'நான் மகிழ்ச்சியாக இல்லை என மோதிக்கு தெரியும்' - டிரம்ப் கருத்துக்கு பதில் கோரும் எதிர்க்கட்சிகள்

'நான் மகிழ்ச்சியாக இல்லை என மோதிக்கு தெரியும்' - டிரம்பின் கருத்துக்கு பதில் கோரும் எதிர்க்கட்சிகள்

பட மூலாதாரம், Reuters

ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது மற்றும் அமெரிக்காவின் வரிகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கருத்து கூறியுள்ளார்.

ரஷ்யாவுடன் இந்தியா தொடர்ந்து வர்த்தகம் செய்தால், அதன் மீதான வரிகள் விரைவில் அதிகரிக்கப்படலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

டிரம்பின் வரிகள் காரணமாக, இந்தியா இப்போது ரஷ்யாவிடமிருந்து குறைந்த எண்ணெய் வாங்குகிறது என்று டிரம்புடன் இருந்த அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் கூறினார்.

டிரம்ப் மற்றும் கிரஹாமின் கருத்துக்களைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் மத்திய பாஜக அரசைக் கண்டித்துள்ளன. இது இந்தியாவை அவமதிப்பதாகும் என்றும், பிரதமர் மோதி பதிலளிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரியுள்ளது.

அதே நேரத்தில், ஆம் ஆத்மி கட்சி, "மோதி, உங்கள் மௌனம் நாட்டின் கௌரவத்தைப் பாதிக்கிறது" என்று கூறியுள்ளது.

டிரம்பும் செனட்டரும் என்ன சொன்னார்கள்?

டிரம்பும் அமெரிக்க செனட்டரும் என்ன சொன்னார்கள்?

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, செனட்டர் லிண்ட்சே கிரஹாம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாமும் ஞாயிற்றுக்கிழமை ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ரஷ்யா- யுக்ரேன் போர் குறித்து செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தனர்.

இந்த உரையாடலின் போது, ​​அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவுகள் இதுவரை புதினுக்கு எப்படி அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது குறித்து லிண்ட்சே கிரஹாம் பத்திரிகையாளர்களிடம் கூறிக்கொண்டிருந்தார்.

இதற்கிடையில், டிரம்ப் அவரை குறுக்கிட்டு, "இது ரஷ்யாவிற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவும் தன்னைச் சிக்கலில் இருந்து விடுவித்துக்கொண்டு வருகிறது" என்று கூறினார்.

பின்னர் லிண்ட்சே கிரஹாம், " ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதால் அவர் (டிரம்ப்) இந்தியாவிற்கு 25 சதவீத வரி விதித்துள்ளார். நான் ஒரு மாதத்திற்கு முன்பு இந்தியத் தூதரின் (வினய் குவாத்ரா) வீட்டிலிருந்தேன். இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதைக் குறைத்துவருவது பற்றி அவர் பேச விரும்பினார். மேலும் வரியைத் தளர்த்துமாறு அதிபரிடம் நான் சொல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்'' என தெரிவித்தார்.

''அவர் (டிரம்ப்) இந்தியாவுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை காரணமாக, இந்தியா இப்போது ரஷ்யாவிலிருந்து கணிசமாகக் குறைந்த ரஷ்ய எண்ணெயை வாங்குகிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்."

இருப்பினும், இந்தியத் தூதரை சந்தித்த தேதியை லிண்ட்சே கிரஹாம் குறிப்பிடவில்லை.

ஆனால் 'தி இந்து' செய்தித்தாளில் வெளியான ஒரு செய்தியின்படி, டிசம்பர் 2, 2025 அன்று, வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு சென்ற அமெரிக்க செனட் குழுவில் செனட்டர் கிரஹாமும் , செனட்டர் ப்ளூமென்தாலும் இருந்தனர்.

இதற்கிடையில், தானும் செனட்டர் ப்ளூமென்தாலும் இணைந்து கொண்டு வந்துள்ள "ரஷ்யா தடைகள் மசோதா'' குறித்து லிண்ட்சே கிரஹாம் பேசினார். இந்த மசோதா அமெரிக்க செனட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாவின் முக்கிய அம்சம் என்னவென்றால், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் அல்லது யுரேனியம் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் வரை வரி விதிக்க முடியும்.

