You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகப் புகழ்பெற்ற தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் காலமானார்
உலகின் சிறந்த தபேலா இசைக் கலைஞர்களில் ஒருவரான ஜாகிர் ஹுசைன் காலமானார். அவருக்கு வயது 73.
புகழ்பெற்ற இந்திய இசை கலைஞரான ஜாஹிர் ஹுசைன் நுரையீரல் நோய் பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
"ஆசிரியராக அவரது பணி எண்ணற்ற இசைக்கலைஞர்களுக்கு ஒரு அழியாத முத்திரையை பதித்துள்ளது. கலாசார தூதராகவும், எல்லா காலத்திலும் சிறந்த இசைக்கலைஞர்களில் ஒருவராகவும் இணையற்ற பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறார்" என்று ஜாஹிர் ஹுசைன் குடும்பத்தினர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
1951-ஆம் ஆண்டு பிறந்த அவர்,1988 இல் பத்மஸ்ரீ, 2002 இல் பத்ம பூஷன் மற்றும் 2023 இல் பத்ம விபூஷன் ஆகிய விருதுகளைப் பெற்றார்.
நான்கு கிராமி விருது
நான்கு முறை கிராமி விருதினை ஜாஹிர் ஹுசைன் பெற்றுள்ளார். கிராமி விருது என்பது இசைத் துறையில் ஆஸ்கார் போன்ற உயரிய விருதாகும்.
முதல் முறையாக 2009-ஆம் ஆண்டு கிராமி விருதினை ஜாகிர் ஹுசைன் வென்றார். 'குளோபல் ட்ரம் ப்ராஜெக்ட்' என்ற படைப்புக்காக அவருக்கு இது வழங்கப்பட்டது.
இதற்காக அவர் மிக்கி ஹார்ட் மற்றும் ஜோவ்வானி ஹிடல்கோ ஆகிய இசைக்கலைஞர்களுடன் இணைந்து பணிபுரிந்தார்."சிறந்த கான்டெம்ப்ரரி வேர்ல்ட் மியூசிக் ஆல்பம்" என்ற பிரிவில் இந்த விருதை இவர் வென்றிருந்தார்.
இதை தொடர்ந்து 2024-ஆம் ஆண்டு நடந்த 66 வது கிராமி விருது விழாவில் மூன்று விருதுகளை இவர் வென்றார்.
'ஆஸ் வீ ஸ்பீக்' என்ற பாடலுக்காக சிறந்த கான்டெம்ப்ரரி இன்ஸ்ட்ரூமென்டல் ஆல்பம் என்ற பிரிவில் ஒன்று, 'திஸ் மோமென்ட்' என்ற பாடலுக்காக சிறந்த குளோபல் மியூசிக் ஆல்பம் என்ற பிரிவில் ஒன்று, மேலும் 'பாஷ்டோ' என்ற பாடலுக்காக சிறந்த குளோபல் மியூசிக் பெர்ஃபார்மன்ஸ் என்ற பிரிவில் ஒன்று என மொத்தம் மூன்று விருதுகளை அவர் வென்றார்.
தபேலா இசைக் கலைஞர் உஸ்தாத் அல்லா ரக்கா கானின் மகனான ஜாஹிர் ஹுசேன் தனது ஏழாம் வயதில் முதல் இசைக் கச்சேரியில் பங்கேற்றார்.
ஜாகிர் ஹுசைன், இந்திய இசைத்துறை மட்டுமன்றி உலகளாவிய மேடைகளில் தனது இசையால் அறியப்பட்டவர். அவர் தி பீட்டில்ஸ் உட்பட பல மேற்கத்திய இசைக்கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றி புகழ் பெற்றவர்.
இசைக்கலைஞர் வசிப்புதீன் டாகர் பிடிஐ யிடம், "ஜாகிர் எங்களை போன்ற அனைவருக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர். இறைவன் அவருக்கு சிறந்த கரங்களை அருளியிருக்கிறார். இது ஈடு செய்யமுடியாத இழப்பு. தனது திறமையால் பலரின் இதயத்தை வென்றவர் அவர் என்று தனது வருத்தத்தை தெரிவித்தார்.
அவருக்கு உலகம் முழுக்க மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)