"அபிநய சரஸ்வதி... கன்னடத்து பைங்கிளி..." சரோஜா தேவி மறைந்தார்

"அபிநய சரஸ்வதி... கன்னடத்து பைங்கிளி..." சரோஜா தேவி மறைந்தார்

தமிழ் திரைத்துறையைச் சேர்ந்த மூத்த நடிகை சரோஜாதேவி வயது மூப்புக் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 87.

கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட சரோஜாதேவி, தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் என இருபெரும் நட்சத்திரங்களுக்கு ஜோடியாக சரோஜா தேவி நடித்த படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவை.

1938-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி கர்நாடகாவில் பிறந்த சரோஜா தேவியின் இயற்பெயர் ராதாதேவி கவுடா.

ஹொன்னப்ப பாகவதர் கவி காளிதாஸாக நடித்து, தயாரித்த 'மகாகவி காளிதாஸா' என்ற கன்னடப் படத்தில் 1955-ம் ஆண்டு தனது 17 வயதில் சரோஜா தேவி அறிமுகமானார். இந்த படம் தேசிய விருதை பெற்றது. அடுத்த ஆண்டே இல்லறமே நல்லறம் என்னும் படத்தில் சிறிய வேடத்தில் தமிழில் அறிமுகமான அவர், விரைவிலேயே கதாநாயகி வேடமேற்று பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

எம்ஜிஆருடன் நாடோடி மன்னன் படத்தில் முதன்முறையா இணைந்து நடித்த சரோஜா தேவி பின்னர், எங்கள் வீட்டு பிள்ளை, அன்பே வா உட்பட 20க்கும் மேற்பட்ட படங்களிலி அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

இதேபோல், பாக பிரிவினை, புதிய பறவை என சிவாஜி கணேசனுடம் பல படங்களில் சரோதா தேவி நடித்திருக்கிறார். அடுத்த தலைமுறை நடிகர்களான விஜயகாந்த், விஜய், சூர்யா ஆகியோரின் படங்களிலும் சரோஜா இடம்பெற்றிருக்கிறார்.

அபிநய சரஸ்வதி, கன்னடத்துப் பைங்கிளி போன்ற அடைமொழிகளால் திரைத்துறையினராலும் ரசிகர்களாலும் அழைக்கப்படும் சரோஜா தேவி, இந்திய அரசின் பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு