"அன்புள்ள மான் விழியே" மூலம் தமிழ்நாட்டில் பிரபலமான பழம்பெரும் நடிகை ஜமுனா காலமானார்

தமிழிலும் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக விளங்கிய ஜமுனா உடல்நலக் குறைவால் ஹைதராபாதில் காலமானார். அவருக்கு வயது 86.

50களிலும் 60களிலும் தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கிய திரைக்கலைஞர் ஜமுனா வயோதிகத்தாலும் உடல்நலக் குறைவாலும் ஹைதராபாதில் காலமானார்.

சில நாட்களுக்கு முன்பு அவர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்திருந்தார். ஆனால், அதற்குப் பிறகு அவரது உடல்நலம் தொடர்ந்து சீர்கெட்டுப் போயிருந்தது. தொடர் சிகிச்சையில் இருந்த அவர், இன்று காலமானார்.

கர்நாடக மாநிலம் ஹம்பியில் நிப்பனி ஸ்ரீநிவாஸ ராவ் - கௌசல்யா தேவி தம்பதியின் மகளாகப் பிறந்த ஜமுனாவின் இயற்பெயர் ஜனா பாய்.

ஆனால், ஜாதகத்தின்படி அவருக்கு ஒரு நதியின் பெயரைச் சூட்டினால், நல்லது என்று கூறியதால், பெயர் ஜமுனா என மாற்றப்பட்டது. அவருக்கு ஏழு வயதாக இருக்கும்போது இவர்களது குடும்பம் கர்நாடகத்திலிருந்து தொழில் காரணமாக ஆந்திர மாநிலம் குண்டூருக்கு குடிபெயர்ந்தது.

ஜமுனா சிறுவயதிலிருந்தே நாடகங்களில் நடித்துவந்தார். மா பூமி என்ற நாடகத்தில் அவரது நடிப்பைப் பார்த்த கரிகிபடி ராஜாராவ் புட்டில்லு என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பை அளித்தார்.

இந்தப் படம் 1952இல் வெளிவந்தது. ஒய்.ஆர்.சாமி இயக்கத்தில் 1954இல் வெளிவந்த 'பணம் படுத்தும் பாடு' என்ற படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார் ஜமுனா.

ஆனால், எல்.வி. பிரசாத் இயக்கத்தில் ஜெமினி கணேசன், சாவித்ரியுடன் அவர் நடித்த மிஸ்ஸியம்மா திரைப்படம்தான் அவரை தமிழ்த் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக்கியது.

தங்கமலை ரகசியம் படத்தில் "அமுதைப் பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ" பாடலும் குழந்தையும் தெய்வமும் படத்தில் ஜெய்சங்கருடன் அவர் நடித்திருந்த "அன்புள்ள மான் விழியே" பாடலும் அவரை தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது.

தமிழில் தெனாலிராமன், குடும்ப விளக்கு, தங்கமலை ரகசியம், தாய் மகளுக்குக் கட்டிய தாலி, குழந்தையும் தெய்வமும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தமிழில் அவர் நடித்த கடைசித் திரைப்படம் தூங்காதே தம்பி தூங்காதே. 1983இல் வெளிவந்த இந்தப் படத்தில் அவர் கமல்ஹாசனின் தாயாக நடித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் கன்னடம், இந்தி ஆகிய திரைப்படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். தெலுங்கில் 88 படங்கள், தமிழில் 27 படங்கள் உள்பட மொத்தமாக 198 படங்களில் அவர் நடித்திருக்கிறார்.

1980களில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், 1989ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ராஜமுந்திரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1991ஆம் ஆண்டு தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டார் என்றாலும் தோல்வியைச் சந்தித்தார்.

இதற்குப் பிறகு சில காலம் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், 90களின் பிற்பகுதியில் பா.ஜ.கவுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டார்.

ஃபில்ம் ஃபேர் விருது, தமிழ்நாடு அரசின் எம்.ஜி.ஆர். விருது, ஆந்திர அரசின் என்.டி.ஆர். விருது ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார். 2010ஆம் ஆண்டில் மத்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் விருதை அளித்து கௌரவித்தது.

தனது திரைவாழ்வின் உச்சத்தில் இருந்தபோது, ஜுலூரி ரமணா ராவ் என விலங்கியல் துறை பேராசிரியரை ஜமுனா திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு வம்சி, ஷ்ரவந்தி என இரு குழந்தைகள் இருக்கின்றனர்.

ஜமுனாவின் உடல், ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஹைதராபாதில் உள்ள ஃபிலிம் சேம்பரில் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு, தமிழ், தெலுங்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: