You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மதுரை அருகே 20 ஆண்டுகள் கொத்தடிமையாக இருந்த ஆந்திர நபர் குடும்பத்துடன் சேர்ந்தது எப்படி?
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் வழி தவறி சிவகங்கை மாவட்டத்துக்கு சென்ற அப்பாராவ், தற்போது குடும்பத்தாருடன் ஒன்றிணைந்துள்ளார்.
சிவகங்கையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடந்த நெகிழ்வான தருணத்தில் அப்பாராவை அழைத்துச் செல்ல அவரது மகள் சாயம்மாள் மற்றும் மருமகன் தம்புதோரா சந்து ஆகியோர் வந்திருந்தனர்.
அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தவாறே கண்ணீர் மல்க தனது ஊருக்கு புறப்பட்டுச் சென்றார் அப்பாராவ்.
அப்பாராவின் தமிழ்நாட்டு வாழ்க்கை சுமார் 20 ஆண்டுகள் பின்னிருந்து தொடங்குகிறது. 2003-ம் ஆண்டு வாக்கில் ஆந்திர மாநிலத்திலிருந்து புதுச்சேரிக்கு கட்டட வேலைக்காக ரயிலில் வந்த அப்பாராவ், ரயில் நிலையம் ஒன்றில் டீ குடிக்க இறங்கிய போது ரயிலை தவறவிட்டார்.
இதன் பின்னர் கிடைத்த ரயிலில் ஏறி சிவகங்கை வந்தடைந்த அவரை, காளையார்கோவிலை சேர்ந்த நபர் தமது ஊருக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
சுமார் 20 ஆண்டுகளாக சம்பளம் ஏதும் பெறாமல் உணவு, உடையை மட்டுமே பெற்று வேலை பார்த்து வந்த அப்பாராவை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். அப்பாராவ் மற்றும் அவரை ஆடு மேய்க்கச் செய்த அண்ணாதுரை ஆகியோரிடம் பேசியதன் பேரில் 20 ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்படவில்லை என்பதை உறுதி செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
20 ஆண்டுகளாக அப்பாராவை கொத்தடிமையாக வைத்து வேலை வாங்கியதாக அண்ணாதுரை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதாகி ஜாமீனில் வெளிவந்திருக்கும் அண்ணாதுரை பிபிசி தமிழிடம் பேசிய போது அப்பாராவை தமது சொந்த மகனைப் போல நடத்தியதாகக் கூறினார்.
குடும்பத்துடன் இணைந்த அப்பாராவ்
சிவகங்கை மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் அப்பாராவை அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது பேசிய தொழிலாளர் நலத்துறை அலுவலர் முத்து, "கடந்த ஜனவரி 31ம் தேதி ஆடு மேய்க்கும் தொழிலாளரை கண்டுபிடித்தோம். அவரது பெயர் அப்பாராவ் என்பது தெரிய வந்தது. வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ஆகியோருடன் சேர்ந்து அவரது சொந்த ஊரை கண்டுபிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இடைப்பட்ட காலத்தில் அப்பாராவ் சிவகங்கையில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். வருவாய்த்துறை சார்பில் அப்பாராவுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நிதி ஆதாரம் திரட்டப்பட்டது. கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் அப்பாராவின் குடும்பத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. ஆந்திராவில் உள்ள அரசு அதிகாரிகளின் துணையுடன் அப்பாராவின் குடும்பத்தினர் சிவகங்கைக்கு வந்தனர். அவர்களிடம் அப்பாராவை ஒப்படைத்தது மகிழ்ச்சியளிக்கிறது" என்று கூறினார்.
இதுவரையிலும் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டவர்கள் மாநிலத்துக்குள்ளேயே அடையாளம் காணப்பட்டதாகவும், ஆனால் தமது அனுபவத்தில் முதன்முறையாக மாநிலத்துக்கு வெளியே ஒருவரை அவரது குடும்பத்துடன் சேர்த்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் முத்து கூறினார்.
அப்பாராவின் மனைவி காலமாகிவிட்டார் என்பது வருத்தம் அளித்தாலும் அவரது மகள் மற்றும் குடும்பத்தார் அவரை மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்வார்கள் என நம்புவதாகக் கூறினார்.
அப்போது பேசிய அப்பாராவின் மகள் சாயம்மாள் இத்தனை நாட்களுக்குப் பின்னர் தனது தந்தையை சந்தித்தது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.
சாயம்மாளின் கணவர் தம்புதோரா சந்து பேசும் போது, தனது மாமாவை அழைத்துச் செல்வதற்காகவே ஆந்திராவிலிருந்து வந்திருப்பதாகவும், 2003ம் ஆண்டு காணாமல் போன அவரை தற்போது கண்டுபிடித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார்.
தமது சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்ற ஆவலுடன் இருந்த அப்பாராவ், தம்மை ஆடு மேய்க்கச் செய்த அண்ணாதுரை பணம் ஏதும் கொடுத்ததில்லை என்பதால் இதற்கு வழியின்றி அங்கேயே தங்கியுள்ளார்.
இந்த வழக்கில் தொடர்புடைய உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எம்.ராஜா பிபிசி தமிழிடம் பேசிய போது, "அண்ணாதுரை அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் நபராக இருந்தார். இதனால் கிராம மக்களிடமும், அப்பாராவுக்கு உணவு, துணிமணி கொடுக்கலாம், ஆனால் பணம் கொடுக்கக் கூடாது என்று கூறியிருக்கிறார். கிராமத்தில் உள்ள இளைஞர்கள் சிலரிடம் தனக்கு கூலி கிடைக்கவில்லை என்பதை அப்பாராவ் கூறியுள்ளார். அவர்கள் மூலமாக தன்னார்வலர்கள் சிலருக்கும் பின்னர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிய வந்தது" என்று கூறினார்.
அப்பாராவ் இருப்பிடத்தை கண்டறிவதில் இருந்த சவால்கள்
அப்பாராவ் குறித்த செய்தியை பிபிசி வெளியிட்டிருந்தது. அவர் குறிப்பிட்டிருந்த கிராமம் ஆந்திர-ஒடிசா மாநில எல்லையில் அமைந்திருந்தது. அப்பாராவால் தமது ஊர் குறித்து தெளிவாக குறிப்பிட முடியாத போதிலும், ஜிம்மிடிவலசா என்ற பெயருடன் ஒத்துப்போன கிராமங்களுக்கு பிபிசி தெலுங்கு குழு சென்று அவரது உறவினர்களைத் தேடியது. அப்பாராவ் புகைப்படத்துடன் அப்பகுதி கிராமவாசிகளிடம் விசாரிக்கப்பட்டது.
ஆந்திராவில் அவர் வசித்து வந்ததாகக் கூறும் இடங்களில் அவரது குடும்பத்தினரை கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டது.
"அவர் கூறிய இடங்களின் பெயர்களும் அங்குள்ள பெயர்களும் சற்று வெவ்வேறாக உள்ளன. மேலும் அவர் கூறிய மாவட்டம் தற்போது இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது" என்று தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆந்திராவில் உள்ளூர் செய்தித்தாளில் அப்பாராவின் புகைப்படத்துடன் அவர் குறித்த விவரங்கள் விளம்பரம் செய்யப்பட்டன என்று வழக்கறிஞர் எம். ராஜா கூறினார்.
சுமார் ஒரு மாத தேடுதலுக்குப் பின் அரசு அதிகாரிகள் அப்பாராவின் மகள் சாயம்மாள் மற்றும் மருமகன் தம்புதோரா சந்து ஆகியோரை கண்டறிந்ததாக அறிவித்துள்ளனர். தற்போது உறவினர்களுடன் அப்பாராவ் தனது சொந்த ஊரை நோக்கி 20 ஆண்டுகளுக்குப் பின் பயணப்பட்டுள்ளார்.
கூலித்தொகையைப் பெற்று தர நடவடிக்கை
கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு தொழிலாளர் நலத்துறை சார்பாக ரூ.30 ஆயிரம் தொகை உடனடியாக வழங்கப்படும். பின்னர், சம்பந்தப்பட்ட வழக்கு நடத்தப்பட்டு உரிமையாளருக்கு தண்டனை வழங்கப்பட்டால், மேலும் ரூ.70 ஆயிரம் (மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்), அதே போன்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ரூ. ஒரு லட்சத்து 70 ஆயிரம் (மொத்தம் ரூ. 2 லட்சம்) வழங்கப்படும்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு அப்பாராவுக்கு கிடைக்க வேண்டிய ஊதியம் மொத்தம் எட்டு லட்சத்து 26 ஆயிரம் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தொகையை உரிமையாளர் அண்ணாதுரையிடமிருந்து பெற்று தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)