You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எங்கே? இந்தியா - பாகிஸ்தான் மோதலில் இன்னும் விடை தெரியாத கேள்விகள்
- எழுதியவர், இஷாத்ரிதா லஹிரி
- பதவி, பிபிசி செய்தியாளர்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் மற்றும் அதைத் தொடர்ந்து சண்டை நிறுத்தம் ஏற்பட்டு பத்து நாட்கள் ஆன நிலையில் இன்னும் விடை கிடைக்காத பல வினாக்கள் எஞ்சி நிற்கின்றன.
ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில், இரு வாரங்களில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரில் 9 இடங்களில் இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்தது. இவற்றை 'பயங்கரவாதிகள் மறைந்து இருந்த முகாம்கள்' என்று இந்தியா கூறியது.
இதற்குப் பிறகு, எல்லை தாண்டி துப்பாக்கிச் சூடு நடத்திய பாகிஸ்தான், டிரோன்கள் மூலமும் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலின் போதும் அதற்குப் பின்னரும், இரு தரப்பினரும் பரஸ்பரம் பலவிதமான கூற்றுகள், குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இந்தக் கூற்றுகளில் சில உறுதிப்படுத்தப்பட்டாலும், பெரும்பாலானவை இன்னும் சரிபார்க்கப்படவில்லை. இந்த முழு சம்பவத்திலும், பல்வேறு ராணுவ, ராஜ்ஜிய மற்றும் அரசியல் தொடர்பான கேள்விகள் உள்ளன. அவற்றுக்கு இதுவரை நேரடியாக பதில் கிடைக்கவில்லை அல்லது விடையளிக்கப்படவில்லை.
பாதுகாப்பு மற்றும் ராஜ்ஜிய விவகாரங்கள் தொடர்பான விஷயங்களில் விடை கிடைக்காத வினாக்களுக்கு பதிலை நிபுணர்களிடமிருந்து கேட்டறிந்து கொள்வோம்.
பஹல்காம் தாக்குதல் நடத்தியது யார்?
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 பேரை ஜம்மு காஷ்மீர் காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. அவர்களில் ஒருவர் காஷ்மீரி, இருவர் பாகிஸ்தானியர் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.
காவல்துறை கூற்றுப்படி, அனந்த்நாக்கில் வசிக்கும் ஆதில் ஹுசைன் டோகர், ஹாஷிம் மூசா என்ற சுலேமான் மற்றும் அலி பாய் என்ற தல்ஹா பாய் ஆகிய 3 பேரும் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களைப் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், "பயங்கரவாதிகள் நமது சகோதரிகளின் நெற்றிக் குங்குமத்தை அழித்துவிட்டனர், எனவே இந்தியா அவர்களின் பயங்கரவாத தலைமையகங்களை அழித்துவிட்டது. இந்தியா நடத்திய இந்த தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்" என்று கூறினார்.
ஆனால் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்ன ஆனார்கள் என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியவில்லை. இது மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது. எனவே பிபிசி இந்தக் கேள்வியை ராணுவ பிரிகேடியர் (ஓய்வு) ஜீவன் ராஜ்புரோஹித்திடம் கேட்டது.
நமது கேள்விக்கு பதிலளித்த பிரிகேடியர் ராஜ்புரோஹித், "இந்த பயங்கரவாதிகளை ஒழிப்பது கடினம், ஏனென்றால் இவர்களுக்கு உள்ளூர் ஆதரவு வலையமைப்பு உள்ளது. இரண்டாவதாக, அவர்களுக்கு பாகிஸ்தானிடமிருந்து உதவி கிடைக்கிறது. இந்த இரண்டு அம்சங்களும் இணைந்து, இந்தியா பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதத்தை வேரறுக்க, பயங்கரவாதிகளைக் கொல்வது மட்டுமே போதுமானதல்ல. அதை இயக்கும் முழு கட்டமைப்பையும் தகர்க்க வேண்டியது அவசியம்."
"இந்த பயங்கரவாதிகளைக் கொல்வதை விட பாகிஸ்தானில் நிலவும் பயங்கரவாதம் தொடர்பான முழு சித்தாந்தத்தையும் ஒழிப்பது மிக முக்கியமானது. ஒருசில பயங்கரவாதிகளைக் கொல்வதால் பயங்கரவாதத்தை வேரறுக்க முடியாது" என்று அவர் கூறுகிறார்.
எல்லை தாண்டிய தாக்குதல்களில் பொதுமக்களும் பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்துள்ளனர். பிபிசி உட்பட பல ஊடக அமைப்புகளும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் பேசியுள்ளன. இருப்பினும், அரசு தரப்பில் இதுவரை உயிரிழப்பு எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இங்கு எழும் கேள்வி என்னவென்றால், எல்லையில் துப்பாக்கிச் சூடு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருந்த நிலையில், மத்திய, மாநில அரசுகள் எல்லைப் பகுதிகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டாமா? என்பதுதான்.
இந்தக் கேள்விக்கு பதிலளித்த ராணுவ ஏர் மார்ஷல் (ஓய்வு) திப்தேந்து செளத்ரி, "இதுபோன்ற சூழ்நிலையைச் சமாளிப்பதற்கு என சில நிலையான தரநிலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் பிரத்யேக நெறிமுறை உள்ளது. காஷ்மீரின் எல்லைப் பகுதியில் மக்கள் தொகை மிகக் குறைவாகவே உள்ளது. ஜம்முவிலும், பஞ்சாபிலும் மக்கள் தொகை அதிகமாக உள்ளது" என்று கூறுகிறார்.
"எல்லை அருகே வசிக்கும் மக்கள் இதற்கு முன்பும் இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ளனர். பல ஆண்டுகளாக ஷெல் தாக்குதலை எதிர்கொண்டுள்ள அவர்கள், ஏற்கனவே தயாராக உள்ளனர். பதுங்கு குழிகள் கட்டப்பட்டுள்ளன, அவசர நிலையை சமாளிக்க தேவையான பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சைரன் ஒலிக்கும் போதோ அல்லது மின்தடை ஏற்படும்போதோ என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியும்" என்று ஏர் மார்ஷல் செளத்ரி கூறுகிறார்.
"போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் போது அல்லது ராணுவம் நிலைநிறுத்தப்படும் போது மட்டுமே, மக்களை அங்கிருந்து அகற்றும் பணி மேற்கொள்ளப்படுகிறது. அப்போதுதான் எல்லைப் பகுதிகள் காலி செய்யப்படுகின்றன. அதற்கு போதுமான நேரம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் பார்க்கும் போது, தற்போது போர்ச்சூழல் இல்லை என்பதால், எல்லையோரத்தில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்படவில்லை. திடீரென்று ஷெல் தாக்குதல் நடக்கிறது, எனவே எந்தவித முன்னெச்சரிக்கையும் கொடுக்க முடியாது" என்று அவர் விளக்கமாக விடையளிக்கிறார்.
போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது உண்மையா இல்லை பொய்யா?
ஜம்மு காஷ்மீரின் பாம்போர் பகுதியில் பெரிய அளவிலான உலோகத் துண்டு ஒன்று விழுந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது தொடர்பாக இந்தியா எந்தவொரு தகவலையும் பகிரவில்லை.
மறுபுறம், இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்தது.
இது குறித்து செய்தியாளர் கூட்டம் ஒன்றில் ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தியிடம் கேட்கப்பட்ட போது, "நாம் போர் சூழலில் இருக்கிறோம், இழப்புகளும் அதன் ஒரு பகுதியாகும். தற்போது நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால், நாம் நமது நோக்கங்களை அடைந்துவிட்டோமா? பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நமது நோக்கத்தை நாம் அடைந்துவிட்டோமா? அதற்கு பதில் ஆம் என்பதே." என்று பதிலளித்தார்.
"தற்போது கூடுதல் தகவல்களை வழங்க முடியாது. அது எதிரிகளுக்கு சாதகமாக அமையலாம்... இப்போது இவ்வளவுதான் சொல்ல முடியும்... நமது விமானிகள் அனைவரும் வீடு திரும்பிவிட்டனர்" என்று ஏர் மார்ஷல் பார்தி கூறினார்.
பாகிஸ்தான் போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியதா என்ற கேள்விக்கு பதிலளித்த ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தி, "அவர்களின் விமானங்கள் நமது எல்லைக்குள் நுழைவதைத் தடுத்துவிட்டோம். அவற்றின் சிதைவுகள் எங்களிடம் இல்லை" என்றார்.
ஏர் மார்ஷல் செளத்ரியின் கூற்றுப்படி, ஒரு நடவடிக்கை நடந்து கொண்டிருக்கும் போது இழப்புகளை பகிரங்கமாக வெளியிடலாமா வேண்டாமா என்பது குறித்து வெவ்வேறு கருத்துகள் உள்ளன.
"உதாரணத்திற்கு பாலகோட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் நமது சாதனைகளை பகிரங்கமாக வெளியிட நாங்கள் தயாராக இல்லை. இருந்தபோதிலும் அப்போது வெளியுறவு அமைச்சகம் பகிரங்கமாக தகவல்களை அளித்து வந்தது. பாதுகாப்பு அமைச்சகமும் பின்னர் அதில் இணைந்தது. பாதுகாப்பு அமைச்சகம் களத்திற்குள் வந்த நேரத்தில், நிலைமை மாறியிருந்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு அபிநந்தன் பிடிபட்டார். அதற்குப் பிறகு, உலகின் முழு கவனமும் தடம் மாறிவிட்டதால், பயங்கரவாதத்தை குறிவைக்கும் இந்தியாவின் அடிப்படை நோக்கம் மாறிவிட்டது."
"ராணுவத்திற்கு இழப்புகள் ஏற்படும். இது அவர்களின் வேலையின் ஒரு பகுதி. அது எவ்வளவு என்பதோ, எண்ணிக்கையோ முக்கியமானதல்ல. எத்தனை ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது, யார் சுட்டு வீழ்த்தினார்கள் என்பது முக்கியமல்ல. நமது அடிப்படை நோக்கத்தில் நாம் வெற்றி பெற்றோமா என்பதுதான் முக்கியமானது. இழப்புகள் இருக்கும், ஆனால் முக்கியமான நோக்கம் எட்டப்பட்டதா என்பதே முக்கியம்" என்று ஏர் மார்ஷல் செளத்ரி கூறுகிறார்.
இந்தியா - அமெரிக்கா ஆலோசனை விவரம்
மோதலில் ஈடுபட்டிருந்த இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னதாகவே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதனை வெளியிட்டார்.
தனது அரசாங்கத்தின் மத்தியஸ்தம் காரணமாக இரு நாடுகளும் "உடனடியாகவும் முழுமையாகவும் மோதலை நிறுத்த" ஒப்புக்கொண்டதாக அவர் தனது சமூக ஊடகப் பதிவில் கூறினார்.
மறுபுறம், இந்த சண்டை நிறுத்தம் பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) முன்முயற்சியின் பேரில் நடந்ததாக இந்தியா கூறியது. டிரம்பின் கூற்றுகளை இந்தியா மறுக்கவில்லை, அதே நேரத்தில் அவற்றை உறுதிப்படுத்தவும் இல்லை.
