You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரான் அணுசக்தி தளங்களை தாக்கிய அமெரிக்காவின் சக்தி வாய்ந்த குண்டு - 200 அடி ஆழம் வரை எவ்வாறு ஊடுருவும்?
இரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட 3 அணுசக்தி தளங்கள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த தாக்குதல்களில் B-2 குண்டுவீச்சு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரானின் பாதுகாப்பான அணுசக்தி தளமாக கருதப்பட்ட ஃபோர்டோ மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை இரான் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த தளத்தை தாக்குமாறு அமெரிக்காவிடம் இஸ்ரேல் ஏற்கனவே முறையிட்டது. ஏனெனில், நிலத்தடியில் இருந்த அந்த அணுசக்தி தளத்தை தகர்க்கும் திறன் கொண்ட பங்கர் பஸ்டர் குண்டு அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது.
பி-2 ரக அதிநவீன ஸ்டெல்த் ரக குண்டுவீச்சு விமானம் மூலம் அமெரிக்கா இந்த குண்டுகளை ஃபோர்டோ அணுசக்தி தளத்தின் மீது வீசியதாக கருதப்படுகிறது.
GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் உலகின் மிகப்பெரிய அணுஆயுதம் அல்லாத "பங்கர் பஸ்டர்" ("bunker buster") வெடிகுண்டு அமெரிக்காவிற்கு மட்டுமே உள்ளது.
துல்லியமாக வழிகாட்டப்படும், 30,000 பவுண்ட் (13,600 கிலோ) எடையுள்ள இந்த வெடிகுண்டு, ஒரு மலைக்குள் ஆழமாக புதைக்கப்பட்டுள்ள இரானின் ஃபோர்டோ அணுசக்தி எரிபொருள் செறிவூட்டல் வளாகத்தை ஊடுருவிச் சென்று தகர்க்கும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது.
GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் ஆயுதம் என்ன செய்யும்? அதன் சவால்கள் என்ன? அதை எவ்வாறு பயன்படுத்த முடியும்?
அமெரிக்க அரசாங்கத்தின் கூற்றுப்படி, GBU-57A/B என்பது, "ஆழமாக புதைக்கப்பட்ட மற்றும் உறுதியாக கட்டப்பட்ட பதுங்கு குழிகள் மற்றும் சுரங்கங்களைத் தாக்கும் திறன் கொண்ட ஒரு பெரிய ஊடுருவக்கூடிய ஆயுதம்" என அறியப்படுகின்றது.
இந்த வெடிகுண்டு சுமார் ஆறு மீட்டர் நீளமுடையது. இது வெடிக்கும் முன் சுமார் 200 அடி (61 மீட்டர்) ஆழத்தில் நிலத்தின் உள்ளே ஊடுருவக்கூடியது என நம்பப்படுகிறது. இதுபோன்ற வெடிகுண்டுகள் தொடர்ச்சியாக வீசப்பட்டால், ஒவ்வொரு வெடிப்பும், நிலத்தை ஆழமாக துளையிட்டு, இலக்கைச் சேதப்படுத்தும் திறனை அதிகரிக்கிறது.
போயிங்கால் தயாரிக்கப்பட்ட எம்ஓபி (MOP), தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டது இதுவே முதன் முறையாகும். இது அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் மிஸைல் ரேஞ்ச் (White Sands Missile Range) என்ற ராணுவ சோதனை மையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.
"அனைத்து வெடிகுண்டுகளின் தாய்" என அழைக்கப்படும் 21,600 பவுண்ட் (9,800 கிலோ) எடையுள்ள Massive Ordnance Air Blast (MOAB) வெடிகுண்டை விட இது அதிக சக்தி வாய்ந்தது. இந்த MOAB, 2017 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் போருக்காகப் பயன்படுத்தப்பட்டது.
தற்போது , எம்ஓபி வெடிகுண்டை ஏவுவதற்காக கட்டமைக்கப்பட்டும், நிரலாக்கம் செய்யப்பட்டும் இருப்பது அமெரிக்காவின் B-2 ஸ்பிரிட் என்ற ஸ்டெல்த் பாம்பர் மட்டும் தான்.
B-2 என அழைக்கப்படும் இந்த போர் விமானம், நார்த்ரோப் க்ரம்மன் நிறுவனம் தயாரித்தது. அமெரிக்க விமானப்படையின் ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகவும் மேம்பட்ட போர் விமானங்களில் ஒன்றாக இந்த விமானம் கருதப்படுகின்றது.
இந்த விமானத்தின் உற்பத்தியாளரான நார்த்ரோப் க்ரம்மனின் கூற்றுப்படி, B-2 விமானம் 40,000 பவுண்டு (18,000 கிலோ) வரை சுமக்கக்கூடியது. ஆனால், இரண்டு GBU-57A/B "பங்கர் பஸ்டர்" வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் B-2 விமானத்தை வெற்றிகரமாக சோதனை செய்ததாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது. இதன் மொத்த எடை சுமார் 60,000 பவுண்டு (27,200 கிலோ).
குண்டுவீச்சுக்குப் பயன்படும் இந்த நீண்ட தூர கனரக விமானம், எரிபொருள் நிரப்பாமல் சுமார் 7,000 மைல்கள் (11,000 கிமீ) வரை பறக்கக்கூடியது. பறக்கும் நிலையில் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், அதன் வரம்பு 11,500 மைல்கள் (18,500 கிமீ) ஆக அதிகரிக்கிறது. இதன் மூலம், உலகின் எந்தப் பகுதியையும் சில மணி நேரங்களில் இந்த விமானத்தால் அடைய முடியும் என நார்த்ரோப் க்ரம்மன் கூறுகிறது.
இரான் போன்ற நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளுடன் கூடிய நாட்டிற்கு எதிராக எம்ஓபி வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டால், B-2 குண்டுவீச்சு விமானங்களுடன் கூடுதல் விமானங்களும் அதில் பங்கேற்க நேரிடும். எடுத்துக்காட்டாக, எதிரியின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எதிராக F-22 ஸ்டெல்த் விமானங்கள் பயன்படுத்தப்படலாம். அதன் பிறகு, சேதத்தை மதிப்பீடு செய்யவும், அதற்குப் பிறகும் தாக்குதல்களைத் தொடர வேண்டுமா என்பதை தீர்மானிக்கவும் டிரோன்கள் பயன்படுத்தப்படலாம் என்று பேராசிரியர் ரோஜர்ஸ் கூறுகிறார்.
இந்த எம்ஓபி வெடிகுண்டுகள் அமெரிக்காவிடம் மிகக் குறைந்த அளவே இருப்பதாக அவர் மதிப்பிடுகிறார்.
"அவர்கள் சுமார் 10 அல்லது 20 எம்ஓபி வெடிகுண்டுகளை வைத்திருக்கக்கூடும்" என்கிறார் பேராசிரியர் ரோஜர்ஸ்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு