You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதிக அளவில் லித்தியம் உள்ள குடிநீர் டெமென்ஷியாவைக் குறைக்கும் என்கிறது ஆய்வு
- எழுதியவர், ஜேம்ஸ் கால்லாகேர்
- பதவி, சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர், பிபிசி
குடிநீரில் அதிக அளவு லித்தியம் இருந்தால் டிமென்ஷியா ஏற்படும் ஆபத்து குறைவாக இருப்பதாக டென்மார்க் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இயற்கையாகவே லித்தியம் குழாய் நீரில் காணப்பட்டாலும் அதன் அளவு இடத்திற்கு இடம் மாறுபடும்.
குடிநீரில் லித்தியம் அதிக அளவில் இருந்தால் மறதி நோய் என்னும் டிமென்ஷியா நோய் ஏற்படும் அபாயம் குறையும். அதே நேரம் மிதமான அளவு லித்தியம் குடிநீரில் இருந்தால், அது லித்தியம் குறைந்த அளவில் காணப்படும் நீரைவிட அதிக பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது என்கிறது ஆய்வு.
எட்டு லட்சம் மக்களிடம் நடத்தப்பட்ட சர்வே அடிப்படையில் செய்யப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் தெளிவாக வரையறுக்கப்பட்டதாக இல்லை.
ஆர்வத்திற்குரிய மற்றும் ஊக்கமளிக்கும் இந்த ஆய்வு இந் நோயைத் தடுப்பதற்கான ஒரு வழியைச் சுட்டுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
டென்மார்க் மக்களில் டிமென்ஷியா பாதிக்கப்பட்ட 73,731 பேர் மற்றும் பாதிக்கப்படாத 7,33,653 பேரின் மருத்துவ பதிவுகளை கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் இந்த ஆய்வு உற்று நோக்கியது. நாட்டின் 151 இடங்களில் குழாய் நீர் சோதனை செய்யப்பட்டது.
ஜாமா சைக்கியாட்ரி (JAMA Psychiatry) என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளின்படி, குறைவான அளவு (லிட்டருக்கு ஐந்து மைக்ரோகிராமுக்கு கீழே) லித்தியம் உள்ள நீரை பயன்படுத்துபவர்களுக்கு உள்ள டிமென்ஷியா அபாயத்தைவிட மிதமான லித்தியம் அளவுகள் கொண்ட நீரை பருகுபவர்களுக்கு (லிட்டருக்கு 5.1 மற்றும் 10 மைக்ரோகிராம்கள் வரை) டிமென்ஷியா அபாயம் 22% அதிகமாக இருந்தது.
இருப்பினும், லித்தியம் அளவு உயர்வாக (லிட்டருக்கு 15 மைக்ராம்களுக்கு மேல்) இருக்கும் குடிநீரை பயன்படுத்துபவர்களுக்கு டிமென்ஷியா அபாயம் 17% குறைவாக உள்ளது.
"குடிநீரில் உள்ள லித்தியம் மற்றும் டிமென்ஷியா நோய்க்கு இடையிலான தொடர்பை ஆய்வு செய்யும் முதல் ஆய்வு இது என்று நினைக்கிறோம்" என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
"நீண்ட காலமாக குடிநீரில் அதிக அளவு லித்தியம் இருந்தால் அது டிமென்ஷியா ஏற்படுவதை குறைக்கலாம்."
மூளையில் மாற்றம்
மூளையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அறியப்படும் லித்தியம் இருமுனை சீர்குலைவு (bipolar disorder) நோய்க்கான சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது.
இருந்தபோதிலும், குழாய்நீரில் இருக்கும் லித்தியமானது மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்துவதைவிட மிகக் குறைவானதாகவே இருக்கும்.
மூளையின் உயிரியல் செயல்முறைகளில் விரிவான மாறுதல்களை இத் தனிமம் ஏற்படுத்துவதை பரிசோதனைகள் காட்டுகின்றன.
வெவ்வேறு டோஸ்களில் (அளவுகளில்) லித்தியம் உட்கொள்ளப்படும் போது வெவ்வேறு விதமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவற்றில் குறிப்பிட்ட சில அளவுகளில் உட்கொள்ளப்படும்போது மட்டுமே அது நலம் பயக்கும் விதத்தில் மூளையின் நடவடிக்கைகளை மாற்றுகிறது.
"இது மிகவும் ஆர்வமூட்டும் ஆய்வு" என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை பேராசிரியர் சைமன் லவ்ஸ்டோன் கூறுகிறார்.
"இருமுனை சீர்குலைவுக்கு (bipolar disorder) லித்தியம் பயன்படுத்தப்படுகிறது மற்றும் அல்சைமர் நோய்க்கும் பயன்படுத்தப்படலாம்."
தொடந்து சிறிய அளவில் லித்தியம் எடுத்துக்கொள்வது டிமென்ஷியாவை தடுக்குமா என்று பார்க்க இனி ஆய்வுகள் தேவை என்கிறார் அவர்.
சிகிச்சை இல்லை
தற்போது டிமென்ஷியாவை தடுப்பதற்கோ, குணப்படுத்துவதற்கோ அல்லது நோய் முற்றுவதைத் தாமதிப்பதற்கோ எந்தவித மருந்தும் இல்லை.
"மருத்துவமனைகளில் ஏற்கெனவே கிடைக்கும் குறைந்த டோஸ் கொண்ட மருந்துகள் டிமென்ஷியா பாதிப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த உதவக்கூடும் என்பது மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி" என அல்சைமர்ஸ் ரிசர்ச் யு.கே. என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் டேவிட் ரெனால்ட்ஸ் கூறுகிறார்.
"டிமென்ஷியா பாதிப்பை ஐந்து ஆண்டுகள் தள்ளிப்போடக்கூடிய ஒரு சிகிச்சையால், 2050இல் பிரிட்டனில் இந் நோயால் பாதிக்கப்படக்கூடியவர்களின் எண்ணிக்கையில் 6,66,000 பேரைக் குறைக்க முடியும்" என்று எங்கள் ஆய்வு கூறுகிறது.
இதுபோன்ற பெரிய அளவிலான தரவுகளைக் கொண்ட ஆய்வுகளில் உள்ள பிரச்சினை, காரணங்களையும் விளைவுகளையும் நிரூபிக்க முடியாமல் போவதே.
"லித்தியம் தானாகவே டிமென்ஷியா அபாயத்தை குறைக்கிறது என்று புரிந்துக் கொள்ளக்கூடாது" என்கிறார் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் `சென்டர் ஆஃப் டிஸ்கவரி ப்ரெய்ன் சயின்சஸ்` இன் பேராசிரியர் தாரா ஸ்பியர்ஸ் ஜோன்ஸ்.
"இதர சுற்றுச்சூழல் காரணிகளும் டிமென்ஷியா ஏற்படும் அபாயத்தில் தாக்கம் ஏற்படுத்தலாம்."
"ஆயினும்கூட, உணவு அல்லது குடிநீரில் லித்தியம் அளவுகள் டிமென்ஷியா அபாயத்தை மாற்றியமைக்குமா என்றா கோணத்தில் மேலும் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு தூண்டும் சுவராஸ்யமான ஆய்வு முடிவு இது" என்கிறார் தாரா ஸ்பியர்ஸ் ஜோன்ஸ்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்