'மோதிக்கு தெரியும்'

இந்தியா

பட மூலாதாரம், Reuters

லிண்ட்சே கிரஹாமின் கருத்துக்குப் பிறகு, அவருடன் விமானத்தில் இருந்த டிரம்ப், அவரை குறுக்கிட்டு, "இந்தியா என்னை மகிழ்விக்க விரும்பியது. மோதி அடிப்படையில் மிகவும் நல்ல மனிதர். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது அவருக்குத் தெரியும், என்னை மகிழ்விப்பது முக்கியம்" என்று கூறினார்.

''இந்தியா எங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்றால் நாங்கள் விரைவில் அவர்கள் மீதான வரிகளை அதிகரிக்கக்கூடும்'' என டிரம்ப் கூறினார்.

இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள நேரத்தில் டிரம்பின் கருத்து வந்துள்ளது. ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைக்கும் என்று பிரதமர் மோதி தனக்கு உறுதியளித்ததாக டிரம்ப் முன்பு கூறியிருந்தார்.

அமெரிக்கா ஏற்கனவே இந்தியா மீது 50 சதவீத வரியை விதித்துள்ளது, அதில் 25 சதவீத வரி ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்கான 'தண்டனையாக' விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் கூறுவது என்ன?

டிரம்பின் சமீபத்திய கருத்தை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் மத்திய அரசிடமிருந்து பதில்களைக் கோருகின்றன. டிரம்பின் கருத்து "இந்தியாவை அவமதிக்கும் செயல்" என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

மேலும்''நரேந்திர மோதி இதற்குப் பதிலளித்து நாட்டிற்கு உண்மையைச் சொல்ல வேண்டும்." எனவும் காங்கிரஸ் கூறியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி எக்ஸ் பக்கத்தில், "மோதி, உங்கள் மௌனம் நாட்டின் கௌரவத்தைப் பாதிக்கிறது. நீங்கள் எதற்காக டிரம்பை மகிழ்விக்க விரும்புகிறீர்கள்?" என்று எழுதியது.

இந்தியா

பட மூலாதாரம், Getty Images

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை குறைத்த இந்தியா

டிசம்பர் மாதத்திற்கான எண்ணெய் விநியோகத் தரவைப் பார்த்தால், இந்திய நிறுவனங்கள் ரஷ்ய நிறுவனங்களிடமிருந்து எண்ணெய் வாங்குவதைக் கணிசமாகக் குறைத்திருப்பதைக் காணலாம்.

ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, இந்தியாவின் ஐந்து பெரிய சுத்திகரிப்பு நிறுவனங்கள் டிசம்பர் மாதத்திற்கான எண்ணெய் வாங்குவதற்கு எந்த ஆர்டரையும் கொடுக்கவில்லை.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய ஏற்றுமதிகளுக்கு 50 சதவீத வரியை விதித்தார்.

இதற்குப் பிறகு உடனடியாக, ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் எண்ணெய் கொள்முதல் பெரிதாகக் குறையவில்லை.

ஆனால் நவம்பர் மாதம் ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகோயில் மீது அமெரிக்கா தடைகளை விதித்த பிறகு, இந்தியாவின் பெரும்பாலான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதைக் கிட்டத்தட்ட நிறுத்திவிட்டன.

எண்ணெய் கொள்முதல் குறித்த நிகழ்நேர தரவுகளை வழங்கும் நிறுவனமான Kpler இன் கூற்றுப்படி, நவம்பர் 1 முதல் 17 வரை இந்தியா ரஷ்யாவிலிருந்து ஒவ்வொரு நாளும் 6,72,000 பீப்பாய்கள் எண்ணெயை வாங்கியது.

இது அக்டோபர் மாதத்தில் ஒரு நாளைக்கு வாங்கப்பட்ட 18 லட்சம் பீப்பாய்களை விட மிகக் குறைவு

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு