'வெள்ளைத் தங்கம்' எனப்படும் ஒட்டகப் பால் பசு அல்லது எருமை பாலை விட எந்த வகையில் சிறந்தது?

பட மூலாதாரம், Mahesh Garva/Sahjivan
- எழுதியவர், அபூர்வா அமீன்
- பதவி, பிபிசி குஜராத்திக்காக
"ஒட்டகம் ஒரு செடியை உண்ணும், ஆடு ஒரு கூழாங்கல்லை உண்ணும்" என்ற சொலவடை குஜராத்தின் பல கிராமங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.
கட்ச் ஒட்டகங்கள் பல்வேறு வகையான தாவரங்களை உணவாக உட்கொள்வதால், அதன் பால் 'வெள்ளை தங்கம்' என்று அழைக்கப்படுகிறது.
ஒட்டகப் பால் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகச் சிறந்தது எனக் கருதப்படுகிறது. இது பல சிக்கலான நோய்களைக் குணப்படுத்தும் என்று கூறப்படுவதுடன், ஒரு 'முழுமையான உணவில்' இது தனி இடத்தைப் பிடித்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
பிபிசி இது குறித்து நிபுணர்களிடம் பேசி ஒட்டகப் பாலின் நன்மைகள் பற்றிய தகவல்களைக் கண்டறிந்தது.
இந்தியாவின் ஒட்டக எண்ணிக்கையில் 90 சதவீதம் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ளன. இருப்பினும், ஒட்டகங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது கவலைக்குரிய விஷயமாக உள்ளது.
இதுவரை அவை போக்குவரத்துக்காகவும், பொருட்களை ஏற்றிச் செல்லவும் பயன்படுத்தப்பட்டன. ஆனால், இப்போது ஒட்டகப் பாலின் பயன்பாடு பரவலாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
உலகின் பல பகுதிகளில், குறிப்பாக வறண்ட மற்றும் பகுதியளவுக்கு வறண்ட பகுதிகளில், ஒட்டகப் பால் மக்களின் முக்கிய உணவின் ஒரு அங்கமாக உள்ளது.
'ஸ்க்ரோல்' செய்தி இணையதளத்தின் அறிக்கையின்படி, இந்தியா ஆண்டுதோறும் சுமார் 7,000 டன் ஒட்டகப் பாலை உற்பத்தி செய்கிறது, இது உலகளாவிய உற்பத்தியில் 0.2 சதவீதத்திற்கும் குறைவாகும்.
இந்தியா 1984 ஆம் ஆண்டு தேசிய ஒட்டக ஆராய்ச்சி மையத்தை நிறுவியது.
இந்தியாவில் 1970-களில் சுமார் 11 லட்சமாக இருந்த ஒட்டகங்களின் எண்ணிக்கை, நாற்பதாண்டுகளில் 75% குறைந்து வெறும் 2.5 லட்சமாகியுள்ளது (அக்டோபர் 2019-இல் வெளியிடப்பட்ட 20-வது கால்நடை கணக்கெடுப்பு தரவுகளின்படி). 2012 மற்றும் 2019 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் ஒட்டகங்களின் எண்ணிக்கை 37% குறைந்துள்ளது என்று அறிக்கையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஒட்டகப் பால் பசு அல்லது எருமை பாலை விட எந்த வகையில் சிறந்தது?

பட மூலாதாரம், Mahesh Garva/Sahjivan
சவுதி ஜர்னல் ஆஃப் பயாலஜிக்கல் சயின்ஸில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் படி, ஒட்டகங்களில் இரண்டு வகைகள் உள்ளன.
இரண்டு திமில்கள் கொண்ட ஒட்டகம் (கேமலஸ் பாக்ட்ரியானஸ்) மற்றும் அரேபிய அல்லது ஒற்றைத் திமில் கொண்ட டிரோமெடரி ஒட்டகம் (கேமலஸ் ட்ரோமெடாரியஸ்).
இந்த ஆராய்ச்சியின் படி, ஒட்டகப் பாலில் பசுவின் பாலை விட மூன்று முதல் ஐந்து மடங்கு அதிகமாக வைட்டமின் சி உள்ளது. இதன் பிஹெச் அளவு 6.2 முதல் 6.5 வரை இருக்கும், இது பசுவின் பாலின் அளவை (6.5-6.7) விட சற்று குறைவாகும்.
பசு மற்றும் எருமைப் பாலில் காணப்படும் 'பீட்டா-லாக்டோகுளோபுலின்' என்ற புரதம், பலருக்கு (குறிப்பாகச் சிறு குழந்தைகளுக்கு) ஒவ்வாமையை ஏற்படுத்துவதற்கு முதன்மைக் காரணமாகக் கருதப்படுகிறது.
தாய் பாலில் இந்த பீட்டா-லாக்டோகுளோபுலின் புரதம் இருப்பதில்லை.
ஒட்டகப் பாலின் புரத அமைப்பு, பசுவின் பாலை விட மனிதப் பாலுடன் அதிக ஒற்றுமையைக் கொண்டுள்ளது.
ஒட்டகப் பாலில் பீட்டா-லாக்டோகுளோபுலின் இல்லாததால், இது எளிதில் செரிமானமாகிறது.
பால் குடித்த பிறகு வாயுத் தொல்லை, அசிடிட்டி அல்லது வயிறு கனமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படுபவர்களுக்கு ஒட்டகப் பால் ஒரு சிறந்த மாற்றாகும். இதில் பசு அல்லது எருமைப் பாலை விட மிகக் குறைந்த அளவே கொழுப்பு உள்ளது.
ஒட்டகப் பாலில் வைட்டமின் பி1, பி2 மற்றும் சி போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதில் பசுவின் பாலை விட மூன்று முதல் ஐந்து மடங்கு அதிக வைட்டமின் சி இருப்பதால், வறண்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இது உணவின் முக்கியப் பகுதியாக அமைகிறது.
இதுகுறித்து மருத்துவ ஆலோசகர் பிரசாந்த் பனாரா பிபிசியிடம் கூறுகையில், "ஒட்டகப் பால் மனிதப் பாலுக்கு மிகவும் நெருக்கமானது. இதில் போதுமான அளவு வைட்டமின் பி12, துத்தநாகம், கால்சியம், புரதம் மற்றும் நிறைவுற்ற புரதம் உள்ளது. இதில் எந்தவிதமான தீமைகளும் இல்லை. சர்க்கரை நோய்க்கும் ஒட்டகப் பால் மிகவும் பயனுள்ளதாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது" என்றார்.
மேலும் "இதன் தனித்துவமான பண்புகள் காரணமாக, லாக்டோஸ் ஒவ்வாமை இருப்பவர்களுக்கும் இது நன்மை பயக்கும். இந்தப் பால் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது"என்றும் குறிப்பிட்டார்.
உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர், முனைவர் பூர்வி பரிக் பிபிசியிடம் கூறுகையில், "எல்லா பாலுக்கும் உடல் சமமாக எதிர்வினை ஆற்றுவதில்லை. ஒட்டகப் பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எலும்பு வலிமை, தசை மற்றும் நரம்பு சமநிலைக்கு உதவுகின்றன"என்றும்,
"ஒட்டகப் பால் ஏ2 வகையைச் சேர்ந்தது, பீட்டா-லாக்டோகுளோபுலின் இல்லாதது, வைட்டமின் சி, துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது, மேலும் கொழுப்பு மிகக் குறைவானது"என்றும் தெரிவித்தார்.
குஜராத்தில் ஒட்டகப் பால் வியாபாரம் செய்வது யார்?

பட மூலாதாரம், Mahesh Garva/Sahjivan
குஜராத்தில் முக்கியமாக காராய் மற்றும் கச்சி என இரண்டு வகையான ஒட்டக இனங்கள் காணப்படுகின்றன. இந்தியா முழுவதும் மொத்தம் ஒன்பது வகையான ஒட்டக இனங்கள் உள்ளன.
கட்ச் ஒட்டக வளர்ப்போர் சங்கத்தின் தலைவர் ஆஷாபாய் ரபாரி கூறுகையில், "கட்ச் பகுதியில் சுமார் 350 குடும்பங்கள் ஒட்டக வளர்ப்பில் ஈடுபட்டுள்ளன. ஒரு ஒட்டகம் நாளொன்றுக்கு 4 முதல் 5 லிட்டர் பால் கொடுக்கிறது," என்றார்.
ஒட்டகங்கள் மற்றும் அவற்றைப் பராமரிப்பவர்களுக்காகப் பணியாற்றும் 'சஜீவன்' அமைப்பைச் சேர்ந்த மகேஷ்பாய் கர்வா கூறுகையில், "கட்ச் மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் 100 குடும்பங்கள் இந்த ஒட்டக வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளன," என்றார்.
ஒட்டகங்கள் அகேசியா மரத்தைத் தவிர, காரி ஜார், மிதி ஜார், தேசி அகேசியா, குதி வால், செரியா, பூமித் செரியா, கெர்டோ, உய்ன், குந்தர், கங்கனி, தோர், போர்டி, கெர், வேம்பு, காரியோ, கிஜ்டோ, ஃபாக், ஃபுட்டி வால், ஃபாக்வெல், ரதிவால், லாய், லானோ, லியார், விகாடோ, தமுர், வட் மற்றும் டங்காரோ உள்ளிட்ட பல வகையான தாவரங்களை உணவாக உட்கொள்கின்றன.
இதனால், ஒட்டகப் பால் உயர் தரமானதாகவும், ஊட்டச்சத்து மிக்கதாகவும் கருதப்படுகிறது.
கர்வா மேலும் கூறுகையில், "குஜராத்தில் 'ஃபகிரானி ஜாட்' மற்றும் 'ரபாரி' சமூகத்தினர் ஒட்டக வளர்ப்புடன் தொடர்புடையவர்கள். இது தவிர, கட்ச்சின் கவாடா பகுதியில் உள்ள 'சமா' சமூகத்தினரும் ஒட்டக வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்," என்றார்.
குஜராத்தில் ஒட்டகப் பால் சேகரிக்கப்படும் முறை குறித்து மகேஷ்பாய் கர்வா கூறுகையில், "தற்போது கட்ச் மாவட்டத்தில் முக்கியமாக ஐந்து இடங்களில் பால் சேகரிக்கப்படுகிறது. இதில் ராப்பர்-கோட்லா சக்கா, நகத்ரானா, கட்சீசா மற்றும் தயாபார் ஆகிய இடங்களில் அமைந்துள்ள பால் சங்கங்கள் அடங்கும்," எனத் தெரிவித்தார்.
இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் சின்னம்

பட மூலாதாரம், Mahesh Garva/Sahjivan
கட்ச்சில் ஒட்டகங்கள் குறித்த ஒரு பிரபலமான நாட்டுப்புறக் கதையைப் பற்றி மகேஷ்பாய் கூறுகையில்,"பகிரானி ஜாட் சமூகத்தின் மதத் தலைவர் ஆகா கான், சாவ்லா பீரை நம்புகிறார். ஒரு நாட்டுப்புறக் கதையின்படி, ஒருமுறை கட்ச்சில் கடுமையான வறட்சி ஏற்பட்டபோது, பெரும்பாலான ஒட்டகங்கள் இறந்துவிட்டன. ஒரு கால்நடை வளர்ப்பவரிடம் ஒரே ஒரு ஒட்டகம் மட்டுமே எஞ்சியிருந்தது. அந்த கால்நடை வளர்ப்பவர் உதவிக்காக பீரிடம் சென்றபோது, பீர் அவருக்கு ஒரு 'உயிருள்ள ஒட்டகத்தை' வழங்கினார்.
அவர் மெழுகினால் செய்யப்பட்ட ஓர் ஒட்டகத்தை ஒரு தம்பியிடம் கொடுத்து, அதை கட்ச்சின் 'பெட்' (தீவு) பகுதிக்கு எடுத்துச் செல்லுமாறு கூறினார். எக்காரணம் கொண்டும் திரும்பிப் பார்க்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். ஆனால், அந்த கால்நடை வளர்ப்பவர் திரும்பிப் பார்த்தபோது, அங்கே ஆயிரக்கணக்கான ஒட்டகங்கள் இருப்பதைக் கண்டார். அதன்பிறகு, இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான ஒட்டகங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை பீர் தனது சீடர்களான பகிரானி ஜாட் சமூகத்திடம் ஒப்படைத்தார்."
மகேஷ்பாய் மேலும் கூறுகையில், "ஒட்டகங்களை வளர்க்கும் இந்த சமூகங்களுக்கு இடையிலான உறவு, இந்து-இஸ்லாம் ஒற்றுமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது. அவர்கள் இந்த உறவை 'லாக்டி பாய்' என்று அழைக்கிறார்கள். ஒட்டக வளர்ப்புடன் தொடர்புடைய சுமார் 350 குடும்பங்கள் இந்து மற்றும் இஸ்லாமிய சமூகங்களைச் சேர்ந்தவை. அவர்கள் அனைத்து முடிவுகளையும் இணைந்தே எடுக்கிறார்கள். இப்பகுதி மக்கள் ஒட்டகங்களை 'மாதாஜியின் வாகனம்' (தெய்வத்தின் வாகனம்) என்றும் வழிபடுகின்றனர்," என்றார்.
ஒட்டகப் பாலின் சுவை மற்றும் விலையில் உள்ள வேறுபாடுகள்

பட மூலாதாரம், Mahesh Garva/Sahjivan
மகேஷ்பாய் கூறுகையில், "ஒட்டகப் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பல்வேறு பொருட்கள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. ஒட்டகப் பால் சாக்லேட், பதப்படுத்தப்படாத பால், குங்குமப்பூ சுவை கொண்ட பால் மற்றும் பால் பவுடர் ஆகியவை இதில் முக்கியமானவை. இவை ஆன்லைன் இணையதளங்களிலும் எளிதாகக் கிடைக்கின்றன," என்றார்.
மேலும், "தற்போது ஒட்டகப் பாலைப் பயன்படுத்தி கீர், ஐஸ்கிரீம் மற்றும் சாக்லேட் போன்ற பல்வேறு உணவுப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன," என்றும் ரமேஷ்பாய் குறிப்பிட்டார்.
ஒட்டகப் பாலுக்குப் புகழ்பெற்ற சர்ஹாத் டெய்ரியின் நிறுவனரும் தலைவருமான வலமஜி ஹம்பல் பிபிசியிடம் கூறுகையில், "முன்பு ஒட்டகப் பால் சிறிய ஹோட்டல்களில் லிட்டர் 20 முதல் 25 ரூபாய் வரை மட்டுமே விற்கப்பட்டது. தொடக்கத்தில் தினமும் 300 லிட்டர் பால் மட்டுமே சேகரிக்கப்பட்டது, ஆனால் இப்போது ஒரு நாளைக்கு 5,000 லிட்டர் பால் சேகரிக்கப்படுகிறது. கட்ச் பகுதியில் உற்பத்தியாகும் பாலில் 70 சதவீதத்தை சர்ஹாத் டெய்ரி சேகரிக்கிறது," என்றார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கட்ச் பகுதியில் இருந்த இளைஞர்கள் இந்தத் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில்களுக்குச் சென்றதாக வலமஜி ஹம்பல் கூறுகிறார்.
2019-ஆம் ஆண்டில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஒட்டகப் பாலை ஒரு உணவுப் பொருளாக அங்கீகரித்தது.
அவர் மேலும் கூறுகையில், "இப்போது நாங்கள் ஒட்டகப் பால் பவுடர் தயாரித்து வருகிறோம், அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் முயற்சிக்கிறோம். இப்போது இளைஞர்கள் மீண்டும் இந்தத் தொழிலை நோக்கித் திரும்பி வருகின்றனர். ஒட்டகங்களை விற்பதற்குப் பதிலாக, இப்போது மக்கள் அவற்றை ஆர்வத்துடன் வாங்குகின்றனர்," என்றார்.
சஹாஜீவன் சன்ஸ்தாவைச் சேர்ந்த ஆர்வலரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான ரமேஷ்பாய் பாடி பிபிசி குஜராத்தியிடம் பேசுகையில், "குஜராத்தில் கட்ச் தவிர ஜாம்நகர், துவாரகா, பரூச், பாவ்நகர் மற்றும் பனஸ்கந்தா மாவட்டத்தின் தீசா மற்றும் பாலன்பூர் ஆகிய இடங்களிலும் ஒட்டக வளர்ப்பாளர்கள் முக்கியமாக வாழ்கின்றனர்," என்று தெரிவித்தார்.
ஒட்டகங்களில் காணப்படும் நோய்கள்

பட மூலாதாரம், Mahesh Garva/Sahjivan
மேற்கு வங்கத்தின் சுந்தரவனக் காடுகளுக்கு அடுத்தபடியாக, கட்ச் பகுதியில் தான் அதிக அளவிலான செர்ட் காடுகள் உள்ளன. ஒட்டகங்கள் இக்காடுகளில் நன்றாக வளர்கின்றன.
குஜராத்தில் காணப்படும் காராய் ஒட்டக இனத்தின் தனித்துவமான அம்சம் என்னவென்றால், இவற்றால் கடல் நீரில் நீந்த முடியும். இருப்பினும், கட்ச் பகுதியில் காராய் ஒட்டகங்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. ஒட்டகங்கள் உட்கொள்ளும் உணவைப் பொறுத்தே அவற்றின் பாலின் சுவை அமைகிறது என்று ரமேஷ்பாய் பாட்டி கூறுகிறார்.
உப்பு நிறைந்த மணல் பகுதிகளில் மேயும் ஒட்டகங்கள் வாரத்திற்கு ஒருமுறை அந்த பகுதிகளுக்குச் சென்று மேய்கின்றன.
"ஒட்டகங்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வாரத்தில் ஒரு நாள் அவை உப்பு நிறைந்த பகுதிகளில் மேய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. உப்புத்தன்மை கொண்ட உணவை உண்பது அவற்றின் இயற்கையான தேவையாகும், இதனால் அவற்றின் பால் சற்று உவர்ப்புத் தன்மையுடன் இருக்கும்," என்று ரமேஷ்பாய் தெரிவித்தார்.
கட்ச் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரி மருத்துவர் ராஜேஷ் படேல் கூறுகையில், ஒட்டகங்களில் முக்கியமாக இரண்டு வகையான நோய்கள் காணப்படுகின்றன என்று கூறி அவற்றை விவரித்தார்.

"சுர்ரா நோய் : டிரிபனோசோமியாசிஸ் எனப்படும் இந்நோய் குஜராத்தியில் 'பித்டா' என்று அழைக்கப்படுகிறது. இது பொதுவாக மூளைக் காய்ச்சலாகும். இது ஒரு ஒட்டுண்ணி நோய். மனிதர்களுக்கு மலேரியா ஏற்படுவது போலவே இது ஒட்டகங்களுக்குத் தலைச்சுற்றல் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும் இதனால் ஒட்டகங்கள் இறந்துவிடும். இந்நோயைக் குணப்படுத்தத் தேவையான ஊசிகளை அரசாங்கம் இலவசமாக வழங்குகிறது.
"மேஞ்ச் : தோல் தொற்று நோயான இது, ஒட்டகங்களிடையே மிகவும் பொதுவாகக் காணப்படுகிறது".
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












