டிஜிட்டல் மோசடிகளில் இந்தியர்கள் இழந்த ரூ.23,718 கோடி - ரிசர்வ் வங்கி என்ன செய்ய முடியும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நிகில் இனாம்தார்
- பதவி,
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
பிப்ரவரி மாதத்தில், புனே நகரில் வணிகப் பகுப்பாய்வாளராகப் பணிபுரியும் அலோக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு, அவரது செல்போனில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காக அவர் 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும், அவர் அந்த அபராதத்தை விரைவாகச் செலுத்த வேண்டும் எனவும், இல்லையெனில் அவரது ஓட்டுநர் உரிமம் இடைநிறுத்தப்படக் கூடும் எனவும் அந்தக் குறுஞ்செய்தி எச்சரித்திருந்தது.
இதனால் கவலையடைந்த அலோக், அபராதத்தைச் செலுத்துவதற்காக அதில் கொடுக்கப்பட்டிருந்த இணைய முகவரியை உடனடியாக கிளிக் செய்தார். பணம் செலுத்தும் செயல்முறையை நிறைவு செய்யும்போது, அவரிடம் ஒரு ஓடிபி கேட்கப்பட்டது, அவர் அதையும் பகிர்ந்துகொண்டார்.
சில நிமிடங்களிலேயே, அவரது கடன் அட்டையில் (கிரெடிட் கார்டு) இருந்து ஒரு பெரிய தொகை எடுக்கப்பட்டது. ஆயிரம் ரூபாய்க்குப் பதிலாக, அவரது அட்டையில் அனுமதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச வரம்பான சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் பணம் பிடிக்கப்பட்டது.
தனக்கே தெரியாமல், அலோக் தான் செலுத்த நினைத்த தொகையைவிட மிக அதிகமான ஒரு பணப் பரிமாற்றத்திற்கு ஒப்புதல் அளித்துவிட்டார். இந்தியாவில் பரவலாக நடக்கும் ஒரு டிஜிட்டல் மோசடிக்கு அவர் பலியாகியிருந்தார்.
இத்தகைய மோசடிகளில், மோசடி செய்பவர்கள் அதிகாரபூர்வமான நிறுவனங்களிடம் இருந்து வருவதைப் போலத் தோற்றமளிக்கும் போலியான குறுஞ்செய்திகளை அனுப்புகிறார்கள். இந்தச் செய்திகளில் உள்ள இணைய முகவரிகள் மக்களைப் போலி இணையதளங்களுக்கு அழைத்துச் செல்கின்றன. மக்கள் அங்கு தங்கள் விவரங்களைப் பதிவு செய்யும்போது, மோசடிக்காரர்கள் அந்த விவரங்களைப் பயன்படுத்தி அவர்களுடைய வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தைத் திருடுகிறார்கள்.
நிபுணர்கள் இத்தகைய மோசடி வகையை "சமூகப் பொறியியல்" என்று அழைக்கிறார்கள். அதாவது, மோசடி செய்பவர்கள் மக்களின் உணர்வுகளுடன் விளையாடி அவர்களை ஏமாற்றுகிறார்கள். மக்கள் எதையும் யோசிக்காமல் அவசரமாகச் செயல்படும் வகையில், அவர்கள் மக்களிடையே அச்சத்தையும் அவசர உணர்வையும் உருவாக்குகிறார்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவில் இத்தகைய மோசடி வழக்குகள் பெருமளவில் அதிகரித்துள்ளன. நாடு முழுவதும் அதிகமான மக்கள் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறைகளைப் பயன்படுத்தி வருவதுதான் இதற்கு முக்கியக் காரணம்.
கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும், ஏறக்குறைய 2.5 மில்லியன் மக்கள் இத்தகைய மோசடிகள் காரணமாக சுமார் 2.5 பில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 23,718 கோடி ரூபாய் பணத்தை இழந்துள்ளனர். இது 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4,300% என்ற அதிர்ச்சியளிக்கும் அளவிலான அதிகரிப்பாகும்.
இந்தத் திடீர் உயர்வின் காரணமாக, இந்தியாவின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ வங்கி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. இந்த மாதத்தின் தொடக்கத்தில், இத்தகைய மோசடிகளைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் பல புதிய நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்துத் தான் பரிசீலித்து வருவதாகக் குறிப்பிட்டு, ஒரு கலந்தாய்வு அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
இணையவழி மோசடிகளைக் கட்டுப்படுத்துவதற்கான சில புதிய நடவடிக்கைகளை ஒரு கலந்துரையாடல் ஆவணம் பரிந்துரைக்கிறது. ஒரு யோசனை என்னவெனில், குறிப்பிட்ட வங்கிக்கு வங்கி (ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு) நடக்கும் பரிமாற்றங்களுக்கு ஒரு மணிநேர தாமதத்தை அறிமுகம் செய்வதாகும்.

பட மூலாதாரம், Getty Images
அதாவது, ஒருவர் பணத்தை அனுப்பிய பிறகு, அது உடனடியாக பெறுநரைச் சென்றடையாது. இது அந்தப் பரிமாற்றம் ஒரு தவறு அல்லது மோசடி எனத் தெரிய வந்தால் அதை நிறுத்துவதற்குச் சிறிது அவகாசம் கொடுக்கும் என்பதே அந்த யோசனையாகும்.
மற்றொரு பரிந்துரை, பெரிய தொகையிலான கொடுப்பனவுகளுக்கு, குறிப்பாக முதியவர்கள் போன்ற எளிதில் இப்படியான மோசடிகளில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு, கூடுதல் சரிபார்ப்பு முறையைச் சேர்ப்பதாகும். இத்தகைய சூழல்களில், பரிமாற்றம் முழுமையடைவதற்கு முன்பு, ஒரு "நம்பகமான நபர்" அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியிருக்கலாம்.
வங்கிக் கணக்குகளுக்கு வரும் பெரிய அளவிலான பண வரவுகளைக் கண்காணிப்பது குறித்தும் இந்த ஆவணம் பேசுகிறது. வங்கிக் கணக்குகள் "மியூல் கணக்குகளாக" (சட்டவிரோத பணத்தை இடமாற்றம் செய்யப் பயன்படுத்தப்படும் கணக்குகள்) பயன்படுத்தப்படுவது இல்லை என்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். பயனர்களுக்கு டிஜிட்டல் கொடுப்பனவுகள் மீது அதிக கட்டுப்பாட்டை வழங்குமாறும் இது பரிந்துரைக்கிறது. உதாரணமாக, டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளில் மக்கள் ஏற்கெனவே செய்வது வருவதைப் போலவே, டிஜிட்டல் கொடுப்பனவு வசதிகளைத் தேவைக்கு ஏற்ப இயக்கும் அல்லது முடக்கும் வசதியையும், அதற்கான வரம்புகளை நிர்ணயிக்கும் வசதியையும் வழங்குவதாகும்.
பொது மக்களிடம் இருந்து பெறப்படும் கருத்துகளைக் கவனத்தில் கொண்ட பின்னரே, இந்தப் பரிந்துரைகள் இறுதி செய்யப்படும். இருப்பினும், ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ள இந்த நடவடிக்கைகள் ஒரு நேர்மறையான முன்னெடுப்பு என்றாலும், அவை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று பிபிசியிடம் பேசிய பல நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
எடுத்துக்காட்டாக, கொடுப்பனவுகளைத் தாமதப்படுத்தும் யோசனை, அலோக் அனுபவித்ததைப் போன்ற ஓடிபி சார்ந்த மோசடிகளைத் தடுக்க உதவக்கூடும். ஆனால், ரிசர்வ் வங்கியின் இன்னோவேஷன் ஹப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான ராஜேஷ் பன்சாலின் கூற்றுப்படி, இன்று நிகழும் மொத்த மோசடிகளில் இத்தகைய சம்பவங்கள் மிகச் சிறிய பங்கையே கொண்டுள்ளன.
பிபிசியிடம் பேசிய அவர், "மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இத்தகைய மோசடிகளே ஆதிக்கம் செலுத்தும் வகையாக இருந்தன. ஆனால் இப்போது மோசடிகள் வேறொரு தளத்திற்கு நகர்ந்துவிட்டன. மேலும் அவை மிகவும் நுட்பமானவையாகவும் மாறிவிட்டன," என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
மேலும், இந்தப் புதிய விதிகளை நடைமுறைப்படுத்துவது எளிதாக இருக்காது என்றும், அவற்றைச் செயல்திறனுடன் நடைமுறைப்படுத்துவதில் சவால்கள் எழக்கூடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
"பணம் செலுத்தும் அமைப்பில் பல தரப்பினர்கள் சம்பந்தப்பட்டு இருப்பதால், கொடுப்பனவுகளில் தாமதத்தை ஏற்படுத்துவது எளிதான காரியமாக இருக்காது. தற்போது இந்த முழு அமைப்பும் செயல்படும் விதத்தை மாற்றாமல், இதைச் செய்வதற்கு எளிய வழிமுறை எதுவும் இல்லை," என்று முன்னணி ஒழுங்குமுறை தொழில்நுட்ப நிறுவனமான IDfy-ஐ சேர்ந்த ரிஜு ரே கூறுகிறார்.
