You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விடை தெரியாத மர்மம்: புதினை ரகசியமாக சந்தித்த ப்ரிகோஜின் எங்கே? வாக்னர் குழுவினர் என்ன ஆனார்கள்?
- எழுதியவர், ஸ்டீவ் ரோஸன்பெர்க்
- பதவி, பிபிசி செய்தியாளர்
ரஷ்ய ஆதரவு கூலிப்படையாக இருந்த வாக்னர் குழு ரஷ்யாவுக்கு எதிராக திரும்பி மாஸ்கோவை நோக்கி அணிவகுத்து சென்றது. எனினும் ஒரே நாளில் இந்த கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், கிளர்ச்சி முடிவுக்கு வந்த 5 நாட்கள் கழித்து வாக்னர் குழுவின் தலைவர் ப்ரிகோஜினை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் சந்தித்து பேசியது தற்போது தெரியவந்துள்ளது. ரஷ்ய அரசும் இந்த சந்திப்பை உறுதிப்படுத்தியுள்ளது.
ஜூன் 24ஆம் தேதி காலையில் வாக்னர் குழுவின் கமாண்டர் யெவ்கெனி ப்ரிகோஜின் 5,000 படை வீரர்களுடன் தலைநகர் மாஸ்கோ நோக்கி அணிவகுத்துச் சென்றார். ப்ரிகோஜின் ராஜதுரோகம் செய்துவிட்டார் என்றும் முதுகில் குத்திவிட்டார் என்றும் புதின் கடுமையாக இதனை விமர்சித்தார்.
மாஸ்கோவில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் வாக்னர் குழு இருந்தபோது, இரு தரப்புக்கும் இடையே உடன்படிக்கை ஏற்பட்டது. இதனையடுத்து கிளர்ச்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. யாரும் கைது செய்யப்படவில்லை, யார் மீதும் வழக்குத் தொடரப்படவில்லை.
ப்ரிகோஜின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதைத் தாண்டி, கிளர்ச்சி முடிவுக்கு வந்த 5 நாட்கள் கழித்து ரஷ்ய அதிபர் மாளிகையில் அதிபர் புதினை தனது படைவீரர்களுடன் போய் அவர் சந்தித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தஸ்தாயெவ்ஸ்கியின் கதைகளை மிஞ்சும் அளவுக்கு ஆச்சரியங்களும் மர்மங்களும் உடைய ரஷ்ய அரசு - வாக்னர் குழு விவகாரத்தில் மற்றுமொரு திருப்பமாக இந்த சந்திப்பு பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பில் இருவரும் என்ன பேசிக்கொண்டனர், சந்திப்பு எப்படி முடிவுக்கு வந்தது போன்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை. எனினும் இதுவரை நிகழ்ந்ததை வைத்து பார்க்கும்போது மீண்டும் அவர்கள் இடையே `நட்பு` ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்பது மட்டும் புரியவருகிறது.
சமீப நாட்களாக, ப்ரிகோஜினை பற்றி அவதூறுகளை பரப்புவதிலேயே ரஷ்ய அரசு ஊடகம் அதிகம் கவனம் செலுத்துகிறது.
ப்ரிகோஜினின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் வீட்டில் ரஷ்ய படையினர் நடத்திய சோதனையில் துப்பாக்கிகள், தங்கக் கட்டிகள், செயற்கை தலைமுடி போன்றவை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களிலும், ரஷ்ய தொலைக்காட்சிகளிலும் வெளியாகின.
இதேபோல், ரஷ்யா ஒன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நியூஸ் ஆஃப் தி வீக் நிகழ்ச்சியில் ப்ரிகோஜின் குறித்து அவதூறு கூறுவது தொடர்கிறது.
அவர் ஒன்றும் ராபின்ஹுட் அல்ல, குற்றப்பின்னணி உடைய ஒரு தொழிலதிபர். அவரது பல்வேறு செயல்பாடுகள் சட்டத்துக்கு உட்பட்டவையாக இல்லை என்றும் ப்ரிகோஜன் குறித்து கருத்து பரப்பப்படுகிறது.
24ஆம் தேதி ஏற்பட்ட கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய அரசுக்கும் வாக்னர் குழுவுக்கும் இடையே என்ன ஒப்பந்தம் செய்யப்பட்டது? தன்னுடன் இருக்க விருப்பம் தெரிவித்த வாக்னர் குழுவினருடன் ப்ரிகோஜின் ரஷ்யாவை விட்டு பெலாரஸுக்கு செல்ல வேண்டும் என்பது ஒப்பந்தமாக இருக்கலாம்.
கடந்த வாரம் பெலாரஸின் தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, வாக்னர் தலைவரும் அவரது கூலிப்படையினரும் பெலாரஸில் இல்லை என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
அப்படியென்றால், வாக்னர் குழுவினர் எங்கே? ப்ரிகோஜின் எங்கே? அவர்களின் திட்டங்கள் என்ன? புதினுடன் அவர்கள் என்ன ஒப்பந்தம் செய்தனர் என்பது விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்