இந்த விஷயம் குறித்து முன்னாள் இந்திய தூதர் திலீப் சிங்குடன் பிபிசி பேசியது. இது தொடர்பாக பேசிய அவர், "பாகிஸ்தான் அமெரிக்காவைத் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்று புரிகிறது. இதற்குப் பிறகு அமெரிக்கா இந்தியாவுடன் பேசியிருக்க வேண்டும். சண்டை நிறுத்தத்திற்கு தயாராக இருக்கிறோம், ஆனால் முன்முயற்சி பாகிஸ்தானிடமிருந்து வர வேண்டும் என்று இந்தியா கூறியிருக்க வேண்டும். இதற்குப் பிறகு பாகிஸ்தான் தனது டிஜிஎம்ஓவை இந்தியாவின் டிஜிஎம்ஓவைத் தொடர்பு கொள்ள வைத்தது. நமது டிஜிஎம்ஓ சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டிருக்க வேண்டும். பின்னர் சண்டைநிறுத்தம் செயல்படுத்தப்பட்டிருக்கும்" என்று ஊகிக்கிறார்.
"அமெரிக்காவுடனான உறவை இணக்கமாக வைத்திருப்பது இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது. பல விஷயங்கள் நெருக்கடியில் உள்ளன. இந்த உறவு அதிபர் டிரம்புடன் மட்டும் நின்றுவிடவில்லை" என்று அவர் கூறுகிறார்.
எதிர்ப்பும் போர் நிறுத்தமும்
சண்டை நிறுத்தம் எவ்வாறு முடிவு செய்யப்பட்டது என்பது குறித்த முழுத் தகவலையும் பகிர்ந்து கொள்ளுமாறு அரசாங்கத்தின் மீது தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் எதிர்க்கட்சிகள், சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கை தெளிவாக விளக்குமாறும் கேட்கின்றன.
இதுபோன்ற ராணுவ நடவடிக்கைகள் ஏற்பட்டால், அது தொடர்பாக அரசாங்கம் எதிர்க்கட்சியுடன் கலந்தாலோசிக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.
இந்த வினாவிற்கு விடையளிக்கும் திலீப் சிங், "அப்படி எந்தவித நெறிமுறைகளும் இல்லை. இதுபோன்ற அதிமுக்கியமான மற்றும் ராணுவ நடவடிக்கைகளில், அரசாங்கம் பல விஷயங்களைக் கருத்தில் கொண்டே முடிவுகளை எடுக்க வேண்டும். எனவே, நடவடிக்கையில் நேரடியாக ஈடுபடாதவர்களிடமிருந்து ஆலோசனையை பெற முடியாது. நடவடிக்கையின் விவரங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை. நடவடிக்கை பற்றிய தகவல்களை வெளிப்படையாக சொல்வது பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கலாம்" என்று சொல்கிறார்.
டெல்லி பல்கலைக் கழகத்தின் இந்து கல்லூரியின் அரசியல் நிபுணரும் அரசியல் அறிவியல் பேராசிரியருமான சந்திரசூட் சிங் இதுபற்றி கூறுகையில், ராணுவக் கொள்கை விஷயங்களில் எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்ததற்கான முன்னுதாரணம் எதுவும் இல்லை என்கிறார்.
"1971 இந்தியா-பாகிஸ்தான் போரை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அப்போதும் போர் உத்தி குறித்து எதிர்க்கட்சிகளுடன் எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. நாடாளுமன்ற அமைப்பில், ராணுவம் தொடர்பான முடிவுகள் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படுவதில்லை, அவை பின்னர்தான் விவாதிக்கப்படுகின்றன" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
"ராணுவம் தொடர்பான முடிவுகளை எடுப்பது ராணுவ உளவுத்துறை தொடர்பான விவரங்களை பெறுபவர்கள் தான். அதேபோல சண்டை நிறுத்தம் தொடர்பான முடிவை எடுப்பதும் அவர்கள் தான். எனவே, எதிர்க்கட்சிகளிடம் சண்டை நிறுத்தம் தொடர்பாக ஆலோசிக்கவோ, கேட்கவோ வேண்டிய அவசியமில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது" என்று பேராசரியர் அரசியல் நிபுணரும் அரசியல் அறிவியல் பேராசிரியருமான சந்திரசூட் சிங் கூறுகிறார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு