You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியப் பெண்கள் தங்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்டதை கணவரிடம் மறைப்பது ஏன்?
உலக அளவில் சராசரியாக பெண்கள் அவர்களின் 50 வயதில் மெனோபாஸை அடைகின்றனர். ஆனால் இந்தியாவில் பெண்களுக்கான மெனோபாஸ் வயதானது 46 - 47 வயது. பெண்கள் தங்கள் வாழ்நாளில் மூன்றில் ஒரு பாதியை மெனோபாஸில் கழிக்கின்றனர்.
பெண்கள் அவர்கள் வாழ்வில் மெனோபாஸை அடையும் போது அவர்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். எமோஷனலாகவும் பல்வேறு சிக்கல்களை அவர்கள் சந்திப்பார்கள். பயம், அச்சம், அவமானங்களுக்கு ஆளாகும் அவர்கள் அதில் இருந்து வெளியேற வழியின்றி வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
பெண்களுக்கு குறிப்பிட்ட வயதாகும் போது, மெனோபாஸ் ஏற்படுகிறது. அவர்களின் இனப்பெருக்க ஹார்மோன்களின் செயல்பாடுகள் குறைய துவங்கும். எளிமையாக கூற வேண்டும் என்றால், பெண்களுக்கு மாதவிடாய் அதற்கு பின்பு ஏற்படாது.
உடல் ரீதியாகவும், மன அளவிலும் அதிக சோர்வையும், எரிச்சலையும் உள்ளாக்கும் மாற்றங்களை இந்தியப் பெண்கள் எதிர்கொண்டு வரும் சூழலில், அவர்கள் ஏன் மெனோபாஸ் நிகழ்வு குறித்தோ, தங்களுக்கு இனிமேல் மாதவிடாய் ஏற்படாது என்பது குறித்தோ தங்கள் கணவர்களிடம் கூறுவதில்லை?
பெரும்பாலான பெண்கள், தங்களுடைய கணவர்கள் தங்களிடம் இருந்து விலகி விடுவார்கள் என்று அஞ்சி இது போன்ற விவகாரங்களை அவர்களிடம் கூறுவதில்லை.
"என்னுடைய கணவர் நான் எப்போதும் அழகாக ஆடை அணிய வேண்டும் என்று விரும்புவார். நான் பெரிய பொட்டும், நகைகளும் அணிந்து கொள்வேன். ஒரு நாள் அனைத்தும் நின்றுவிட்டது.
அடிக்கடி நள்ளிரவில் எழுந்து கொள்வேன். என்னை சுற்றி நடக்கும் அனைத்தை நினைத்தும் எரிச்சல் அடைவேன். என்னுடைய கொலுசு சத்தம் கேட்டால் கூட நான் சோகமடைந்துவிடுவேன். எனக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது. என்னுடைய கொலுசு சத்தமிடுகிறது. குழந்தைத்தனமாக இருக்கிறது என்று நினைத்துக் கொள்வேன்.
ஆண்களுக்கு 60 வயது ஆனாலும் ஆண்கள் தான். ஆனால் பெண்களுக்கு 40 வயதோ, 45 வயதோ ஆனால், அவர்களுக்கு மெனோபாஸ் ஆரம்பித்துவிட்டால், அவளின் வாழ்க்கை அதோடு முடிந்தது. அவளின் பெண்மைக்கு அதோடு முடிவு வந்துவிட்டது என்று சொல்வார்கள்.
பெண்களை பல்வேறு விசயங்களில் இருந்து இது பாதுகாக்கிறது. என்னிடம் இருந்து அவர் விலகிவிடுவார் என்று நினைத்து தான் நான் அவரிடம் இது குறித்து கூறவில்லை. நான் பல ஆண்டுகளாக இது பற்றி அவரிடம் கூறவில்லை.இல்லை நான் இது பற்றி கூறவே இல்லை.
நான் மெனோபாஸ் அடைந்துவிட்டேன் என்று அவருக்கு தெரிந்திருந்தால் அவர் கட்டுப்பாடு இல்லாமல் செயல்பட்டிருப்பார். அவருக்கு வேண்டியதை எதையும் அவர் செய்ய துணிந்திருப்பார்." என்கிறார் ஒரு பெண்.
பெண்களை காயப்படுத்த காரணம் தேடும் இந்த ஆணாதிக்க சமூகத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு மெனோபாஸ் விடுதலையை வழங்கிவிடுவதில்லை.
"உடல் அடிக்கடி சூடாக ஆரம்பித்துவிடும். மன அழுத்தத்துடன் இருப்பேன். அதிகமாக வேர்க்க ஆரம்பித்துவிடும். மொத்த உடலுமே எரிவது போல் இருக்கும். தலை சூடாக இருக்கும். என் உடல் முழுவதும் எரிவது போல் இருந்தது. உடலின் ஒரு பாதி வலித்துக் கொண்டே இருக்கும். எனக்கு மூட்டு வலி இருந்தது. நான் எக்ஸ்ரே எடுத்தேன். ஆனால் அதில் ஒன்றும் தெரியவில்லை." என்கிறார் டெல்லியைச் சேர்ந்த சங்கீதா.
மிகவும் தீவிரமான உடல் சார்ந்த இன்னல்களைச் சந்திக்கும் பெண்கள் இதை வெளியில் கூறாத சூழலில் அவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் பராமரிப்பு போன்றவற்றைப் பெறுவதில் பெரும் சிக்கல்கள் நிலவுகின்றன.
இது போன்ற அறிகுறிகளை முறையாக கவனித்து சிகிச்சை அளிக்கவில்லை என்றால், வாழ்க்கை முறை மிகவும் மோசமடைய ஆரம்பித்துவிடும். சில நேரங்களில் பெண்கள் தீவிரமான உடல் நல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். அவர்களின் தசைகள் பலவீனமாகும்.
எலும்புப் புரை நோய் ஏற்படும். இதயம் நோய்கள் மற்றும் புற்று நோய் போன்றவை ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மக்கள் தொகை கணக்கெடுப்பை கருத்தில் கொண்டால், 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, 9.6 கோடி பெண்கள் அப்போது 45 வயதிற்கு மேலே இருந்தனர். அதை அடிப்படையாக கொண்டு கணக்கிட்டால், 2026ம் ஆண்டுக்குள் இந்த வயது வரம்பில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை 40 கோடியாகும்.
2030ம் ஆண்டுக்குள், மெனோபாஸில் இருக்கும் பெண்கள், மெனோபாஸ் ஆன பெண்களின் எண்ணிக்கை 120 கோடியாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 4.7 கோடி பெண்கள் மெனோபாஸை அடைகின்றனர் (Source: Journal of climacteric and post-menopause.)
பிரிட்டன், அமெரிக்கா, நியூசிலாந்து, மற்றும் ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகள் மெனோபாஸ் தொடர்பாக புதிய கொள்களை வகுத்து வருகின்றனர்.
இந்தியாவில் அது போன்ற கொள்கைகள் ஏதும் இல்லை.
2023ம் ஆண்டு, அன்றைய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி, நாடாளுமன்றத்தில், "அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கான மெனோபாஸ் கொள்கைகள் ஏதும் தற்போது நடைமுறையில் இல்லை," என்று தெரிவித்தார். (Source: இந்திய அரசு)
தவறான நம்பிக்கைகள், மெனோபாஸ் குறித்த பயமும், இனப்பெருக்கம் சாரா ஆரோக்கியம் குறித்த அரசின் கவனக்குறைவுக்கு மத்தியில் இந்திய பெண்கள் வெகு காலம் மெனோபாஸ் காலத்தை கடந்து வாழ்கின்றனர்.
மேலதிகத் தகவல்கள் கணொளியில்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)