செங்கோட்டை அருகே வெடிப்பு: இஸ்ரேல், சீனா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட உலக நாடுகள் கூறியது என்ன?

டெல்லியில் செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்புச் சம்பவத்தில் தற்போது வரை குறைந்தது 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பற்றி இஸ்ரேல், சீனா, இரான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் அறிக்கை வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல்:

இதில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இஸ்ரேலின் இரங்கல்களைத் தெரிவிப்பதாக அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எனது அருமை நண்பர் மோதிக்கும், இந்தியாவின் தைரியமான குடிமக்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும், நானும் ஒட்டுமொத்த இஸ்ரேலும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த துக்கமான தருணத்தில் இஸ்ரேல் உங்களுடன் துணை நிற்கிறது. இந்தியாவும் இஸ்ரேலும் உண்மை மீது கட்டமைக்கப்பட்ட பழமையாக நாகரீகங்களாகும். தீவிரவாதம் நம்முடைய நகரங்களைத் தொடலாம், ஆனால் நம்முடைய ஆன்மாவை எப்போதும் அசைக்க முடியாது. நமது தேசங்களின் ஒளி நமது எதிரிகளின் இருளை குத்திச் செல்லும்." எனத் தெரிவித்திருந்தார்.

சீனா:

சீன வெளியுறவு அமைச்சகமும் டெல்லியில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவம் பற்றி கருத்து தெரிவித்துள்ளது.

"டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நிகழ்ந்த வெடிப்பில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்களின் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்." என சீன செய்தித் தொடர்பாளர் பத்திரிகையாளர் லின் ஜியான் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார்.

"அன்பிற்குரியவர்களை இழந்தவர்களுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய விளைகிறோம்." என்றும் கூறினார்.

ஆப்கானிஸ்தான்

ஆப்கன் அரசும் இந்த வெடிப்புச் சம்பவத்தைக் கண்டித்துள்ளது.

வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "டெல்லியில் செங்கோட்டை பகுதியில் நடைபெற்ற இந்த வெடிப்பை ஆப்கன் இஸ்லாமிய அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம் கண்டிக்கிறது. இந்த வெடிப்பு பொதுமக்கள் பலரின் உயிரைப் பறித்ததோடு பலரும் காயமடைந்துள்ளனர்." எனத் தெரிவித்துள்ளது.

மேலும் அதில், "உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் அரசுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை அமைச்சகம் தெரிவித்துக் கொள்கிறது. காயமடைந்தவர்கள் விரைவாக உடல்நலம் பெற விளைகிறோம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரான்

இந்தியாவில் உள்ள இரான் தூதரகம், விபத்தில் இந்திய குடிமக்கள் உயிரிழந்ததற்கும் காயமடைந்ததற்கும் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது.

"அரசுக்கும், இந்திய மக்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் இரான் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறது," என இரான் தூதரகத்தின் சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிப்பில் காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டும் என்றும் இரான் தெரிவித்துள்ளது.

வங்கதேசம்:

டெல்லி வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு வங்கதேசம் தனது இரங்கல்களைத் தெரிவித்துள்ளது.

"டெல்லியில் செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் என் சார்பாகவும் என்னுடன் வங்கதேச உயர் ஆணையத்தில் பணிபுரிபவர்கள் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என இந்தியாவுக்கான வங்கதேச உயர் ஆணையர் ரியாஸ் ஹமிதுல்லா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், "பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து அவர்களுக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம். இந்த கடினமான நேரத்தில் வங்கதேசத்துடன் இந்தியா துணை நிற்கிறது." என்று தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா:

இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையர் பிலிப் க்ரீன் இந்தச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "டெல்லியில் செங்கோட்டை அருகே நிகழ்ந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களுக்கும். எங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய விழைகிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ்:

இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தியர் மாத்தோ தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

"பிரான்ஸ் அரசு மற்றும் மக்கள் சார்பாக செங்கோட்டை வெடிப்பில் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய விளைகிறேன்," என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

துருக்கி

இந்த வெடிப்புச் சம்பவத்தைக் கண்டித்து துருக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

"நவம்பர் 10-ஆம் தேதி டெல்லியில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தில் பல உயிர்கள் பறிபோனதை கேட்க மிகவும் சோகமாக உள்ளது. தங்களின் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கும் இந்திய மக்களுக்கும் எங்களின் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்." என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், "துருக்கி, உலக அச்சுறுத்தலாக உள்ள அனைத்து விதமான தீவிரவாதத்திற்கும் எதிரான சண்டையில் ஒத்துழைக்கும் தனது நிலைப்பட்டை மீண்டுமொரு முறை தெரிவிக்கிறது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு எச்சரிக்கை

டெல்லியில் நிகழ்ந்த கார் வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

"நவம்பர் 10-ஆம் தேதி டெல்லியில் உள்ள செங்கோட்டை ரயில் நிலையம் அருகே கார் ஒன்று வெடித்தது. இதில் உயிரிழப்புகள் இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வெடிப்புக்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை என்றாலும் இந்திய அரசு பல மாநிலங்களை தீவிர எச்சரிக்கையில் வைத்துள்ளது." என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்க குடிமக்கள் டெல்லியில் உள்ள செங்கோட்டை மற்றும் சாந்த்னி சௌக் பகுதிகளையும் கூட்டத்தையும் தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு