You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"பாலியல் உணர்வுகள் பற்றி மற்றவர்கள் பேச பயந்ததை வெளிப்படையாக சொன்னேன்'' - பாக்யராஜ் பிபிசி தமிழுக்கு பேட்டி
- எழுதியவர், சேவியர் செல்வகுமார்
- பதவி, பிபிசி தமிழ்
திரையுலகில் 50 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கிவரும் மூத்த இயக்குநர் கே.பாக்யராஜுக்கு தமிழ்த் திரைத்துறையினரால் பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது.
73 வயதாகும் பாக்யராஜ், இப்போதும் 'திரைக்கதை மன்னர்' என்று தமிழத் திரையுலகத்தினரால் கொண்டாடப்படுகிறார்.
இந்த வயதிலும் நடிப்பு, 'வெப் சீரிஸ்', புதிய பட இயக்கம் என்று இடைவிடாது இயங்கிக்கொண்டிருக்கும் கே.பாக்யராஜ் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி:
கே: பாரதிராஜா பள்ளியில் இருந்து வந்தவர்" என்பதுதான் தமிழ்த்திரையுலகில் உங்களின் முதல் அடையாளமாக இருந்தது. அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய காலத்தில் நீங்கள் கற்றுக்கொண்ட ஒரே ஒரு 'கதை சொல்லும் விதி' என்ன—அது உங்கள் பிந்தைய படங்களில் எப்படி மாறியது?''
'ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு டேஸ்ட் இருக்கும். அதுதான் அவர்களின் படைப்பில் வெளிப்படும். எங்கள் டைரக்டர் (பாரதிராஜா) சீரியஸ் டைப். ஷங்கர் எதையும் பிரமாண்டமாக செய்ய வேண்டுமென்று நினைப்பார். என்னை எடுத்துக்கொண்டால், மேட்டர் எவ்வளவு சீரியஸ் ஆக இருந்தாலும் எளிமையாகவும், நகைச்சுவையும், சென்டிமென்டும் கலந்து கொடுக்கலாம் என்று நினைப்பேன்.
கே: தமிழ்த்திரையலகில் 'திரைக்கதை மன்னர்' என்று கொண்டாடப்படும் இயக்குநர் நீங்கள்...காரணம் உங்கள் படங்களின் காட்சி அமைப்புகள்தான்...அதுபோன்று திரைக்கதையை வடிவமைப்பதற்கு உங்களுக்கு உந்துதலாக இருந்தது எது...வாசிப்பா, சுயஅனுபவங்களா?
'வாசிப்பு, சுயஅனுபவம் இரண்டும்தான். அத்துடன் இளம் வயதில் நான் பார்த்த பழைய படங்களின் பாதிப்பும் என்னுடைய படைப்பில் பதிவாகியிருக்கும். சிறு வயதிலிருந்து நான் படித்த, பார்த்த பல காட்சிகள் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். நான் படமெடுக்கும்போது, அதை எப்படி இணைக்கலாம் என்று யோசிக்கும்போது ஏதாவது ஒரு வழியில் அது கனெக்ட் ஆகிவிடும். இதெல்லாம் சேர்ந்ததுதான் என்னுடைய திரைக்கதை வடிவம்!''
கே: அந்த 7 நாட்கள் இறுதிக்காட்சியில் எனக்கு உடன்பாடு இல்லை என்று உங்களுடைய சிஷ்யர் இயக்குநர் பார்த்திபன் இப்போது சொல்லியிருக்கிறார். ஆனால், படம் வெளியாகி வெற்றி பெற்ற அந்த காலகட்டத்தில் இறுதிக்காட்சி குறித்து உங்களுக்கு கிடைத்த தனிப்பட்ட விமர்சனங்கள் எப்படியிருந்தன?''
அப்போது எந்த எதிர்மறை விமர்சனங்களும் வரவில்லை. அந்த இறுதிக் காட்சியை வழக்கமான பாணியில் அமைக்கக்கூடாது என்று நினைத்தேன். வழக்கமான இறுதிக்காட்சியாகவே இருந்தாலும் ரசிகர்கள் அதை ஏற்கும் விதமாக 'கன்வின்சிங்காக' தர வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி காட்சியை அமைத்தேன். அத்துடன் நமது கலாசாரத்தைத் தாண்டிப்போவதும் தவறு என்ற கருத்தில்தான் அப்படி இறுதிக்காட்சி வைத்தேன்.''
'என்னுடைய ஒவ்வொரு படத்தின் இறுதிக் காட்சியிலும் இந்த 'கன்வின்சிங்' இருக்கும். 'எங்க சின்ன ராசா' படத்தில் மிக மோசமான வில்லி, இறுதிக்காட்சியில் திருந்துவதாக காட்சி இருந்தாலும், 'இதற்கு மேலும் அவரால் திருந்தாமல் இருக்க முடியாது' என்று சொல்லும் அளவுக்கு, காட்சிகளை உருவாக்கியிருந்தேன். 'வீட்ல விசேஷங்க' இறுதிக்காட்சியில் காதலனுடன் போவதுதான் முக்கியம் என்றாலும், குழந்தைக்காக அவள் இருந்துவிட்டாள் என்பதுதான் 'கன்வின்சிங்' ஆக இருந்ததால் அந்த இறுதிக்காட்சியில் வைத்தேன்.
கே: 'அந்த 7 நாட்கள்' படத்தில், காதல் – குடும்பம் – கலாசாரம் என மூன்றுக்கும் இடையே நீங்கள் வைத்த "தார்மீக அளவுகோல்" (moral compass) என்ன? இன்று அந்த படத்தை மீண்டும் எழுதி இயக்கினால், அதே முடிவு தான் இருக்குமா அல்லது மாற்றுவீர்களா?''
'சந்தேகமேயில்லாமல் அதே இறுதிக்காட்சிதான். அதுதான் எவர்க்ரீன் முடிவு. அந்த படத்தை பல்வேறு மொழிகளில் எடுத்தாலும் எல்லா மொழிகளிலும் அதே இறுதிக்காட்சியை வைத்துதான் வெற்றி பெற்றது. இப்போது எடுத்தாலும் இறுதிக்காட்சியை மாற்ற வாய்ப்பேயில்லை. அதுதான் என்றைக்கும் சிறப்பான இறுதிக்காட்சியாக இருக்கும். அது மட்டுமின்றி எப்போதுமே 'ஓல்டு இஸ் கோல்டு'தான். நம் பண்பாடு, கலாசாரத்தில் ஊறிப்போன ஒரு விஷயம் அது. அதை காரண காரியமின்றி மாற்றுவது சரியாக வராது.'
கே: வாசிப்புதான் உங்களின் பெரும் பலம் என்பார்கள்; பாக்யா இதழை நடத்தியது, கேள்வி - பதில், கட்டுரைகளை எழுதியதில் உங்களுக்கு சுவராஸ்யமான அனுபவங்கள் கிடைத்திருக்கிறதா?''
அதில் ஏராளமான அனுபவங்கள் எனக்குக் கிடைத்தன. நான் பாக்யா இதழை நடத்தியதன் நோக்கம் வேறு. சினிமா என்பது முழுக்க முழுக்க வணிகம் சம்பந்தப்பட்டது. ஒரு தயாரிப்பாளர் நம்மை நம்பி பணம் போட்டு படம் எடுக்கும்போது, அவருக்கு எந்த விதத்திலும் நஷ்டம் ஏற்படாத வகையில், ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். அதனால் மக்களுக்குப் பாடம் எடுப்பது போல நாம் நினைத்தபடி அதைச்சொல்ல முடியாது.
அதேநேரத்தில் ஒரு பத்திரிகையை நடத்தும்போது, நாம் நினைத்த விஷயங்களை எல்லாம் மக்களிடம் வெளிப்படையாக, விரிவாகப் பகிர்ந்துகொள்ள முடியும். பத்திரிகை வர்த்தகத்தில் நமக்கு கொஞ்சம் லாபம், நஷ்டம் இருந்தாலும் அதில் நாம் நினைத்ததைச் சொல்ல முடியும். அதற்காகத்தான் நான் பாக்யா இதழை நடத்தினேன்.
கே: ஒரு படைப்பாளியாக நீங்கள் எதிர்பார்த்த ஆத்ம திருப்தி அதில் கிடைத்ததா?
நிச்சயமாக. எதிர்பார்த்த ஆத்ம திருப்தியும் கிடைத்தது. நானே எதிர்பார்க்காத அளவுக்கு மக்களிடம் ஆதரவும் கிடைத்தது. பாக்யா இதழைத் துவக்கிய சில மாதங்களிலேயே அதன் விற்பனை ஒரு லட்சத்தைத் தாண்டியது.
கே: நீங்கள் இயக்காமல் வில்லன் வேடத்தில் நடித்த 'கன்னிப்பருவத்திலே' படம் பாலியல் உணர்வு சம்பந்தமான படமாக அமைந்தது... அந்த காலகட்டத்தில் உங்களுக்கான அடையாளம் அப்படித்தான் இருந்ததா?
அப்படியில்லை. வழக்கமாக அந்தக் காலத்து திரைப்படங்களில் பாலியல் வன்புணர்வு காட்சி என்றால் அது ஒரு முரட்டுத்தனமான அணுகுமுறையைக் காண்பிப்பதாக இருக்கும். ஆனால் 'கன்னிப்பருவத்திலே' படத்தில் ஒரு மென்மையான (Soft), ஸ்டைலிஷ் ஆன ஒரு வில்லனைக் காண்பித்தேன். அந்த கதாபாத்திரத்தில் அப்படித்தான் நான் பொருந்தினேன்.
கே: ரஜினியுடன் 'நான் சிகப்பு மனிதன்' உட்பட சில படங்களில் நடித்துள்ள நீங்கள் கமலுடன் எந்தப் படத்திலும் இணையாததற்கு ஏதாவது சிறப்புக்காரணம் இருக்கிறதா?''
நான் கமலை இயக்கவில்லை, இணைந்து நடிக்கவில்லை என்றாலும், அவருடைய படங்களுக்குதான் நான் அதிகமாக பணியாற்றியிருக்கிறேன். முதலில் 16 வயதினிலே படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய பின், 'சிகப்பு ரோஜாக்கள்' படத்துக்கு நான்தான் வசனங்கள் எழுதினேன். அந்தப்படத்தில் ஒரு காட்சியில் மட்டும் கமலுடன் நடித்திருப்பேன். ஒரு கைதியின் டைரி படத்துக்கு நான்தான் கதை - வசனம்.
ரஜினியுடன் பல படங்களில் இணைந்திருக்கிறேன். 'அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் நானும், ரஜினியும் கெளரவ தோற்றங்களில் நடித்தோம். அந்தப்படத்துக்கும் நான்தான் திரைக்கதை எழுதியிருந்தேன். நான் சிகப்பு மனிதன் படம், இந்தியிலிருந்து எடுத்து ரீமேக் செய்த படமாக இருந்தாலும் என்னுடைய கதாபாத்திரத்துக்கான பகுதியை நானே எனக்கேற்ற விதமாக வடிவமைத்துக்கொண்டேன். இறுதிக் காட்சியிலும் என்னுடைய பகுதியில் நான் சொன்னது போலவே 'கன்வின்சிங்' ஆகத்தான் காட்சிகள் அமைக்கப்பட்டன.''
கே: துாறல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு, எங்க சின்ன ராசா போன்ற கிராமத்துக் கதையம்சம் கொண்ட படங்களின் வருகை குறைந்துவிட்டதற்கான காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?''
எல்லாமே ஃபாஸ்ட்புட் கலாசாரமாகிவிட்டது. கிராமங்கள் எல்லாம் நகரமாகிவிட்டன. கிராமங்களில் நெல் வயலைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. எல்லாமே லே–அவுட் ஆகிவிட்டது. விவசாயம் செய்பவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. முன்பு திரையரங்கும் சினிமாவும்தான் மக்களுக்கான ஆகப்பெரிய பொழுதுபோக்கு அம்சமாக இருந்தன. ஆனால், இப்போது மொபைல் போனிலேயே உலகத்தின் எல்லா நிகழ்வுகளையும் பார்க்கும் வசதி வந்துவிட்டது. அதற்கேற்ப மக்களின் மனங்களிலும் ரசனையிலும் பல மாற்றங்கள் வந்துவிட்டன. அதனால் மக்களுக்கேற்ற வகையில் படமெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.
கிராமங்கள் குறைந்துவிட்டதைப் போலவே, கிராமத்துப் பின்புலம், அதன் அனுபவங்களை உணர்ந்து படமெடுக்க வருபவர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைந்துவிட்டது. அத்தகைய சுயஅனுபவங்கள் இல்லாததால்தான், இப்போது வரும் பலரும் 2, 3 படங்களிலேயே தங்களுடைய மொத்த படைப்புத்திறனையும் வெளிப்படுத்திவிட்டு அதன்பின் காணாமல் போய்விடுகிறார்கள். சமீபகாலமாக 'பான் இந்தியா' படமெடுப்பதாகக் கூறி, நம்முடைய மண்ணுக்கான பல விஷயங்களை மறைக்க வேண்டியிருப்பதால், அப்படி எடுக்கப்படும் படங்கள் எந்த மண்ணைச் சேர்ந்தவர்களுக்கும் திருப்தி தருவதாக இருப்பதில்லை.
கே: இந்தியில் நீங்கள் இயக்கிய 'ஆக்ரி ரஸ்தா' மிகப்பெரிய வெற்றி பெற்றது... அதன்பின் ஏன் தொடர்ந்து இந்திப்படங்களை நீங்கள் இயக்கவில்லை...வாய்ப்பு வரவில்லையா, வந்தும் தவிர்த்துவிட்டீர்களா?''
அந்தப் படம் பெரிய வெற்றி பெற்றதும் இந்தி படங்களுக்கான வாய்ப்பும், அழைப்பும் நிறைய வந்தன. நான் ஒப்புக்கொள்ளவில்லை. அந்த மண்ணின் 'நேட்டிவிட்டி'யை உணர்ந்து, அதைச் செய்தால்தான் நன்றாயிருக்கும். அது சாத்தியமில்லை. அவர்களின் பாணிக்கு ஏற்ப படமெடுப்பதற்கு நானும் தயாராக இல்லை.
அது மட்டுமின்றி, நாம் எப்போதுமே புழங்கிக்கொண்டிருக்கிற நமது தாய்மொழியில் ஒரு படைப்பைத் தரும்போதுதான் அதைச் சிறப்பாகத் தரமுடியும். அதனால் நமக்குத் தெரிந்ததை நாம் இன்னும் நன்றாகச் செய்வோம் என்றுதான் நான் நினைத்தேன். புதிதாக எந்த ஆராய்ச்சிக்கும் முயற்சிக்கும் நான் தயாராகயில்லை.
கே: உங்களுடைய நடனத்தை கிண்டலடித்து பல காமெடி நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பார்க்கும்போது உங்களின் மனநிலை எப்படியிருக்கும்?''
அதை நான் பொருட்படுத்துவதேயில்லை. முன்பெல்லாம் சினிமாவுக்கு நடிக்க வருபவர்கள், நடனம், சிலம்பாட்டம், கத்திச்சண்டை, குதிரையேற்றம் என பல விஷயங்களைக் கற்றுக்கொண்டு வருவார்கள். ஆனால், ஒரு நடிகனுக்கான எந்தப் பயிற்சியும் பெற்றுக்கொண்டு நான் நடிக்க வரவில்லை. அடிப்படையில் நான் ஒரு படைப்பாளியாகவே சினிமாவுக்கு வந்தேன். விபத்து போலத்தான் நடிக்கவும் ஆரம்பித்தேன்.
அதனால் இருப்பதை வைத்துத்தான் சமாளிக்க வேண்டியிருந்தது. என்றைக்குமே எனக்கு நடனம் வரவில்லை என்று நான் கவலைப்பட்டதேயில்லை. நடனமாடி கைதட்டல் வாங்க வேண்டுமென்பதை நான் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டதேயில்லை. என்னுடைய பலம் என்னவோ, அதை சிறப்பாகச் செய்வோம் என்று நினைத்தேன். ஒவ்வொரு காட்சி அமைப்பிலும், இயக்கத்திலும் மக்களை ஈர்க்க வேண்டுமென்றே பணியாற்றினேன்.
இப்போது என் மகன் சாந்தனு மிகச்சிறப்பாக நடனம் ஆடுகிறான். ஒவ்வொருவருக்கும் எது பலமோ, எது சாத்தியமோ அதைச் சிறப்பாகச் செய்ய வேண்டுமென்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. இதில் வேறு எதைப்பற்றியும் நான் கவலைப்பட்டதேயில்லை.
கே: இளையராஜாவிடம் உங்களுக்கு ஏற்பட்ட மனக்கசப்பில்தான் நீங்களே இசையமைக்க ஆரம்பித்தீர்களா... அல்லது உண்மையிலேயே உங்களுக்கு இசையில் அறிவும் ஆர்வமும் இருந்ததா?
அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட சில சூழ்நிலைகளால் இசையை கற்றுக்கொள்ளாமல் விட்டு விட்டோமே என்ற வருத்தம் இருந்தது. இருந்தாலும் இசையில் எனக்குக் கொஞ்சமாக இருந்த ஈடுபாட்டை வைத்து சில விஷயங்களை மட்டும் தெரிந்துகொண்டு இசையமைத்தேன். அதுவும் மக்களை ஈர்த்தது. ஆனால் அதற்காக நான் தொடர்ந்து அதைச்செய்யவில்லை. சில படங்களுடன் நிறுத்திக்கொண்டேன்.
கே: முந்தானை முடிச்சு, இது நம்ம ஆளு, சின்னவீடு போன்ற படங்களில் பெண்களின் பாலியல் உணர்வுகளை நீங்கள் காண்பித்த விதம் பற்றி பலவிதமான விமர்சனங்கள் இருக்கிறதே... அதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?''
மற்றவர்கள் சொல்வதற்கு அச்சப்பட்ட விஷயங்களை நான் வெளிப்படையாகச் சொன்னேன். நாம் சொல்ல முடியாத விஷயத்தை இவன் மக்கள் ரசிக்கும் விதத்தில் சொல்கிறானே என்ற வருத்தம் சிலருக்கு இருந்திருக்கும். அதில் எழுந்ததுதான் அந்த விமர்சனங்கள். என்னுடைய படங்களில் நான் சொன்ன எந்த விஷயத்துக்கும் மக்களிடம் இருந்து எந்த எதிர்ப்பும் எழுந்ததில்லை. எல்லோருமே ரசிக்கத்தான் செய்தார்கள்.''
அந்த எல்லைக்குள்தான் நான் அத்தகைய விஷயங்களைக் கையாண்டேன். சிவாஜி சார் வீட்டுப் பெண்கள், என்னுடைய ஒரு படத்தைப் பார்த்துவிட்டு, அவர் அருகில் இருக்கிறார் என்பதற்காக அந்தப் படத்தின் காட்சியைப் பற்றித் திட்டியிருக்கிறார்கள். மறுநாள் சிவாஜி சார் சூட்டிங் முடித்துப்போகும்போது, மீண்டும் அதே படத்துக்கு அந்தப் பெண்கள் போனார்கள் என்பதை சிவாஜி சாரே என்னிடம் சொல்லியிருக்கிறார்.
கே: இயக்குநர், நடிகர், எழுத்தாளர், பத்திரிகையாளர் - இதில் எந்த ஒரு அவதாரம் பாக்யராஜுக்கு மிகவும் நெருக்கமானது? அதற்கான காரணமென்ன?
எழுத்து எழுத்து எழுத்துதான். எழுத்து என்பதிலிருந்துதான் என்னுடைய எல்லா அவதாரங்களும் துவங்கின. அதை மறுக்கவே முடியாது. எழுத்து என்பதுதான் வித்து. அதிலிருந்துதான் கதை என்கிற மரம் எழுந்து, வசனம், காட்சி என காயாகவும், கனியாகவும் மாறுகிறது. அதனால் எழுத்தாளன் என்பதுதான் என்னுடைய நிரந்தர அடையாளம். அதுதான் எனக்குப் பிடித்த வேலை!
கே: எழுத்தாளர் சங்கத்தில் நிர்வாகியாக தொடர்ந்து இருக்கிறீர்கள். சர்கார் படம் உள்ளிட்ட கதை திருட்டு விவகாரத்தில் கதை ஒற்றுமை/கிரெடிட் குறித்து சங்கம் பேசும்போது, "உண்மையான படைப்பாளி'யை பாதுகாப்பதற்கும், "தவறான குற்றச்சாட்டால்" ஒரு படைப்பாளி பாதிக்கப்படுவதற்கும் இடையே நீங்கள் வைக்கின்ற நியாயக்கோடு என்ன?''
ஒருவருடைய பொருளை மற்றொருவர் திருடிவிட்டால், அதை அவர் எளிதாக மீண்டும் சம்பாதித்து வாங்கிவிட முடியும். ஆனால் எழுத்துத்திருட்டு என்பது மிக மோசமானது. அது ஒருவரின் நீண்ட கால உழைப்பை அடியோடு அபகரிப்பது. அதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது.''
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு