற்றை கூகுள் தெரிந்து வைத்திருப்பதாக ஜோனதன் ஸ்ட்ரே கூறுகிறார்.

உங்களுடைய கேள்விகளுக்கு முந்தைய தேடல்களை நினைவில் வைத்துக் கொண்டு முடிவுகளை இது வழங்குகிறது. உங்களுடைய முந்தைய தேடல்களை கவனத்தில் கொண்டு தேடல் முடிவுகள் வழங்கப்படுவதன் பொருள் கூகுள் அதன் பயனர்களின் தரவுகள் பலவற்றைச் சேகரிக்கிறது என்பதுதான்.

தொடர்ந்து பேசிய அவர், "கூகுள் ஒவ்வொரு தேடலின் பதிவையும் வைத்திருப்பதோடு, கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் ஒரு பயனர் எவ்வளவு நேரம் செலவிடுகிறார் என்பதையும் தெரிந்து வைத்திருக்கும். இணைப்பைத் திறந்த சிறிது நேரத்தில் ஒரு பயனர் அதனை மூடினால், அந்தப் பக்கம் பயனரின் தேடலுக்குப் பயனுள்ளதாக இல்லை என்பதை கூகுள் புரிந்துகொள்கிறது." என்று தெரிவித்தார்.

இதனை ஒரு எடுத்துக்காட்டுடன் அவர் விளக்கினார். "உதாரணமாக Python என்கிற கணினி புரோகிராம் மொழியை ஒருவர் தேடினால், அவருடைய முந்தைய தேடல்களில் இருந்து அவர் கணினி தொடர்புடைய தகவலைத் தேடுகிறார் என்பதை புரிந்துக் கொண்டு, அது தொடர்பான பக்கங்களையே காட்டும். Python பாம்புகளைப் பற்றிய பக்கங்களை காட்டாமல் இருக்கலாம்."

இதன் பொருள் கூகுள் நமது தேடலுக்கு ஏற்ப அது வழங்கும் முடிவுகளை தகவமைக்கிறது. அப்படியென்றால், நமக்கு உண்மையிலேயே தேவையான முடிவுகளைத் தருவதில்லை, மாறாக நாம் பார்க்க விரும்பும் முடிவுகளையே அதுவே தீர்மானித்து கொண்டு கூகுள் தருகிறது என்ற சந்தேகத்தை பலர் வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் அத்தகைய சாத்தியக்கூறு குறைவு என்று ஜோனாதன் ஸ்ட்ரே கூறுகிறார்.

இருப்பினும் தேடல் முடிவுகளை வரிசைபடுத்துதல் அல்லது வழங்கப்படும் முடிவுகளில் மேலே இருக்கவேண்டிய பக்கம் எவை? கீழே இருக்கவேண்டிய பக்கங்கள் எவை என்பவை எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றன? இது குறித்து விளக்கம் சொல்லாமல் கூகுள் அமைதியாக காக்கிறது.

நிதி ஆதரவு பெற்றுகொண்டு சில நிறுவனங்கள் அல்லது இணைய உள்ளடக்கங்களை உருவாக்குபவர்களின் பக்கங்களை தேடல் முடிவுகளில் கூகுள் முதலில் தோன்ற செய்வதாக சிலர் சந்தேகிக்கின்றனர்.

ஆனால் இந்த சந்தேகத்தை நிரூபிப்பது கடினம். பயனர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நலன்களை மனதில் கொண்டு அனைத்து நிறுவனங்களும் சமூகப் பொறுப்புடன் செயல்படுவது முக்கியம் என்று ஜோனாதன் ஸ்ட்ரே கூறுகிறார். ஆனால் பல நேரங்களில் இந்த நிறுவனங்கள் பொருளாதார நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம் கருதப்படுகிறது.

கூகுளின் எதிர்காலம்:

ஐரோப்பிய ஒன்றியமும் கூகுளுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளது என்றாலும், இந்த முடிவு அமெரிக்க நீதிமன்றத்தால் வழங்கப்பட்டதால் முக்கியத்துவம் பெறுகிறது என்கிறார் பொருளாதார மற்றும் வணிக போட்டியாற்றல் துறை நிபுணரான கிறிஸ்டினா கஃபாரா,

வெற்றிகரமான அமெரிக்க நிறுவனம் ஒன்று, உண்மையில் தவறாக நடந்து கொள்வதாகவும், அதை சரிசெய்யவேண்டும் என்று அமெரிக்காவே சொல்லும்போது விஷயம் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், அது உலக அளவில் உண்மையிலேயே ஏற்படுத்தும் பாதிப்பைப் பற்றி கிறிஸ்டினா சந்தேகிக்கிறார்.

"அமெரிக்க நீதிமன்றம் ஒன்று, உலகின் சிறந்த அமெரிக்க நிறுவனங்களில் முதன்மையானதாக கருதப்படும் நிறுவனம் ஒன்று தவறான முறையில் செயல்படுவதாக கூறுவதால், இந்தத் தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது." என்று அவர் தெரிவித்தார்.

ஆனால், தேடுபொறி சந்தையிலும் விளம்பர தொழில்நுட்பத்திலும் மிகவும் வலுவான இடத்தைப் பிடித்துள்ள கூகுள் நிறுவனத்தை அசைப்பது சுலபமல்ல என்று கிறிஸ்டினா கஃபாரா எச்சரிக்கிறார். தற்போது வெர்ஜீனியாவில் கூகுள் மீது தொடங்கப் போகும் வழக்கு, அந்நிறுவனத்தின் விளம்பர தொழில்நுட்பத்துடன் தொடர்புடையது.

"தொடர்ந்து பல ஆண்டுகளாக, ஐரோப்பாவில் இணையத் தேடலில் கூகுளின் சந்தைப் பங்கு 98 சதவீதமாக இருந்தால், அது அமெரிக்காவில் 93 சதவீதமாக உள்ளது. இப்போதும் அந்த நிலை மாறவில்லை. எனவே வலுவாக இருக்கும் கூகுளின் இடத்தை யார் பிடிப்பார்கள் என்பதுதான் கேள்வி. விளம்பர தொழில்நுட்பம் மற்றும் விளம்பர நிறுவனங்கள் பெரும்பாலும் கூகுளையே சார்ந்து உள்ளன. நாம் இணையத்தில் திறக்கும் ஒவ்வொரு வலைத்தளம், விளம்பரங்களைக் கொண்ட ஒவ்வொரு பயன்பாடு பற்றிய நமது அன்றாட அனுபவம் அடிப்படையில் ஏதோ ஒரு வகையில் கூகுளின் மூலம் இயக்கப்படுகிறது." என்கிறார் கிறிஸ்டினா.

தொடர்ந்து பேசிய அவர், "தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த நாம் அனுமதித்துவிட்டோம். இது உலக அரசியலின் ஒரு பகுதி. இப்போது அவற்றைக் கட்டுப்படுத்துவது கடினம், ஏனென்றால் இந்த நிறுவனங்கள் வேறு நிறுவனங்களை வாங்குவதன் மூலம் ஏகபோகத்தைப் பெற்றுவிட்டால், அவற்றைக் கட்டுப்படுத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகிவிடுகிறது." என்றும் தெரிவித்தார்.

இது அரசாங்கங்களின் தவறு என்று கிறிஸ்டினா கூறுகிறார். ஒரு புவிசார் அரசியல் விளையாட்டின் ஒரு பகுதியாக பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏகபோகமாக செயல்படுவதற்கு அனுமதித்துவிட்டோம். கூகுளின் சந்தைப் பங்கை குறைக்க அதன் போட்டி நிறுவனங்கள் என்ன செய்யும் என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

ஆப்பிள் ஒரு தேடுபொறியைத் தொடங்கப் போகிறதா? இல்லை. அதேபோல், பிங் என்றென்றும் மைக்ரோசாப்டின் இயந்திரமாக இருந்து வருகிறது, பிங்கில் AI அறிமுகப்படுத்தப்பட்டாலும் கூட, சந்தைப் பங்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எனவே, கிறிஸ்டினாவின் கருத்துப்படி, கூகுள் ஒரு ஏகபோக ஆதிக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது.

ஆனால், இந்தக் கூற்றை மறுக்கும் கூகுள் நிறுவனம், போட்டியாளர்களிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்வதாகக் கூறுகிறது. இருப்பினும், கூகுள் சர்ச், அதனுடன் போட்டியிடும் சர்ச் எஞ்சின்களை விட சிறந்தது என்பதை அமெரிக்க நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது என்பதும் உண்மை.

இப்போது அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. நீதிமன்றம் கூகுளுக்கு என்ன தண்டனை அளிக்கிறது என்பதை முடிவு செய்ய நேரம் எடுக்கும். ஆனால் நீதிமன்றத்தின் முடிவு பாதகமாக இருந்தால், மேல்முறையீடு செய்யப்போவதாக கூகுள் சர்வதேச விவகாரங்களுக்கான தலைவர் கென்ட் வாக்கர் கூறியுள்ளார்.

பிபிசி தமிழ் இணையதளம் மற்றும் யூ-டியூப் பக்கத்தில் ஒலி மற்றும் ஒளி வடிவில் வெளியாகும் உலகின் கதை என்கிற தொடரில் வெளியான ஒரு பாகத்தின் கட்டுரை வடிவம் இது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு