சேஸிங்கில் வரலாறு படைத்த ஆர்சிபி: பிளே ஆஃப்-ல் டாப் 2வது இடத்தை எட்ட உதவிய தற்காலிக கேப்டன்

லக்னௌவில் நடைபெற்ற சீசனின் கடைசி லீக் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய லக்னௌ அணி பவர் பிளேயில் 1 விக்கெட் இழப்புக்கு 55 ரன்களை எடுத்தது. 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மிச்செல் மார்ஷ் மற்றும் ரிஷப் பண்ட் 77 பந்துகளில் 150 ரன்களை கடந்தனர். இந்த சீசனில் விமர்சனங்களை சந்தித்து வந்த லக்னௌ அணி கடைசிப் போட்டியில் அதிரடிகாட்டியது குறிப்பாக கேப்டன் ரிஷப் பந்த் 54 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். சதம் அடித்ததும் அவர் பல்டி அடித்து களத்தில் கொண்டாடினார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னௌ அணி 3 விக்கெட் இழப்புக்கு 227 ரன்களைக் குவித்தது. ரிஷப் பண்ட் 61 பந்துகளில் 118 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மிச்செல் மார்ஷ் மற்றும் ரிஷப் பண்ட்டின் அதிரடி ஆட்டம் அந்த அணி மிகவும் சவாலான ஸ்கோரை குவிக்க உதவியது.

இதனையடுத்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்கியது. ஃபில் சால்ட் மற்றும் விராட் கோலி வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். பவர் பிளேயில் 1 விக்கெட் இழப்புக்கு 66 ரன்களை ஆர்சிபி எடுத்தது. இதன் பின்னர் ரஜத் பட்டிதார் மற்றும் லிவிங்ஸ்டோன் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும், இன்று கேப்டனாக களமிறங்கிய ஜிதேஷ் ஷர்மா மற்றும் மயாங்க் அகர்வால் விக்கெட் சரிவுக்கு அணை போட்டனர்.

குறிப்பாக 33 பந்துகளில் 85 ரன்களைக் குவித்த ஜித்தேஷ் ஷர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 228 ரன்கள் என்ற பிரமாண்ட இலக்கை அலட்டிக் கொள்ளாமல் 8 பந்துகளை மீதம் வைத்து ஆர்சிபி எட்டியது. கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரஜத் பட்டிதார் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய போதும், இம்பாக்ட் பிளேயராக களமிறங்கினார். ஆர்சிபி வரலாற்றில் இதுவே மிகப்பெரிய ரன் சேஸ் ஆகும். இந்த மிகப்பெரிய வெற்றி பிளே ஆஃப் போட்டிகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள ஆர்சிபிக்கு உதவும் என நம்பப்படுகிறது.

பிளே ஆஃப் எப்படி நடக்கும்?

இதனையடுத்து ஐபிஎல் பிளே ஆஃப்க்கு டேபிளில் 2 வது இடத்தை ஆர்சிபி உறுதி செய்துள்ளது. முதலிடத்தில் உள்ள பஞ்சாப் அணியுடன் குவாலிஃபயர் போட்டியில் ஆர்சிபி விளையாடும்.இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு நேரடியாக முன்னேறும். இதே போன்று 3 வது மற்றும் 4 வது இடத்தில் உள்ள குஜராத் மற்றும் மும்பை அணிகள் எலிமினேட்டர் போட்டியில் விளையாடும். இவற்றில் வெற்றி பெறும் அணி குவாலிஃபயரில் தோல்வியடையும் அணியுடன் விளையாட வேண்டும். அந்த இரு அணிகளில் வெற்றி பெறும் அணி 2வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். ஐபிஎல் இறுதிப்போட்டி ஜூன் 3ம் தேதி நடைபெற உள்ளது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு