மூளையில் 5 முறை அறுவை சிகிச்சை செய்ததால் மீண்டும் 'குழந்தையான' பெண் - தற்போது எப்படி இருக்கிறார்?
உங்கள் பெயர், முகம் அல்லது எப்படி நடப்பது, பேசுவது, எழுதுவது போன்ற உங்களுக்கு தெரிந்த அனைத்தையும் மறந்துவிட்டால் என்ன ஆகும் என்று நீங்கள் எப்போதாவது கற்பனை செய்து பார்த்ததுண்டா?
அதுதான் இவருக்கு நடத்துள்ளது.
31 வயதாகும் பத்மஜா, வாழ்க்கைக்கான அடிப்படை விஷயங்களையே மீண்டும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வசிக்கும் பத்மஜாவுக்கு திடீரென ஒரு நாள் தலைவலி ஏற்பட்டது. அதன் பின்னர் அவருக்கு மூளையில் 5 முறை அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தது. இதனால் அவருக்கு amnesia ஏற்பட்டது. இதனால் அவர் எல்லாவற்றையும் மறந்துவிட்டார்.
ஒரு குழந்தையைப் போல அவர் அனைத்தையும் மீண்டும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
"நான் அனைத்தையும் மறந்துவிடுவேன், எனக்கு எல்லாவற்றையும் மீண்டும் சொல்லிக்கொடுக்க வேண்டிய நிலை வரும் என்று யாரும் நினைத்து இருக்க மாட்டார்கள். என்னுடைய வாழ்க்கையே முற்றிலுமாக மாறிவிட்டது", என்று கூறினார் பத்மஜா.
பத்மஜாவுக்கு வாசிக்கக் கற்றுக்கொடுக்க அவரது குடும்ப உறுப்பினர்கள் postcard-ஐ உருவாக்கினர். நண்பர்கள், உறவினர்களை அடையாளம் காட்ட அவர்களது புகைப்படங்களைக் காட்டினர். அவரது மொத்த குடும்பமும் மிகவும் சிரமப்பட்டாலும் மனம் தளரவில்லை.
"அவளுக்கு இப்படி நடந்தது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் அதிர்ச்சியாக இருந்தது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது, மருந்துகளை எடுத்துக்கொண்டால் அவருக்கு எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தேன், ஆனால் அவர் அனைத்தையும் மறந்துவிட்டார் என்று எனக்கு தெரியாது. நாங்கள் பத்மஜாவுக்கு எல்லாவற்றையும் மீண்டும் கற்றுக்கொடுக்க வேண்டி இருந்தது. "சீக்கிரமே எல்லாம் சரியாகிவிடும்" என்று ஆறுதல் கூறுவேன். ஆனால் அது நிஜமாக 7 ஆண்டுகள் ஆயின. அந்த கால கட்டத்தைப் பற்றி யாராவது சொன்னால், உடனே எனக்கு அழுகை வந்துவிடும்", என்று பத்மஜாவின் தாய் அனுபமா திவாரி பிபிசியிடம் தெரிவித்தார்.
"பத்மஜாவின் மூளையின் இருபுறமும் பல கட்டிகள் இருப்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். மனிதன் செயல்பட இடது பக்க மூளை மிகவும் முக்கியமானது என்பதால் முதலில் அந்த பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் ஏற்பட்ட வீக்கம் சரியான பிறகு, மூளையின் வலது புறத்திலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கட்டிகள் அகற்றப்பட்டது", என்று நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் சுஷில் குமார் தபாரியா கூறினார்.
அறுவை சிகிச்சை முடிந்து 7 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், பத்மஜாவால் இப்போது எழுதவும் பேசவும் முடிகிறது. அவர் தற்போது மும்பையில் ஒரு புகைப்படக் கலைஞராகவும், எழுத்தாளராகவும், நாடக கலைஞராகவும் இருக்கிறார். அவர் ஒரு புத்தகத்தையும் எழுதி வெளியிட்டுள்ளார். தான் கடந்து வந்த பாதையை நினைத்து பார்த்து பத்மஜா நெகிழ்ச்சியடைகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



