சீமான் மீதான புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றது ஏன்? பின்னணி என்ன?

    • எழுதியவர், ச. பிரசாந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாக நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துகொண்டதாகவும், தானும் சீமானும் கணவன்-மனைவியாக வாழ்ந்ததாகவும், தனது அனுமதி இல்லாமலேயே சீமான் தனக்கு ஏழு முறை கருச்சிதைவு செய்ததாகவும், நடிகை விஜயலட்சுமி சமீபத்தில் சென்னை காவல்துறையினரிடம் புகார் கொடுத்திருந்தார்.

இந்த விவகாரத்தில் சீமானுக்கு சென்னை வளசரவாக்கம் போலீசார் சார்பில் 2 முறை சம்மன் அனுப்பபட்டது.

தன் மீதான குற்றச்சாட்டுகளை, சீமான் மறுத்து வருகிறார். “விஜயலட்சுமி விவகாரத்தில் நான் மெளனமாக இருக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். நான் வெடித்துச் சிதறினால் யாரும் தாங்க மாட்டீர்கள்.

பெரிய லட்சியங்களுடன் பயணித்துக் கொண்டிருக்கும் என்னை அவதூறு செய்கிறார்கள். என்னை எதிர்கொள்ள முடியாதவர்கள் விஜயலட்சுமியை வைத்து அரசியல் செய்கிறார்கள். இது எனக்கு எதிரான அரசியல் கட்சிகளின் சதி,” என்றும் சீமான் கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய விஜயலட்சுமி, தான் சீமான் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும் யாரும் கட்டாயப்படுத்தியோ, மிரட்டியோ வழக்கை வாபஸ் பெறவில்லை என்றும் தானாகவே வாபஸ் பெறுவதாகவும் கூறியுள்ளார்.

சீமானிடம் பேசியதாகக் குறிப்பிட்ட அவர், “வழக்கு எனக்கு திருப்திகரமாக இல்லை. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் மெத்தனமாகச் செயல்பட்டனர். கடைசியில் சீமான் தான் சக்திவாய்ந்தவராக இருக்கிறார்.

தமிழ்நாட்டில் சீமானுக்கு அதிகாரம் உள்ளது. அவரை எதுவும் செய்ய முடியாது. என் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன். சீமான் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும்,” என்றார்.

வழக்கை வாபஸ் பெறுவதற்காகப் பணம் எதையும் வாங்கவில்லை எனக் கூறிய அவர், “சீமானை எதிர்கொள்ள எனக்குப் போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை. அதிகாரத்தில் இருப்பவரை ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிந்துகொண்டேன். திமுகவால் சீமானை கைது செய்ய முடியுமா என்று தெரியவில்லை.

சாதாரண நபர் மீது புகார் அளித்திருந்தால் 24 மணிநேரத்தில் விசாரணைக்கு அழைத்து வந்திருப்பார்கள். சீமானை அழைத்து வர முடியவில்லை. எனவே, நான் போராடுவது வீண். இந்த விவகாரத்தில் வெளியே சொல்ல முடியாத இன்னல்களை எதிர்கொண்டேன்,” என்று தெரிவித்தார்.

பின்னணி என்ன?

தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ள சென்னையைச் சேர்ந்த நடிகை விஜயலட்சுமி, ‘‘சீமான் என்னை திருமணம் செய்து ஏமாற்றியதுடன், என் அனுமதியின்றி கருவைக் கலைத்துள்ளார்,’’ எனக் கூறி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, 2011இல் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்திருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை, ஆரம்பம் முதலே சீமான் மறுத்து வருகிறார். அவ்வப்போது இந்த விவகாரம் செய்திகளில் வெளியாகி அரசியல் களத்தில் பேசுபொருளாவதும், பிறகு அமைதியாவதும் கடந்த பத்தாண்டுகளாக நடந்து வருகிறது.

இப்படியான நிலையில் சீமான் மீது, நடிகை விஜயலட்சுமி ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார் அளித்தார்.

“நான் சினிமாவில் நடித்து சேர்த்து வைத்திருந்த 60 லட்சம் ரூபாய் பணம், 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளைப் பெற்றுக்கொண்டார். எனக்குத் தெரியாமல் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நான் அளித்த புகாரின் பேரில், 2011இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மதுரை செல்வம் என்பவர் எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கிறார்.

சீமான் மீதும், என்னை மிரட்டும் மதுரை செல்வம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என விஜயலட்சுமி தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

விஜயலட்சுமியின் புகாரின் பேரில் சீமான் மீது போலீஸார், பாலியல் வல்லுறவு, மோசடி, மிரட்டல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்த விவகாரம் அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், புகார் தொடர்பாக விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

போலீசார் விஜயலட்சுமியை நேரில் வரவழைத்து, 8 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தி, ஆதாரங்களைப் பெற்று, திருவள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் அவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்.

விஜயலட்சுமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், விஜயலட்சுமி மற்றும் அவருக்கு ஆதரவாக வந்த தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி ஆகியோர் மீது, நாம் தமிழர் கட்சியினர் மதுரையில் அவதூறு வழக்குகள் பதிவு செய்ததுடன், ‘விஜயலட்சுமி பணம் பறிப்பதற்காக சீமான் மீது புகார் கொடுத்துள்ளார்,’ எனக் கூறி, சமூக ஊடகங்களில் வீடியோக்களையும் பதிவேற்றினர்.

நேரில் ஆஜராகும்படி சீமானுக்கு சம்மன்

விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், செப்டம்பர் 7ஆம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் செப்டம்பர் 8ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு, ‘விஜயலட்சுமி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. வழக்கு தொடர்பான விசாரணையைச் செய்ய வேண்டியுள்ளது.

செப்டம்பர் 9ஆம் தேதி காலை, 10:30 மணிக்குள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும்,’ என எழுதப்பட்ட சம்மன் ஒன்றை, பாலவாக்கம் சக்திமூர்த்தி அம்மன் நகரில் உள்ள சீமானிடம் வளசரவாக்கம் போலீஸார் நேரில் வழங்கினர். எனினும் சீமான் ஆஜராகவில்லை.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி சில ஊடகங்களில் பேட்டியளித்திருந்தார். மேலும், தனக்கு நாம் தமிழர் கட்சியினர் கொலை மிரட்டல் விடுப்பதாக வீரலட்சுமி போலீசில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வீரலட்சுமி, சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை வைத்தார். நாம் தமிழர் கட்சியினர் தன்னை பற்றி இழிவாக பேசுவதாகவும் தனக்கு வேறு முகம் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இதற்கு நேற்று பதிலளித்து பேசிய சீமான், தனக்கும் விஜயலட்சுமிக்கும் இடைப்பட்ட பிரச்னைக்கு நடுவே வீரலட்சுமி யார் என்று கேள்வி எழுப்பினார் .

ஜனநாயகவாதியாக தற்போது தாம் உள்ளதாகவும் தனக்கு வேறு ஒரு முகம் உள்ளதாகவும் கூறிய அவர் சிரிக்க, சிரிக்க பேசுவதாக நினைக்க கூடாது. நான் மிகவும் கோபக்காரன். என்னை குறித்து என்ன வேண்டுமானாலும் பேசி விடலாம் என்று நினைக்கிறார்கள். எனக்கு பிறப்பிலேயே வீரம் இருக்கிறது. லட்சுமிதான் இல்லை என்பதால், தனலட்சுமி, தாராளலட்சுமி என எத்தனை லட்சுமிகள் வந்தாலும் ஏற்றுக் கொள்வேன். அவதூறுகளால் என்னை அழிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: