பிகாரில் உயர்சாதி, ஒபிசி, தலித் வாக்குகள் யாருக்கு சென்றன? ஓர் அலசல்

    • எழுதியவர், சஞ்சய் குமார் (பேராசிரியர் மற்றும் தேர்தல் ஆய்வாளர்)
    • எழுதியவர், விபா அத்ரி (ஆராய்ச்சியாளர், பொதுக் கொள்கை)

2025 பிகார் சட்டமன்றத் தேர்தல், மிகவும் வித்தியாமான தேர்தல்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

சாதி, பிற காரணிகளுடன் இணைந்து, தேர்தல் முடிவை எவ்வாறு தீர்க்கமாக பாதித்தது என்பதை முடிவுகள் காட்டுகின்றன.

பல சாதி குழுக்களும் ஒரே கூட்டணிக்கு ஆதரவாக இருந்ததை முடிவுகள் காட்டுகின்றன.

2020 சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது, இந்தத் தேர்தலில் சில மாற்றங்களைப் பார்க்க முடிகிறது. இது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சாதகமாக இருந்தது.

உயர் சாதியினரின் ஆதரவு

சமீபத்திய தரவுகள், லோக்நிதி அமைப்பின் முந்தைய தேர்தல்களின் சாதி வாரியான தரவுகளுடன் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. இது இந்த மாற்றங்களின் அளவு மற்றும் திசை இரண்டையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

பிகாரின் தேர்தல் அரசியல் எந்த திசையில் நகர்கிறது என்பதை காட்டுவதாக இது இருக்கிறது.

2025ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான உயர் சாதியினர் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்தனர். பிராமணர்களின் 82% வாக்குகள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக கிடைத்தது.

இவர்களுக்கு அடுத்ததாக பூமிஹார்களின் (நில உடமையாளர்கள்) 74% வாக்குகளும், பிற உயர் சாதியினரின் 77% வாக்குகளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கிடைத்தது.

இதற்கு நேர்மாறாக 2020-ஆம் ஆண்டில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உயர் சாதியினரின் ஆதரவு 52% முதல் 59% வரை தான் இருந்தது. இதன் பொருள், அவர்களில் கணிசமான பகுதியினர் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பக்கம் சாய்ந்துவிட்டனர்.

ஒட்டுமொத்தமாக இந்தத் தேர்தலில் உயர் சாதியினரின் கிட்டத்தட்ட முழு வாக்கு வங்கியும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பலமாய் மாறியிருப்பதைக் காட்டுகிறது.

உயர் சாதியினரை பின்பற்றிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்

பிற்படுத்தப்பட்ட சாதியினரின் வாக்கு முறையிலும் இதேபோன்ற தெளிவான மற்றும் வலுவான ஒற்றுமை காணப்பட்டது. முதலமைச்சர் நிதிஷ் குமாரின் பாரம்பரிய அடித்தளமாகக் கருதப்படும் குர்மி-கோரி சமூகங்களின் 71% வாக்குகள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குச் சென்றது.

அதே நேரத்தில், பல்வேறு பிற்படுத்தப்பட்ட சாதி குழுக்களிடமிருந்து மொத்தம் 68% வாக்குகள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கிடைத்தது.

2020 தேர்தல்களில் இந்த அளவு ஆதரவு இல்லை, அந்த நேரத்தில், குர்மி-கோரியில் 66% பேரும், மீதமுள்ள ஓபிசி சாதிகளில் 58% பேரும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்தனர், மீதமுள்ள வாக்குகள் வெவ்வேறு கட்சிகளுக்கு இடையே பிரிந்து சென்றன.

இந்த முறை 'MY' என்ன ஆனது?

ஆர்ஜேடி தலைமையிலான மகா கூட்டணி இந்த முறையும் அதன் பாரம்பரிய 'MY' (இஸ்லாமியர்கள்-யாதவர்கள்) வாக்காளர் தளத்திலிருந்து கணிசமான ஆதரவைப் பெற்றது, இருப்பினும் இது 2020 உடன் ஒப்பிடும்போது கணிசமாக குறைந்திருக்கிறது.

இந்த ஆண்டு, 74 சதவீத யாதவர்களும் 69 சதவீத இஸ்லாமியர்களும் மகா கூட்டணியை ஆதரித்தனர், இருப்பினும் இது முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிடும்போது குறைவு.

கடந்த தேர்தலில், 84 சதவீத யாதவர்களும் 76 சதவீத முஸ்லிம்களும் மகா கூட்டணியை ஆதரித்தனர். சரிவு இருந்தாலும்கூட உண்மையில் இரு சமூகங்களிடமிருந்தும் மகா கூட்டணிக்கு ஓரளவு ஆதரவு கிடைத்துள்ளது.

மகா கூட்டணியின் வாக்கு வங்கி பலவீனமடைந்தது, அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் (AIMIM) கட்சிக்கு சாதகமாக மாறியுள்ளது. 2020-இல் பெற்ற வெற்றியை மீண்டும் நிரூபித்த ஏஐஎம்ஐஎம், இந்த முறை ஐந்து இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இஸ்லாமிய மக்கள் தொகை 35 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள இடங்களில் ஓவைசிக்கு வெற்றி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமோக வெற்றிக்கு மத்தியிலும், ஏஐஎம்ஐஎம் பெற்ற வெற்றியானது, இஸ்லாமிய வாக்காளர்களில் குறிப்பிட்ட பகுதியினர் தங்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துவதற்கு நேரடி அரசியல் பிரதிநிதித்துவத்தை விரும்புகிறார்கள் என்பதைக் குறிக்கிறது.

'MY' சமூகங்களிடையே மகா கூட்டணிக்கு தற்போதும் ஆதரவு வலுவாக இருந்தபோதிலும், 2025 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் யாதவர்கள் மற்றும் இஸ்லாமிய வாக்காளர்களிடையே சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க மாற்றத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

தலித் வாக்கு வங்கியின் ஆதரவு யாருக்கு?

முந்தைய தேர்தல்களை விட, இந்த ஆண்டுத் தேர்தலில் தலித் வாக்குகளில் மிகத் தெளிவான மாற்றம் காணப்பட்டது.

லோக் ஜனசக்தி கட்சிக்கு வழக்கமாக ஆதரவளிக்கும் பாஸ்வான்/துசாத் சமூகத்தினர், இம்முறை தேசிய ஜனநாயகக் கூட்டணியையே பெருமளவில் ஆதரித்தனர். அவர்களின் 62 சதவீத வாக்குகள் இக்கூட்டணிக்குச் சென்றன.

2020-ஆம் ஆண்டு தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியும், லோக் ஜனசக்தி கட்சியும் தனித்தனியாக போட்டியிட்டபோது, ​​பாஸ்வான் சமூகத்தினரின் 31 சதவீத வாக்குகள் லோக் ஜனசக்தி கட்சிக்கு ஆதரவாகவும், 18 சதவீத வாக்குகள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாகவும் இருந்தது.

இந்த வகையில் 2025 தேர்தல் முடிவு, பாஸ்வான் சமூகத்தின் வாக்குகள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக இருப்பது தெரிய வந்துள்ளது.

மீதமுள்ள தலித் சாதிகளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை நோக்கிச் சாய்ந்திருப்பது போலத் தெரிந்தது, அங்கு அவர்களுக்குக் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கிடைத்தன.

மாறாக, 2020 இல், தலித் வாக்குகள் மிகவும் பிளவுபட்டிருந்தன, மேலும் எந்தவொரு கூட்டணிக்கும் பெரும்பாலான தலித் சமூகங்களின் ஒருமித்த ஆதரவு கிடைக்கவில்லை.

எனவே, 2025 ஆம் ஆண்டின் தேர்தல் முடிவானது, முந்தைய தேர்தல்களைக் காட்டிலும், தலித் வாக்காளர்களிடையே ஒரு தெளிவான ஒன்றுபட்ட போக்கை பிரதிபலிக்கிறது.

சாதி - நல்லாட்சி?

சாதி மற்றும் சமூகம் ஆகியவை வாக்களிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தியதா என 2025 சட்டமன்றத் தேர்தலில் பிகார் வாக்காளர்களிடம் கேட்கப்பட்டக் கேள்விக்கு, ​​45 சதவீதம் பேர் ஆம் என்றும், 51 சதவீதம் பேர் இல்லை என்றும் தெரிவித்தனர். மீதமுள்ள 4 சதவீதம் பேர் பதிலளிக்கவில்லை.

மற்றொரு கேள்வியில், இரு விஷயங்களை முன்வைத்து அவற்றில் வாக்காளர்கள் எதில் அதிகம் உடன்படுகிறார்கள் என்று கேட்கப்பட்டது.

'நல்லாட்சி மற்றும் வளர்ச்சியா? அல்லது சாதி மற்றும் சமூகமா? 'என்பதுதான் அக்கேள்வி

இதற்கு பதிலளித்தவர்களில் பத்தில் ஆறு பேர் (சுமார் 60%) நல்லாட்சி மற்றும் வளர்ச்சியை முதன்மையாக கருதினார்கள். பத்தில் மூன்று பேர் (சுமார் 30%) சாதி மற்றும் சமூகமே தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகளாக இருப்பதாக நம்பினர்.

வளர்ச்சியே அனைவரின் பரவலான விருப்பமாக இருந்தபோதிலும், வாக்களிப்பதில் சாதியும் ஒரு குறிப்பிடத்தக்க காரணியாகக் கருதப்படுவதை இது குறிக்கிறது.

இதன் பொருள், பிகாரில் தேர்தல் முடிவுகளில் சாதியும் குறிப்பிடத்தக்க காரணியாக உள்ளது.

மொத்தமாகப் பார்க்கும் போது, பிகாரில் வாக்குப் பதிவு முறையில் சாதி முக்கியப் பங்காற்றுவதை தரவுகள் காட்டுகின்றன

இந்த செல்வாக்கு, வாக்காளர்களை தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் மகா கூட்டணி போன்ற பெரிய கூட்டணிகளுக்கு ஆதரவாக ஒன்றிணைத்தது.

இவை அனைத்தும் எழுத்தாளர்களின் தனிப்பட்ட கருத்துக்களே

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு