You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"தலையில் எப்போது விழும் என்றே தெரியாது" - சென்னை பட்டினப்பாக்கம் குடியிருப்பின் நிலை என்ன? பிபிசி கள ஆய்வு
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
"வேலைக்குப் போய் விட்டு அன்றைய தினம் குலாப் சீக்கிரமாக வந்துவிட்டான். மதிய தொழுகையை முடித்துவிட்டு தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்தான். அப்போது மூன்றாவது மாடியில் ஜன்னல் மேல் இருந்த சன்ஷேடு (Sun Shade) குலாப் தலையில விழுந்துவிட்டது" என்கிறார் சையது குலாபின் உறவினர் யாகூப் பாட்ஷா.
ரத்த வெள்ளத்தில் கிடந்த குலாபை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த ஞாயிறுக்கிழமை அன்று (டிசம்பர் 22) மோகன் என்பவர் மூன்றாவது மாடியில் உள்ள தனது வீட்டு பால்கனியில் கைப்பிடிச் சுவரைப் பிடித்த போது அது கீழே விழ, அவரும் கீழே விழுந்துவிட்டார். மோகன் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவ்விரு சம்பவங்களும் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளில் நடந்தன. இங்குள்ள வீடுகள் பலவும் சேதமடைந்துவிட்டதால், அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
அங்குள்ள குடியிருப்புகளின் நிலை என்ன?
- நரிக்குறவர் பெண்களுக்கு ஸ்டாலின் 3 ஆண்டுக்கு முன் அளித்த வாக்குறுதி நிறைவேறியதா? பிபிசி கள ஆய்வு
- எண்ணூர்: 'மனிதர்கள் வாழவே தகுதியற்ற பகுதியா?' - அனல் மின் நிலைய திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
- டங்ஸ்டன் சுரங்கம்: சட்டமன்ற தீர்மானத்தால் என்ன நடக்கும்? மத்திய அரசின் சட்டத்திருத்தம் என்ன சொல்கிறது?
- மாஞ்சோலை வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் - மக்களின் அடுத்த திட்டம் என்ன?
சென்னை பட்டினப்பாக்கத்தில் சீனிவாசபுரம் பகுதியில் தமிழ்நாடு அரசின் குடிசை மாற்று வாரியத்தால் (தற்போது நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) 1977 ஆம் ஆண்டு 6 ஹெக்டேர் பரப்பளவில் 1,356 வீடுகள் கட்டப்பட்டன. தரைத்தளம் மற்றும் 3 மாடிகள் கொண்ட கட்டடத்தில் இந்த வீடுகள் உள்ளன.
இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டு 45 ஆண்டுகள் கடந்துவிட்டன. பல வீடுகளில் கான்கிரீட் பெயர்ந்து சுவர்கள் மற்றும் கூரைகளில் இரும்புக் கம்பிகள் வெளியே தெரியும் வகையில் உள்ளன.
வியாழக்கிழமை அன்று பிபிசி தமிழ் அங்கு சென்ற போது, தங்களின் துயரங்களை அப்பகுதி மக்கள் பகிர்ந்து கொண்டனர்.
"தலையில் எப்போது விழும் என்றே தெரியாது"
"ஐம்பது ஆண்டுகளாக இந்த பகுதியில் இருக்கிறோம். கடந்த 20 ஆண்டுகளாகவே இந்தப் பிரச்னைகள் இருக்கின்றன. வீடு முழுக்க சேதம் ஆகிவிட்டது. எப்போது எது தலையில் விழுமென்றே தெரியாது" என்றார், ஜூலைகா.
டிசம்பர் 4 ஆம் தேதியன்று சையது குலாப் இறந்த சம்பவம் இப்பகுதி மக்களை மன ரீதியாக மிகவும் பாதித்துள்ளது. "இப்போதும் குலாபின் நினைப்பில் அவரது அம்மா முபீனா இருக்கிறார். மனநலம் பாதிக்கப்பட்டது போல் புலம்பியபடியே இருக்கிறார்" என்கிறார் ஜூலைகா.
"இந்தப் பகுதியில் நடப்பதே ஆபத்து. அதனால் குழந்தைகளை நாங்கள் இங்கு விளையாட அனுமதிப்பதில்லை. அன்றைய தினம் 2 குழந்தைகள் விளையாடுவதை பார்த்த குலாப், அவர்களை விரட்டிவிட்டார். அந்த சமயத்தில்தான் சன்ஷேடு அவர் தலையில் விழுந்துவிட்டது" என்கிறார் யாகூப் பாட்ஷா.
இடிந்து விழுந்த பால்கனி
அடுத்து, பால்கனி இடிந்து விழுந்து படுகாயம் அடைந்த மோகனின் வீட்டுக்குச் சென்றோம். அவர் வீட்டில் பால்கனி இருந்ததற்கான அடையாளமே இல்லை. அந்த வீடு முழுவதுமே சேதம் அடைந்திருந்ததைக் காண முடிந்தது.
"மோகன் இங்கு குடிவந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டு பால்கனியில் நின்றிருந்த போது அவர் திடீரென கீழே விழுந்து விட்டார். அவர் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம்" என்கிறார் கோவிந்தம்மாள்.
இவர் மோகன் வசித்து வரும் குடியிருப்பின் முதல் தளத்தில் வசித்து வருகிறார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து குடியிருப்பில் வசித்து வந்த மற்ற குடும்பங்களை வேறு இடங்களுக்குச் செல்லுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
பொதுமக்களின் கோரிக்கை என்ன?
இப்பகுதியில் நடந்த இரு சம்பவங்களைத் தொடர்ந்து, வீடுகளைக் கணக்கெடுக்கும் பணியில் காவல்துறை பாதுகாப்புடன் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களிடம் பேசிய போது, "இந்தப் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளைக் கணக்கெடுத்து வருகிறோம்" என்று கூறினர். சேதமடைந்த பழைய குடியிருப்பை முழுமையாக இடித்துவிட்டு புதிதாக கட்டப்பட உள்ள குடியிருப்பில் வரும் வீடுகள் உண்மையான பயனாளிகளைப் போய்ச் சேர வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக அவர்கள் கூறினர்.
"20 ஆண்டு கால பிரச்னை"
சீனிவாசபுரம் பகுதியில் உள்ள வீடுகளை இடித்துவிட்டு புதிய குடியிருப்புகளைக் கட்ட வேண்டும என்று தமிழ்நாடு அரசுக்கு நிபுணர் குழு முன்பே பரிந்துரை செய்துள்ளது. இதன் பொருட்டு கடந்த 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வீடுகளைக் காலி செய்யுமாறு வாரியத்தின் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆனால், மீன்பிடி தொழிலுக்கு உகந்ததாக கடல் அருகே உள்ள குடியிருப்பை விட்டு வெளியேறினால் அரசு வேறிடத்தில் நிரந்தரமாக குடியமர்த்திவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் அதனை ஏற்க மறுத்துவிட்டனர். இதைத் தொடர்ந்து செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் மீனவ மக்களுடன் வாரியத்தின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
"எல்லா வீடுகளையும் இடித்துவிட்டு புதிய வீடுகளைக் கட்டித் தரப் போவதாக சொல்கிறார்கள். எங்களுக்குக் கடல்தான் தொழில். வேறு எங்கேயும் போய் பிழைக்க முடியாது. இந்த இடத்திலேயே அரசாங்கம் வீடு கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறோம்" என்கிறார் கோவிந்தம்மாள்.
தமிழ்நாடு அமைச்சர் கூறியது என்ன?
தலையில் சன் ஷேடு விழுந்ததால் சையது குலாப் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் தொழில்துறை மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார்.
அந்த குடியிருப்புகளின் மோசமான நிலை, பழைய கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடத்தை கட்டுவதற்கான நடவடிக்கைகள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்க முயன்றோம். "கலெக்டர் அலுவலக கூட்டத்தில் இருக்கிறார். பிறகு பேசுவார்" என்று மட்டும் அவரது உதவியாளர் பதில் அளித்தார். ஆனால் அதன் பிறகு பலமுறை முயன்றும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் தரப்பில் விளக்கம் தரப்படும் பட்சத்தில் இந்த கட்டுரையில் பின்னர் சேர்க்கப்படும்.
மயிலாப்பூர் எம்.எல்.ஏ சொல்வது என்ன?
திமுகவைச் சேர்ந்தவரான மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலுவிடம் பிபிசி தமிழ் பேசியது. "20 நாள்களுக்கு முன்பு ஒருவர் இறந்துவிட்டார். 'இதுபோன்று இன்னொரு சம்பவம் நடக்கக் கூடாது. நல்லது நடக்க வேண்டும் என்றால் ஆக்கிரமிப்புகளை கணக்கெடுக்க வேண்டும்' என்று கூறினேன். அதற்கு மக்கள் சம்மதம் தெரிவித்தனர்" என்கிறார்.
தொடர்ந்து பேசிய த.வேலு, "கடலை நம்பியே இவர்களின் வாழ்வாதாரம் உள்ளதால் அவர்களை இங்கிருந்து வெளியேற்றக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இந்த வாரம் ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை கணக்கெடுக்கும் பணிகள் முடிந்துவிடும்" என்கிறார்.
தங்களுக்கு தற்காலிக கூரை (Shed) வீடுகளை அமைத்து தருமாறு மக்கள் கேட்பதாகக் கூறும் த.வேலு, "அதற்கு சாத்தியமில்லை. அதற்கு மாற்றாக வீடுகளைக் காலி செய்யும் குடும்பங்களுக்கு தலா 24 ஆயிரம் ரூபாயை அரசு தருகிறது. வெளியில் வாடகைக்கு தங்குவதற்கு இந்த நிதி உதவுகிறது" என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)