இந்திய ரிசர்வ் வங்கியும் தனது கலந்துரையாடல் ஆவணத்தில் இந்தக் கவலையை ஏற்றுக்கொள்கிறது. கொடுப்பனவுகளில் தாமதத்தை ஏற்படுத்துவதற்கு, முழு அமைப்பிலும் பெரிய அளவிலான மாற்றங்கள் தேவைப்படும் என்று அது குறிப்பிடுகிறது.
பரிவர்த்தனைகள் எவ்வாறு செயலாக்கப்படுகின்றன, அவை எவ்வாறு வரிசையில் வைக்கப்படுகின்றன மற்றும் அவற்றை எவ்வாறு ரத்து செய்ய முடியும் என்பதில் ஏற்படும் மாற்றங்களும் இதில் அடங்கும். இவை அனைத்துக்கும், பணம் செலுத்தும் அமைப்பில் பங்கு வகிக்கும் அனைவருக்கும் கணிசமான செலவும் முயற்சியும் தேவைப்படும்.
டிஜிட்டல் கொடுப்பனவுகளின் முக்கிய நன்மைகளில் ஒன்றான 'உடனடி தன்மைக்கு' எதிரானதாகவே இந்தக் கருத்து அமைவதாக ரிசர்வ வங்கி சுட்டிக்காட்டுகிறது. டிஜிட்டல் கொடுப்பனவுகள் விரைவாகவும் உடனடியாகவும் செயல்படும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் தாமதத்தை ஏற்படுத்துவது அந்த அடிப்படை அம்சத்தையே மாற்றிவிடும்.
இதை எளிமையான முறையில் விளக்கும் ராஜேஷ் பன்சால், "இதுவொரு விரைவுச்சாலையை அமைத்துவிட்டு, ஒவ்வொரு சில கிலோமீட்டருக்கும் வேகத்தடைகளை அமைப்பதைப் போன்றது," என்று கூறுகிறார்.
இத்தகைய தாமதங்களை ஏற்படுத்துவது பெரிதாகப் பயனுள்ளதாக இருக்காது என்று அவர் கருதுகிறார். ரிஜு ரேவின் கூற்றுப்படி, மோசடி செய்பவர்கள் இந்தத் தாமதங்களைத் தவிர்த்துச் செயல்படுவதற்கான வழிகளை நிச்சயம் கண்டறிந்து விடுவார்கள். உதாரணமாக, அவர்கள் ஒரு வாடிக்கையாளரிடம் பணத்தைச் செலுத்துமாறு கேட்டுவிட்டு, எந்தவித எச்சரிக்கையோ அல்லது அறிவிப்போ வராதிருப்பதை உறுதி செய்யும் வகையில், ஒரு மணிநேரம் கழித்து அதை உறுதிப்படுத்துமாறு கூறலாம்.

பட மூலாதாரம், Getty Images
முன்மொழியப்பட்டுள்ள பிற சில நடவடிக்கைகள் கேட்பதற்கு நியாயமானவையாகத் தோன்றினாலும், அவை நடைமுறை ரீதியாகப் பல கேள்விகளை எழுப்புவதாக ரே குறிப்பிடுகிறார். உதாரணமாக, மூத்த குடிமக்களின் பரிவர்த்தனைகளுக்குக் கூடுதல் சோதனைகளை அறிமுகப்படுத்துவது ஒரு நல்ல யோசனையே, ஆனால் நிஜ வாழ்வில் அது எப்போதும் சீராகச் செயல்படாமல் போகலாம்.
ரே பின்வருமாறு கேள்வி எழுப்புகிறார்: "மூத்த குடிமக்களுக்குக் கூடுதல் சோதனைகள் தேவை என்பது மிகவும் பரிந்துரைக்கத்தக்க ஒரு விஷயமாக இருக்கலாம். ஆனால் அதை நடைமுறைப்படுத்துவது எப்படி? உங்கள் 'நம்பகமான ஆலோசகர்' என்று நீங்கள் கருதுபவர் வெளிநாட்டில் இருந்தால் என்ன செய்வது? மேலும், நீங்கள் மேற்கொள்ளும் ஒரு பரிவர்த்தனை மோசடியானது எனத் தெரிந்தும், அதைத் தொடருமாறு அந்த ஆலோசகரே உங்களைக் கேட்டுக்கொண்டால் என்ன செய்வது? அத்தகைய சூழலில் அதற்கான பொறுப்புடைமை யாரைச் சாரும்?"
சுருக்கமாகக் கூறுவதெனில், இந்தக் கருத்துகள் காகிதத்தில் பார்ப்பதற்குச் சிறப்பாகத் தோன்றினாலும், நடைமுறை சூழல்களில் அவை எவ்வாறு செயல்படும் என்பது குறித்துப் பல சவால்களும் விடையளிக்கப்படாத கேள்விகளும் இன்னும் எஞ்சியிருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
சட்டவிரோத பணப் பரிமாற்றத்திற்காகப் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகளான 'மியூல் கணக்குகளை' சிறப்பாகக் கண்டறிவதற்காக, உள்வரும் பணத்திற்கு வரம்புகளை விதிப்பது மற்றும் கடுமையான சோதனைகளை மேற்கொள்வது போன்ற திட்டங்கள், மோசடியைக் குறைக்க உதவும். இருப்பினும், இதற்கு அதிக வளங்கள் தேவைப்படும் எனவும், செலவு மிக்கதாக இருக்கும் என்றும் IDfy நிறுவனத்தைச் சேர்ந்த ரிஜூ ரே கூறுகிறார். இறுதியில், இந்தக் கூடுதல் செலவுகள் வாடிக்கையாளர்கள் மீது சுமத்தப்பட வாய்ப்புள்ளது என்கிறார் அவர்.
ராஜேஷ் பன்சாலின் கூற்றுப்படி, இந்திய ரிசர்வ் வங்கியிடம் ஏற்கெனவே மியூல்ஹன்டர்.ஏஐ என்ற அமைப்பு உள்ளது. இந்தத் தளம் சந்தேகத்திற்கிடமான பயனாளர்களின் கணக்குகளை அடையாளம் காணும் திறன் கொண்டது.
"நான் தலைமை செயல் அதிகாரியாக இருந்தபோது, இந்தக் கருத்தாக்கம் உருவானது. இதை வங்கி அமைப்பில் கிட்டத்தட்ட நிகழ்நேரத்தில் செயல்படுத்த வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, அது இன்னும் நடக்கவில்லை," என்று அவர் விளக்குகிறார்.
இந்த அமைப்பைக் கூடிய விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டுமெனவும் அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
மேலும், விதிகளை உருவாக்குவது மட்டுமே இந்தப் பிரச்னையைத் தீர்க்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். விழிப்புணர்வை அதிகரிப்பதும், மக்களுக்கு டிஜிட்டல் அறிவைப் புகட்டுவதும் சம முக்கியத்துவம் வாய்ந்தவை.
இந்தியாவில், மக்கள் மிக விரைவாக டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஆனால் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும், டிஜிட்டல் அறிவும் அதே வேகத்தில் வளரவில்லை. இந்த இடைவெளி மக்களை மோசடிகளுக்கு எளிதில் பாதிக்கப்படும் நிலையில் வைத்துள்ளது.
மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ரிசர்வ் வங்கி ஏற்கெனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அமிதாப் பச்சன் போன்ற பிரபலங்களை வரவழைத்தும், ஐபிஎல் போன்ற பிரபலமான கிரிக்கெட் நிகழ்வுகளைப் பயன்படுத்தியும் விழிப்புணர்வு செய்திகளைப் பரப்பியுள்ளது. இருப்பினும், மக்களிடையே டிஜிட்டல் விழிப்புணர்வை மேம்படுத்த இன்னும் அதிக முதலீடு தேவை என்கிறார் ரே.
பிரச்னையை அதன் மூலத்திலேயே தீர்க்க, காவல்துறை, அரசு அமைச்சகங்கள், சந்தை ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் பிற முகமைகள் போன்ற நிறுவனங்களுடன் ரிசர்வ் வங்கி இன்னும் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும் என்றும் பன்சால் கூறுகிறார்.
"இது யாருடைய பொறுப்பு என்பதே தற்போதைய சவால்" என்று அவர் குறிப்பிடுகிறார். அதாவது, இந்தப் பிரச்னையைக் கையாள்வதற்கு முக்கியமாக யார் பொறுப்பேற்பது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்கிறார் அவர்.
இருப்பினும், ரிசர்வ் வங்கி இந்தப் பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து, புதிய விதிகளை உருவாக்குவதற்கு முன்பு கலந்துரையாடல்களைத் தொடங்கியிருப்பது ஒரு நேர்மறையான நடவடிக்கை என்று ரே கூறுகிறார்.
மேலும் பேசிய அவர், "இந்தக் கலந்துரையாடல்கள் இறுதியில் ஒழுங்குமுறைக்கு வழிவகுக்கும். முன்பு ரிசர்வ் வங்கி வெறுமனே ஓர் உத்தரவை அறிவித்து வந்த நிலையில் இதுவொரு பெரிய மாற்றம்," என்று தெரிவித்தார்.
(குறிப்பு: இந்தக் கட்டுரையில் ஒரு நபரின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக பெயர் மாற்றப்பட்டுள்ளது.)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































