ரயில்களில் நிரம்பி வழியும் கூட்டம் - கூடுதல் பயணிகளால் முன் பதிவு செய்தவர்களும் அவதி

    • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து புறப்படும் வடமாநில ரயில்களில், முன்பதிவு செய்த பெட்டிகளில் முன்பதிவில்லாத டிக்கெட் எடுக்கும் புலம்பெயர் பயணிகள் அமர்ந்துக் கொள்வதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன.

இதுதொடர்பான காணொளிகளும், விமர்சனங்களும் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. சமீபகாலமாக தமிழகத்திற்குள் இயக்கப்படும் ரயில்களிலும் இது அதிகம் நடப்பதாகவும் தகவல்கள் பதிவிடப்படுகின்றன.

இதனைக் கட்டுப்படுத்த முக்கிய ரயில் சந்திப்புகளில், முன்பதிவு பெட்டிகளில் முன் பதிவு டிக்கெட் இல்லாதவர்கள் ஏறுவதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பண்டிகைக் காலங்களில் மட்டுமே இந்த பிரச்னை அதிகமாக நடப்பதால், இந்த விதிமீறலைத் தடுக்க ரயில்வே போலீசாருடன் இணைந்து நடவடிக்கை எடுக்க டிக்கெட் பரிசோதகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பெருநகரங்களில் வடமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தொழில் வளர்ச்சி அதிகமுள்ள மேற்கு மாவட்டங்களில் உடல் உழைப்பு சார்ந்த பணிகளில் இவர்களின் தேவை அதிகமாக இருப்பதால், இவர்களின் வருகை தினமும் அதிகமாகி, லட்சக்கணக்கானவர்கள் இங்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் தீபாவளி, ஹோலி போன்ற பண்டிகைக் காலங்களில், தங்களுடைய சொந்த மாநிலங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இவர்கள் அனைவருக்குமான எளிதில் அணுகக் கூடிய ஒரே போக்குவரத்து வசதி, ரயில் பயணமாக மட்டுமே உள்ளது.

வடமாநில பயணிகள் அதிகம்; ரயில்கள் எண்ணிக்கை குறைவு!

இதற்கேற்ப தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு நகரங்களிலிருந்தும் வடமாநில நகரங்களுக்கு அதிகளவிலான ரயில்களும் இயக்கப்படுகின்றன. கோவையிலிருந்து வாரத்துக்கு 3 ரயில்கள், வடமாநிலங்களுக்குப் புறப்படுகின்றன. கேரளாவிலிருந்து கோவை வழியாக தினமும் 3, வாரத்துக்கு 9 ரயில்கள் கடந்து செல்கின்றன.

மேற்கு வங்கம், பிஹார், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் உள்ள பல்வேறு நகரங்களுக்கும் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன. சமீபத்தில் ஈரோட்டிலிருந்து பிஹார் மாநிலம் ஜோக்பானி வரை அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், வாராந்திர சேவையாக துவக்கப்பட்டுள்ளது.

ஆனால் இங்குள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கும், இங்கிருந்து இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கைக்கும் பெரும் வித்தியாசம் இருப்பதாக தொழில் அமைப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.

வடமாநிலங்கள் செல்ல வேண்டிய பயணிகளின் அளவுக்கேற்ப ரயில்கள் இல்லாததுடன், அவற்றில் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையும் குறைவாக இருப்பதால் பிதுங்கி வழியும் அளவுக்கு, அவற்றில் பயணிகள் செல்வதை பெரிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் அடிக்கடி பார்க்கமுடிகிறது.

அதிலும் பயணம் செய்ய முடியாத பலரும், முன்பதிவு செய்த பெட்டிகளில் அமர்ந்து கொள்கின்றனர். ஏற்கெனவே அந்த பெட்டிகளில் முன்பதிவு செய்திருப்பவர்களுக்கு இடமில்லாத அளவுக்கு அந்த இடங்களை இவர்கள் ஆக்கிரமித்து விடுகின்றனர். இதனால் முன்பதிவு செய்த பயணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக இந்த பிரச்னை அதிகமாக நடந்து வருகிறது. கடந்த வாரத்தில் எர்ணாகுளத்திலிருந்து பாட்னா செல்லும் ரயிலில், முன்பதிவு செய்த பெட்டிகளில் வடமாநிலப் பயணிகள் ஏறி அமர்ந்து கொண்டதால் அந்த பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் அவரும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், திருப்பூரில் ரயில் நிலைய மேலாளர் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகளை முற்றுகையிட்டு புகார் எழுப்பினர்.

அவர்களை ரயில்வே அதிகாரிகள் சமாதானம் செய்தாலும், முன்பதிவு டிக்கெட் இல்லாமல் ஏறிய பயணிகளை முழுமையாக வெளியேற்ற இயலவில்லை. முன்பதிவு செய்திருந்த பயணிகள் சிலர், இதை வீடியோ எடுத்து தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். திருப்பூர் ரயில் நிலைய மேலாளர் கிருஷ்ணா நந்தன், ''தீபாவளி காலம் என்பதால் வழக்கத்தை விட பல மடங்கு அதிகமான கூட்டம் உள்ளது. அதனால்தான் இந்த பிரச்னை ஏற்பட்டது. கூடுதலாக ரயில்வே போலீசாரை வைத்து முன்பதிவுள்ள பெட்டிகளில் அதற்குரிய டிக்கெட் இருப்பவர்களை மட்டும் அனுப்ப ஏற்பாடு செய்யப்படும்.'' என்றார்.

வடமாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களில் மட்டுமின்றி, கோவை–சென்னை ரயிலிலும் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதியன்று, இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளதை சிலர் பதிவிட்டுள்ளனர். ஆனால் ரயில்வே போலீசார் நடவடிக்கை எடுத்து, முன்பதிவு டிக்கெட் இல்லாத பயணிகளை இறக்கிவிட்டுள்ளனர். தமிழகத்தில் இதேபோன்ற சம்பவங்கள், கடந்த சில ஆண்டுகளாக நிறைய நடந்துள்ளன. குறிப்பாக சென்னையிலிருந்து புறப்படும் ரயில்களில் இந்த பிரச்னை அதிகமாகவுள்ளது.

கடந்த ஆண்டு ஜூனில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஹவுரா செல்லும் ரயிலில், முன்பதிவு பெட்டிகளில் அளவுக்கு அதிகமான வடமாநிலப் பயணிகள் ஏறி, வெளியிலிருந்து யாரும் ஏற முடியாத அளவுக்கு இருந்தது. இதனால் அந்த பெட்டிக்கு முன்பதிவு செய்திருந்த 18 பயணிகள் அந்த ரயிலில் ஏறமுடியவில்லை. இந்த சம்பவத்திற்கு 3 நாட்களுக்கு முன்பு, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலிலும் இதேபோன்ற பிரச்னை நடந்து, பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அதற்கு முந்தைய ஆண்டில், மார்ச் மாதத்தில் பெங்களூருவிலிருந்து சென்னை பெரம்பூர் வழியாக அஸ்ஸாம் மாநிலம் கெளஹாத்திக்குச் செல்லும் அஸ்ஸாம் தின்சுகியா எக்ஸ்பிரஸ் ரயிலில், அஸ்ஸாமில் நடக்கும் தேசிய அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்க சென்னையிலிருந்து 200க்கும் மேற்பட்ட மாணவிகள் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் முன்பதிவு செய்திருந்தனர்.

ஆனால் அந்தப் பெட்டிகளில் அவர்கள் ஏறச்சென்றபோது 500க்கும் மேற்பட்ட வடமாநிலப் பயணிகள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர். மாணவிகளிடம் வாக்குவாதம் செய்தனர். அதன்பின் மாணவிகள் பெற்றோரிடம் போனில் புகார் தெரிவித்ததன் எதிரொலியாக, பெற்றோர் திருவொற்றியூர் ரயில்வே போலீசில் புகார் செய்தனர்.

அந்த ரயில் திருவொற்றியூரில் நிறுத்தப்பட்டது. ரயில்வே போலீசார் உள்ளே புகுந்து வடமாநிலப் பயணிகளை கட்டாயப்படுத்தி வெளியேற்றிய பின் பல மணி நேரத்துக்குப் பின்பு அந்த ரயில் புறப்பட்டுச் சென்றது.

ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பிபிசி தமிழிடம் பேசிய கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகி சிவமோகன், ''சமீபகாலமாக இந்த பிரச்னை அளவுக்கு அதிகமாகிவருகிறது. முன்பதிவு செய்யும் பெட்டிகளில் வடமாநிலப் பயணிகள் பலரும் கூட்டமாக ஏறிக்கொண்டு, இடங்களை ஆக்கிரமித்துக்கொள்கின்றனர். தெரிந்தே இந்த விதிமீறலில் ஈடுபடும் அவர்களை வெளியேற்ற வேண்டிய பொறுப்பு, ரயில்வே நிர்வாகத்துக்கு உள்ளது. ஆனால் அவர்கள் இதைக் கண்டுகொள்வதேயில்லை" என்றார்.

சேலம் ரயில்வே கோட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் அண்ணாமலை, ''முன்பு ஆந்திராவில் இருந்துதான் இந்த பிரச்னை ஆரம்பிக்கும். இப்போது தமிழகத்துக்குள்ளும் அதிகமாகி வருகிறது. ரயில் பயணம்தான் பாதுகாப்பு என்ற நிலை மாறி, அவதிக்குரிய பயணமாக மாறும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இதற்கு இப்போதே தீர்வு காண வேண்டியது அவசியம். அடுத்த ரயில்வே ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் இதைப்பற்றி நிச்சயம் வலியுறுத்துவோம்.'' என்றார்.

தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிப்பதாக புகார்கள் குவிந்துவரும் நிலையில், தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி வடமாநிலங்களுக்குச் செல்லும் ரயில் பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருப்பதும் இதற்கு காரணமாகத் தெரிகிறது. பண்டிகையையொட்டி சில சிறப்பு ரயில்களை இயக்கினாலும் அவை போதுமானதாக இல்லை. வடமாநில ரயில்களில் செல்வதற்கு இடமே இல்லாத நிலையில், சென்னை சென்று வேறு ரயில்களில் செல்லலாம் என்று கருதி, கோவையிலிருந்து சென்னை செல்லும் ரயில்களிலும் முன்பதிவில்லாத பெட்டிகளில் ஏறும் பயணிகள் அதிகரித்து வருவதாக சமூக ஊடகங்களில் சிலர் வீடியோ பதிவிட்டுள்ளனர்.

"முன்பதிவு டிக்கெட் எடுக்க வசதி இல்லை"

கோவை ரயில் சந்திப்பில் அக்டோபர் 15 ஆம் தேதியன்று காலையிலிருந்தே நுாற்றுக்கணக்கான வடமாநிலப் பயணிகள், குடும்பம் குடும்பமாக, கூட்டம் கூட்டமாக மூட்டை முடிச்சுகளுடன் குவிந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. ரயில் நடைமேடைகளில் ஏராளமான வடமாநிலப் பயணிகள் குவிந்திருந்த நிலையில், இவர்களுக்காக ரயில்வே பார்க்கிங் பகுதியில் பெரிய பந்தலும் அமைக்கப்பட்டுள்ளது.

அதிலும் ஏராளமான வடமாநிலப் பயணிகள் குடும்பங்களுடன் காத்திருந்தனர். இவர்களில் பலரிடமும் பிபிசி தமிழ் பேசியபோது, அவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள், முன்பதிவில்லாத பெட்டிகளில் செல்வதற்கான பயணச்சீட்டையே எடுத்திருந்தது தெரியவந்தது.

பிபிசி தமிழிடம் பேசிய கோவை ரயில்வே காவல் ஆய்வாளர் மீனாட்சி, ''வடமாநில ரயில்களில் செல்லும் பயணிகள் ஒரே நேரத்தில் முண்டியடித்துக்கொண்டு ஏறாமல் இருக்கவும், முன்பதிவுள்ள பெட்டிகளில் ஏறுவதைத் தடுக்கவும் அவர்களை வரிசையில் நிற்கவைத்து ஏற்றுவதற்கும் ஏற்பாடு செய்துள்ளோம். முன்பதிவு பெட்டிகளில் ஏறும் பயணிகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கிறோம்.'' என்றார்.

''சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில், கூடுதல் போலீசாரை நியமித்து இந்த ஏற்பாட்டைச் செய்தாலும், இங்கிருந்து ரயில்கள் நகர்ந்ததும் முன்பதிவுள்ள பெட்டிகளுக்குள் அவர்கள் செல்வதும் நடக்கிறது. கூடுமானவரை போலீசாரை வைத்து அகற்றுவதற்கு முயற்சி எடுக்கிறோம்.'' என்றும் ரயில்வே காவல் ஆய்வாளர் மீனாட்சி தெரிவித்தார்.

கோவை ரயில் நிலையத்தில் காத்திருந்த வடமாநிலப் பயணிகள் பலரிடமும் பிபிசி தமிழ் பேசியபோது, அவர்கள் தங்களுக்குப் போதிய அளவு ரயில்கள் இல்லாத காரணத்தால்தான், வேறு வழியின்றி இப்படிப் பயணம் செய்ய வேண்டியிருப்பதாகத் தெரிவித்தனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஜெய்பாரத், ''நாங்கள் குடும்பத்துடன் தீபாவளிக்கு ஊருக்குச் செல்கிறோம். முன்பதிவில்லாத பெட்டியில் செல்லவே டிக்கெட் எடுத்துள்ளோம். எல்லோருக்கும் முன்பதிவு செய்யும் அளவுக்கு வசதியில்லை.'' என்றார்.

மற்றொரு வடமாநிலப் பயணி அஸ்ஸானி, ''நாங்கள் யாரும் முன்பதிவு பெட்டிகளில் ஏறுவதில்லை. சில நேரங்களில் பெண்கள், குழந்தைகளை மட்டும் அந்தப் பெட்டிகளில் ஓரங்களில் அமர வைப்போம். வெகுதுாரமான பயணம் என்பதால்தான் வேறு வழியின்றி சிலர் அப்படிச் செய்கின்றனர். பல நேரங்களில் எங்களை போலீசார் இறக்கிவிட்டுள்ளனர்.'' என்றார்.

''கூடுதல் ரயில்களை இயக்குவது மட்டுமே இதற்குத் தீர்வு!''

அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வேறு சில பயணிகளும் இதேபோன்ற கருத்தைத் தெரிவித்தனர். பல மாதங்களுக்கு முன்பே, டிக்கெட் புக்கிங் செய்தும் தங்களுக்கு முன்பதிவுள்ள பெட்டிகளில் டிக்கெட் உறுதியாகவில்லை என்று, முன்பதிவு செய்ததற்கான ஆவணத்தையும் காண்பித்தனர்.

இவர்கள் அனைவரும் ரயில்களில் ஒன்றிலிருந்து 3 நாட்கள் வரை கடும் கூட்ட நெரிசலில் பயணம் செய்ய வேண்டிய நிலையில் இருப்பதையும் தெரிவித்தனர்.

இமாச்சலப்பிரதேசம் பிலாஸ்பூர் செல்வதற்காக தங்களுடைய குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் பலருடனும் கோவை ரயில் சந்திப்பில் காத்திருந்த ஆதர்ஷ், ''ரயில் பயணத்தைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. அதனால் எவ்வளவு கஷ்டமிருந்தாலும் இந்த குழந்தைகள், பெண்களுடன் இதே ரயிலில்தான் பயணம் செய்ய வேண்டும். கூடுதல் ரயில்கள் இயக்கினால் கொஞ்சம் நிம்மதியாயிருக்கும்.'' என்றார்.

வடமாநிலப் பயணிகளின் கருத்தில் உண்மை இருப்பதாகக் கூறும் கோவை நெக்ஸ்ட் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சதீஷ், ''கோவை, திருப்பூர் மாவட்டங்களில் லட்சக்கணக்கான வடமாநிலத்தவர்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலான மக்கள், தீபாவளியையொட்டி தங்கள் ஊர்களுக்குச் செல்வார்கள். ஆனால் இவ்வளவு பெரிய கூட்டத்துக்கு ரயில்வே இயக்கும் ரயில்கள் போதியதாக இல்லை என்பதுதான் யதார்த்தம். அதுமட்டுமின்றி, முன்பதிவில்லாத பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதும் இதற்கு முக்கியக் காரணமாகவுள்ளது. ரயில்களையும், முன்பதிவில்லாத பெட்டிகளையும் அதிகப்படுத்துவதே இதற்குத் தீர்வு.'' என்கிறார்.

டிக்கெட் பரிசோதகர்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை!

கூடுதல் ரயில்களை இயக்க வேண்டுமென்ற கோரிக்கை ஒரு புறமிருக்க, முன்பதிவு பெட்டிகளில் செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு டிக்கெட் பரிசோதகர்களும், ரயில்வே போலீசாரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை பலரும் முன் வைக்கின்றனர்.

வடமாநிலப் பயணிகளை வெளியேற்றும் முயற்சிகளில் டிக்கெட் பரிசோதகர்கள் சிலர் தாக்கப்பட்டிருப்பதால், அவர்கள் அச்சப்படும் சூழல் இருப்பதாக ஓய்வு பெற்ற முதன்மை டிக்கெட் பரிசோதகர் ரவி என்பவர் ஊடகங்களில் கருத்துத் தெரிவித்துள்ளார். தற்போது பணியில் இருக்கும் டிக்கெட் பரிசோதகர்கள் யாரும் இதுபற்றி கருத்துத் தெரிவிக்க விரும்பாத நிலையில், சதர்ன் ரயில்வே அண்ணா எம்ப்ளாயீஸ் யூனியன் இணைச் செயலாளரும், ஓய்வு பெற்ற தலைமை டிக்கெட் ஆய்வாளருமான சந்திரன் பிபிசி தமிழிடம் பேசினார்.

''இப்போதுள்ள டிக்கெட் பரிசோதகர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவு சுத்தமாக இல்லை. அதனால் அவர்களால் பணியை செய்வதில் பல கஷ்டங்கள் உள்ளன. டிக்கெட்களை பரிசோதிக்கும் சிறப்பு (Squad) பணிகளுக்குச் செல்ல யாரும் விரும்புவதில்லை. முன்பதிவு பெட்டிகளில் வடமாநிலப் பயணிகள் செய்யும் அத்துமீறல் பற்றி சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்களைப் பார்த்து, ரயில்வே குழுக்களில் டிக்கெட் பரிசோதகர்கள் பலரும் தங்கள் மனக்குமுறலைக் கொட்டியுள்ளனர். ரயில்வே நிர்வாகம் இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் ரயில்வே போலீசாருடன் இணைந்து சில நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்.'' என்றார் சந்திரன்.

முன்பதிவுப் பெட்டிகளில் அதற்குரிய டிக்கெட் இல்லாத பயணிகள் பயணிப்பது, முன்பதிவில்லாத பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது போன்ற புகார்கள் குறித்த கேள்விகளை தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் பிபிசி தமிழ் முன் வைத்தது. இதற்கு பதிலளித்த தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் செந்தமிழ்செல்வன், ''இந்த பிரச்னை தொடர்பான புகார்கள் அதிகம் வந்ததன் காரணமாகவே, சில முக்கிய நடவடிக்கைகளை இந்த ஆண்டில் முன் கூட்டியே எடுத்துள்ளோம்.'' என்றார்.

''தீபாவளியை முன்னிட்டு லட்சக்கணக்கான வடமாநிலப் பயணிகள், ரயில்களில் பயணம் செய்வதால் நிறைய சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. உதாரணமாக சென்னையிலிருந்து பீஹாருக்கு தினமும் 3–4 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இருப்பினும் கூட்டம் அதிகமாக இருப்பதால் நடைமேடைக்கு அவர்களை அனுப்புவதற்கு முன்பே, முன்பதிவு டிக்கெட் இருப்பவர்கள், ஓப்பன் டிக்கெட் வைத்திருப்பவர்களை மட்டும் அனுமதித்து மற்றவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு சந்திப்பிலும் தற்காலிக காத்திருப்பு பந்தல்கள் அமைக்கப்பட்டு, ரயில்வே போலீசாரால் கூட்டம் ஒழுங்குபடுத்தப்படுகிறது.'' என்றார் செந்தமிழ்செல்வன்.

மேலும் விளக்கமளித்த அவர், ''உள்ளே அனுமதிக்கப்படுவோரும் வரிசைப்படியே அவர்கள் வைத்துள்ள டிக்கெட்களுக்கு ஏற்ப ரயில்களில் ஏற அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் ரயில் புறப்பட்ட பின்பு, முன்பதிவு பெட்டிகளில் செல்வதாகப் புகார்கள் வருகின்றன. அதையும் கவனிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்பதிவில்லாத பெட்டிகள் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. மாறாக சிறப்பு ரயில்கள் எண்ணிக்கை, ரயில் தடத்தின் பயன்பாட்டு அளவுக்கேற்ப அதிகரிக்கப்பட்டுள்ளன. அதற்கு மேல் அதிகரிக்க இயலாது.'' என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு